தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய பொருளாதாரக் கொள்கை


உழவன் பாலா பொருந்திய தொழில்நுட்பம்

(சென்ற கட்டுரையில் சூமாக்கர் அவர்களின் இடைப்பட்ட தொழில்நுட்பம் (அ) பொருந்திய தொழில்நுட்பம் பற்றிய கட்டுரையின் முதற் பகுதியை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சி இவ்விதழில். பொருந்திய தொழில்நுட்பம் (appropriate technology) (அ) இடைப்பட்ட தொழில்நுட்பம் (intermediate technology) என்பதன் அடிப்படைக் கோட்பாடுகள் என்ன, அது எவ்வாறு களத்தில் பயன்படுகிறது என்பதை சூமாக்கர் தனக்கே உரித்தான எளிய நகைச்சுவை நடையில் எழுதியுள்ளார். இக்கட்டுரை “மனஸ் ” (Manas Journal) என்னும் பத்திரிக்கையில் 1975ம் ஆண்டு இரண்டு பகுதிகளாக வெளி வந்தது. இதன் ஆங்கில மூலம் வேண்டுவோர் info@kaani.org என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். கட்டுரை ஆசிரியரின் குறிப்புகள் பகர அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ளன‌)

நம் வளர்ந்த நாடுகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை நாடுகளுக்கு உதவி வருகின்றன, ஆனால் ஏழைகளோ எப்போதும்போல் ஏழைகளாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு நிலைமையிலும் ஒரு தேவை உருவாகிறது, அதைப் புரிந்து கொள்ள அந்நிலைமைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் இடைப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக் கழகம் விவசாயத்தை ஒரு விவசாய விஞ்ஞான நோக்கிலிருந்து அணுகுவதே இல்லை. விவசாயத்தின் வளர்ச்சியையும் அதன் விளைவுகளையுமே அணுகுகிறோம்.

நாங்கள் முதலில் செய்வது என்னவென்றால், ஒரு சமூகத்தின் வேலைப்பளுவை 12 மாதங்கள் கூர்ந்து கவனிப்போம். இது வேலைச்சுமையின் ஏற்ற இறக்கங்களைத் தெளிவாகக் காட்டும். பல நேரங்களில் யாருக்குமே வேலை இருக்காது; மொத்த கிராமமும் சும்மா இருக்கும். வேறு சில நேரங்களில், தாத்தா, பாட்டி, குழந்தைகள் உட்பட அனைவரும் வயல்களில் பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த ஏறி இறங்கும் வளைவு இடத்துக்கு இடம் மாறுபடும் , குறிப்பாக இருபோக நிலங்கள் கொண்ட சமூகங்களில். அந்த வளைவின் உச்சத்தில், யாருக்குமே நேரம் இல்லாத விளிம்பில், புதிதாய் வேலை குறைக்கும் தொழில்நுட்பம் தேவைப்படும். இதுவே எந்த மாதிரியான கருவிகள் தேவைப்படும் என்பதை நிர்ணயிக்கும் [உதாரணமாக சாலை வசதியில்லாத கிராமத்தில் அறுவடை நேரத்தில் கடுமையான வேலை இருப்பின், மிதிவண்டி சக்கரத்தால் கதிர் அடிக்கும் ஒரு பொறியைச் சொல்லலாம் ]

