தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உலக வாணிபமும் உழவன் வாழ்வாதாரமும் - அனந்து


நம் இந்திய அரசு ஒவ்வொரு வருடமும் உழவர்களுக்காகப் பல்வேறு வடிவங்களில் பல கோடி ரூபாய் மானியங்களை அளிக்கிறது. எடுத்துக் காட்டாக உர மானியம் என்ற பெயரில் தேசிய அளவில் வருடம் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப் படுகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று பல ஆயிரம் கோடி ஒவ்வொரு மாநில அரசும் செலவிடுகிறது. இவை தவிர வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் என்று பேரிடர்களுக்கான செலவினங்கள். இவ்வளவு செய்தும் இந்திய உழவர்களில் பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில்தான் இருக்கிறார்கள். ஏனெனில் அதன் பின்னணியில் ஆழ்ந்த, நூதனமான‌ அரசியல் மற்றும் வாணிப சூழ்ச்சிகள் புரையோடி உள்ளன.

இது இப்படி இருக்க வலுத்த நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகள் தங்கள் உழவர்களின் வருவாய் பாதிக்காமல் இருக்க மிகப்பல சலுகைகள் அளிக்கின்றன. அங்கே உற்பத்தி அவர்களின் தேவைக்கும், நுகர்ச்சிக்கும் மீறி மிக அதிகமாக உள்ளது. கோதுமை, மக்காச்சோளம் போன்ற தானியங்கள் மிகவும் அதிக உற்பத்தியாகி அவற்றை எவ்வாறு விற்பது என்ற கவலையில் அந்நாட்டு அரசுகள் உள்ளன. பல மேலைநாடுகளில் “தரிசு மானியம்” என்று நிலத்தைத் தரிசாகப் போடுவதற்கு அரசு மானியம் வழங்குகிறது.எனவே உணவுத் தன்னிறைவு பெற்று விட்ட நம்நாட்டில், உழவர்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, உழவு ஒரு கட்டுப்படியாகாத தொழில் ஆக்கிவிட்டால் பின் உற்பத்தி குறைந்து மேலை நாட்டு விளைபொருட்களுக்கு நாம் ஒரு மிகப் பெரும் சந்தை ஆகி விடுவோம் என்ற குயுத்தியுடன், அவ்வரசுகள் நம் வேளாண் மானியங்களைக் குறிவைத்துப் பல காய்களை நகர்த்தி வருகின்றன. (இச்சூழ்ச்சியின் விளைவுகளை வேளாண்மையில் உள்ளோர் ஏற்கனவே உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் மன்மோகன் சிங் விவசாயிகள் விவசாயத்தை விட்டுப் பெயர வேண்டும் என்றும், மோடி மேம்படுத்தல், மூளையுள்ள நகரங்கள் என்றும் முழங்கி வருகின்றனர்.)

உலகம் முழுவதையும் தங்கள் சந்தையாக்க வேண்டும் என்ற அடங்காத ஆசை கொண்ட பெருநிறுவனங்களும் அவற்றிற்குக் கைக்கூலிகளாய், குரங்காட்டியின் கம்பிற்குப் பயந்த குரங்கைப் போல், அவர்கள் அடிக்கும் தாளத்திற்கு ஏற்ப ஆடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் உலக வாணிப அமைப்பு (World Trade Organisation - WTO) என்றொரு பொம்மலாட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறார்கள். 1995ல் துவங்கப்பட்ட இவ்வமைப்பு (அதற்கு முன் GATT என்ற பெயரில் இது இயங்கி வந்தது), உலக நாடுகளுக்கு இடையிலான வாணிபத்தை ஒழுங்காற்றும் நோக்கத்துடன் செயல்படுவதாக வெளித்தோற்றம் அளிக்கிறது. இது உண்மையில் பணவலு வாய்ந்த பெருநிறுவனங்கள் தங்கள் சந்தையைத் தக்க வைத்துக் கொள்ளவும், விஸ்தரிக்கவும், ஏழை நாடுகளைச் சுரண்டவும் ஏற்படுத்தப் பட்ட ஒரு அமைப்பே. இவ்வமைப்பில் இந்தியா உட்பட 162 நாடுகள் உறுப்பினராக உள்ளன.

