தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய நகரங்களும் சில கேள்விகளும் - ராம்


சென்ற மாதம் கனமழை பெய்தது. பெரும் வெள்ளத்தில் மிதந்தோம், பேரிடர் என்று சாற்றினோம், உயிர்கள் மடிந்தன, பொருட்கள் அடித்துப் போயின, வீடுகள் சாய்ந்தன, மாந்தர் மத்தியில் பீதியும், கிலியும் உண்டானபோது, மானுட உயர் குணங்களுமும் வெளியாயின. பிறருக்கு உதவியவர் சிலர், வெள்ளத்தில் உயிர் காத்தனர் சிலர், உணவளித்தனர் சிலர். உடைமைகளையும், உடையும் மீண்டும் பெற உதவினர் இன்னமும் சிலர்…வெள்ளம் வற்றிற்று, வீடுகளும், அலுவலங்களும், வர்த்தக நிறுவனங்களும், மாறிப்போன பல மனிதர்களைக் கொண்டு, மெதுவாகப் பழைய நிலைக்குத் திரும்புகின்றன.

மாற்றத்தை நோக்கி

மனிதர்களின் மாறிய நிலையை மதித்துப் பல தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், மனித நேயம் குறித்தும், நீர்நிலைகளின் பாதுகாப்புத் தொழில்நுட்பம் குறித்தும், குப்பை அள்ளுவதின் நுட்பங்களைக் குறித்தும், நகரத்தில் மக்கள் தங்கள் பகுதியின் பராமரிப்பு குறித்தும் பல கருத்தரங்குகளையும், கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். சிலர் நுகர்வோர் கலாசாரம் குறித்தும், நகரமயமாக்கலை எதிர்த்தும் குரலெழுப்ப இத் தருணத்தை உபயோகித்துள்ளனர். நமது ஆசிரியரும் இப்பொழுதாவது, “கெடுமுன் கிராமம் சேர்” என்ற தனது தொடர் முழக்கத்தை மீண்டும் எழுப்பியுள்ளார். இவை அனைத்தும் வரவேற்கத்தக்க முயற்சிகள். மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நிச்சியமாக ஒரு நல்வழியமைத்து வழிகாட்டும் முயற்சியாகவே நாம் கருதவேண்டும்.

புதிய நகரங்களும் சில கேள்விகளும்

இன்று சென்னை நகரம் ஒரு பெரும்மழையினால் எவ்வளவு சேதம் அடைந்துள்ளது என்று கணக்கிடுவதற்குத் தவிக்கும் தருவாயில், பல ஆயிரம் கோடி செலவில் அண்டை மாநிலமான ஆந்திரத்தில் புதிய தலை நகரம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. நமது பிரதம மந்திரியோ, 50 நாட்களுக்கு ஒன்று என்று புதிய “ஸ்மார்ட்” நகரங்களை அமைக்கப்போவதாகத் தொடர்ந்து அறிவித்து வருகின்றார். இந்தச் சூழலில் நமக்குச் சில கேள்விகளும் தோன்றுகின்றன‌ –

நகரங்கள் எவ்வாறு உருவாக்கப்படவும், பராமரிக்கப்படவும் வேண்டும்?

உலகிலேயே பழைய நகரங்களான ஹரப்பா போன்ற நகரங்களை உருவாக்கியவர்கள், ஆற்றுப்படுகைகளில் காலகாலமாக நகரங்களை அமைத்து வாழ்ந்து வந்தவர்கள், நீர்நிலைகளை பராமரிப்பதில் உலகமே வியக்கும் விதத்தில் பொறியியல் வல்லமை கொண்டு அதனைப் பேணி, அதனைச் சார்ந்து தங்களில் வாழ்வை அமைத்தவர்கள், இன்றும் ஒரு நதிக்கரையில் அமைந்த, உலகிலேயே மிகப்பழைய நகரமாகக் கருதப்படும் வாரணாசி நகரத்தைக் கொண்ட நாட்டினரான‌ நமக்கு நகரம் எவ்வாறு நிர்மாணிப்பது மற்றும் பராமரிப்பது என்று தெரியாதா? என்ற கேள்வி எழுகின்றது.

எதனை அழித்துப் புது நகரம் படைக்கின்றோம்?

