தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அடிசில் தீர்வு - அனந்து


சென்ற இதழில் நல்லுணவு, நஞ்சில்லா உணவு என்பதை எப்படி இனங்கண்டறிவது, பாதுகாப்பான உணவை நாம் எப்படிப் பெறுவது என்று பார்த்தோம். தனி நபராக நாம் என்ன செய்யமுடியும் என்றும் பார்த்தோம். நான் வேறு எதையும் எழுதுவதற்கு முன், எனக்கு வந்த ஒரு கோபமான கடிதத்திற்குப் பதில் கூற விழைகிறேன். (பாராட்டியும் பல அஞ்சல்கள்/அழைப்புகள் வந்தன; எனினும், இந்தக் கேள்விகள் பலருக்கும் இருக்கக்கூடும் என்பதால் அவற்றை முதலில் காண்போம்.) “நம்பிக்கை, நாணயம், சிறு அங்காடி, இதுவா தீர்வு? இந்தப் போக்கே இந்திய நுகர்வோரை இங்கு கொண்டு விட்டிருக்கிறது….” என்று கேட்டுள்ளார் நண்பர்.

கிராமத்தில் இருப்போருக்குப் பாதுகாப்பான உணவு என்பது ஒரு பெரிய பளு அல்ல. வீட்டுக் கொல்லையிலும், அருகில் உள்ள உழவர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் உணவைத் தயார் செய்து கொண்டும் பெருமளவு உணவைப் பாதுகாப்பனதாக, நச்சற்றதாகப் பெற இயலும். உணவு நம் கண்ணுக்குத் தெரியாமல் தயாரிக்கப் பட்டு, பதப்படுத்தப் பட்டு, நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்டுப் பல காத தூரம் பயணித்து நம்மை அடையும் போதுதான் உணவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியிருக்கிறது. எனவே அடிசில் தீர்வு என்பது நகரத்து நுகர்வோர்களுக்கான ஒரு தேடலே.

மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் தன் உணவு எங்கு உள்ளதோ அதன் அருகில் தன் வீட்டை அமைத்துக் கொள்கின்றன. மனிதன் மட்டுமே நாகரீகம் என்னும் மாயையில் சிக்கிக் கொண்டு கோவில் வௌவால்களைப்போல் அடர்ந்த குடியிருப்புக்களில் ஒண்டி வாழ்ந்து, குடி நீர், சுவாசிக்கும் காற்று, மண், வெளி, ஆற்றல் என்று பஞ்ச பூதங்களுக்கும் பற்றாக்குறையாக வாழ்கிறான். தான் வசிக்கும் இடத்திற்கு உணவை வினியோகம் செய்ய ஒரு பெரும் உணவுத் தொழிற்சாலையை உருவாக்குகிறான். மக்கள் நெருக்கடியுள்ள இந்தியா போன்ற நாடுகளில், அடிப்படைத் தேவைகளுக்கே பெரும் போராட்டமாயுள்ளது - அதிலும் நகரங்களில் அப்போராட்டம் மிக அதிகமாக வெளிப்படுகிறது.

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே என்கிறது புறநானூறு. அதனால்தான் நீரும், நிலனும் புணரும் நதிக் கரைகளில் நாகரீகங்கள் உருவாயின. ( இன்றும் மக்கள் தொகை குறைவாயுள்ள ஆஸ்திரேலியாவில் 89% மக்கள் நதிக்கரையில் அமைந்த நகரங்களில் வசிக்கின்றனர் ) எனவே, உற்று நோக்கினால் நகரத்து நுகர்வோருக்கு அடிசில் தீர்வு என்பது ஒரு அறைகுறைத் தீர்வாகவே இருக்க இயலும் என்பது தெளிவாகும். நகர‌ம் அதன் வடிவமைப்பாலேயே பற்றாக்குறையை உருவாக்குகிறது.

அங்காடிகளில் உணவை வாங்கி உண்ணும் நமக்கு இருக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் “அந்நியப்படுதல்” என்னும் ஒரு வார்த்தைக்குள் அடக்கலாம். என்னைப் பொறுத்தவரையில், உணவு உற்பத்தியிலிருந்து, உற்பத்தி செய்பவரிலிருந்து நமது அந்நியப்படுதலே பெரும் காரணம் . நமது உணவு, அதன் சத்து, அதன் உற்பத்தி முறை, அதில் கலப்படம் (தெரிந்தும் தெரியாமலும்), அதனால் நமது தட்டில் வரும் நச்சு எச்சங்கள், அவை பயக்கும் பல புதுப்புது வியாதிகள், எல்லாமுமே இந்த அந்நியப்படுதலால் விளைவதே.