தடையற்ற வாணிபம், தாராளமய‌மாக்கல், உலகமயமாக்கல் போன்ற‌ பெயரில் எல்லா உறுப்பினர் நாடுகளும், மற்ற உறுப்பினர்களுடன் வாணிபம் செய்து கொள்ள நெறிமுறைகளையும், விதிகளையும் உருவாக்குவதே இவ்வமைப்பின் வெளி நோக்கம். இவ்வமைப்பு இதற்காகத் தொடர்ந்து பல பேச்சுவார்த்தைகளையும், சந்திப்புக்களையும் நிகழ்த்தியது. 1996ல் சிங்கப்பூர், 1998ல் ஜெனீவா, 1999ல் அமெரிக்காவின் சியாட்டில், 2001ல் கத்தார் நாட்டின் தோஹா, 2003ல் மெக்சிகோ நாட்டின் கான்கன் ஆகிய நகரங்களில் இவ்வமைப்பின் சந்திப்புக்கள் நிகழ்ந்தன. ஆனால் மேற்கத்திய நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையில் பல விஷயங்களில் எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் WTO அப்படியே கிடப்பில் போடப் பட்டது. முக்கியமாக ஏழைநாடுகள் (இந்தியா, பிரேஸில் உட்பட) தங்கள் விவசாயிகளைப் பாதுகாக்கும் விதத்தில் பற்பல சலுகைகளை அளிப்பதை வளார்ந்த நாடுகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால் அமெரிக்கா தான் தன் விவ்சாயிகளுக்கு அளிக்கும் மானியத்தைக் குறைத்துக் கொள்ள முற்றிலுமாக மறுத்து விட்டது. 20 வருடங்களுக்குப் பின்னும் WTO பேச்சுவார்த்தைகள் ஒரு வடிவுக்கு வராமல் இருப்பதற்கு வேளாண் மானியங்களே காரணம். தோஹாவில் நாம் எதிர்த்து இந்த மேலை நாடுகளின் கட்டுப்பாடற்ற ஓட்டத்தை நிறுத்தி இருக்காமல் இருந்திருந்தால் பல (உயிர் காக்கும்) மருந்துகளும், அத்தியாவசியப்பொருட்களும், விதை, கல்வி என்று எல்லாவற்றையும் பெரிதும் பாதித்திருக்கும். ஆனால் இப்பொழுது அந்த தோஹா ஆவணத்தை அழித்து, தங்களுக்கு மட்டுமே இன்னும் சாதகமாக இருக்கும் ஷரத்துகளை கொண்டு வந்து திணிக்க முற்பட்டனர்.

இந்நிலையில் உலக வர்த்தக அமைப்பின் 10வது வர்த்தக அமைச்சர்களின் மாநாடு கென்யாவின் நைரோபியில் கடந்த டிஸம்பர் மாதம் நடந்தது. 'வளர்ச்சி' , 'உலகமயமாக்கல்' மற்றும் 'சுத‌ந்திர வர்த்தகம் ' என்று மாயமானை காண்பித்து வறுமை மற்றும் வேலையின்மை போன்ற கொடுமைகளை பரவலாக தெளித்த ஆப்பிரிக்காவில் முதல் முறையாக உலக வர்த்தக அமைப்பின் மாநாடு நடப்பது குறிப்பிடத்தக்கது.