இன்று சென்னையின் வளர்ச்சியில் மறக்கடிக்கப்பட்ட நீர் நிலைகளைக் குறித்துப் பல விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் புதிய நகரங்கள் யாவையும் நீர் நிலைகளை ஆக்கிரமித்தும், வயல்வெளிகளை அழித்தும் நிர்மாணிக்கப்பட்டவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள பல ஏரிகளும், விவசாயக் கிராமங்களும் அழிக்கப்பட்டே நகரங்கள் நிர்மாணிக்கப்பட்டன, தொடர்ந்து நிர்மாணிக்கப்படுகின்றன, விரிவாக்கப்படுகின்றன. இன்று சென்னையில் அடையாற்றின் ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு ஏழை மக்கள் வாழும் குடிசைகளை அகற்றுவது வெறும் ஒரு கண்துடைப்பு மட்டுமே. உண்மையில் அந்த ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள மொத்த நகரத்தையும் அழித்தாலன்றி நிலைமை சீரமையாது, அதே சமயத்தில் ஒரு ஆக்கிரமிப்புப் பகுதியை அழித்து, அங்குள்ளவரகளை இடம் பெயரச்செய்து, இன்னமொரு நகரம் அமைத்தால் அது ஓரிடத்தில் உள்ள அழிவுக்கான காரணியை மற்றோரு இடத்திற்கு மாற்றுவதற்கு வழிகோலுமே அன்றி அதனை முற்றிலும் ஒழிப்பதற்கு வழிவகுக்காது.

பாரம்பரிய இந்திய நகரங்கள்

நகரங்கள் பெரும் மக்கள் ஒன்றாக வாழ்வதற்கும், வர்த்தகர்களும், காவலர்களும், அரசர்களும், அறிஞர்களும் ஒன்று சேரும் இடங்களாகவும் இருந்ததாகவே நமது வரலாறு சான்றளிக்கிறது. வாரணாசி என்றழைக்கப்படும் காசி மாநகரம், ஏறத்தாழ 3500 வருடங்கள் இங்கு தொடர்ந்து மக்கள் வசித்து வருவதற்கான அகழ்வாராய்சி சான்றுகள் உள்ளன. என்றும் புனித நகரமாகவே கருதப்பட்ட இந்த நகரம், அறிஞர்களும், பண்டிதர்களும் பல நூற்றாண்டுகளாகவே ஒரு உயர் கல்வி நகரமாக வாழ்ந்து வந்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது போலவே தமிழகத்தில் காஞ்சி நகரமும் ஒரு கல்வி மற்றும் வியாபார நகரமாக பல ஆயிரம் ஆண்டுகளாகத் திகழ்ந்ததாக நமக்கு வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. (“நகரேஷு காஞ்சி” - நகரங்களில் சிறாந்தது கான்சி என்றொரு வடமொழிச் சொல்லே உண்டு. அந்த அளவு கான்சி மாநகரம் இந்தியா முழுவதும் புகழ் பெற்றது). இத்தகைய நகரங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் அறிஞர்களை வரவேற்று, அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும், மாணவர்கள் தங்கிப் பயிலவும், வியாபாரிகள் பாதுகாப்பாக தங்கள் வியாபாரத்தை செய்வதற்கும், பயணிகளும், யாத்திரிகர்களும் அமைதியாகத் தங்கவும் பல வசதிகள் இருந்தது ஆச்சிரியமளிக்கவில்லை.

இது போலவே பல நகரங்கள் இந்தியாவின் பற்பல இடங்களில் உருவாகி வளரும்பொழுதும், எங்கும் நீர் நிலைகளை மாற்றி அமைத்தோ, குலைத்தோ, அல்லது, ஆக்கிரமித்தோ மக்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கூறவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் அடிமைத்தனம் வளர்ந்த காலம்வரை அவற்றின் பராமரிப்பு தொடர்ந்து இத்தகைய நகரங்களின் மேன்மை குன்றாவண்ணம் இருந்ததாகவே தெரிகின்றது. தொடர்ந்து ஆட்சியாளர்கள் மாறினாலும், புதுப்புதுக் கோயில்களும், நகரப் பகுதிகளும் நிர்மாணிக்கப்பட்டாலும், ஆற்றை யாரும் ஆக்கிரமித்ததாகவோ அல்லது விளை நிலங்களை குப்பை சேகரிக்கும் தலங்களாக மாற்றி அமைத்ததாகவோ எங்கும் சான்று இல்லை.

