தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மண் பயனுற வேண்டும்


பீடை இலாததோர் கூடு - ஜெய்சங்கர்


கடுக்காய் காய வைக்க ஒரு குடிசை போட்டோமல்லவா… அதில் ஏற்பட்ட தொந்தரவுகளையும், அடிக்கடி செய்ய வேண்டிய பராமரிப்பு பற்றியும் பார்த்தோமல்லவா… அதனால் வெறும் மண் சுவர், மற்றும் கூரை வீடு எல்லோரும் தங்குவதற்காகக் கட்டுவதற்கு மனம் ஒப்பவில்லை. மேலும், நகரத்தில் உள்ள வீடுகள் போல், வாழும் அறை, சமையலறை, படுக்கையறைகள், குளியல் மற்றும் கழிவறை என்று தனித்தனியாக உள்ள கட்டமைப்பிற்கும் அது பொருந்தாது என்று தோன்றியது. எனவே, என்ன பொருட்களைக் கொண்டு கட்டுவது என்பது ஒரு பெரிய கேள்விக்குறியானது.

கட்டுமானப் பொருட்களை முடிவு செய்ய என்ன கூறுகளை ஆராய வேண்டும் என்று பட்டியலிட்டோம். அவையாவன…

  1. கட்டுமானப் பொருட்கள் இயன்றவரை அருகில் உள்ள பொருளாக இருக்க வேண்டும்.
  2. அவற்றின் பயன்பாடோ, தயாரிப்போ இயற்கைக்கும், சூழலுக்கும் அதிக அளவில் ஊறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது.
  3. அந்தப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கக் கூடாது.
  4. அவற்றை பயன்படுத்த சாதாரண கொத்தனார்களும், வேலையாட்களும் சுலபமாக கற்றுக் கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்.
  5. அவற்றால் கட்டப்பட்ட வீடு, இங்குள்ள தட்ப வெப்ப நிலைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். இங்கு, கோடையில் அதிக அளவு வெப்ப நிலை 34 டிகிரி அளவிலும் குளிர் காலத்தில் இரவு வெப்ப நிலை 10 டிகிரி அளவிலும் இருக்கும். எனவே, ஓரளவு வெப்பம் அல்லது குளிரை கடத்தாத பொருளாக இருக்க வேண்டும்.
  6. அந்த கட்டுமானப் பொருட்களால் கட்டப்படும் வீடு உறுதியாக இருக்க வேண்டும்.
  7. கட்டுமானச் செலவும், பராமரிப்புச் செலவும் குறைவாக இருக்க வேண்டும்.

இந்தக் கூறுகள் எல்லாவற்றையும் முழுவதுமாக பூர்த்தி செய்யும் அளவிற்கு எந்த கட்டுமானப் பொருட்களும் தயார் நிலையில் இல்லை. எனவே, ஏற்கனவே சொன்னது போல் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொன்றை விட்டுக் கொடுத்து, இருப்பதில் சிறந்த பொருட்களைத் தேர்வு செய்ய வெகு நாட்கள் பிடித்தன‌. எனவே, மற்றொரு உத்தியையும் (முடிவு செய்ய) கையாண்டோம். எவற்றையெல்லாம் பயன்படுத்தப் போவதில்லை என்று முடிவு செய்து அவற்றை முதலில் எங்கள் பட்டியலிலிருந்து நீக்கினோம். பின்னர் குறைந்த எண்ணிக்கைப் பொருட்களிலிருந்து தேர்வு செய்வது ஓரளவு சுலபமானது. தவிரவும், கடைகாலுக்கு, தரைக்கு, சுவர்களுக்கு, கூரைக்கு என்று தனித்தனியாக அவற்றின் அமைப்பு மற்றும் அதற்கு பயன்படுத்தக் கூடிய கட்டுமானப் பொருட்கள் எவை எவை என்று ஒரு பட்டியல் தயாரித்தது மேலும் முடிவெடுப்பதை சுலபமாக்கியது.

