தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உலகிற்கு உணவும் உயர்விளைச்சலும் - பரிதி


“உலகுக்கு உணவு வழங்குவதே எங்கள் நோக்கம்” - பெருநிறுவன நீலிக் கண்ணீர்!

உலக மக்களில் ஏறக்குறைய நூறு கோடிப் பேர் உணவுப் பற்றாக்குறையால் வாடுகின்றனர். உலகின் சுற்றுச் சூழல் மிக வேகமாகக் கெட்டுக்கொண்டிருக்கிறது. இவ்விரண்டுக்கும் முதன்மைக் காரணமாகப் பலர் முன்வைப்பது மக்கள் தொகைப் பெருக்கம்.

உண்மைக் காரணங்களை மூடி மறைப்பதற்காக ஆளும் வர்க்கத்தால் பரப்பப்பட்டு நடுத்தர வர்க்கத்தில் பெரும்பாலானோர் வசதியாக நம்பும் இந்தக் காரணம் பொய்யானது என்பதைத் தரவுகளுடன் நாம் ஏற்கெனவே தாளாண்மையில் பல முறை பார்த்துள்ளோம். இருப்பினும், அதிவீரராமபாண்டியர் நறுந்தொகையில் மிகச் சிறப்பாகக் கூறியவாறு, நாமும் மேற்படிப் பொய்யைத் தொடர்ந்து அம்பலப்படுத்தவேண்டியுள்ளது!
பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்
மெய்போ லும்மே மெய்போ லும்மே!
மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையாற்
பொய்போ லும்மே பொய்போ லும்மே!

இயற்கைக்கு எதிரான வேதிப் பொருள்கள், கிடைத்தற்கரிய நன்னீர், சூழலை மாசுபடுத்தி உருவாக்கும் ஆற்றல் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தித் தேவைக்கு அதிகமான உணவை உற்பத்தி செய்கிறோம். அதில் பெரும்பகுதி (அ) வீணாகிறது, (ஆ) இறைச்சி உற்பத்தி செய்யும் ஆலைகளுக்காகக் கால்நடைகளைக் குறுகிய காலத்தில் கொழுக்கவைப்பதற்கு உதவுகிறது, அல்லது (இ) சொகுசு ஊர்திகளுக்கு உயிரெரிபொருளாகப் பயன்படுகிறது. இவைபோக மீதியாகும் உணவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அரசுகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வர்க்கத்தினரின் மாந்தநேயமற்ற தன்மை, ஊகவணிகம் ஆகிய அரசியல் பொருளாதாரக் காரணங்களால் வறியோருக்குக் கிடைப்பதில்லை.

இருப்பினும், மேன்மேலும் உணவு உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் என்றும் அதற்கு உயர் உயிரித் தொழில்நுட்பம் இன்றியமையாதது என்றும் உலகின் குரல்வளையை நெரித்துக்கொண்டிருக்கும் பெருநிறுவனங்கள் தொடர்ந்து கூப்பாடு போடுகின்றன. மக்கள் மீது அவற்றுக்கு உள்ள அக்கறையா இதற்குக் காரணம்? அன்று! இன்றைய நவீன வேளாண்மைக்கு அடிப்படையான விதைங்கள், உரங்கள், உயிர்க் கொல்லிகள் ஆகிய அனைத்துக்கும் உலகளாவிய சந்தையை உருவாக்கி அதன்மூலம் கொள்ளை உபரியை ஈட்டுவது ஒன்றுதான் அந்நிறுவனங்களுடைய ஒரே நோக்கம். அவற்றின் உள்நோக்கத்தை வெளிப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றே இந்தக் கட்டுரை. கட்டுரையில் உள்ளவற்றில் அதிகப் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள், அருங்கலைச் சொற்கள், மற்றும் அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் போன்றவற்றின் ஆங்கில வடிவம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன.

- பரிதி (thiru.ramakrishnan@gmail.com), மொழிபெயர்ப்பாளர்

மக்கள் தொகைப் பெருக்கமும் புவியின் இயற்கைச் சூழல் மண்டலங்களில் மாந்தச் செயல்பாடுகளால் நிகழும் மாற்றங்களும் நம்மை அச்சுறுத்துகின்றன. இந்நிலையில் உலக மக்கள் அனைவருக்கும் போதுமான உணவு தருவது எப்படி என்பது குறித்த விவாதங்களில் உணவு உற்பத்தித் திறனை அதிகரிப்பதுதான் முதன்மையான பேசுபொருளாக இருக்கிறது..