2001ல் தோஹாவில், உலக வர்த்தக ஒப்பந்தம் என்று மேற்கத்திய (வளர்ந்த?) நாடுகளுக்கு மட்டுமே நன்மை பயக்கும், அவர்களுக்கு மட்டுமே வசதியான , சமநிலையற்ற ஒப்பந்தமாக‌ விளங்கியதை சரி செய்வதற்கான முயற்சியாக தொடங்கியது.. விவசாயத்திற்கு வளரும் நாடுகள் அளித்து வரும் மானியங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பது தான் உலக வர்த்தக அமைப்பின் நோக்கம். தோஹாவில் உலக வர்த்தக அமைப்பின் நியாயமற்ற விவசாய 'சீர்திருத்தங்கள்' மைய்யமாக வைக்கப்பட்டு மீண்டும் எடுத்துக்கொள்ள‌ப்பட்டன. பணக்கார நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கான வர்தக தடைகளை, தடங்கல்களை சீர் தூக்கி பார்க்க அமைக்கப்பட்டது. ஆனால் இம்முறை அந்த பழைய நிகழ்ச்சி நிரல்களை தள்ளி வைத்து விட்டு அவர்களுக்கு ஏதுவான புதிய விதிகள் அமைக்கவே வளர்ந்த நாடுகள் எத்தனித்தன.

மீண்டும் விக்ரமாதித்தியனின் வேதாளம் போல் நமது முதுகில் உலக வர்த்தக அமைப்பின் சுமைகள்..

தோஹாவை விடுங்கள். அதன் பின்னர் வந்த பாலி ஒப்பந்தம்? அங்கே கொண்டுவரப்பட்ட சில தீர்வுகளை உறுதி செய்யவோ, கலந்தாலோசிக்கவோ பேச்சு எடுக்கவே இல்லை. தோஹாவில் விட்டு, பாலியில் சுட்டு, நைரோபியில் புதைத்தோம்.. நமது உணவு பாதுகாப்பு சட்டம், விவசாய மானியங்கள், விவசாயிகளுக்கு அளிக்கும் கொள்முதல் விலை, கொள்ளிருப்பு- எல்லாவற்றையும் தொலைத்து நாம் வாட, அவர்கள் வர்த்தகம் பெருத்து அவர்கள் கொழிக்க, ஒரு ஒப்பந்தமாக மட்டுமே உருவெடுத்தது..( அன்று பாலியிலும் இன்று நைரோபியிலும்).

மாநாடு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், வளரும் நாடுகளின் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த மாநாடு முடிவடைய வேண்டிய நிலையில், ஒருமித்த முடிவு எடுப்பதற்காக, மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு அதிலும் மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமே நலம் தரும் ஒப்பந்த விதிக‌ள்.

இந்நிலையில், மாநாட்டுப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா முட்டுக்கட்டை போடுவதாக சமூக வலைதளங்களில் பெரும் புரளி கிளப்பினர். (இந்த பிரித்தாளும் யுக்தியினை அவர்கள் விடவே மாட்டார்களா?) அப்படி வெளியான தகவல்களுக்கு வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மறுப்பு தெரிவித்தார். இருந்தும் சரியாக அவர் கொண்டு செல்லவில்லை. இப்படி ஒவ்வொரு முறையும் அங்கு செல்லும் வர்த்த அமைச்சர் (முன்னர்ஆனந்த் சர்மா பாலியில், பின்னர் நிர்மலா பாலியில்) முதலில் பெரிதாக‌ கர்ஜித்து பின்னர் அப்படியே பொட்டிப்பாம்பாக அடங்குவர் -அதுவும் கடைசி நாளில். பின்னர் “வெற்றி” “வெற்றி” என்று கூவுவர். வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கான சிறந்த ஒரு தலையாகவும், அவர்களின் நலனில் அக்கரை கொண்ட பெரும் நாடாகவும் விளங்கி ஒரு நல்ல உதாரண நாடாகவும் தலைமையாகவும் விளங்கக்கூடிய வாய்ப்பினை மீண்டும் தவற விட்டது இந்தியா.