பாகிஸ்தானில் வடக்குப் பிரதேசத்தில், மின்கம்பங்களே சென்றடைய முடியாத கிராமங்களில், நிறைய சிறு நீரோடைகள் உள்ளன. அங்கு சிறு/குறு நீர்மின் கருவிகள் அமைக்க முடியுமா என்றொரு கேள்வி எழுந்தது. குறு என்றால் 400 மெகாவாட் அல்ல - 50, 100 மற்றும் 200 கிலோவாட் மின் உற்பத்திக்கான சிறு டர்பைன்கள்! இத்தேவை புரிந்தவுடன் நாங்கள் ITDGஇன் ஆற்றல் குழுவிடம் இதை ஒப்படைத்தோம். அவர்கள் எங்களிடம் வந்து, “பிரிட்டனைப் பொருத்தவரை சிறு டர்பைன்கள் செய்ய ஒரே ஒருவர்தான் இருக்கிறார்; அவர் இதைப் பொழுது போக்காகச் செய்து கொண்டிருக்கிறார். மேலும் இக்கருவியின் வரைவு (design) 1902ல் உருவாக்கியது, அதன் பின் யாருமே அதைக் கண்டு கொள்ளவில்லை” என்றனர். 1974ல் இன்னும் நன்றாகவே செய்யலாம் என்று நாங்கள் ரீடிங் பல்கலைக் கழகத்தின் பொறியியல் துறையிடம் இதைக் கொண்டு சென்றோம். அது மாணவர்களின் ஒரு திட்டப்பணி ஆகியது! ” இக்கருவியை இப்பொதுள்ளதை விடச் சிறியதாகவும், பாதி எடையுள்ளதாகவும் வடிவமைக்க முடியுமா? பாகிஸ்தானியர்களே இதைச் செய்துகொள்ளுமாறு எளிமையாக இருக்க வேண்டும் ” என்றொரு போட்டி வைத்தோம். இதன் விளைவாக இப்போது பாகிஸ்தானில் குறு மின் உற்பத்தி நடக்கிறது

இதே போல் ஜாம்பியாவில் ஒரு நிலைமை ஏற்பட்டது. முட்டை விவசாயிகள், முட்டைகளைப் பெட்டியில் அடைக்கும் பொருட்கள் இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளயினர். ” நீங்கள் ஏன் ஜாம்பியாவிலேயே அதைத் தயாரிக்கக் கூடாது ?” என்றால் ஜாம்பியாவில் யாருக்குமே அதை எப்படிச் செய்வது என்று தெரியவில்லை!

சரி லண்டனில் கேட்போம் என்றால், மிகச் சில இடங்களைத் தவிர, உலகின் அனைத்து முட்டைப் பெட்டிய‌டைக்கும் பொருட்களும் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தால் மட்டுமே தயாரிக்கப் படுகின்றன என்றனர்! சரி அவர்களைப் போய்க் கேட்போம் என்று போனோம். அவர்களோ “அதற்கென்ன நாங்கள் ஜாம்பியாவின் லுசாகா நகரில் ஒரு உற்பத்தி ஆலை அமைத்து விடுகிறோம். நீங்கள் வலுத்த நாடுகளின் உதவியுடன் தொடங்கினால் இன்னும் நல்லதே; எங்களுக்குப் பணம் வரும் என்ற நம்பிக்கை அதிகமாகும். எவ்வளவு வேண்டும்?” என்றார்கள். நாங்கள் “அது ஒரு சிறிய, பரந்துபட்ட சந்தை. வருடம் ஒரு 10 லட்சம் நெகிழி அட்டைகள் வேண்டும் - ஒவ்வொன்றும் 36 முட்டைகளை அடைக்கும்படி” என்றோம். நீண்ட நேர மவுனத்திற்குப் பீன், “இதை மறந்து விடுங்கள்; எங்களது மிகச் சிறிய இயந்திரம் மாதம் 10 லட்சம் அட்டைகள் செய்யக் கூடியது. இரண்டரை லட்சம் பவுண்டுகள் (அன்றைய விலையில் 50 லட்சம் ரூபாய்) விலை கொண்டது” என்றனர். இது ஜாம்பியாவிற்குச் சரி வராதே!

“சிறிதாக ஒன்றை எங்களுக்காகச் செய்து கொடுங்களேன்” என்றோம். “ஓ எங்கள் வல்லுனர்களிடம் பேசினோம். அது செலவு கட்டுப்படி ஆகாது”!