விளைநிலங்களில் முடிந்தவரை அதிக அளவு நெருக்கமாகப் பயிர்களை விளைவிக்க முடிந்தால் உலக மக்கள் அனைவருக்கும் போதுமான உணவு கிடைத்துவிடும் என்பது பலருடைய கருத்தாக உள்ளது. மான்சான்ட்டோ போன்ற மீப்பெரும் வேளாண்வேதிப்பொருள் நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் முயற்சிகள் மீது இந்தக் கருத்தியல் ஆதிக்கஞ் செலுத்துகிறது.

“உலகில் பெருகிவரும் மக்களுக்குத் தேவையான உணவு தருவதற்கு அடுத்த ஐம்பது ஆண்டுகளில் உழவர்கள் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் உலகில் மொத்தம் உற்பத்தியானதைக் காட்டிலும் அதிக அளவில் உணவு உற்பத்தி செய்யவேண்டும். 2030-ஆம் ஆண்டுக்குள் விளைச்சலை இரண்டு மடங்கு உயர்த்துவதற்கு நாங்கள் பாடுபட்டுவருகிறோம்.” என்று மான்சான்ட்டோவின் இணையதளம் பகர்கிறது.

அமெரிக்க அரசின் வேளாண் அமைச்சர் உள்ளிட்ட பல திட்டக் கொள்கை வகுப்பாளர்களும் இந்தப் பசப்புரையைத் தொடர்ந்து பரப்பிவருகின்றனர். விளைச்சலை அதிகப்படுத்துவதில் மான்சான்ட்டோவும் அதையொத்த பிற பெருநிறுவனங்களும் இதுவரை சாதிக்கவில்லை. ஒருவேளை அவர்களால் அந்தச் சாதனையைப் படைக்க முடிந்தாலும் உலகின் பசிப் பிணியைப் போக்குவதற்கு அது மட்டும் போதாது என்பதே உண்மை.

இப்போது உலகெங்கும் உழவர்கள் விளைவிக்கும் உணவே 1200 கோடி மக்களுக்குப் போதுமானது. இது இப்போதைய மக்கள் தொகையைக் காட்டிலும் ஏறக்குறைய இரண்டு மடங்கு,. 2050-ஆம் ஆண்டு வாக்கில் உலக மக்கள் தொகை 900 கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதும் இந்த அளவு விளைந்தாலே உணவு மீதமாகும்.

ஆனால், இப்போது உலகில் குறைந்தது 93 கோடிப் பேர் போதுமான உணவு கிடைக்காமல் துயருறுகின்றனர். விளைச்சல் குறைவு இதற்குக் காரணம் அன்று என்பது வெளிப்படை. உலகில் நிலவும் பொருளாதார உறவுகள் தாம் இந்த இழிநிலைக்குக் காரணம். வறுமையால் வாடும் மக்கள் தமக்குத் தேவையான உணவை விளவித்துக்கொள்வதற்கான நிலம் அவர்களிடம் இல்லை, அல்லது உணவுப் பொருள்களை வாங்குவதற்குப் போதுமான பண வசதி அவர்களிடம் இல்லை.

கெடுவாய்ப்பாக, உணவுப் பண்டங்களின் விலை தொடர்ந்து உயர்வதும் இயற்கை வளங்களைக் கையகப்படுத்துவதில் நிலவும் கடும் போட்டியும் மேற்கண்ட நிலைமையை மேலும் மோசமாக்கிவருகின்றன. வளர்ந்த நாட்டு முதலீட்டாளர்கள் வளரும் நாடுகளில் வளமான விளைநிலங்களைப் பெருமளவில் விலைக்கு வாங்கி அல்லது குத்தகைக்கு எடுத்துப் பயிரிட்டு விளைபொருள்களை வளர்ந்த நாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்தல் இதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு. கடந்த பத்தாண்டுகளில் ஏறக்குறைய நூறு கோடிப் பேருக்குத் தேவையான உணவை விளைவிப்பதற்குப் போதுமான நிலம் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இப்போது உலகில் உணவுப் பற்றாக்குறையால் வாடும் மக்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்வதற்கு அந்த விளைநிலங்களே போதும்! 2000-ஆம் ஆண்டு முதல் ஆப்ரிக்காவில் 14 கோடி ஏக்கர் விளைநிலங்கள் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளன. இது அந்தக் கண்டத்தின் மொத்த விளைநிலப் பரப்பில் ஐந்து விழுக்காடு.