இத்தகைய நகரங்களை நிர்மாணிப்பதில் மிக முக்கிய பங்கு விஸ்வகர்மா என்றழைக்கப்படும் பாரம்பரிய பொறியியல் வல்லுனர்களுடையது. இவர்கள் பொறியியல் துறையுடன் கூடி வாஸ்து மர‌பு மற்றும் கட்டிடக்கலை, சிற்பக்கலை போன்ற பல துறைகளிலும் விற்பன்னர்களாக இருந்த காரணத்தினால்தான், நமது புராதன நகரங்களும் (அவற்றில் நாம் அழிக்காமல் எஞ்சியுள்ளவை), அவற்றுள் உள்ள கட்டிடங்களும் அழகாகவும், தொழில்நுட்ப ரீதியில் சிறப்பானதாகவும் விளங்குகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கைச் சீற்றங்களால் எவ்வித அழிவும் இன்றி இருக்கின்றன.

முக்கியமாக இத்தகைய கட்டிடங்களையும், ஊர்களையும் நிர்ணயிக்கும்பொழுது இவர்கள் பெரும்பாலும் இயற்கை வளங்களை அழிக்காமல், மாறாக அவற்றை முடிந்தவரை பாதுகாத்து, அவற்றிடம் மன்னிப்புக் கோரி நிர்மாணிக்கும் பணிகளைச் செய்வதைத் தங்கள் தொழில் தர்மமாக வைத்திருந்தனர். அதனால்தானோ என்னவோ, கோயில்களுடன், குளங்களையும், வனங்களையும் இணைத்தனர்; ஊர்களுடன் கண்மாய்களையும், கண்மாய்களின் பெயர்களில் ஊராரையும் இணைத்துத் தொடர்புகள் ஏற்படுத்தினர். பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துச் சடங்குகளையும் நதிகளின் கரைகளிலும், காடுகளிலும் அமைத்து அவற்றின் இன்றியமையாத் தன்மையை உணர்த்தினர்.

முக்கியமாக நமது பாரம்பரிய நகரங்களில் மிகப்பெரிய அளவில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடி வந்ததாக எந்த ஒரு சான்றும் இல்லை. இதனாலேயே நமது நகரங்கள் அளவான‌ மக்கள் தொகையைக் கொண்ட, அழகான, பெருமைவாய்ந்த நகரங்களாக விளங்கின என்று எண்ணத் தோன்றுகின்றது.

நமது பழங்குடியினர் மத்தியில் நகரங்களை பற்றிய கதையை, கலைஞரும் வரலாற்று ஆசிரியருமான திரு. ரவீந்தர ஷர்மா “எந்த ஒரு நகரமும், ஒரு அளவிற்கு மீறி வளர்ந்துவிட்டால், தேவேந்திரன் என்றழைக்கப்படும் இந்திரன், அந்த நகரத்தைப் பேரிடர் ஏற்படுத்தி அழித்துவிடுவான்”! என்று கூறுவார்.

ஆங்கிலேய ஆட்சிக்குப்பின் வந்த நகரங்கள்

இன்று இந்தியாவில் உள்ள பெரும் நகரங்கள் யாவையும் ஆங்கிலேயர் காலத்தில் உருவானவை. ஆங்கிலேயர் இந்திய நகரங்களை உயர் படிப்பிற்கோ அல்லது இந்திய மக்களின் பாதுகாப்பிற்கோ ஏற்படுத்தவில்லை. அவர்களது நோக்கம், இத்தகைய நகரங்களில் தாங்கள் இந்தியாவைக் கொள்ளயடிக்கும் பொருட்களை ஒன்று சேர்க்கவும், பாதுகாப்பாகப் பதுக்கி வைக்கவும், அதனை அவர்களது நாட்டிற்குப் பத்திரமாக அனுப்பவுமே பயன் படுத்தினர். இதனாலேயே இத்தகைய நகரங்களில், பாதுகாப்பான கோட்டைகள், அதிகாரத்தின் மையாமாக விளங்கும் வகையிலான விஸ்தாரமான வசிக்கும் இடங்களும், அடிமைகளை அதிகாரிகள் கண்காணிக்க ஏதுவாக அவர்களுக்கான தங்கும் இடங்களும், ராணுவத்திற்கான வசதிகளும், பொருட்களைப் பதப்படுத்த மற்றும் தூர தேசங்களுக்கு எடுத்துச்செல்ல வசதிகள் மிகுந்து காணப்பட்டன. இன்றும் பல நகரங்களில் இத்தகைய வசதிகளை நாம் காணமுடியும்.

