தமிழகத்தில் பெண்கள் கூட்டமைப்பு (Women's Collective) என்ற அமைப்பு ஷீலு அவர்கள் தலைமையில், பல ஆண்டுகளாக, மிகவும் சிறப்பான பணி ஆற்றி வருகிறது. இவ்வமைப்பு ஒதுக்கப்பட்ட மற்றும் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு ஆகவும், முன்னேற்றத்திற்கு ஆகவும், பெண்களுக் கெதிரான வன்முறைகளை எதிர்த்தும், பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் செம்மையாக செயல்பட்டு வருகின்றனர். சமீப காலங்களில் அவர்கள் இயற்கை வேளாண்மையை வாழ்வாதார முன்னேற்றத்தின் ஒரு ஆயுதமாக எடுத்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அவர்களது களஞ்சியம் பெண் விவசாயிகளின் 6வது மாநில மாநாடு திசம்பர் மாதம் திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலையில் நடை பெற்றது.
அதில் பங்கேற்று நமது தாளாண்மையின் அனந்து பின்வருமாறு பேசினார்: இன்று நமது விவசாயத்தில், பெண்கள் மிகவும் மறக்கப்பட்டவர்களாக உள்ளனர் . அவர்களுக்கான இடம் நமது பாரம்பரிய விவசாயத்தில் சில பத்தாண்டுகள் வரை விதை பராமரிப்பு, வீட்டிற்கான கொள்முதல், விவசாயத்தின் தற்சார்பு போன்றவற்றில், மிகவும் பெரியதாக இருந்தது- ஆனால் அவர்களது பெயரில் நிலம் இருப்பதே மிக அரியதாக உள்ளது. ஒரு FAO அறிக்கை, இந்தியாவிலுள்ள மொத்த விளைநிலத்தில், 9% மட்டுமே பெண்கள் பெயரில் உள்ள நிலம் என்கிறது. ஆனால் அதே அறிக்கை விவசாய கூலி (agri labour) வேலையில் 79% பெண்களே உள்ளனர் என்றும் கூறுகிறது. அவர்களது உழைப்பை மேலும் எடுத்துக்காட்ட இமாலயாவில் ஒரு கிராமத்தில் ஒரு படிப்பினையிலிருந்து மேற்கோள் இடுகிறது: ஒரு ஜோடி எருது ஒரு ஆண்டில் 1064 மணி நேரமும், ஒரு ஆண் 1212 மணிநேரமும், ஒரு பெண் 3485 மணி நேரமும் ஒரு ஹெக்டேர் நிலத்தில் ஓராண்டில் செலவிடுகின்றனர் என்று!
அப்படி சிறப்பான பெண்களின் பங்களிப்பை மறப்பதோ மறுப்பதோ இமாலயத்தவறாகும். நிலம், நீர் போன்ற ஆதாரங்களின் மேல் பெண்களது உரிமையை நிலை நாட்டுவதுடன், அவர்களுக்கு நில உரிமை மற்றும் விதை உரிமையின் முக்கியத்துவதை எடுத்து சொல்லி வழி நடத்த வேண்டும். இது போன்ற பெண்கள் குழுக்கள் உணவு மற்றும் அதன் பின் உள்ள அரசியலையும் புரிந்து கொண்டு பாதுகாப்பான உணவிற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குத்தகை நிலங்களிலும் பாதுகாப்பான விஷமற்ற இயற்கை விவசாயம் மூலம் வாழ்வாதாரத்தையும் உணவு சத்து (nutrition) ஆதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். மேலும், பெண்கள் குழுக்கள் இது போன்ற சத்தான பாதுகாப்பான உணவு வகைகளை சந்தைப் படுத்தவும் வேண்டும். கேரளத்தில் green army என்னும் பசுமை பட்டாளம் உள்ளது போல் இங்கும் பூச்சி மேலாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை உத்திகளையும் ஒரு ஏக்கருக்கு இவ்வளவு என்று விலை அடிப்படையில் மேற்கொள்ளலாம்.
(அதே கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், டிசம்பர் 22ஆம் தேதி, காந்திக்கிராமில் ராம் அவர்கள் பெண்களுடன் இரண்டு முறை உரையாடினார்).
