தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பீடையில்லாததோர் கூடு - பயணி


நாம் 2015ம் வருடத்தின் ஆனி, ஆடி இதழ்களில், மதுராந்தகம் தாலுக்கா, ஒழவெட்டிக் கிராமத்தில் இயற்கை வேளாண்மை செய்து வரும் கற்பகம் ஸ்ரீராம் தம்பதியர் பற்றியும் மற்றும் , அவர்களுக்கு அடுத்த வயலில் உள்ள சித்தார்த்தைப் பற்றியும், அவர்கள் கட்டியிருக்கும் சூழல் சுவடு குறைந்த வீடுகளைப் பற்றியும் எழுதியிருந்தோம். அப்போது சித்தார்த் உள்ளூர் கிராமத்துத் தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டே சுடாத‌ அச்சுமண் செங்கற்கள் (adobe) தயாரிப்பதைக் குறிப்பிட்டு, வீடு நிறைவடைந்தவுடன் அதைப் பற்றி எழுதுவதாகவும் கூறியிருந்தோம். முழுமைக்காக அக்கட்டுரையில் இருந்து சில வரிகளை நினைவு கொள்வோம்.

“சூழல்சுவடு குறைவான, ஆனால் கான்க்ரீட் வீட்டைப் போன்ற நீடித்த ஆயுளும், அடிக்கடி செப்பனிடத் தேவையற்றதும் ஆன‌ வீடு ஒன்றைப் பற்றிச் சென்ற இதழில் (கற்பகம் ஸ்ரீராம்) பார்த்தோம். இவ்விதழில் அவர்களுக்கு அருகிலேயே, அச்சுமண் சுவர் (சுடாத செங்கல்) கொண்டு தன் வீட்டைக் கட்டி வரும் திரு.சித்தார்த் அவர்களைப் பற்றிக் காண்போம். இவர் ஏற்கனவே தாளாண்மையில் தமிழக ஏரிப்பாசனம் என்ற கட்டுரைத் தொடரை எழுதியவர். சித்தார்த் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்தவர். ஐ.ஐ.டியில் பி.டெக் அதன் பின் ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ படித்தவர். இப்பொழுது ஒழவெட்டிக் கிராமத்தில் 2 ஏக்கரில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார். காய்கறிகளை இயற்கையாக விளைத்து அதை அருகில் உள்ள கிராமங்களில் விற்று வருகிறார்!

மிகவும் எளிதாக சித்தார்த்தின் வயலிலேயே மண் எடுத்து, அதில் ஒரு மூலையில் தொட்டி போன்ற ஒரு குழி வெட்டி அதில் நீர் நிரப்பி, பல நாட்கள் மண்ணை நன்றாய்ப் புளிக்க வைத்து சரியான பதத்தில் செங்கல் அச்சுகளில் நிரப்பிப் பின் வயலிலேயே காய வைத்து 3 நாட்களில் (40 டிகிரி வெய்யிலில்!) மிக உறுதியான, சுடாத செங்கல் தயாராகிறது. சித்தார்த்தின் வயல் களிமண் பூமியாக உள்ளதால் இது எளிதில் சாத்தியமாகிறது.”

சென்ற மாதம் சித்தார்த் தன் வீட்டின் பு9487147678 துமனை புகுவிழாவிற்கு நம்மை அழைத்திருந்தும் கடும் மழையின் காரணமாகப் போக இயலவில்லை. பின்னர் அவ்வீடு எப்படி இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தில் சென்ற வாரம் அங்கு சென்றிருந்தோம்.

அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும்
விட்டேறிப் போன வெளிதனிலே வியப்பொன்று கண்டேன்

என்று பட்டினத்தடிகள் போல வயலின் நடுவே ஒரு அழகிய வியப்பு நம்மை வரவேற்றது. கீழும் மாடியுமாய் இரண்டு தளங்கள் கொண்ட வீட்டின் உள்ளேயே மாடிக்குச் செல்லும் படி. மொத்தம் 800 சதுர அடி கொண்ட வீட்டில், 200 சதுர அடி மாடியிலும், 600 சதுர அடி கீழுமாக அமைத்துள்ளார்.

சூழல் சுவடு என்று பார்த்தால், 200 சதுர அடியின் கடைகால் கான்க்ரீட்டில் அமைத்துள்ளார். அதையே கான்கிரீட் தூண்களால் எழுப்பி 200 சதுர அடிக்குக் கான்கிரீட்டினால் சமதளக் கூரை அமைத்துள்ளார். இதுவே சூழலுக்கு எதிரான கட்டுமானம். வீட்டின் மற்ற பகுதிகள் அனைத்தும் இயற்கையோடு இணைந்து மிகக் குறைந்த சூழல்சுவடு கொண்டவையே.

கட்டுமானத் தொழில்நுட்பங்கள்

கடைகால் (அஸ்திவாரம்)

வீட்டின் உட்கூட்டிற்குக் கான்கிரீட் கடைகால் ; பிற பகுதிகளுக்கு அருகில் உள்ள‌ கிணற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்களால் கடைகால் போடப்பட்டது. கடைகாலில் கருங்கற்களைப் பிணைக்கத் தரைக்குக் கீழ் சேற்றுக் கலவை பயன் படுத்தப் பட்டது. தரைக்கு மேலேயும், மற்றும் எங்கெல்லாம் கடைகால் வெளித்தெரிகிறதோ அங்கெல்லாம் சிமென்ட் கலவை பயன்படுத்தப் பட்டது.