இம்முறையும் அப்படியே..முதலில் கொஞ்ச‌ம் எகிரி பின்னர் அப்படியே பம்மி, நமது முக்கிய கோரிக்கைகளான உணவுப்பாதுகாப்பையும், விவசாய மானியங்களையும் (விவசாய நலன் என்று படிக்கவும்) காவு கொடுத்து ஒரு ஒப்பந்தம்!

நமது மானியங்கள், நமது விவசாயிகளின் வாழ்வாதாரங்கள், நமது இறையாண்மை எல்லாம் தொலைத்து அப்படி என்ன ஒரு ஒப்பந்தம்? அதுவும் வர்த்தகம் மேம்படுத்தும் ஒப்பந்தம்! யாருக்கு?

பணக்கார நாடுகளுக்கு சாதகம் செய்யும் விதமான உலக வர்த்தக விதிமுறைகளை அகற்ற வேண்டும் என்று இந்தியா மற்றும் பல வளரும் நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. பணக்கார நாடுகள் தங்கள் விவசாயத்துக்கு அதிக மானியம் வழங்குவதால் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளன. இப்பொழுது அவர்கள் எல்லாவற்றையும், அதுவும் தோஹாவின் விதிகளை புதைக்க மிகவும் முயல்கின்றன. ஏனென்றால், உலகிலேயே அதிக அளவில் வேளாண் மானியம் வழங்கும் நாடு அமெரிக்கா. 2011-ம் ஆண்டு 139 பில்லியன் டாலர்கள் வேளாண் மானியம் அளித்துள்ளது அமெரிக்கா. 2012ல் இன்னும் அதிகமாக அளித்துள்ளதால் அவர்கள் உலக வர்த்தக அமைப்பின் ஷரத்துக்கள் படி தவறிழைத்தவர்கள் ஆவார்கள், அதனால் தோஹா விதிகளை புதைக்க அவ்வளவு அவசரம். முன்பே பருத்தி விஷயத்தில் அமெரிக்கா அதிக மானியம் கொடுத்து மாட்டிக்கொண்டு, பிரேசில் வழக்கு தொடுக்க, மானியங்களை குறைப்பதற்குப் பதிலாக பிரேசிலுக்கு 100 மில்லியன் டாலர்கள் தொகையை இழப்பீடாக அளித்தது. ஆக ஒப்பந்தத்தை மீறிய முதல் குற்றவாளி அமெரிக்கா தான் (எப்பொழுதும் போல்).

ஆனால் நாம் நம் நாட்டு விவசாயிகளுக்கு மற்றும் ஏழைகளுக்கு மானியம் அளிக்கக்கூடாது, ஏனென்றால் அது சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கும்.

உலக வர்த்தக அமைப்பு - இதில் உலகம் எது? அமெரிக்காவும் ஐரோப்பா மட்டுமேவா? அப்படித்தான் இருக்கிறது அவர்களது செயல்பாடு.. அப்படி ஒரு வர்த்தகமோ, வர்த்தக அமைப்போ தேவை இல்லை என்று முதுகெலும்புடன் கூற முடியாத அரசும், மந்திரியும் தேவையா?

இது போதாது என்று, இம்மாநாட்டில் சேவைத் துறைகளான கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

மொத்தத்தில் இவர்கள் நினைவில் நிறுத்த வேண்டியது- சுத‌ந்திர வர்த்தகம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பது, நம் போன்ற முன்னேறும் நாடுகளின் உணவு (கொள்முதல்)மானியங்கள் அல்ல, அமெரிக்கா (மற்றும் மேற்கத்திய நாடுகளின்) வின் விவசாய மானியமே! அதை ஒளிக்கவும் மறைக்கவுமே வார்த்தை ஜாலங்கள், அர்த்தமற்ற திசை திருப்பல்கள், வணிக ஒப்பந்தங்கள்- இந்த பெரும் முதலை தனியார் நிறுவனங்களின் வர்த்தகத்தை மட்டும் முன்னிறுத்திய மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சி தான் உலக வர்த்தக அமைப்பும் அதன் மாநாடுகளும்.

