தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி - பசுமை வெங்கிடாசலம்


ஈரோடு மாவட்டம் கோபியிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 5 ஆவது கல் தொலைவில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதி மூலவாய்க்கால். இதை ஒட்டி சுமார் 4.1 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள உழவாண்மை பண்ணை திரு. விஜயபாஸ்கருக்கு சொந்தமானது. இந்தப்பண்ணை உழவாண்மை பண்ணையாக மாற்றமடைந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றது. திரு. விஜயபாஸ்கர் பாரம்பரிய விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்துவிட்டு நேரிடையாக தனது குடும்பத்துக்கு சொந்தமான பூமியில் விவசாயத்தில் ஈடுபட்டார். கோபி பகுதியில் பவானிசாகர் அணை நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நீர் ஆண்டு முழுவதும் கிடைப்பதால் இந்தப்பகுதியில் எப்போது பார்த்தாலும் பசுமையாக காணப்படும். கரும்பு, வாழை, மஞ்சள் மற்றும் மூன்று போகமும் நெல் போன்ற பயிர்கள் தொடர்ந்து பயிர் செய்யப்படுகிறது. பாஸ்கரும் தனது பூமியில் மஞ்சள், கரும்பு, வாழை போன்றவற்றை பயிர் செய்துவந்துள்ளார்.

இவரது பூமி பவானி ஆற்று வாய்க்காலை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ளது. அதனால் அவர் தனது நீர்ப்பாசனத்திற்கு கிணற்று நீரையே பயன்படுத்தி பயிர் செய்துள்ளார். பின்பு ஆழ்துளை கிணற்று நீரைப்பயன்படுத்தியுள்ளார்.

பாஸ்கரும் அவரது மனைவி வடிவும் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள். சைவ உணவை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு பின்பற்றுபவர்கள். பல ஆன்மீக அமைப்புகளில் பயிற்சி எடுத்துள்ளவர்கள். இந்த ஆன்மீக ஈடுபாடு இவர்களுக்கு இயற்கையை பற்றிய புரிதலுக்கு வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக இவர்கள் தம் பண்ணையை இயற்கை விவசாயப்பண்ணையாக மாற்ற நினைத்து தேடுதலை தொடர்ந்துள்ளனர். 15 வருடங்களுக்கு முன் இவர்களுக்கு திரு. நம்மாழ்வாரின் தொடர்பு கிடைத்து அதன் பின் தம் பண்ணையை முழுவதும் இயற்கை விவசாய முறைக்கு மாற்றியுள்ளனர். வாழை, கரும்பு, மஞ்சள் போன்ற பயிர்களுக்கு மூடாக்கு, மண்புழு உரம், பஞ்சகவ்யா, மூலிகை கரைசல் போன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் உயிர்சக்தி வேளாண்மை தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தியுள்ளனர். விளைச்சலும் நன்றாகவே கிடைத்துள்ளது.

சில நாட்கள் திரு. நம்மாழ்வார் இவரது பண்ணையில் தங்கி பல விவசாயிகளுக்கு பயிற்சியும் கொடுத்துள்ளார். இதற்கிடையில் மழை அளவு குறைந்ததால் தண்ணீர் மிகவும் குறைந்து பலவிதமான பாதிப்புகளை உருவாக்கியது. வரவு செலவுகளை மிகவும் முறையாக எழுதிவைத்து கணக்கு பார்க்கும் பழக்கம் உள்ளவர் திரு. விஜயபாஸ்கர். இதன் மூலம் தனது தேவைக்கு போதுமான வருமானம் பண்ணையில் இருந்து கிடைக்கவில்லை என்பதை உணர்ந்து தனது பண்ணையின் ஒரு பகுதியை குத்தகைக்கு விட்டு விட்டு வேறு தொழிலில் ஈடுபட்டார்.

ஒரே விதமான பயிர்களை செய்வதால் விளைச்சல் கிடைத்தாலும் போதிய விலை கிடைப்பதில்லை, விலை கிடைக்கும்போது பருவசூழல் சரியாக அமையாததால் மகசூலில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதையும் உணர்ந்தார். இந்த சிந்தனையால் இவர் பல விவசாய பண்ணைகளுக்கு சென்று பார்த்து அந்த பண்ணை உரிமையாளர்களுடன் சந்தித்து பேசினார். இந்த தேடுதல் இவருக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தியது. பின் தன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரது விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக தன் பண்ணையை வடிவமைக்க முடிவு செய்தார்.

அவரது மனைவியின் தேவை வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், கால்நடைக்கு தேவையான தீவனம். தந்தைக்கு தென்னை வைத்து விட்டால் வேலை குறைவு மற்றும் நிரந்தரமான வருமானம் வரும் என்பது. தனது எண்ணம் வாழை, மஞ்சள் இவற்றுடன் பல வகையான மரங்கள் இருந்தால் நிகழ்கால செலவுகளுக்கும் பல வருடங்கள் கடந்து மரங்களில் இருந்து ஒரு கணிசமான வருவாயும் கிட்டும் என்பதாக இருந்தது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்ய திட்டம் இட்டு, முதலில் தனது 4.10 ஏக்கர் நிலத்தைச்சுற்றி கம்பி வலை மற்றும் கல்கால் கொண்டு வேலி அமைத்தார். பின் தன் பூமியின் நடுவில் 16 அடி பாதை அமைத்தார். ஒரே சீராக 25 அடிக்கு ஒரு நீள வாக்கில் டிரெஞ்ச் (வாணி) எடுக்கப்பட்டுள்ளது. 2 1/2 அடி அகலமும் 1 1/2 அடி ஆழமும் உள்ளதாக இது அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாணியில் 15 அடிக்கு ஒரு நெட்டை தென்னைக்கன்றும் ஒரு குட்டை (இளநீர்) தென்னைக்கன்றும் மாறி மாறி நடவு செய்யப்பட்டுள்ளது. ஆக 15 அடி இடைவெளியில் தென்னைக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒன்று நெட்டை மற்றது குட்டை. ஆக இரண்டு கன்றுகளும் போட்டியில்லாமலேயே வளரும் தன்மை கொண்டது. அடுத்து இந்த இரண்டு தென்னை கன்றுகளுக்கும் இடையில் ஒரு பழமரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் பலவிதமான பழ மரக்கன்றுகள் கலந்து நடவு செய்யப்பட்டுள்ளது. இதில் மா, பலா,கொய்யா, சப்போட்டா,நெல்லி, நாவல், சீதா, மாதுளை போன்ற பழ வகைகள் அடங்கும்.

