தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


காங்கிரஸே பரவாயில்லை!

2013ல் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, இந்தியாவின் “வளர்ச்சிக்காக” நிலம் கையகப் படுத்தும் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அப்போதே நாம் அதைக் கடுமையாக எதிர்த்தோம். பல தன்னார்வ நிறுவனங்களும், சமூகப் போராளிகளும் விடாமல் போராடி அதில் சில முக்கிய திருத்தங்களைக் கொண்டுவந்தார்கள்.

அதன்படி, தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படும் என்றும், நிலங்களை கையகப்படுத்தும்போது, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அல்லது நகராட்சி நிர்வாகங்களிடம் ஆலோசித்து முன் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. தனியார் பங்களிப்பு திட்டங்களுக்காக (PPP) நிலங்களை கையகப்படுத்தும்போது, நில உரிமையாளர்களில் 70 சதவீதம் பேரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், தனியார் திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது, நில உரிமையாளர்களில் 80 சதவீதம் பேரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், எந்த ஒரு திட்டத்துக்காகவும் வலுக்கட்டாயமாக நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும் முழு விலையையும் கொடுக்கும் வரை நிலத்தின் உரிமையாளருக்கு, அந்த நிலத்தில் உரிமை உண்டு என்றும் அந்த சட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.

சென்ற மாதம் டிசம்பர் 29ம் தேதி மத்திய அரசு மிக நூதனமாக நிலம் கையகப் படுத்தும் சட்டத்தில் ஒரு அவசரச் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு சனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். மேலோட்டமாக தேனைத் தடவி இருந்தாலும் 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் பல முக்கிய பாதுகாப்பு அம்ச‌ங்களை நுணுக்கமாகத் தளர்த்தியிருக்கிறார்கள். உதாரணமாக, பழைய சட்டத்தின்படி அரசு 5 வருடங்களுக்குள் நிலத்திற்கான தொகையைச் செலுத்தாவிடில் நிலம் மீண்டும் உரியவருக்கே சேரும். இதை மாற்றி உள்ளார்கள். சமீபத்திய உச்ச நீதி மன்ற ஆணையின்படி தாமதம் ஆகும் காலத்தில் நிலம் சம்பந்தப் பட்ட வழக்கு எதேனும் இருந்தால் அதுவும் 5 ஆண்டுகளில் சேரும். இதையும் நீக்கி வழக்கு நிலுவையில் உள்ள காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று சட்டம் கூறி விட்டது. அதே போல் அரசு அதிகாரிகள் ஏதேனும் சட்ட விரோதமாகச் செய்தால் அத்துறையின் தலைவர் பொறுப்பாவார் என்று இருந்தது. இப்போது அரசு அதிகாரிகளின் பேரில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க மாநில மத்திய அரசுகளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று புதிய சட்டம் கூறுகிறது. இதே போல் பயன்படாமல் கைப்பற்றப் பட்ட நிலத்தைச் சொந்தக்காரரிடமே சேர்க்க வேண்டும் என்ற சட்டத்தையும் நீக்கி விட்டார்கள்.

இன்னொரு சூழ்ச்சியான அம்சமாக, கட்டுமான மற்றும் சமூகக் கட்டுமானத் திட்டங்களுக்கு சமூக பாதிப்பு கணிப்பும் (social impact assessment) விற்போரின் ஒப்புதலும் தேவையில்லை என்று சட்டம் திருத்தப் பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல்கள், மருத்துவமனைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சுற்றுலா வசதிகள், குளிர் கிடங்குகள், உரத் தொழிற்சாலைகள், சாலைகள், விமான நிலையங்கள், நகர்ப்புற பொதுப் போக்குவரத்து போன்ற ஏகப்பட்ட பணிகள் கட்டுமான திட்டங்களாகப் பட்டியல் இடப் பட்டுள்ளன.

அவசரச் சட்டம் என்பது இரண்டு பாராளுமன்றக் கூட்டத் தொடர்களுக்கு இடையில் அரசுக்கு எதேனும் நெருக்கடி ஏற்பட்டால் அப்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு ஆயுதம். டிசம்பர் மாதம் முடிந்த பாராளுமன்றம் மீண்டும் பிப்ரவரி மூன்றாம் வாரம் கூட இருக்கிறது. இதற்குள் நிலம் கையகப் படுத்துவதில் என்ன அவசர‌ம் இருக்க இயலும்?

காங்கிரஸ் ஆட்சியின் போது “இதை விட மோசமான அரசு இருக்க முடியுமா” என்று பெரும்பாலான மக்கள் நினைத்தன‌ர். வளர்ச்சி என்ற பெயரில் வலுத்தவர்களுக்கு வசதி செய்து கொடுத்து ஏழைகளைக் காவு கொடுக்கும் தற்போதைய‌ அரசுக்குக் “காங்கிரஸே பரவாயில்லை” என்றல்லவா தோன்றுகிறது!

பாரதி இப்போது இருந்தால், இப்படிப் பாடியிருப்பாரோ

ஏழையெனப் பாரதத்தில் பிறந்து விட்டால் - மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org