நம்மாழ்வார் ஐயாவின் நினைவேந்தல், சென்னையில் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் சனவரி 5 நிகழ்த்தப்பட்டது. இது சென்னையில் உள்ள இயற்கை ஆர்வலர்கள்/நண்பர்களால் நடத்தப் பட்டது. சிவா, ஜகதீஷ், கோபி, கலை, கமல் போன்ற இளைஞர்களின் ஆர்வம் மற்றும் உழைப்பால் நடந்தேறியது. இந்த நிகழ்ச்சி வாய் வார்த்தையாகவும் மின் அஞ்சலில் மட்டுமே அறியப்பட்ட மக்கள் பெரும் திரளாக வந்து சிறப்பித்தனர். அதில் பெரும்பான்மை யானவர்கள் இளைஞர்களாக இருந்தது, ஐயாவின் சமீபத்திய தாக்கம் இளைஞர்கள் மீது பெரும் அளவில் இருந்ததை நிரூபித்தது. வந்திருந்த அனைத்து முதியவர்களும் இதனை ஒரு பெரும் எதிர்கால நம்பிக்கையாக பார்த்தனர்.
நமது தாளாண்மையின் சார்பாக ராம் மற்றும் அனந்து கலந்துகொண்டனர். அனந்து "இதற்கு வந்திருந்த அனைத்து இளைஞர்களும் மிக அருமையாகவும் நம்பிக்கையூட்டும் விதமாகவும் பேசியது ஐயாவின் தாக்கத்தையும் இவர்கள் தான் அவரது விதைகள் என்றும் நிரூபிக்கிறது. இவர்கள் தான் நமக்கெல்லாம் நம்பிக்கை நட்சத்திரங்கள்." என்றார். மேலும் தமிழக அரசு இப்பொழுதேனும் ஐயாவின் நினைவாக, இன்னும் வேகத்துடன் செயல்பட்டு கேரளம், மத்திய பிரதேசம், சிக்கிம் போன்ற மா நிலங்களை போல நமது மாநிலத்திற்கான உயிர்ம/இயற்கை வேளாண்மை திட்டம் ( organic farming policy) கொண்டு வர வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தார்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் அவர்கள் இன்னும் சில நாட்களில் இந்த தமிழக அரசு மீத்தேன் விவகாரத்தில், அதற்கு எதிராக (உழவர்களுக்குச் சாதகமாக) அறிக்கை விடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இந்த அரசின் இயற்கை வேளாண் திட்டத்தை நம்மாழ்வார் ஐயாவின் பெயரிலேயே கொண்டு வர ஆவன செய்வோம் என்றார்.
இயற்கை வேளாண்மை தொடர்பாக எல்லா நிகழ்ச்சிகளுக்கும் எப்பொழுதும் ஆதரவு அளிக்கும் நடிகர் நாசர் அவர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் வந்து சிறப்பித்தார். " நான் நம்மாழ்வார் ஐயாவை சந்தித்தது இல்லை. நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். எனது மானசீக குருக்களான மாசனோபு ஃபுகுவோகா மற்றும் லாரி பேக்கர் இருவரின் புத்தகங்கள் என்னை மிகவும் பாதித்தன. நான் அனந்து போன்ற எனது இயற்கை நண்பர்கள் மூலம் கேள்வி பட்டது, நம்மழ்வார் ஐயா இவர்களை போன்றே பல பரிமாணங்களும் ஆழ்ந்த அறிவும் கொண்டவர் என்றே. இங்கு சிலர் என்னை (celebrity) புகழ் பெற்ற பிரமுகர் என்றனர்; ஆனால் என்னை பொறுத்த வரை இங்கு நான்
பார்க்கும் இந்த கோபி போன்ற இளைஞர்கள் தான் பெரிய மனிதர்கள்.
அவர்கள் தான் தங்கள் நல்ல வேலைகளை விட்டுவிட்டு இந்த சமுதாயத்திற்காக உழைப்பது தான் பெரும் காரியம் என்று நினைக்கிறேன். எல்லோரும் தயவு செய்து இயற்கையிடமிருந்து விலகாமல் அதனுடன் ஒட்டி வாழ்க்கை முறைகளை அமைக்க வேண்டும்" என்றும் கூறினார்.
திருவனந்தபுரத்திலிருந்து வந்திருந்த தனல் ஸ்ரீதர் அவர்கள் " இவர்கள் தான் எதிர்காலம். நம்மை விட்டு அகலாத ஐயாவின் விதைகளான இவர்களே நம்மிடையே உலவப்போகும் நம்மாழ்வார்கள். நம்மிடையே நூற்றுக்கணக்கான நம்மாழ்வார்கள் உள்ளனர் என்று இனி நான் செல்லும் இடத்திலெல்லாம் அறிவிப்பேன்" என்றார்.