ஆங்கிலேயர் ஏற்படுத்திய நகரங்களை இந்தியாவில் மிக எளிதாக இனங்காண‌ முடியும். ஒரு முக்கிய தெரு, அந்தத் தெருவில் ஆட்சியாளர் அலுவலகம், மருத்துவமனை, பள்ளிக்கூடம், ஆட்சியாளர் குடியிருப்பு மற்றும் ஒரு தேவாலயம் இருக்கும். மாறாக இதற்கு முன் இருந்த நகரங்கள் யாவையும், ஒரு நீர் நிலையின் படித்துறையை ஒட்டியிருந்தால், படித்துறையிலிருந்து நகரம் உருவாகியிருக்கும், நமது ஊர்களின் மத்தியில் கோயில்களும், அதனை சுற்றிக் குடியிருப்பும், அதனை சுற்றி வயல்களும் காட்சியளிக்கும். நமது வாழ்வின் மையத்தில் ஆன்மீகமும், நீர்நிலைக்கான முக்கியத்துவமும் சம அளவில் இருந்ததாகவே தோன்றுகிறது.

சென்னை

சென்னை போன்ற நகரங்கள் சமீப காலம்வரை ஆங்கிலேய பெயர்களை கொண்டே அழைக்கப்பட்டு வந்தன‌. இங்குள்ள பல வசதிகள் இன்றும் நமது மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிபுரிய ஏற்படுத்தியதே. நமது ஆட்சியாளர்கள் இன்றும் வெள்ளையன் கட்டி அராஜகம் புரிந்த கோட்டையில்தான் நமது மக்களாட்சியின் சான்றாகக் கொடியேற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்றும் நமது ஏழைமக்களை வாட்டி, வரிபிடுங்கி இங்கிலாந்திற்கு அனுப்பிய மன்ரோ மற்றும் ரிப்பன் போன்ற கயவர்களை, சிலைவைத்தும், சென்னை நகரத்தின் முக்கிய கட்டிடங்களுக்கு பெயர் வைத்தும் போற்றி வருகின்றோம். அவன் ஏற்படுத்திய அரசாங்க‌ அதிகார (அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்) வர்க்கமும், வியாபாரிகளும்தான் இன்றும் சென்னை போன்ற பெரும் நகரங்களை நிர்மாணித்து வருகின்றனர். இவர்களுக்கு, பொறியிலிலோ அல்லது கலைத்துறையிலேயோ எந்த விதமான தகுதியோ அல்லது திறனோ இல்லை. தங்கள் ஆட்சியையும், வியாபாரத்தையும் தக்கவைக்கும் விதத்திலும், காத்துக்கொள்ளும் விதத்திலும் இந்த அடிமை நகரங்களைத் தொடர்ந்து இவர்கள் விரிவாக்கியும், பராமரித்தும் வருகின்றனர்.

இவர்களின் நகரமயமாக்கலின் சான்றாக 2 உதாரணங்களை கொண்டு விவரிக்க இயலும் -

1. அருவருக்கத்தக்க பொதுக் கழிப்பறைகள் 2. மாபெரும் குப்பைதொட்டிகளாக தொழிற்பேட்டைகள்

அருவருக்கத்தக்க பொதுக் கழிப்பறைகள்

பொதுக் கழிப்பறைகள், மிகுந்த மக்கள் நடமாட்டம் கொண்ட நகரங்களில் மிக முக்கியமான ஒரு வசதி. சென்னை நகரத்தின் பொதுக் கழிப்பறையை இங்குள்ள அதிகார வர்க்கம் இன்றும் ஒரு அத்தியாவசிய வசதியாகக் கருதாமல், ஏதோ மக்களுக்கு அவர்கள் செய்யும் உதவியாகவே கருதுகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் எந்த இடத்திலும், மக்கள் கூட்டத்திற்கு ஏற்றார்போல், அவர்கள் உபயோகிக்க உதவியாகவும், சுத்தமாகவும் கழிப்பறைகள் இல்லை.