இந்த இடத்தில் நாங்கள் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு இளைஞரை அழைத்து இம்முட்டை அட்டையின் வடிவமைப்பை மாற்றி அமைத்துத் தரச் சொன்னோம். முட்டைகளை மட்டுமே அடுக்கி அவற்றைக் கட்டி , அதற்குப் பாதுகாப்பாய் மரப் பெட்டிகள் எதுவும் தேவைப் படாத படி, இடம் விட்டு இடம் எடுத்துச் செல்ல வசதியாய் வடிவமைக்கச் சொன்னோம். இப் புதிரை விடை காண லண்டனில் உள்ள அரசு கலைப் பள்ளிக்கு எடுத்துச் சென்றோம். ஆறே வாரங்களுக்குள் டென்மார்க்கின் பெருநிறுவனத்தை விடச் சிறந்த மிக நவீனமான வடிவமைப்பு ஒன்று கண்டறியப் பட்டது. அதை நாங்கள் காப்புரிமை செய்து கொண்டோம்.

இவ்விளைஞருக்கு நாங்கள் இரண்டாவதாக ஒரு பொறுப்பையும் கொடுத்தோம். இவ்வட்டைகளை அண்மையிலேயே தயாரிக்க ஒரு மாதிரி இயந்திரத்தை உருவாக்குவதுதான் அது. ரீடிங் பல்கலைக் கழகத்தில் அதன் மாதிரி உருவாக்கப் பட்டது. அதை நாங்கள் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குக் கொண்டு சென்றோம். இன்று அது விற்பனைக்கு உள்ளது. ஆப்பிரிக்காவின் பற்பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. வளர்ந்த நாடுகள் உட்பட, உலகின் பலப்பல நாடுகளில் இருந்தும் இவ்வியந்திரத்திற்கு விண்ணப்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இது வரை உலகில் இருந்த மிகச் சிறிய இயந்திரத்தின் 2 விழுக்காடு அளவே இது உற்பத்தி செய்கிறது - விலையும் 2 விழுக்காடு அளவே ஆகிறது. பொருளியல் நிபுணர்களில் வார்த்தையில் சொல்வதானால், சிறு தொழில்களில் முதலீடு-உற்பத்தி விகிதாசாரம் (capital output ratio) அதே அளவே உள்ளது! இதை எந்த பொறியியலாளரோ, பொருளியலாளரோ நம்ப மாட்டார்கள். எனினும் அது நிதர்சனாமாய் நடைமுறையில் உள்ளது. இதை நாங்கள் ITDCயின் ஒரு கிளை அமைப்பிற்குக் கொடுத்து விட்டோம். அது இவ்வியந்திரத்தைப் பெரிதும் விற்றுக் கொண்டிருக்கிறது - ஏனெனில் இது ஒரு நேர்மையான தேவையை நேர்மையாக நிறைவு செய்கிறது!

[குறிப்பு: இன்று 'சிறு தொழில்கள் எல்லாம் கட்டுப்படியாகாமல் நொடித்துப் போய்விடும், பெரும் மூலதனத்தில் செய்யப்படும் ராட்சத‌த் தொழில்கள் மட்டுமே வெல்லும்' என்று பரவலாக நம்பப் படுகிறது. அதற்குப் பெரும் பணச்செலவில் ஊடக வலுவுடன் பரப்புரைமையும் செய்யப்படுகிறது. நம் பிரதமர் “இந்தியாவில் உருவாக்குங்கள்” என்று உலகமெங்கும் கூவி வருகிறார். ஆனால் நம்மிடையே உள்ள எண்ணற்ற மனித மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உள்ளூரில் சிறு தொழில்களை உருவாக்க முற்படாமல், பெரும் முதலீட்டுக்கு யாசகம் செய்வது என்ன மடமை! இந்தியா இன்று உலகின் மூன்றாவது பெரிய சந்தையாக வளர்ந்துள்ளது. அதனால்தான் நம் குடியரசு தினக் கொண்டாட்டத்திற்கு ஒபாமா வருகிறார். அந்தச் சந்தையை நாமே நம் உள்ளூர்த் தொழில்களால் நிறைவு செய்ய முற்படுவதுதானே தற்சார்பான, அடிப்படையில் வலுவான‌ ஒரு நிலைத்த பொருளாதாரத்திற்கு வழி வகுக்கும்? ஏன் அரசியலிலும், அரசிலும், நவீனப் பொருளியலிலும், ஊடகங்களிலும் தற்சார்பு என்பது ஒரு கெட்ட வார்த்தை ஆகி விட்டது?]

