தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழந்தும் உழவே தலை - வழிப்போக்கன்


கடந்து சென்ற 2013ம் வருடம் இந்தியாவின் உழவர்களுக்கு நன்றாகவே இருந்தது. நம் தமிழகத்தில் மழை குறைவாயினும், தேசிய அளவில் நல்ல பருவ மழை பெய்து உணவு தானியங்களின் உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவு 8.35 கோடி டன் உற்பத்தியாயிற்று. தானிய ஏற்றுமதி 2.0 கோடி டன்னைத் தாண்டியது. அதே 2013ம் ஆண்டில்தான் பொருளாதார மேதை மன்மோகன் சிங் 'விவசாயிகளை வேறு தொழிலுக்கு மாற்ற வேண்டும்' என்றும் நிதியமைச்சர் சிதம்பரம் '6% மக்களுக்கு மேல் உழவில் ஈடுபடக் கூடாது' என்றும் கூறினர்! ஒரு நாளைக்குச் சராசரியாக 2500 உழவர்கள் வேளாண்மையை விட்டு வேறு தொழிலுக்குப் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் நம் பொருளாதார மேதைகள் சொன்னது போல் அவர்களெல்லாம் தொழிற்சாலை வேலைகளுக்குப் பெயர்ந்து இருக்க வேண்டும் அல்லவா? உண்மை நிலவரம் என்ன? பொருளாதார வளர்ச்சியால் என்ன நன்மைகள் விளைந்துள்ளன?

2010ம் ஆண்டு இந்திய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 9.4 % வளர்ந்தது - இந்தியா ஒளிர்கிறது , வளர்கிறது என்றெல்லாம் அரசும், ஊடகங்களும் நீட்டி முழக்கியதில் பலப்பல படித்த‌ முட்டாள்கள் பங்குச் சந்தையில் ஏராளமான பணத்தைத் தொலைத்தனர்.” வேளாண்மையின் மிதமான வளர்ச்சிதான் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முட்டுக் கட்டையாக இருக்கிறது, எனவே விரைவில் இந்திய வேளாண்மையை 21ம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் - இதற்கு வால்மார்ட், மெக்டொனால்ட்ஸ், கோகோகோலா போன்ற பொது சேவை நிறுவனங்களும், மன்சான்டோ, டு போன்ட் போன்ற உழவர் நலனில் அக்கறை கொண்ட நிறுவனங்களும் மட்டுமே நம்மைக் காக்க இயலும்” என்று மத்திய அரசும் அமைச்சர்களும் இடறியடித்து ஓடிப்போய் அந்நிய முதலீட்டை வரவேற்றனர். ஆனால் 2013ம் ஆண்டின் கதையோ தலை கீழாய் இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் உற்பத்தித் தொழில்கள் 1%க்குக் கீழான வளர்ச்சியே காட்டின. வேளாண்மை 4.8% வளர்ந்து மிக ஆரோக்கியமான வளர்ச்சியைக் காட்டுகிறது. இவ்வளவிற்கும் வேளாண்மைக்கு எதிராகவே அரசின் அனைத்துத் திட்டங்களும் செயல்பாடுகளும் இருந்தன, இருக்கின்றன‌.

கடந்த சில ஆண்டுகளில், கும்பணிகளுக்கு வால் பிடிக்கும் நம் மத்திய அரசு செய்த சாதனைகளையும் முயற்சிகளையும் பார்ப்போமா?

1. விதைச் சட்டம் - உழவர்கள் விதை சேகரிப்பதைத் தடை செய்ய முயற்சி. கும்பணி விதைகளுக்கு நாம் அடிமையாக வழி கோலுதல். கும்பணி விதைகளை வாங்கி நடவு செய்தால் அதிலிருந்து மீண்டும் விதைகளை சேகரிக்க இயலாது.

2. சில்லறை வாணிபத்தில் அந்நிய முதலீடு - அந்நிய முதலீட்டுக்குக் கதவைத் திறந்து விடுதல் - சிறு தொழில்கள், உழவர்கள், மற்றும் நுகர்வோர் என்று அனைவரும் நிறுவனங்களுக்கு அடிமையாக்க ஒரு பெரும் சூழ்ச்சி

3. சட்டவரைவு - உயிரித்தொழில் நுட்ப ஒழுங்காற்று ஆணையம் கொண்டு வரும் முயற்சி. மாநிலங்களின் அரசாண்மைக்கு உட்பட்ட வேளாண்மையை மத்திய அரசு தன் ஆளுகைக்குக் கொண்டு வரும் முயற்சி. மரபீனித் தொழில்நுட்பத்தை நூதனமாகப் புகுத்தும் சூழ்ச்சி