இதற்குத் தீர்வு நம் கையில் மட்டுமே உள்ளது என்ற நிதர்சனத்தை நாம் அறிய வேண்டும் என்ற ஆசையில் நான் கூறியவற்றில் சில கேள்விகள் எழலாம். எழ வேண்டும். நான் இங்கு எல்லாவற்றிற்கும் தீர்வு கொடுக்க வரவில்லை. எனது அனுபவங்களையும் அதிலிருந்து சில தெளிவுகளையும் பெற முடியுமா என்று பார்க்கலாம். இங்கு தீர்வுகள் கொடுக்கப்படமாட்டாது. நம் பகிர்விலிருந்து அவரவர் தங்கள் வசதிக்கு ஏற்ப மேலும் ஆராய்ந்து, படித்து தத்தமக்கு ஏற்ற பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும். (சமூக, அரசியல், ஆரோக்கியம், சுற்றுசூழல், வாழ்வாதாரம் எல்லாவற்றையும் உள்ளடக்கி).

நல்ல உணவு வேண்டுமானால், மெனக்கெடுதல் அவசியம். அதில் மாற்றுக்கருத்திற்கு இடமே இல்லை. எனினும் தற்போதைய பெருநகர வாழ்முறைகளைப் பார்க்கையில், நம் பிள்ளைகள் கல்விக்கும், உடல் நலத்திற்கும், பொழுது போக்கிற்கும் நாம் நம்மை உட்படுத்திக்கொள்ளும் வேதனைகளில் கால்பங்கு உணவிற்கு என்று ஏற்றுக்கொள்வது நல்லது என்றே நான் நினைக்கிறேன்.

இன்றைய நிலையில் சிறந்த முதன்மையான தீர்வு நாமே நமது உணவினை உற்பத்தி செய்வது தான். அதற்கு சில பத்திகளுக்கு அப்பால் வருகிறேன்.

அனைவரும் விவசாயம் மட்டுமே செய்து பாதுகாப்பான உணவிற்கான உத்திரவாதத்தை பெற இயலாது. அதனால் அடுத்து, நல் உணவை, விஷமற்ற இயற்கைப் பொருட்களை விற்கும் அங்காடிகளை தேடி அங்கேயே நமது நுகர்வு இருக்க வேண்டும். ஆனால் இன்று பல கடைகள் வந்துள்ள நிலையில் நாம் எப்படி சிறந்த கடைகளை கண்டறிவது என்ற கேள்வி வரும்.

பண்டை வாணிப முறையில் நல்லுறவு நிறைந்த வணிகம், பெரும் லாபமும் பேராசையும் இல்லாத சிறு வணிகம் இருந்தது. இன்று பள்ளிகள் முதல் மருத்துவம் வரை எல்லாவற்றிலும் தவறான மனிதர்கள், தவறான வழிமுறைகள் வந்துள்ள நிலையில் இயற்கை அங்காடிகளிலும் தவறானவர்களும் தவறுகளும் இருக்கத்தான் செய்யும். நாம் தான் நமது விழிப்புணர்வின் மூலம் பிரித்தறிய வேண்டும். அதற்கான சில லட்ச‌ணங்களைத்தான் நாம் சென்ற வாரம் பார்த்தோம். எப்படி யோசித்து, எவ்வளவு சீராகத் தேடினாலும் நம்பிக்கை, சிறு வணிகம், விவசாயியுடனான நேரடி தொடர்பு, ஒளிவுமறைவின்மை, நியாய விலை போன்றவற்றை மீறித் தீர்வு இருக்க முடியாது என்பது பலரது அனுபவத்தினின்று வந்த தெளிவு. “நம்பிக்கை, நாணயம், சிறு அங்காடி, இதுவா தீர்வு? இந்தப் போக்கே இந்திய நுகர்வோரை இங்கு கொண்டு விட்டிருக்கிறது….” .என்ற அவரின் கேள்வி மிக நியாய்மானது. ஆனால் நாம் இந்த நிலைமைக்கு வந்ததன் காரணங்கள் இவை அல்ல: நம் எல்லோரது பேராசை, விழிப்புணர்வின்மை, தவறான கோட்பாடுகள், லாப வெறி கொள்(கை)ளைகள், ஒரு முதலாளித்துவ கண்ணோட்டத்துடன், அமெரிக்க (சந்தை) ஆளுமை எண்ணத்துடன் வந்த விளம்பரம் சார்ந்த நவீன வாணிப உத்திகள், பொதுவாக எதைப்பற்றியும் கவலைப்படாமல், அறியாமையும், சோம்பலும், குறுகிய சுயநலமுமாய் இயங்கும் சராசரி மானுடர்கள், இவையே இந்நிலைக்குக் காரணம். நமது பாரம்பரிய சிறிய வியாபாரம், அண்மை பொருளாதாரம், ஊரக வளர்ச்சி இவை எல்லாவற்றையும் விட்டு இன்று விளம்பரங்களும் கம்பனிகளும் நாம் என்ன உண்ண (வாங்க) வேண்டும் என்று கூறுவதை நம்பி செல்கிறோம். வாழ்கிறோம். இந்தப் புரிதலுடன் சென்ற மாதக் கட்டுரையைப் படித்தால் நல்லது.