இந்த உலக வர்த்தக அமைப்பு, வர்த்தக ஒப்பந்தம் எல்லாமே அவர்களுக்கு மட்டுமே நலன் பயனளிக்கக் கூடியதாக மட்டுமே இருந்திருக்கிறது. அதனை தீர்க்கமாக எதிர்க்கவோ தகர்க்கவோ முடியாத அரசுகள் இப்படி மடியத்தான் செய்யும்..அதனால் தான் பாலியிலும் நைரோபியிலும் நாம் மேலும் எட்டாகவும் பதினாறாகவும் மடிகிறோம்..இது அன்றைய அந்த அந்த அரசின் பிரதம மந்திரிகளின் பிரதம ஆணையாகவும் அழுத்தமாகவும் இருக்கும். அதற்கெல்லாம் அங்கே, வெள்ளை மாளிகையிலிருந்து சொடுக்கப்பட்டிருக்கும் சாட்டை! இவை மிகப்பெரிய தவறு என்று பின்னாளில் தெரிய வரும்பொழுது, நம்மால் உடனடி நடவடிக்கைகள் எடுக்க இயலாமல் போகும். உதாரணத்திற்கு, நமது நாட்டில் சுற்றுச்சூழல் கேட்டினாலும், பருவ நிலை மாற்றங்களாலும் உற்பத்தி குறையும் தருணத்தில் இந்த மேலை நாடுகள், அவர்தம் பெரும் மானியங்களால். அதிக உற்பத்தி செய்து, குறைந்த விலைக்கு வளரும் நாடுகாள் மீது திணிக்கும்! குவிக்கும்!! அது போல் பல மாற்றமுடியாத, சுதாரித்துக்கொள்ள முடியாத நிலையிலிருன்டு யோசிப்பதை விட இன்றே தொலை நோக்குடனும் நமது நன்மைகளை கருத்தில் கொண்டு செயல்படுவதே சிறந்தது.. அண்மை பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் வழிகளை விட்டு (அதே) உணவை எங்கிருத்தோ கொண்டு வரும், லாபத்திற்கு மட்டுமே இயங்கும் பெரும் வணிக கம்பனிக்களின் வாயிலாக பெருவதின் நொக்கம் என்னவாக இருக்க முடியும்? உள்நாட்டில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் தற்கொலையை தடுக்க வக்கில்லாத அரசுகள், பாலி, நைரோபி என்று அலைந்து நமது விவசாயிகளின் உடல்களின் மீது வர்த்தக நர்த்தனம் ஆடுவதா?

வர்த்தகம் பெருக்க வேண்டும் தான். அது அந்த மேலை நாடுகளுக்கு மட்டுமே நன்மை பயப்பதாக இருந்து, நமது விவசாயிகள் நலன் மற்றும் உணவு பாதுகாப்பை அழித்து தான் வர வேண்டுமா?

இதில் எங்கே வர்த்தகம் வந்தது? இன்று வரை (இவ்வ‌ளவு ஆண்டுகளில் ஒரு ஒப்பந்தமோ, ஒரு வரைவோ எல்லார் ஒப்புதலுடன் வழங்க முடியாத இந்த உலக வர்த்தக அமைப்பு இருந்தென்ன லாபம்? எல்லா நாடுகளின் நலனையும் அதிலும் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் நலனை நினைவில் நிறுத்தாத ஒரு ஒப்பந்தமோ, அமைப்போ தேவையா?

அங்கே நைரோபியில் எதிர்ப்பாளார்கள் வைத்திருந்த ஒரு பதாகையில் இதன் உண்மை நிலைமை ஒருவரியில் தெளிவாக்கப் பட்டது: ” இந்தக் கிரகத்தை காக்க வேண்டுமானல், உலக வாணிப‌ அமைப்பைக் கொன்று புதைக்க வேண்டும்” (For the planet to survive, the WTO must die)

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org