அருகில் உள்ள வாணியில் 5 அடிக்கு ஒரு தடி மரக்கன்று அதுவும் பல விதமான மரக்கன்றுகளை கலந்து நடவு செய்யப்பட்டுள்ளது. மலைவேம்பு, குமிழ்தேக்கு, மகாகனி,ஈட்டி, மஞ்சள் கடம்பு, வாகை,பூவரசு, நாவல், தான்றி போன்ற பல வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. வேலி ஓரங்களில் 3 அடிக்கு ஒரு சவுக்கு நடவு செய்யப்பட்டுள்ளது. சற்று உள்ளே வேலி ஓரத்தில் பல சாதி வாழை கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 வாணிகளுக்கு இடையில் உள்ள 25 அடியில் மேட்டுப்பாத்தி (3 1/2' x 1 1/2') அமைத்து அதில் மஞ்சள், சோளம்,இஞ்சி போன்ற பயிர்கள் விதைக்கப்பட்டன. ஆங்காங்கு காய்கறி செடிகளும் விதைக்கப்பட்டன. பண்ணை முழுவதும் பசும்போர்வை போர்த்தப்பட்டது. ஒவ்வொரு சதுர அடி பரப்பிலும் மூன்று அடுக்கு முறையில் பயிர் செய்யப்பட்டன.

மூன்று ஆண்டு முடிவில் இன்று 4.10 ஏக்கர் பரப்பில் சுமார் 320 தென்னை மரங்களும் பல நூறு பழ மரங்களும், தடி மரங்களும் உள்ளே ஊடுபயிராக மஞ்சள், வாழை, காய்கறி மற்றும் தீவன பயிர்க்களுமாக பண்ணையே பசுமைக்கூடாரமாக மாறிவிட்டது. 4.10 ஏக்கரும் விசைத்தெளிப்பான்களால் (sprinklers)பாசனம் செய்யப்படுகிறது உழவு தேவைப்படவில்லை. வெளியில் இருந்து எரு எடுத்துவரப்படவில்லை. மூலிகை பூச்சி விரட்டி கூட தெளிக்கப்படவில்லை. ஏன் என்றால் பலவித பயிர்கள் பயிர் செய்யப்பட்டதால் பூச்சி தாக்குதல் என்பது இயற்கையாகவே கட்டுக்குள் இருந்தது. கடந்த மூன்று வருடங்களாக மிகவும் மழை குறைந்ததால் சித்திரை முதல் ஆடி வரை மிகக்கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மிகவும் குறைந்த நீரே பாசனத்திற்கு கிடைத்தது. ஆனால் பயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வளர்ச்சி மட்டும் சிறிது குறைந்து காணப்பட்டது.

முதல் வருடத்தில் மஞ்சள், வாழை, காய்கறிகள் மற்றும் கால்நடைத்தீவனம் அறுவடை செய்யப்பட்டது. மற்ற வருடங்களிலும் இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூன்றாவது வருடத்தில் மரங்களில் கிளைகள் கவ்வாத்து செய்யப்பட்டு விறகுக்கு விற்பனை செய்யப்பட்டது. பழ மரங்களும் சிறிதளவு பழங்களை கொடுக்க ஆரம்பித்து விட்டன. இது வீட்டு தேவைக்கு போக நண்பர்களது தேவைக்கும், உறவினர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த பண்ணையில் உள்ள வேலைகளை செய்ய வெளியிலிருந்து 2 பெண்கள் அவ்வப்போது வந்துபோகிறார்கள். மற்ற வேலைகளை பாஸ்கரும் அவரது மனைவி வடிவும் நேரம் உள்ளபோது பார்த்துக்கொள்கின்றனர். பெரும்பான்மையான நேரம் இந்தப்பண்ணையின் கதவு பூட்டப்பட்டே காணப்படுகிறது. மனித உழைப்பு மிகவும் குறைந்த அளவே தேவைப்படுகின்றது. விதைப்பது, பாதுகாப்பது,அறுவடை செய்வது போன்ற வேலைகளே செய்யப்படுகிறது. செலவு மிகவும் குறைந்துவிட்டது இந்த மூன்று வருடங்களில் மண்ணின் தரம் உயர்ந்து பொலபொலப்பாக உள்ளது. களை கட்டுக்குள் உள்ளது. பல விதமான பறவைகள், கீரி போன்ற மிருகங்களும் சுதந்திரமாக திரிகின்றன. இனி படிப்படியாக ஒவ்வொரு மரப்பயிரும் விளைச்சலை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்த பண்ணை திரு. விஜயபாஸ்கருக்கு ஒரு சிரமத்தை தராத பண்ணையாக அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் கால்நடைக்கும் தேவையானவற்றையும் கொடுத்து அந்த பண்ணைக்கு தேவையான வளத்தையும் தனக்குத்தானே கொடுத்து வளமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. வாழ்க வளமுடன்!

கட்டுரை வடிவாக்க உதவி : பாபுஜி

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org