காலகாலமாகக் கட்டப்படும் பொது கழிப்பறைகள் யாவையும் வெளியே தேவையில்லாத ஆடம்பர அலங்கார தோற்றத்துடனும், உள்ளே யாரும் சுத்தமாக உபயோகிக்க முடியாத விதத்திலும் அமைந்திருப்பது சென்னயின் நிர்வாகத்திறன்(இன்மை) குறித்த முக்கிய சான்றாகக் காண முடிகின்றது. இன்று பல தனியார் கழிப்பிடங்கள் மிகவும் தூய்மையாகவும், உபயோகிக்க வசதியாகவும் நகரத்தின் பல முக்கிய வணிக வளாகங்களில் இருந்த போதிலும் அரசாங்கம் அமைக்கும், பராமரிக்கும் கழிப்பறைகள் மாத்திரம் ஏனோ மிக அதிக அளவில் பணவிரயமாக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றின் சான்றாகவே திகழ்கின்றது. இத்தகைய கழிப்பறைகளில், கழிவு வெளியேற்றுதன், சுத்தம் செய்தல், தண்ணீர் வசதி, தேவையான அளவு மின்விளக்கு வசதி, பெண்களுக்கு பாதுகாப்பு வசதி என்று எந்த வசதியும் முழுமையாக அமைந்திராதிருப்பது, ஆட்சியின் தொடர்ந்த மக்கள் நலன் அக்கறையின்மையை எடுத்துக்காட்டுகின்றது.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலிருந்து தொடரும் ஒரு அருவருக்கத்தக்க அரசாங்க வழக்கம் இன்றும் சென்னை கோட்டை மற்றும் அரசு அலுவலகங்களில் நடைமுறையில் உள்ளது – உயர் அதிகாரிகளுக்கு தனிக் கழிப்பறைகளும், கீழ்மட்ட சிப்பந்திகளுக்கு தனிக் கழிப்பறைகளையும் வகுத்து அவரவர் மலமூத்திரத்தை ஜாதிவாரியாக பிரிக்கும் கலாசாரம்தான் இது. இதனால்தானோ என்னவோ அரசாங்க அதிகாரிகள் யாரும் பொதுக் கழிப்பிடங்களுக்குள் சென்று நீண்ட நாட்களாகியிருக்கும் என்று தோன்றுகின்றது. பொதுவாகவே, தங்களுக்குப் பரிச்சயமில்லாத ஒரு இடத்தை அல்லது வசதியை எவ்வாறு நிர்வாகிக்க வேண்டும் என்று எந்த அதிகாரிக்கும் தெரிவதில்லை. அதிகாரிகளுக்கே இல்லாத வசதிகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தவும், பராமரிக்கவும் எந்த அதிகாரியும் முனைவதில்லை.

மாபெரும் குப்பைதொட்டிகளாக தொழிற்பேட்டைகள்

சென்னைக்குக் குடிபெயர்ந்து, வாழ்ந்துவரும் மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் இங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியவே வருகின்றனர். கடந்த 15 ஆண்டு காலமாகத் தொடங்கி செயல்பட்டுவரும் தகவல்தொழில் நுட்பத்துறையையும் சேர்த்து மிக அதிக அளவில் சென்னையைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் மக்கள் பணிசெய்துவருகின்றனர்.

சுதந்திரம் பெற்றபின் இத்தகைய தொழில்களை சென்னையை சுற்றித் தொடங்கவும் அவற்றில் மிக அதிக அளவில் வேலைக்கு மக்களை அமர்த்தவும், அரசாங்கங்கள் தொழில் முனைவோரையும், பெரும் நிறுவனங்களையும் பல சலுகைகள் அளித்து வரவேற்று இடமளிக்கின்றது. ஆனால் இன்று சென்னையைச் சுற்றியுள்ள எந்த ஒரு தொழிற்பேட்டையைப் பார்வையிட்டாலும் அது ஒரு பிரம்மாண்டமான குப்பைத் தொட்டியாகவே காட்சியளிக்கின்றது. சமீபத்தில் சென்னையின் வெள்ளத்தில் பல பழைய மற்றும் புதிய தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக இவற்றில் பல, ஆறு மற்றும் கால்வாய்களை நிரப்பி கட்டப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.