1. உணவும் அரசியலும் - இன்றைய அரசியலின் புரிதலை, நம்மை சுற்றியுள்ள பல விஷயங்களில் நாம் தெரிந்து கொள்ளுவதில்லை. உணவிற்கான அரசியலானது, கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், அமைப்புக்களின் ஆதரவு, திட்ட அணுகுமுறை மற்றும் செயல்பாடு, வளர்ச்சிக் கணக்கிடும் கூறுகள், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் என்று பல விதங்களிலும் நமது வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளது. உதாரணமாக - ஒரு விவசாயத் தொழிலாளி, தன் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்தில் இருந்து வாத்தியார் விடுத்த அழைப்பை ஏற்று பள்ளிக்குச் சென்றார். "என்னம்மா உன் புள்ள சரியாவே மார்க்கு வாங்கமாட்டேன்கறான்" என்ற வாத்தியார், "அவனுக்கு சாப்பிட என்ன கொடுக்குறே?" என்று கேட்டது தான் இந்த பெண்ணிற்கு புரியவில்லை. "மே** கோம்***" கொடுத்தீனா புள்ள நல்லா படிப்பான்" என்று வாத்தியார் சொன்னதும் , கூலி வேலை செய்து பிள்ளையைப் புரியாத இங்கிலிஷு ஸ்கூல் சேர்த்து பீசு கட்டவே நேரம் சரியாய் இருக்கு, இதுலே இப்போ அவன் சாப்பிட வேறு விதவிதமா பானங்களை வாங்கவேண்டியுருக்குமோ?" என்று சந்தேகம். இந்த பானத்தில் என்ன தான் அப்பிடி இருக்கு? தேடிப்பார்த்தா, நம்ம ஊரு கம்பு மாவும், தினை மாவும் கலந்து அதுலே நமக்கு ஒண்ணுக்கும் உதவாத சக்கரையை தூவி,பல ஒவ்வாத ரசாயனங்களைக் கலந்து, சத்தெல்லாம் சாகடிச்சு, அழகா புட்டியில் நிரப்பி, பெருசு பெருசா விளம்பரம் செய்து வித்துட்டு இருக்காங்க என்று தெரியும் போது, எரிச்சலாய்த்தான் இருக்கு. இப்படி இன்று உணவின் அரசியல் நமது நாட்டில் கல்வித்துறையில் ஊடுருவி விட்டது. நமது பாரம்பரிய உணவை வேறுவிதமாக பெயர் மாற்றி, உருமாற்றி, அந்த மாயமானை நாம் சம்பாதிக்க ஓடும்போது, நம்ம சொத்தையும், நம்ம அறிவையும் சூறையாடுவது வெறும் கல்வி துறையில் மட்டும் இல்லை பெரிய அளவில் இதர துறைகளிலும் இது நடந்து வருகின்றது. ஆராய்ச்சி துறையில், நமக்கு ஒன்றுக்கும் உதவாத அரிசிகளை, நமக்கு ரொம்ப வேண்டியவையாக நம்பச் செய்துள்ளது. அதே போல நமது வளர்ச்சியையே தேவையில்லாத தொழில்நுட்பத்தை நுகர்வதை கொண்டு கணிக்க படுகின்றது.
2. இரண்டாவது அமர்வு WTO என்கின்ற உலக வர்த்தக அமைப்பின் விவசாய ஒப்பந்தத்தைக் குறித்து அமைந்தது. இந்த இரு அமர்வுகளிலும் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் பங்கேற்றனர். புதுச்சேரியின் அருகுள்ள, ஆரோவில்லிலே கிராம பெண்கள் குழுக்கள் மத்தியில் இதே கருத்தைக் குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் நம் தாளாண்மையைச் சார்ந்த ராம் உரையாற்றினார் (படம்). இந்த 2 மணிநேர கலந்துரையாடலில் 300க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்கள் கலந்துகொண்டனர். இந்த அமர்வுக்கு பிறகு இவர்களில் பலரும், முடிந்தவரை வெள்ளை சர்க்கரை, வெள்ளை அரிசி மற்றும் வெள்ளை கோதுமை (மைதா) நுகர்வதை நிறுத்துவோம் என்று சபதம் எடுத்துள்ளனர்.