இதே போல் மாலவியில் ஒரு விடயம் நடை பெற்றது. அங்கே சென்ற மேல்நாட்டு உதவிப்பணி வல்லுனர்கள், கிராம மக்களிடம் “உங்கள் விளைச்சலை இரட்டிப்பாக்க நாங்கள் வேளாண் தொழில்நுட்பங்கள் சொல்லித் தருகிறோம்” என்று பல உத்திகளைச் சொல்லிக் கொடுத்தனர். அங்குள்ள உழவர்கள் வறுமையில் இருந்ததால் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டனர். விளைச்சலும் இரட்டிப்பாகியது. ஒரு வருடம் கழித்து இந்த உதவிப்பணிக்காரர்கள் மாலவிக்கு வந்து பார்த்தால் உழவர்கள் மீண்டும் பழைய விவசாய முறைகளுக்கே சென்று விட்டனர்! அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச்சென்று கிழக்கு-மேற்கு கலசார வேறுபாடு, போன்ற விடயங்களால் உதவிப்பணி தோல்வியுற்றது என்று கூறினார்கள். அப்போது நாங்கள் மாலவியில் இருந்ததால் எங்களை என்னவென்று பார்க்கச் சொன்னார்கள்.

நாங்கள் கவனித்ததில் ஒரு உண்மை புரிந்தது. அங்குள்ள உழவர்கள் பெரும்பாலும் தங்கள் உணவையே விளைத்துக் கொள்கிறார்கள். தங்கள் விளைச்சலைத் தாங்களே உண்டு கொள்கிறார்கள். இப்போது இரட்டிப்பு விளைச்சலை என்ன செய்வது? எஞ்சியதைச் சந்தைக்கு அல்லவா கொண்டு செல்ல வேண்டும். அங்கோ போக்கு வரத்து வசதிகள் துளியும் இல்லை. உணவுப் பொருட்களைப் பெண்கள் தலையில் தூக்கிக் கொண்டு சந்தைக்குக் கொண்டு சென்றனர். ஒரு போகம் இவ்வாறு செய்து விட்டு ” அய்யா சாமி போதுமப்பா” என்று விட்டனர். அறிவுள்ள ஒரு விவசாயி சொன்னார்: ” எங்கள் பெண்களை அடிமைகளாக நடத்துவதை விட அவர்களை மகிழ்வுடன் வைத்திருப்பது முக்கியம். எங்கள் பழைய முறையே நல்லது”! நாங்கள் தலையிட்டு, “உங்கள் விளைச்சல் அதிகமானால் பரவாயில்லை, எங்கள் போக்குவர்த்துக் குழு இதற்கு விடை காணும்” என்று உறுதி கூறினோம்.

நாங்கள் ஸ்காட்லாந்தில் இருந்து ஒரு எளிய மாட்டு வண்டியின் வரைவை மாலவிக்குக் கொண்டு வந்தோம். பழைய இரும்பு, உடைந்த கார்களின் உதிரிப் பாகங்கள் ஆகியவற்றை விற்கும் ஒரு வியாபாரியைக் கொண்டு இரும்புப் பாகங்களைச் செய்ய வைத்தோம். இப்பாகங்களைச் செய்ய ஒரு கருவித் தொகுப்பையும் உருவாக்கினோம். உள்ளூர் தச்சர்களுக்கு இவ்வ‌ண்டிகள் செய்யப் பயிற்சி அளித்தோம். பயிற்சியின் முடிவில் ஒவ்வொரு தச்சருக்கும் ஒரு கருவி தொகுப்பை அளித்தோம். அவர்கள் அனைவரும் தத்தம் கிராமங்களுக்குச் சென்று மாட்டு வண்டிகள் செய்து விற்க முடிந்தது. மாட்டு வண்டிகள் வந்ததும் மாலவி உழவர்களின் வாழ்க்கைத் தரமும் உய‌ர்ந்தது - எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்தன.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org