4. நிலம் கையகப்படுத்தும் சட்டம் - தொழிற்சாலைகளுக்கும், முதலீட்டாள‌ர்களுக்கும் அரசே நிலம் பிடுங்கி அளித்துப், பழங்குடியினர், மலைவாழ் மக்கள், விவசாயிகள் என்று யாரும் வாழாமல் போஸ்கோ, வேதாந்தா, டாட்டா போன்ற அசுர நிறுவனங்கள் மேலும் வளர வழி செய்தல் (பொதுவுடைமைக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் CPI-M ஆண்ட மேற்கு வங்கத்திலும் அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது).

5. மரபீனித் தொழில்நுட்பத்திற்கு வெளிப்படையான ஆதரவு - பிரதமர், வேளாண் அமைச்சர் போன்றோர் வாய்ப்புக் கிடைத்த எல்லா நேரங்களிலும் இத்தொழில் நுட்பம் ஒன்றுதான் நம்மைக் காக்கும் என்று வெளிப்படையாகப் புலம்புவது.

6. அணு உலைத் தொழில்நுட்ப ஒப்பந்தம் - இதை எதிர்ப்போர் மீது தேசத் துரோகக் குற்ற வழக்குகள். உருப்படாத தொழில்நுட்பத்திற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் (வீர வசனம் பேசிய மத்திய அமைச்சர் நாரயணசாமியால் இன்னும் கூடங்குளம் நிலையத்தில் உற்பத்தி தொடங்க இயலவில்லை!)

7. ஊக வணிகம் மற்றும் ப‌ங்குச் சந்தையில் உணவுப் பொருட்கள் விற்பனை (கடுமையான விலைவாசி உயர்வுக்கு இது ஒரு முக்கிய காரணம்).

8. சென்ற மாதம் உலக வர்த்தக மையத்தில் நம் உழவர்களின் நலனை அடமானம் வைத்த கதை.

9. அரசு நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்றல்

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். மத்திய அரசின் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களையும், நடவடிக்கைகளையும் பட்டியலிட்டால் 10-15 தாளாண்மைகள் தேவைப்படும் ! இவர்கள் என்ன பொருளாதார சீர்திருத்தத்தைக் கண்டார்கள்? காசு கிடைக்கிறது என்பதற்காகத் தாய்நாட்டை விற்பதா? (யாருக்குக் காசு கிடைக்கிறது என்பது வேறு விஷயம்!). கண்ணிரண்டும் விற்று நாம் சித்திரம் கூட வாங்கவில்லை, கறுப்புக் கண்ணாடி வாங்குகிறோம்!

இதை எல்லாம் மீறி, 2013ல் உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடாக இந்தியா உயர்ந்தது. 2011-12ல் 11,000 கோடியாக இருந்த வேளாண் ஏற்றுமதி, 2012-13ல் 20,000 கோடியாக உயர்ந்தது. இதில் இறைச்சி மற்றும் பாசுமதி அரிசி ஏற்றுமதியின் பங்கு கணிசமானது. ஆனால் உணவு உற்பத்தி மிக அதிகமாயினும், விலைவாசி மட்டும் குறையவே இல்லை. சமீபத்திய மாநிலங்கள் தேர்தலில் காங்கிரஸ் அரசு படு தோல்வி அடைந்ததற்கு அடிப்படைப் பொருட்களின் விலைவாசி உயர்வே காரணம் என்று பொருளாதார மேதையான நம் பிரதமர் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதுபோல் இப்போது ஒத்துக்கொண்டிருக்கிறார். நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Inde) 10% க்குக் குறையவே இல்லை. ஊக வணிகத்தினாலும், உணவுப் பொருட்களைச் சந்தையில் விற்பதாலும்தான் (futures , derivatives and commodity trading) விலைவாசி ஏறுகிறது என்று பல ஆய்வுகள் கூறியும், நம் மத்திய அரசு விளைபொருட்களில் பங்குச் சந்தை மற்றும் ஊக வணிகத்தைத் தடுக்கவே இல்லை - மாறாக வெளிநாட்டவரும் நம் பங்குச் சந்தையில் நேரடியாகப் பங்கு பெறலாம் என்று சூதாட்ட அரங்கைத் திறந்து விட்டது.