சுவர்க் கற்கள் மற்றும் கலவை

குளியல் அறையில் மட்டும் 6 அடிக்குச் சுட்ட செங்கற்களும் சிமென்ட் கலவையும் கொண்டு கட்டப்பட்டது. அதற்கு மேல் அச்சுமண் பயன்படுத்தப் பட்டது. வீட்டின் மற்ற எல்லாச் சுவர்களும் அச்சுமண்ணாலேயே கட்டப் பட்டன.

கற்களைப் பிணைக்கும் கலவையாக, அச்சுமண் தயாரிக்கப் பயன்பட்ட மண்ணிலேயே மேலும் மணல் கலந்து, ஓரளவு கெட்டியான திரவப் பதத்திற்கு நீர் கலந்து, கற்களுக்கு மேலும் இடையிலேயும் ஊற்றப் பட்டது. அது காயும் முன் அடுத்த வரிசைக் கற்கள் அடுக்கப் பட்டன.

வீட்டின் தரை

சித்தார்த்தின் கிணற்று மண் இட்டுத் தரை நிரப்பப்பட்டது. இதன் மேல் ஜல்லியை இட்டு வழக்கம்போல் ஈரமாக்கித் திமிசித் தரை சமப்படுத்தப் பட்டது. இதன் மேல் சுண்ணாம்பு, சுருக்கி, மணல் கலந்த கலவை பரப்பித் திமிசிட்டு அதன் மேல் டெரகோட்டாவோ பீங்கானோ தட்டு ஓடுகள் பதிக்கப் பட்டன. விளைபொருட்களை இருப்பு வைக்கும் அறை மட்டும் முழுவதும் சிமென்ட் பால் கொண்டு தரை போடப் பட்டது.

கூரை

வீட்டின் மையம் (200 சதுர அடி) கான்கிரீட் கூரை கொண்டது. இது பூசாமல் அப்படியே விடப் பட்டுள்ளது. மற்ற அனைத்துப் பகுதிகளும் பனம் சாத்துக்களின் மேல் தென்னங்கீற்றால் வேயப் பட்டுள்ளது.

சுவற்றுக்குப் பூச்சு

வெளிச்சுவர்கள்: மண்ணுடன் மாட்டுச் சாணி கலந்து கையால் பூசப்பட்டுப் பின் காரக்கல் என்றழைக்கப்படும் தட்டையான கைக்கடக்கமான ஒரு கூழாங்கல்லால் தேய்த்து மெருகு ஏற்றப் பட்டது.

மழைச்சாரல் படக் கூடிய வெளிச் சுவர்களின் கீழ் இரண்டடி சுண்ணாம்பு பூசப்பட்டது.

உட்சுவர்கள்: சுண்ணாம்பு, சாம்பல், மணல் மற்றும் மண் கலந்த கலவை. இவை காரக்கல் மற்றும் மணியாசுக் கட்டையால் சமன் செய்யப்பட்டன.

சன்னல் மற்றும் கதவுகள்

எல்லா மரச் சாமான்களுமே (சாத்துக்கள் உட்பட) பிரித்த/ இடித்த வீடுகளில் இருந்து பழையதாகப் பெறப் பட்டன. மரத்தை வெட்டாமல் வீடு கட்ட வேண்டும் என்பதில் இவர் பிடிவாதமாக இருந்தார். மாடிப் படி இரண்டு யூகலிப்டஸ் மரங்களுக்கு இடையில் சவுக்குக் கட்டைகளை குறுக்கில் நார்க்கயிற்றால் கட்டி வயதானவர்களும் எளிதாய் ஏறும்படி அமைக்கப் பட்டுள்ளது. பல இடங்களில் சன்னல்களே தேவைப்படாத வகையில் ஜாலி அமைக்கப் பட்டுள்ளது (மாடிப் படுக்கையறை ஒரு நல்ல உதாரணம்). சமையல் மேடை, குழாயில் நீர், அனைவருக்கும் வசதியாய் மேற்கத்திய கழிப்பறை, வெய்யிலின் ஆற்றலைப் பயன்படுத்தும் வகையில் சூரியப் பலகையால் ஒளியூட்டப் படும் விளக்கு, மடிக்கணினி, இணைய இணைப்பு போன்றவை சிறப்பாக உள்ளன.

மொத்த செலவு

800 சதுர அடி கட்ட 4.5 லட்சம் செலவு ஆனது. இதில் பலவிதமான ஆரய்ச்சிக்களும், காந்தி கூறியது போல் ஐந்து மைலுக்கு அப்பால் இருந்து (முடிந்தவரை) எப்பொருளும் கொண்டு வரப் படக் கூடாது என்ற பிடிவாதமும் செலவைக் கூட்டியுள்ளன. பெரும்பாலான செலவு உள்ளூர் மக்களுக்குக் கூலியாகக் கொடுக்கப் பட்டது என்பது ஒரு நிறைவான விட‌யம்.

ஒரே மாதத்தில் பெய்த 250 செ.மீ கனமழையையும் எளிதாய்த் தாங்கி நிமிர்ந்து நிற்கும் இவ்வழகிய மண்வீடு, நம் நவீன மோகத்துக்கு ஒரு நல்ல மருந்து.

தொடர்பிற்கு: சித்தார்த் - 9487147678

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org