மான்சான்ட்டோ போன்ற வேளாண்வேதிப்பொருள் நிறுவனங்கள் இவ்வாறு முதலீடு செய்வதில்லை. விதைகளையும் வேளாண்வேதிப்பொருள்களையும் விற்பனை செய்வதுதான் அவற்றின் விருப்பம். அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, சவுதி அரேபியா போன்ற நாடுகளின் முதலீட்டு நிறுவனங்கள் இத்தகைய முதலீடுகளைச் செய்கின்றன. [இந்தப் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட கருத்தூரி க்லோபல் நிறுவனம் எத்தியோப்பியா, கென்யா போன்ற நாடுகளில் கொள்ளையடித்ததைக் குறித்து ஏற்கெனவே தாளாண்மையில் பார்த்திருக்கிறோம்.] அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு உரிமையாளராகவும் குடியரசுக் கட்சியின் பெரும்புள்ளிகளில் ஒருவராகவும் அயோவா பல்கலை ஆட்சிக் குழு உறுப்பினராகவும் உள்ள புரூசு ராசுட்டெட்டர் போன்ற தனி முதலீட்டாளர்களும் இதில் ஈடுபடுகின்றனர்.

உள்நாட்டு ஆதிக்கவர்க்கத்தினரே தம் நாட்டின் வளமான பகுதிகளில் இத்தகைய நில அபகரிப்பில் ஈடுபடுவதும் அம்முயற்சிகளுக்கு அரசுகள் துணைபோவதும் உண்டு. இந்தியாவில் இத்தகைய நிகழ்வுகள் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. ஆனால் வல்லரசு நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள நாடுகளில் நிலத்தைக் கையகப்படுத்துவது மிகப் பரந்த அளவில் நிகழ்ந்துள்ளது. ஆக்சுபாம் எனும் தொண்டு நிறுவனத்தின் ஆய்வு தெரிவிப்பது:

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இவ்வாறு தாரை வார்க்கப்படும் நிலங்களில் மூன்றில் இரண்டு பங்கு பசிப்பிணியால் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகளில் உள்ளது. ஆனால், அந்நிலங்களில் மிகச் சிறிய பங்கு மட்டுமே அந்தந்த நாட்டு மக்களுக்குத் தேவையான உணவை விளைவிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது அங்கு விளையும் பண்டங்களில் மிகச் சிறிய அளவே உள்நாட்டுச் சந்தையில் விற்கப்படுகிறது. மிகக் குறைந்த விலைக்கு நிலத்தைக் கையகப்படுத்தி நல்ல விலை வரும்வரை தரிசாக விட்டுவைத்தல் அல்லது விளைபொருள்களை உற்பத்தி செய்து பணக்கார நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக (அங்கு அவை பெரும்பாலும் ஊர்திகளுக்கான உயிரெரிபொருள்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன) நிலத்தைப் பயன்படுத்துதல் ஆகியனதாம் அந்நாடுகளில் அதிகம் நிகழ்கின்றன.

எடுத்துக்காட்டாக, ஆண்டுராசு நாட்டில் 2010 வரை சுமார் ஒரு கோடியே தொண்ணூற்று மூன்று லட்சம் ஏக்கர் நிலம் வல்லரசு நாடுகளில் ஊர்திகளுக்கு உயிரெரிபொருள் உற்பத்தி செய்வதற்காக எண்ணெய்ப் பனை மரங்களை வளர்ப்பதற்கென கையகப்படுத்தப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய இரண்டு கோடி ஏக்கர் கூடுதல் நிலம் இதே நோக்கத்திற்காகக் கையகப்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஏறக்குறைய நூறு கோடிப்பேர் இப்போது உலகில் பசியால் வாடுகின்றனர். அவர்களைத் தாங்கும் திறனுள்ள நிலம் பணக்காரர்களுக்கு மேலும் பணம் சேர்ப்பதற்காகவும் பிற சொகுசுத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அத்தகைய நில பேரங்களை நியாயப்படுத்த முனைவோர் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? “அவர்கள் கையகப்படுத்தும் நிலங்கள் ஏற்கெனவே மக்களால் பயனற்றவை என்று கைவிடப்பட்டவை அல்லது வளங்குன்றியிருப்பதால் வெளியார் தலையீடு இல்லாமல் ஏதும் செய்ய இயலாதவை” என்பது அவர்களுடைய வாதம்.