நிதிப் பற்றக்குறையோ (fiscal deficit) உள்நாட்டு உற்பத்தியின் 4.8 சதவிகித‌மாக வளர்ந்து, 2014ல் 5.1% ஆகிவிடும் என்ற அச்சுறுத்தலுடன் கழுத்தை நெருக்குகிறது. இதைச் சரி செய்ய, லாபகரமாக ஓடும் அரசுத்துறைகளின் வைப்பு நிதிகளை அபகரிப்பதும், அவற்றின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதும் செய்து பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சியை அரசு செய்து வருகிறது. 40,000 கோடி எதிர்பார்க்கப் பட்ட இம்முயற்சி இதுவரை 3000 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. பொன்முட்டையிடும் வாத்தை அறுத்த கதைதான்.

வறுமைக்கோட்டை நிர்ணயிப்பதில் அரசு, நகர்ப்புறத்தில் நாளொன்றுக்கு 28 ரூபாயும், கிராமப்புற‌த்தில் 24 ரூபாயும் தேவை என்று எண்களை மாற்றி வெற்றுப் பம்மாத்து செய்கிறது. ஆனால் ஏழைகள் அதிகமாகி உள்ளார்கள் என்பதே உண்மை. 2013ம் வருட ஆரம்பத்தில் திட்டக் கமிசன் வெளியிட்ட ஒரு அறிக்கையில், 2005-2010 முதல் உள்நாட்டு உற்பத்தி 8 முதல் 10 விழுக்காடு வளர்ந்து கொண்டிருக்கையில் 145 லட்சம் பேர் வேளாண்மையில் இருந்து வெளியேறி விட்டார்கள். ஆனால் அதே காலகட்டத்தில் 57 லட்சம் தொழிற்சாலைத் தொழிலாளிகளும் வேலை இழந்துள்ளார்கள்! வேலையே உருவாக்காத, பணக்காரகளை மட்டும் மேலும் கொழுத்த பணக்காரர்களாக்கும் வளர்ச்சி வெறும் மாயமான் அல்லவோ? இந்தக் காகிதக் கணக்குகளையும், நவீன ஜாலவித்தையும் நம்பி நாம் 120 கோடிப் பேரின் வாழ்வைக் காவு கொடுப்பதா?

நாம் எப்படித்தான் மூடி மறைத்தாலும், பூசி மெழுகினாலும் வேளாண்மைதான் நம் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர். யாரையும் சுரண்டாத, சமநோக்குள்ள ஒரு முதலாளி மண்தான். இன்று வரை 60% மக்களுக்கு வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமாகவும் இருக்கும் விவசாயத்தைப் புறக்கணித்து எத்தனையோ பொருளாதார மேதைகள் எவ்வளவு திட்டங்கள் வேண்டுமானாலும் தீட்டலாம்; முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கலாம். இதனால் மண்ணிற்கு எந்த இழப்பும் இல்லை - அதை நம்பி வாழ்ந்த நம் தேசத்தவருக்கு, இப்போது மண்ணை நம்ப இயலாத, நம்ப விரும்பாத நம் ஆட்சியாளார்களுக்கும் அவரின் குடிமக்களான நமக்கும்தான் இழப்பு.

இருக்கும் நில மற்றும் நீர் வளங்களையும் பாதுகாத்து, பாரம்பரிய விதைகளையும், கால்நடைகளையும் மீட்டெடுத்து, உழவன் விளைபொருளுக்கு ஒரு நல்ல விலை கிடைக்கும்படி அல்லவா ஒரு நல்லரசு திட்டமிட வேண்டும்? உழவைப் புறக்கணிக்கும் நிலைமையில் இந்தியா இல்லை. ஏன் யாருமே இல்லை. உழவு நலியும் தொழில் என்றால், ஏன் உலகின் மிகப் பெரிய முதலீட்டு நிறுவனங்கள் உலகெங்கும் விளை நிலங்களை வாங்கிச் சேர்க்கிறார்கள்? நம் நாட்டில் விவசாய நிலங்களின் விலை ஏறிக் கொண்டே போவது ஏன்? வழக்கம்போல், உழவையும், உணவையும் வியாபாரம் ஆக்கி அதன் மூலம் உலகை ஆளுமை கொள்ளப் பெரும் நிறுவனங்கள் துடிக்கின்றன. நாம் விழித்துக் கொள்ள வேண்டும். உழவுதான் நீடித்த ஒரே தொழில். எவ்வளவு கடினமாய்த் தோன்றினாலும் சிறு விவசாயிகள் வேளாண்மையை விட்டு வரக் கூடாது.

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் , அதனால்
உழந்தும் உழவே தலை

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org