(அண்மைக் கடைகளில் ஏமாற்றுதல் இருக்காதா என்றால், இருக்கும், மிக நிச்சயமாக இருக்கும். 'நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி' என்று வாணிபரான பட்டினத்தாரே பாடியுள்ளார். ஆனால் அண்மைப் பொருளாதாரத்தில் மைய‌ப் பொருளாதாரத்தைப் போன்ற ஒரு “முகம் தெரியாமை” இருக்காது. எனவே ஏய்ப்பு என்பது பெருமளவில் கட்டுப்படுத்தப் பட்டதாகவே இருக்கும். உள்ளூர் சந்தையில் தக்காளி வாங்கினால் 'என்னப்பா போனவாரம் ஒரே அழுகல்?' என்று யாரும் கேட்டு விடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு இருப்பதால் வியாபார தந்திரம் ஒரு அளவோடுதான் இருக்கும். வாணிபத்தை முகமற்றதாக்குவதால் நுகர்வோருக்கு ஏற்படும் மிகப் பெரிய இழப்பு - இந்தத் தட்டிக் கழித்துப் பொறுப்பேற்காமல் விற்பனையாளர் தப்பித்துக் கொள்ள ஏதுவான சூழல்தான் -ஆசிரியர் )

அடுத்து விலை பற்றிப் பல கேள்விகள். விலை என்பது மிகவும் சிக்கலான ஒரு விஷயம். உதாரணத்திற்கு நாம் இட்லி. பேனா, உடை, ஏன் காலணி வாங்க வேண்டும் என்றால், விலை எவ்வளவு தூரம் நிர்ணயிக்கிறது? இட்லி வாங்க ரூ 2/- முதல் 200/- வரை பல தெரிவுகள் உள்ளன. நாம் எதை வாங்குகிறோம்? விலையா நிர்ணயம் செய்கிறது? பல காரணங்கள்- சுவை, சுகாதாரம், அருகாமை, வரலாறு, அதை நுகர்வதால் நமக்கு ஏற்படும் கவுரவம் என்று பல.. அதே போல் தான் நஞ்சில்லா உணவிற்கும்- நமது சுற்றுசூழல், உடல் நலன், அடுத்த தலைமுறை, நமது உடல் நலக்காப்பீடு, விவசாயிக்கு நியாய விலை என்று பல காரணங்களையும் சேர்த்து விலை நிர்ணயிக்கலாம் (அல்லது மருத்துவத்துக்கும் மருந்துக்கும் எவ்வளவு வேண்டுமானலும் கொடுப்பது போல், கொஞ்ச‌ம் அதிக விலையை மனமுவந்து கொடுக்கலாம்) .

அப்படியென்றால் எல்லொரும் வாங்க முடியாதா? ஏழைகள் பாடு என்ன‌ ? உண்மையைச் சொல்வதானால் அதற்கு அரசாங்கம் தான் வர வேண்டும். அரசியல் காரணங்களுக்காக நாம் சந்தையையும், விலையையும், அண்மைப் பொருளாதாரத்தையும், களங்கப்படுத்தி விட்டோம். இப்பொழுது விவசாயிக்கும் நியாய விலை கொடுத்து, விஷமற்ற நல்லுணவை பொது சந்தையில் எல்லோரும் நியாய விலையில் வாங்க, சந்தை இன்னும் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். மேலும், இயற்கை விவசாயி ஒரு அரசாங்க மானியமும் இன்றி வேலை செய்பவர். வாணிபப் பரிமாற்றங்களோ மிகச் சிறு அளவுகளிலேயே நடக்கின்றன.