ஆனால் இது உண்மைக்குப் புறம்பானது என்கிறது ஆக்சுபாம். “அபகரிக்கப்படும் நிலங்களில் பெரும்பங்கு வளமானதும் நீர்ப்பாசன வசதியும் சந்தைப்படுத்தும் வசதியும் உள்ளது” என்று அந்நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. “அந்நிலங்களில் பெரும்பகுதி ஏற்கெனவே சிறு குறு உழவர்களால் வேளாண்மை, மேய்ச்சல் உள்ளிட்ட இயற்கைவளப் பயன்பாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டது.” இதனால்தானோ என்னவோ முதலீட்டாளர்கள் சட்டங்களை எளிதில் வளைப்பதற்கு ஏதுவான நாடுகளைக் குறிவைக்கிறார்கள். கம்போடியாவின் மொத்த விளைநிலங்களில் 56 முதல் 63 விழுக்காடு நிலம் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது.

நிலங்களில் இருந்து தூக்கி எறியப்படும் மக்களுக்கு மிகக் குறைந்த இழப்பீடே வழங்கப்படுகிறது. பல தருணங்களில் இழப்பீடு அம்மக்களுக்குப் போய்ச் சேர்வதில்லை.

இந்த இழிநிலையில் மான்சான்ட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் முன்வைக்கும் உயர் உயிரித் தொழில்நுட்பங்கள் எவையுமே உலகப் பசிப் பிணியைக் கடுகளவுகூட மாற்றமாட்டா என்பதே உண்மை. பசிப் பிணியைப் போக்குவதற்கு அரசியல், குமுகவியத் தீர்வுகள் தாம் தேவை. ஆக்சுபாம் அறிக்கை இதற்கான முதற்படியாகப் பயன்படும்.

உலக வைப்பகம் போன்ற ஆதிக்கவர்க்க நிறுவனங்கள் நிலக்கொள்ளைகளுக்குப் பண உதவி தருவதை நிறுத்தவேண்டும். சிறு குறு உழவர்களைப் பாதுகாக்கும் வண்ணம் சட்டங்களை இயற்றிச் செயல்படுத்துமாறு வளரும் நாட்டு அரசுகளுக்கு அந்த நிறுவனங்கள் அறிவுறுத்தவேண்டும். உள்நாட்டு உணவுத் தேவையை நிறைவு செய்யும் நில விற்பனைகளை மட்டுமே அனுமதிக்குமாறு உலக வைப்பகம் அந்த அரசுகளை வழிநடத்தவேண்டும் என்று ஆக்சுபாம் ஆலோசனை தெரிவிக்கிறது.

வழக்கமாக உலக வைப்பகம் இத்தகைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்துவிடும். உள்நாட்டுச் சிறு குறு உழவர்களின் பண்ணைகளை அழிப்பதன் அபாயங்களை எய்ட்டி நாட்டில் நேரடியாகப் பார்த்துள்ளார் இப்போதைய உலக வைப்பகத் தலைவர். எனவே அவர் ஒருவேளை மேற்கண்ட அறிவுறுத்தலை ஏற்றுச் செயல்படுவாரோ என்னவோ! பொறுத்திருந்து பார்ப்போம்!! [இந்த மூலக் கட்டுரை 2012-ஆம் ஆண்டு வெளியானது. இன்றும் நிலைமை மாறவில்லை என்பதனை ஏப்ரல் 2014-இல் வெளிவந்த மேற்கோள் கட்டுரை காட்டுகிறது.] மூலக் கட்டுரை:

Tom Philpott, 'How Not to “Feed the World” ', Mother Jones magazine, Oct. 10, 2012., http://www.motherjones.com/tom-philpott/2012/10/want-feed-world-first-stop-land-grabs.

மேற்கோள்:
http://www.aljazeera.com/indepth/opinion/2014/04/world-bank-enabling-agribusine-2014412134645827557.html

அயோவா iowa ஆக்சுபாம் oxfam

ஆண்டுராசு honduras உலக வைப்பகம் world bank

எத்தியோப்பியா ethiopia எய்ட்டி haiti

கம்போடியா combodia கருத்தூரி க்லோபல் karuturi global

குடியரசுக் கட்சி republican party கென்யா kenya

புரூசு ராசுட்டெட்டர் bruce rastetter மான்சான்ட்டோ monsanto

வேளாண்வேதிப்பொருள் agrichemical

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org