பயன்படுத்த வேண்டாம் என்ற பட்டியலில் முதலில் இடம் பிடித்தது சிமெண்ட். அதற்குக் காரணம், அவை பெரிய ஆலைகளில், வெகு தூரத்தில் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. அதை தயாரிக்க ஆகும் ஆற்றல் மிக அதிகம். சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் எல்லாமே பெரும் பணக்கார நிறுவனங்கள். இவை எல்லாவற்றையும் விட, சிமெண்டை பயன்படுத்தி கட்டினால் அவற்றுக்கு 21 நாட்கள் வரை தண்ணீர் ஊற்றி மெதுவாக உலர வைக்க வேண்டும் (Curing). தண்ணீரை மின்சாரம் இல்லாமல் கை ப‌ம்புகளின் மூலம் எடுக்க வேண்டிய எங்கள் பண்ணையில் தண்ணீரை சேமிப்பது மிகவும் முக்கியம். கட்டுவதற்கு ஆகும் தண்ணீர் செலவை விட, மெதுவாக உலர வைக்க 50 பங்கு தண்ணீராவது தேவைப்படும்.

அடுத்த பொருள் இரும்பு. இதற்கும் மேற்சொன்ன காரணங்கள் எல்லாம் பொருந்தும். மேலும், பூமியில் வெகு ஆழத்திலிருந்து அகழ்ந்து எடுத்தே இரும்பு தயாரிக்கப்படுகிறது. அடுத்தது, தரையில் பதிக்கக் கூடிய நெகிழி ஓடுகள் (Vitrified Tiles). இவற்றின் மேல் பாகத்தில் நெகிழி இருப்பது மட்டுமல்லாமல் அவை குளிர் காலத்தின் போது மிகவும் சில்லென்று ஆகி விடும் என்பதாலும், வேண்டாத பட்டியலில் இடம் பிடித்தது. மேலும், ஆற்று மணல் - அதை படுகைகளில் அள்ளுவதால் ஏற்படும் சூழல் கேடுகள் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதைத் தவிர‌ அதன் அரசியல், பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்கவே விழைகிறது.

இவ்வாறாக, சிமெண்ட், இரும்பு, நெகிழி ஓடுகள், ஆற்று மணல் ஆகிய நான்கும் வேண்டாத பட்டியலில் இடம் பிடித்தது. ஆனாலும் அவற்றை முழுவதுமாக ஒதுக்குவது சில இடங்களில் இயலாமல் போகலாம். இவற்றின் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்க வேண்டும் என்பதே நோக்கம். ஆனால், பொதுவாக இப்போது கட்டப்படும் வீடுகள் முழுவதுமாக இந்தக் கட்டுமானப் பொருட்களை வைத்தே கட்டப்படுகிறது. எனவே, மாற்றி யோசிக்க வேண்டியது அவசியமானது.

பண்ணையின் அருகில் உள்ள பொருட்கள் எவை என்று பார்த்தோம். மண் பண்ணையில் சுலபமாக கிடைக்கிறது. மேலும், எங்கள் பண்ணை மலைப் பகுதியில் அமைந்திருப்பதால் கருங்கற் பாறைகள் உள்ளன. அவற்றிலிருந்து செவ்வக கட்டுமானக் கற்களை (உடைகல்) கையினாலேயே உளிகளைக் கொண்டு உடைக்கும் கல் தச்சர்களும் இந்தப் பகுதியில் உண்டு. எனவே, இவை இரண்டையும் இயன்றவரை பயன்படுத்தலாம் என்றும் முடிவு செய்தோம்.

பண்ணையில் உள்ள மண்ணின் தன்மையை பார்த்த போது களி சற்று அதிகமாக இருந்தது. அதனுடன் மணல் கலந்து களியை குறைக்கலாம். நாங்கள் மணலுக்கு பதிலாக, பாறைப்பொடியை (Quarry Dust) 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கல் அரவை நிலையத்திலிருந்து வரவழைத்து கலந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். கருங்கல்லுடன் மண் நான்கு பங்கு, பாறைப்பொடி மூன்று பங்குள்ள கலவையை பயன்படுத்தி கடைகால் அமைக்கலாம் என்று திட்டமிட்டோம். எங்கள் பகுதியில் கரையான்கள் அதிகம் என்று சொன்னேன்னல்லவா… எனவே, கடைகாலிற்கு மேல், சுவற்றில் ஏறாமல் இருக்க மூன்று அங்குலம் அளவிற்கு மட்டும் முக்கோண கம்பிகள் கட்டி சிமெண்ட், முக்கால் ஜல்லி, மணல், பாறைப்பொடி கலந்து கான்கிரீட் (Belt Concrete) அமைத்துக் கொள்ள முடிவு செய்தோம். (பார்க்க படம்)