இவை போக, எண்ணை என்றால், மர செக்கில் ஆட்டிய எண்ணை சுத்திகரிக்கப் பட்டது (ரீஃபைண்டு) போலல்லாமல், சத்துடனும், கலப்படம் இல்லாமலும் 100% முழுமையான எண்ணை வரும் பொழுது விலை ஒப்பீடு எப்படி செய்ய முடியும்? வெல்லம், நெய், தேன், என்று பல பொருட்களும் இதே நிலை தான். அரிசியை எடுத்துக்கொண்டால், என்ன ரகம் என்று பார்க்க வேண்டும். நானறிந்த நல் அங்காடிகள் - ரீஸ்டொர், OFM போன்றவை பெரும்பாலும் நமது பாரம்பரிய ரகங்களையே விற்கின்றன. அதனையும் வெளியில் கிடைக்கும் ஆந்திரா பொன்னி, டீலக்ஸ் பொன்னி போன்ற மட்ட ரகங்களையும் எப்படி ஒரே கண்ணோட்டதில் பார்ப்பது ? எவ்வாறு ஒரே த‌ராசில் நிறுத்துவது? பொன்னி என்றால் காவேரி! ஆந்திரா பொன்னி ஆந்திராவில் ஓடும் காவேரியா? முயல்கொம்பு போன்றல்லவா இருக்கிறது! இதைப்போன்ற சிறிய, தீட்டிய குறுகிய கால அரிசியையும் நம் பாரம்பரிய அரிசியியையும் ஒப்பிடலாமா? அதனை மருத்துவ குணம் உட்பட பல குணங்கள் நிறைந்த‌ நமது கிச்சிலி சம்பாவுடனும், சீரக சம்பாவுடனும், மாப்பிள்ளை சம்பாவுடனும் எப்படி ஒப்பீடு செய்வது?

அப்படியே அதிகம் செலவு செய்ய வேண்டும் என்றே வைத்துக்கொண்டாலும் ஒரு மாதத்திற்கு ரூ.1000-1500 வரை வந்தால் பெரியதா? (ஆனால் ஒன்று..என்னை இது வரை விலையை பற்றி கேட்டவர்களெல்லாம், ஏழைகளோ, ஏழைகள் மேல் அக்கறை கொண்டவர்களோ இல்லை. இருப்பினும் நாம் பதில் கூற கடமை பட்டிருக்கிறோம்.)

பின்னர், ஒரு முறை ஒரு மெத்தப்படித்தவர் என்னிடம் 'ஐயோ செக்கு எண்ணையா? சுகாதாரமானதா? ' என்றார். இவர்களுக்கு மரபணு மாற்றப்பட்டதோ, விஷம் நிரம்பிய மற்றவையோ, ஹெக்சேன் முதல் பல புற்று நோய் பயக்கும் ரசாயனங்கள் கலந்த 400 டீகிரிக்கும் மேல் 2-3 முறைகள் பார்த்த “கை படாத” நெகிழி குப்பிகளில் வரும் டபுள் ரீஃபைன்ட் எண்ணையே சுகாதாரம். ஆனால் ஒன்றை மனதில் நிறுத்த வேண்டும் - இந்த தெரு முனையிலிருந்த செக்குகளில் ஆட்டிய எண்ணையில் சில அழுக்கு/குப்பை படிந்து விட்டால், அதனை நாம் ஒரு சிறிய தேனீர் வடிகட்டியில் வடிகட்டி விடலாம்! அப்படியே உட்கொண்டாலும் வயிற்று வலி (அ) வயிற்றுப்போக்கு தான் வரும். இது எங்கே, இதய நோய் மற்றும் புற்று நோய் எங்கே? இந்த ஹைஜின் என்னும் சுகாதாரம் என்பதே பெரும் நிறுவனங்களின் வியாபார யுக்தி மட்டுமே. பின்னாளில் இதனை விரிவாகவும் பார்ப்போம்.

