தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


சீனாவின் சிக்கல்


பொருளாதார வல்லரசான சீனா, அனைத்துப் பொருளியல் நிபுணர்களாலும் அமெரிக்காவையும், ஜப்பானையும் விஞ்சி விடும் என்று எதிர்பார்க்கப் பட்டது, படுகிறது. சீனாவில் முதலீடு செய்வது உலகப் பெருநிறுவனங்களின் பேரவாவாக இருந்தது - இன்னும் இருக்கிறது. சில பத்தண்டுகளுக்கு முன்னர், ருசியாவில் பொதுவுடைமை தோற்றது என்ற போது பொதுவுடைமையின் வெற்றிக்கு ஒரு மாதிரியாகச் சீனா கருதப் பட்டது. இந்நிலையில் சீனாவின் திடீர்ப் பொருளாதாரச் சிக்கல் உலகப் பொருளாதாரத்தைப் பெரிதும் உலுக்கி இருக்கிறது. பங்குச் சந்தைகள் தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. 2008ல் அமெரிக்கா ஓட்டாண்டியாகி விடும் நிலைமை வந்தது - இன்றும் உலகிலேயே அதிகக் கடன் உள்ள நாடாக அமெரிக்காதான் இருக்கிறது.

அய‌ர்லாந்து, கிரேக்கம் போன்ற நாடுகள் ஐரோப்பியப் பொருளாதார மாதிரியைக் கைப்பிடித்து மிகவும் ஏழ்மை நிலையை எட்டின. கிரேக்கத்தின் நிலை இன்னும் மிகவும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இம்மென்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் என்று கடுமையான தண்டனைகளுடன் எதிர்ப்புக்களை நசுக்கி ஆண்டு வரும் சீன அரசு பொதுவாகத் தற்சார்புடனே செயல் பட்டு வந்தது. உலகில் உணவுப் பற்றாக்குறையைப் பற்றிக் கேள்வி எழுந்தபோது சீன அரசு “நாங்கள் உலகின் ஆறில் ஒரு பங்கு மக்களுக்கான உணவை நாங்களே உற்பத்தி செய்கிறோம். எங்கள் பங்கை நாங்கள் செய்கிறோம்” என்று பதிலளித்தது.சீனா உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை நிறுத்தி விட்டால் மேலை நாடுகள் முற்றிலும் அசைவற்றுப் போய்விடும் என்பது ஓரளவு உண்மையே. மிகக் குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் உத்தியைச் சீனா கண்டுபிடித்துச் செயல் படுத்தி இன்று உலகையே தன் பொருட்களால் ஆள்கிறது என்றால் அது மிகையாகாது. உலகமே தன் சந்தையான சீனப் பொருளாதாரத்தின் அடித்தளம் ஆட்டம் காண்பது ஏன்?

அதன் உண்மைக் காரணம் அது முதலாளியத்தையும், மையப் பொருளாதாரத்தையும் ஊக்குவிப்பதுதான். சீனாவின் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முதலாளிகள் மட்டுமே ஏற்றம் காண்கிறார்கள் - உழைப்போர் மேலும் நலிந்து கொண்டே போகிறார்கள். 2014ம் ஆண்டு சீனாவில் 1379 தொழிலாளர் போராட்டங்கள் நடந்தன. 2015ல் இது 2774 ஆக அதிகரித்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு போராட்டங்களே ஊதிய உயர்வுக்காக நடத்தப்பட்டவை - மற்றவை ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற போராட்டங்கள்! ஆம் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளிகளுக்கு முதலாளிகள் பல இடங்களில் சம்பளமே கொடுப்பதில்லை.

சீனா தன் அரசியல் கொள்கை என்னவாயினும் , பொருளாதாரத்தில் நவீன மேம்படுத்தும் மாதிரியையே கடைப்பிடித்து வருகிறது. ஆற்றல் பசி கொண்ட இயந்திர உற்பத்தி மற்றும் வேளாண்மை, மையப் பொருளாதாரம், நகரமயமாக்கல் ஆகிய கொள்கைகள் கொண்ட சீன அரசு பல ஆண்டுகளுக்கு முன் 25 கோடிக் குடிமக்களை வலுக்கட்டாயமாகக் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு அனுப்புவது என்றொரு திட்டம் வகுத்தது. அதை நாம் அப்போதே கடுமையாகச் சாடினோம்.

உலகெங்கிலும் எல்லா அரசியல் மாதிரிகளும், பொருளாதார மாதிரிகளும் தோற்றுக் கொண்டே இருக்கின்றன - ஏனெனில் மனிதனின் பேராசை எல்லாத் திட்ட வரைவுகளையும் சீர்குலைத்து விடுகிறது. சுரண்டல் மட்டுமே எஞ்சுகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு - தனி மனித மாற்றம், சிறு சமூகங்கள், இயற்கையோடியைந்த வாழ்முறை, வரையறுக்கப்பட்ட நுகர்ச்சி இவையே. இவ்வுண்மை பெரும்பாலான பேருக்குக் கசக்கிறது. நோய் கடுமையாகப் புரையோடி விட்டால் ம‌ருந்து கசக்கத்தான் செய்யும். வாழ்வா அல்லது சுவையான சாவா என்பது அவரவர் தேர்வு.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org