தொழில் தொடங்க நீர் இன்றியமையாத ஒரு இயற்கை வளம். டாடா நிறுவனம் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சிங்கூர் எங்கின்ற விவசாய நிலங்கள் அதிகம் நிறைந்த இடத்தில் அங்குள்ள நீர்வளத்தைக் கணக்கிட்டு ஒரு கார் தயாரிக்கும் தொழிற்சாலை கட்ட முயற்சித்த பொழுது அங்கு மிகப்பெரிய மக்கள் எதிர்ப்பு எழுந்து அந்த நிறுவனம் அந்த மாநிலத்தைவிட்டே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், சென்னையை சுற்றி அவ்வாறு ஏதும் ஒரு மக்கள் எதிர்ப்பு எப்போதும் ஏற்படாத காரணத்தால், நீர்நிலையையும், விளைநிலங்களையும், ஆக்கிரமித்து கட்டப்படும் இத்தகைய ‘தொழிற் பேட்டைகள்’ பலவும் இங்கு உள்ளன.

இவற்றின் காரணமாக நகரச் சூழலுக்கு ஏற்படும் பல சவால்கள்


1. நீர் நிலைகளை தொழிற்சாலைகள் ஆக்கிரமிப்பதால் அந்த நீர்நிலை சார்ந்த சிறு மற்றும் குறு வியாபாரங்கள் அழிந்துவிடுகின்றன
2. நீர் வளம் வேறு யாருக்கும் பயனளிக்க (முக்கியமாக விவசாயிகளுக்கு) இயலாமல் போகின்றது
3. இத்தகைய நீரை, நிலத்தை மற்றும் காற்றை இவர்கள் மாசு படுத்தும் அளவு
4. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திட மற்றும் நீர்கழிவு
5. தொழிற்சாலையை சுற்றி இவற்றில் பணிபுரிபவர்கள் வசிக்கும் இடங்களும் அவற்றின் குறைவான வசதிகளும்
6. தொழிற்சாலைகளைச் சார்ந்த இதர / உபரி சிறு தொழிற்சாலைகள் மற்றும் அவற்றினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு

இதைத்தவிர தூரதேசங்களின் தேவைகளுக்காக உற்பத்தியாகும் (இப்பொழுது நமது பிரதமர் அடிக்கடி சல்லாகிக்கும் ‘Make in India‘ போல்) பொருட்களை சுமந்துசெல்லும் தரை, கப்பல், விமானம் போன்ற பலவழி போக்குவரத்தினால் ஏற்படும் மாசு என்று பலவற்றையும் சுத்தப்படுத்தும் வேலையை நமது நகர நிர்மாணிப்பவர்களும் அவர்களது அரசியல் அதிபதிகளும் எப்பொழுதும் யோசித்துத் திட்டம் வகுத்ததாகத் தெரியவில்லை. அதன் வெளிப்பாடுதான் இன்று எந்த தொழிற்பேட்டையின் சாலைகளிலும் மூக்கைமூடாமல் பொதுமக்கள் நடமாடமுடியாத நிலை. சென்னயின் அம்பத்தூர் மற்றும் கிண்டி தொழிற்பேட்டைகளில் சிலசமயங்களில் எதிரில் வரும் வாகனம் மிக அருகின் வரும்வரம் தெரியாத அளவிற்கு காற்றில் மாசும், குப்பையும் மிதந்துவருவதை பார்க்கலாம்.