இதை எல்லாவற்றையும் விட ப்ளாஸ்டிக் கோப்பைகளில் தேனீர் அருந்திக்கொண்டு, “கேரி பேக் இருக்கிறதா” என்று கேட்டுக்கொண்டு 'ஆமாம் இயற்கை அங்காடிகளில் ஏன் ப்ளாஸ்டிக் பைகளில் கொடுகின்றனர் ?' என்றும் கேட்பர். ரீஸ்டொர், OFM போன்ற கடைகள், வெளுக்கப்படாத வெண்ணை பேப்பரில் கட்டி, நாளிதழ்களில் கட்டி பொருட்களை விற்ற காலம் உண்டு. ஆனால் மக்களுக்கு உள்ளே உள்ள பொருள் தெரியாததாலும், ஈரப்பதத்தினால் பொருட்கள் கெட்டதாலும் ப்ளாஸ்டிக்கிடம் தோற்றனர். இன்றைய 'பயோ ப்ளாஸ்டிக்' என்னும் பொய்யை ஒதுக்கினால், இப்பொழுது இந்த இரு கடைகளும் செய்வது போல், பழைய காலத்தில் நம் சிறு அங்காடிகளில் கொடுத்தது போல், பேப்பரிலும், மக்களே கொண்டு வரும் பைகளிலும் தூக்கிலும் தான் கொடுக்க வேண்டும். ப்ளாஸ்டிக்கை நாம் முற்றிலும் வெல்ல முடியாது என்பது தான் நிதர்சனம். மறுசுழற்சி, குறைப்பு, மறுதலிப்பு என்று தான் இதனை எதிர்கொள்ள முடியும். இதற்கு தீர்வு. நுகர்வோரிலிருந்து வர வேண்டும்

இவ்வளவு குழப்பங்களும் கஷ்டமும் நிரம்பியது நுக‌ர்வு என்றால், உற்பத்தி?

நாம் மேலே பார்த்தோம்- நல்லுணவை நம் கையில் கொணர உணவு உற்பத்தியை நாம் நம் கையில் எடுக்க வேண்டும். “மாடித்தோட்டம் (terrace garden) ஒரு மாயை…. பெரிய நகர் வாசியை கேளுங்கள் ” என்றும் அந்த நண்பர் தெரிவித்திருந்தார். மாடித்தோட்டமே கடினம் என்றால், நமது உழவர்களின் நிலையை நினைத்துப்பாருங்கள். மாடித்தோட்டம் என்பது உழைப்பும் ஈடுபாடும் உள்ளடக்கியது! ஒரு நாடே ஓரிரவிலிருந்து அடுத்ததற்கு டீசல், ரசாயன ஊக்கிகளும் கொல்லிகளும் இல்லாமல் சென்றது என்று நாம் க்யூபாவை காட்டினால் அதனையும் நகையாடி கேள்வி கேட்பவர் இருப்பர்.

மொரார்ஜி தேசாய் மத்திய அமைச்சாரக இருந்த பொழுது, மும்பையில் ஒரு (முதல்) உரக்கடையை திறக்க அழைக்கப்பட்டார். அப்பொழுது அவர், “இதுவே நான் திறக்கும் கடைசி உரக்கடையாக இருக்க வேண்டும். நகரத்தில் எதற்கு உரக்கடை? நீங்கள் எல்லோரும் உங்கள் மக்கும் குப்பையை சரியாக கையாண்டு நமது கிராமத்து விவசாயிகளுக்கு பரிசாக அனுப்புங்கள். மேலும் உங்களுக்கு தேவையான காய்கறிகளை நீங்களே உங்கள் வீட்டுத் தோட்டத்திலோ, மொட்டை மாடியிலோ உற்பத்தி செய்து விவசாயிகளின் பாரத்தை குறையுங்கள்” என்றார் மிக நிதர்சனமாக.

நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான மேடவாக்கம் மாலதி, மும்பை தோஷி, பம்மல் இந்திரகுமார் என்ற பெரிய பட்டியல் இருக்கிறது. அதை விட பெரியது இந்த பிரபல மாடித்தோட்ட விற்பன்னர்கள், அவரவர்தம் மாடியில் விளைவித்த பொருட்களின் பட்டியல். இதில் மாடியில் பரிட்சார்த்த முறையில் நெல், திராட்சை (ஆம்! சென்னையில், மொட்டை மாடியில்) என பலதும் உண்டு. ஆம், மெனக்கெட வேண்டும். நமது உணவிற்காக, பாதுகாப்பான உணவிற்காக மெனக்கெட முடியாது என்றால்- இப்படி விஷம் நிறைந்த, லாப வெறி நிறைந்த, ஏமாற்றம் வழியும் இன்றைய வியாபார சூழ்ச்சியின் பொருட்களாக மட்டுமே இருக்கும்.

நாம் போன இதழில் கூறிய மற்ற தெளிவுகளையும் தீர்வுகளையும் அடுத்த இதழ்களில் பார்ப்போம்!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org