சரி, கடைகாலின் கட்டுமானப் பொருட்கள் முடிவாகி விட்டது. அடுத்தது, தரை… அதற்கு மண் ஓடுகளைப் (Terracotta Tiles) பயன்படுத்த முடிவெடுத்தோம். மண்ணை ஓடுகளாக்கி சுட்டு தயாரிக்கப்படுவது. இதில் உறிஞ்சும் தன்மை அதிகமாக இருந்தாலும் பயன்பாட்டிற்கு பிறகு நாளடைவில் மெருகேறி உறிஞ்சும் தன்மை குறைகிறது. மேலும், நெகிழி ஓடுகளைப் போல் குளிர் காலத்தில் அதிகமாக சில்லிப்பு தட்டாது.

பிறகு சுவர்கள்… சுவர்களை கடைகாலைப் போல் கருங்கற்களும் சேறும் கொண்டு கட்டலாம். ஆனால், சுவருக்கு இரண்டு பக்கமும் கற்கள் வைத்து கட்டுவது சற்று அதிகமாக தோன்றியது. எவ்வளவு முயன்றாலும் சுவரின் அகலம் ஒன்றே முக்கால் அடிக்கு குறையாமல் இருக்கும். மேலும், கல் சுவற்றில் அதிகம் குளிர் தெரியும். எனவே, இரண்டு பொருட்களைத் தேர்வு செய்தோம். ஒன்று, செங்கற்களைக் குத்துக் கல்லாக வைத்து நடுவில் சந்து விட்டு கட்டும் முறையை (Rat Trap Bond) கையாண்டால் இருபத்தைந்து சதம் செங்கற்கள் மிச்சமாகும். (பார்க்க படம்)

உள் பக்கம் மட்டும் பூசலாம். வெளிப்பக்கம் சந்துகளை மட்டும் கலவையால் அடைத்து (Pointing) விடலாம். மற்றொன்று, சுடாத மண் அச்சுக் கற்களை (Earth Blocks) நாமே அறுத்து சூரிய ஒளியில் காய வைத்து அதனை வைத்துக் கட்டலாம். முதல் முறையில், அதிக செங்கற்கள் பிடிக்கும். அதையும் இயன்றவரை தவிர்க்கலாம் என்று நினைத்தோம். இரண்டாவதில் கற்களை நாமே செய்ய அதிக நாட்கள் பிடிக்கும். கற்களை தயார் செய்து வைத்துக் கொண்ட பிறகே கட்டுமானப் பணிகளை தொடங்க இயலும். இவை எல்லாவற்றையும் விட, வெறும் சேற்றினாலேயே (Rammed Earth) சுவர் எழுப்பலாம் என்று நினைத்தால்… அது, உள்புறத்திற்கு பரவாயில்லை. வெளிப்புறமும் சேறாக இருந்தால் அது மழையில் நனையாமல் இருக்க கூரையின் நீளத்தை நீட்ட வேண்டி வரும் (Hangover). கூரையின் நீளத்தை நீட்டுவது ம முக்கோணக் கூரைகளில் (Apex Roofs) எளிது. அதிக செலவும் ஆகாது. ஆனால், சமதள கூரைகளில் (Flat Roofs) அதிக செலவும் பிடிக்கும், கடினமாகவும் இருக்கும். இவ்வாறு, குழம்பிக் கொண்டிருக்கும் வேளையில் வெளிப்புறம் மட்டும் கருங்கற்களும் உள்புறம் வெறும் சேற்றை மட்டும் வைத்துக் கட்டிய ஒரு சுவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு புறம் மட்டும் கருங்கற்கள் என்பதால் சுவற்றின் அகலம் ஒரு அடி மட்டுமே இருந்தது. கருங்கற்கள் பண்ணையிலேயே உடைத்துக் கொள்ள, மண் அச்சுக் கற்களை விட குறைந்த நாட்களே பிடிக்கும் என்பதாலும் உள் புறம் சேற்றை அப்பியே பூச இயலும் (Mud Plastering) என்பதால் அவ்வாறே செய்யலாம் என்று முடிவானது. (பார்க்க படம்)