சரி, இவற்றை நிர்மாணிக்கும் பொழுதுதான் யோசிக்கவில்லை, பிறகாவது மாற்று திசையில் செல்லலாம் என்றால் அதற்கு தொழில்முதல்வர்கள் முனைவதில்லை. பல தொழில்முனைவர்கள் மாசு கட்டுப்பாடு என்றால், “நாங்கள் சம்பாதித்துவிட்டோம், இனி, இந்த தொழிற்சாலையை மூடிவிட்டு வேறு ஏதேனும் தொழிலில் ஈடுபடுவோம்”, என்று சொல்வதாக மாசுக் கட்டுப்பாடு துறையை சேர்ந்த அதிகாரிகளே கூறுகின்றனர். தொழில் முதலீடு என்பது வளர்ச்சிக் குறியீடாகக் காணப்படுவதால், எந்தத் தொழிலும் நமது மாநிலத்தில் மூடவோ, முடக்கவோ, அனுமதி மறுக்கவோ நடந்தால் ஏதோ அதனைத்தான் பேரிடர் நிகழ்ந்ததாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சித்தரித்து நமது இயற்கை வளங்களைச் சூறையாட வழிவகுப்பது உலகமயமாக்கலில் பெயரில் சிலகாலமாக நடந்து வருகின்றது. உலகமயமாக்கலின் ஒரு நோக்கம் ஏழ்மை நாடுகளின் அனைத்து இயற்கை வளங்களையும் சொற்ப மூலதனத்துடன் பணக்கார நாடுகளுக்கு அள்ளித் தருவதே ஆகும். இதனால் தொழிற்சாலைகள் சார்ந்த நகரில் உள்ள சொற்ப வளங்களும் பாதிக்கப்பட்டபின்னர், “திடக்கழிவு மேலாண்மை”, என்றும், “மாசு கட்டுபாட்டு வாரியம்” என்றும் எந்த விதத்திலும் பயனில்லா வேலை செய்வதற்காகவே பல வாரியங்களை ஏற்படுத்தி கண்துடைக்கும் வேலை செய்வது அரசாங்கத்தின் மற்றும் வரிப்பணம் செலுத்துபவரின் பணம்விரயமாவதற்குதானே தவிர இதனால் முதலீடு செய்து மாசு உண்டாக்கும் தொழிலதிபர்கள் அஞ்சவோ அல்லது மாறவோ வாய்ப்புள்ளதாக தெரியவில்லை.

திட்டம் வகுத்து உருவாக்கப்பட்ட‌ அரசாங்கத் தொழிற் பேட்டைக்கே இந்தக் கதியென்றால், திட்டமிடாது தானாகவே வளர்ந்துவிட்ட பல தொழில்துறைகளுக்கு இன்னமும் மோசமான நிலையே மிஞ்சுகின்றது. தோல் பதனிடும் தொழிற்சாலைகள், ஊர்நலன் கெட்டும் உலகநலம் விற்கும் மருத்துவவியாபாரம் செய்பவர்கள் என்று சுயநலத்திற்காகப் பொதுநலனைப் பணய‌ம் வைக்கும் பல தொழில் அதிபர்களை நகரம் இன்றும் தனது தலைவர்கள் என்றும் சிறந்த குடிமக்கள் என்றும், நாயகர்களாகப் பாவித்து வருவது வருந்ததக்கது.

நகரமமைத்தலும், நரகமமைத்தலும்

சரியாக நிற்மாணிக்கப்படாத ஒரு நகரம் ஒரு நரகமே. சென்னை இன்று பேரிடர் வந்து மக்கள் தங்களுள் ஒழிந்திருந்த மனிதத்தன்மையை உணர்ந்திருப்பது, மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்வு, ஆனால், இந்த சென்னையில் இவ்வளவு நாள் மனிதத்தன்மையை ஏன் ஒளித்து வைக்க வேண்டியிருந்தது என்பது சிந்திக்க வேண்டிய தருணமிது. ஒரு நகரம் எவ்வாறு நிர்மாணிக்கப்பட வேண்டும், பராமரிக்கப்பட வேண்டும், முக்கியமாக அது எவ்வளவு பெரிதாக வளர வேண்டும் என்பதை நாம் நிர்ணயிக்க வேண்டும். நன்றாக அமைக்கப்பட்ட நகரத்தில் வந்து வாழ்பவர் யாவரும், தாங்கள் அந்த நகரத்தைச் சேர்ந்தவராக பெருமையுடன் கருதும் விதத்திலும், அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் அந்த நகரத்தில் வாழவும் வழிவகுக்காத ஒரு நகர நிர்மாணம், வெறும் நரக நிர்மாணமே.

நகரங்களின் தேவையை நாம் என்றும் மறுக்க முடியாது, ஆனால் அடிமைகளை ஆள்வதற்கும், பேராசைபிடித்த வியாபார நிறுவனங்களின் வளர்சிக்கும் மட்டுமே நிர்மாணிக்கும் நகரங்களை அழித்து, புனர்நிர்மாணம் செய்யும் வலிமையும், திறமையும் நமக்கு அமைய வேண்டும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org