சுவரை எப்படி, எதனால் கட்டப் போகிறோம் என்பதுடன் சேர்த்து நாம் கதவு, சாளர அமைப்புகளையும் முடிவு செய்தாக வேண்டும். ஏனென்றால், கதவு சாளரங்களுக்கு மேல் உள்ள சுவர் (Lintel Level) எவ்வாறு தொடரப் போகிறது என்பதற்கு அது ஒரு முக்கியமான கூறு. கருங்கற்களைக் கொண்டு சுவர் அமைக்கும் போது அதன் இடையில் கதவு மற்றும் சாளரங்களைத் தாங்க கொண்டியை தேவையான இடத்தில் பதிப்பது கடினம். இதில், மற்றொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். வீட்டில் முன் வாசல் தவிர மற்ற எல்லாக் கதவுகளும் சாளரங்களும் Frame என்றழைக்கப்படுகிற சுவற்றில் பதிக்கும் பகுதி (வெளிக்கூடு) இல்லாமலே நேரடியாக சுவற்றில் பதித்துள்ள கொண்டிகளில், பட்டைகளின் மூலம் மாட்டி விடலாம் என்று முடிவு செய்தோம். பொதுவாக சாளரங்களுக்கு வெளிக்கூட்டில் தான் கம்பிகள் பதித்து இருக்கும். வெளிக்கூடு இல்லாத சாளரமாக அமையப்போவதால் கம்பிகளை நேரடியாக சுவர் எழுப்பும் போதே அந்தந்த மட்டத்தில் வைத்து கட்டி விடலாம் என்றும் முடிவு செய்தோம். இவை இரண்டும் மரத்தின் தேவையை குறைப்பதோடு செலவையும் வெகுவாக குறைக்கும். கதவு, சாளரங்களின் வடிவமைப்பும் எளிமையாக இருக்கும். எனவே, கதவு மற்றும் சாளரங்கள் அமையப் போகும் இடங்களில் மட்டும் கருங்கற்கள் இல்லாமல் சுமார் முக்கால் அடிக்கு செங்கல் கட்டு வேலை செய்து கொள்வது என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. மேலும், கதவு, சாளரங்களுக்கு மேல் உள்ள சுவரைத் தொடரவும் இது அனுகூலமாக அமையும். செங்கற்களால் அமையும் இடங்களில் ஆர்ச் அமைத்து சுவற்றை தொடர்வது சுலபம். (பார்க்க படம்)

கருங்கற்களில் அவ்வாறு செய்ய இயலாது. இல்லையேல் கதவு சாளரங்களுக்கு மேல் அதன் அகலத்தை விட நீளமான உடை கற்களை வெட்டி இரண்டு பக்கமும் இருக்குமாறு வைத்து அதன் மேல் சுவற்றை எழுப்ப வேண்டி வரும்.

அடுத்தது தான் முக்கியமான கட்டம்… கூரை. முதலில் கூரை எவ்வாறு அமைய வேண்டும் என்பதிலேயே நிறைய வடிவமைப்புத் தெரிவுகள் (Choices) இருக்கின்றன. எவற்றால்? என்பது அதை அடுத்து வரும் கேள்வி. சமதள கூரையா அல்லது முக்கோணக் கூரையா? அல்லது இரண்டும் இல்லாமல் வால்ட் (Vault) என்றழைக்கப்படும் அரைவட்டக் கூரையா?

படங்களில் கண்டுள்ளது போல் அமையப் போகும் இந்த வீட்டிற்கு, நீங்களும் எப்படிப்பட்ட கூரை அமைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று ஒரு மாதம் சிந்தனை செய்கிரீர்களா!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org