(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
நார்மன் போர்லாக் மூலமாக குட்டை வகை கோதுமைகள் இந்திய வேளாண்மைக்குள் கொண்டுவர முயற்சிகள் 1960களில் நடந்தன. நார்மன் போர்லாக்கை பசுமைப் புரட்சியின் தந்தை என்று கூறுகிறார்கள். 1962ஆம் ஆண்டு மே மாதம் அப்போது இந்திய வேளாண்மை ஆராய்ச்சி பயிற்றகத்தின் (IARI) இயக்குநரான பி.ப்பி. பால் அவர்களிடம் மா.சா. சுவாமிநாதன் எப்படியும் நார்மன் போர்லாக்கை இந்தியாவிற்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவர் இ.வே,ஆ.பயிற்றகத்தில் கோதுமைத் திட்டத்தின் உறுப்பினராக இருந்தார். போர்லாக்கின் வருகையால் 10 குட்டைக் கோதுமை இனங்கள் வரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இதன் பிறகு 1963ஆம் ஆண்டு மார்ச் மாதம் நார்மன் போர்லாக்கும், ராபர்ட் ஆண்டர்சனும் 'விஜயம்' செய்தார்கள். இநதியாவில் பசுமைப் புரட்சியின் விதை ஊன்றப்பட்டது.
இதற்கு எதிரான குரல்கள் காந்திய வட்டத்தில் இருந்து எழுந்தன. குறிப்பாக பொருளியல் மேதை குமரப்பா, பியாரிலால் போன்றவர்கள் நீடித்த வேளாண்மை பற்றிப் பேசியதோடு மட்டுமல்லாமல் அதைச் செயல்படுத்தியும் காட்டினார்கள். வேதி உரங்களின் கேடுகளைப் பற்றி கிராம உத்யாக் இதழில் குமரப்பா எழுதி வந்தார். வார்தாவில் இதற்கான ஆய்வுகள் நடந்தன. நிலத்தைப் பிரித்துக் கொடுப்பதில் குமரப்பா மிகத் தெளிவாக இருந்தார். நேரு துண்டு துண்டாக நிலம் பிரிக்கப்படுவதால் அறிவியல் தொழில்நுட்ப வேளாண்மையைச் செய்ய முடியாது என்று கருதினார்[8]. முதன்முதலில் அமைக்கப்பட்ட பேராயக் கட்சியின் நிலச்சீர்திருத்தக்குழு பேராரிரியர் குமரப்பாவின் தலைமையில் அமைக்கப்பட்டது. அவர் தெளிவாக நிலத்தை சிறுகுறு உழவர்களுக்கு எவ்வாறு வழங்க வேண்டும் என்று வரையறுத்தார். இன்றும் சிறு பண்ணைகள்தான் அதிக அளவு விளைச்சலைத் தருகிறது என்பதற்கான ஆய்வுகளை அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் வெளியிட்டுள்ளன.[9]. நடைமுறையும் அதுவாகத்தான் உள்ளது. காந்தியின் நெருக்கமான சீடர்களின் குரல் நேருவின் ஆட்சியில் எடுபடவில்லை. குமரப்பா மனம் வெறுப்புற்று மதுரை கல்லுப்பட்டி வந்துவிட்டார். நேருவின் மறைவிற்குப் பிறகு தலைமை அமைச்சராக வந்த லால்பகதூர் சாஸ்திரி 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற முழக்கத்தைத் தொடங்கி வைத்தார். இந்திய வேளாண்மை ஆராய்ச்சிப் பயிற்றகம் (IARI) 1958ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டு ராக்பெல்லர் நிறுவனத்தின் கள அலுவலரான ரால்கம்மிங்ஸ் பொறுப்பாளராக அமர்த்தப்பட்டார். 1956 முதல் 1970வரை இந்திய அரசியல் தலைவர்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான 90 பயண நன்கொடைகள் வழங்கப்பட்டன[10]. மேலும் 2000 பேர்களுக்கு அமெரிக்க உதவித் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்றுவர நன்கொடைகள் வழங்கப்பட்டன. இதற்கு விலையாக இந்தியாவின் பணமதிப்பு வலுக்கட்டாயமாக 37.5% குறைப்பட்டது. இந்த அக்குத்து (நிபந்தனை) உலக வங்கியால் கொடுக்கப்பட்டது. அதாவது வெளியில் இருந்து உரத்தையும், விதைகளையும் வாங்குவதற்கு வேண்டிய அயல்நாட்டு செலாவணி வேண்டுமாயின் பணமதிப்பை குறைத்தாக வேண்டும் என்பதால் இந்தியா மடங்கியது.
இப்படி மிக நுட்பமாகப் பின்னப்பட்ட சூழ்ச்சி வலையால் இந்திய வேளாண்மை முற்றிலுமாக தற்சார்பை இழந்தது. நீர்பாசன வகதியுள்ள இடங்களில் முதலில் பசுமைப் புரட்சி அறிமுகமானது. தீவிரைவு சாகுபடித் திட்டம் என்ற முறையில் அறிமுகம் ஆனது. முதலில் உழவர்கள் வேதி உரங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இரவோடு இரவாக வேளாண் அலுவலர்கள் யூரியா போன்ற தழை உரங்களை வயல்களில் வீசிவிட்டுச் சென்றுவிடுவர்.[11] ஒரு சில நாள்கள் கழித்து கரும்பச்சையாக பயிர்கள் மாறும். அதைக் காட்டி வேதி உரங்களைத் திணித்தனர். மாட்டு வண்டிச் சக்கரத்திற்குப் பயன்படும் பட்டைக்கான இரும்பு அப்போது மிகவும் பற்றாக்குறையாக இருந்தது. வேதி உரம் வாங்குபவர்களுக்கு மட்டும வண்டிப் பட்டை கிடைக்கும் என்று விற்றனர். இப்படி அரசு எல்லா வழிகளைப் பயன்படுத்தியும் வேதி உரத்தைப் பரப்பியது. பஞ்சாப் மற்றும் தமிழகத்தின் தஞ்சைப் பகுதிகளில் அறிமுகமான வேதி உரங்கள் இன்று வானவாரி நிலங்களுக்கும் பரவியுள்ளது. முதலில் உரங்களுக்கு உதவிய உலகவங்கியும் அமெரிக்க உதவியகமும் பின்னர் அமெரிக்க வேதி உரக் கும்பணிகளின் தொழிற்சாலைகளை நிறுவ 1960ஆம் ஆண்டளவில் நெருக்கடி கொடுத்தது. இதன் மூலம் பசுமைப் புரட்சி என்பது ஒரு தொழில்நுட்பமன்று அது ஒரு வணிகத் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவின் உணவு விளைச்சல் மிக வேகமாக முன்னேறியது. பல மடங்கு நெல்லும் கோதுமையும் விளைந்தது. இதற்கான அடிப்படைக் காரணம் வேதி உரங்கள் அல்ல. அப்போது விரிவாக நடைபெற்ற பாசனத்திட்டங்கள் அதிக அளவு நிலங்களை சாகுபடிக்குள் கொண்டுவந்த முயற்சிகள். ஆனால் இந்தப் பெருமை எல்லாவற்றையும் பசுமைப் புரட்சி தட்டிக் கொண்டுபோய்விட்டது.
நெல் கோதுமை விளைச்சல் ஆண்டு வரிசையாக (மில்லியன் டன்)[12]
பயிர்கள் | 1950-51 | 1960-61 | 1970-71 | 1980-81 | 1990-91 | 1996-97 | 2002-03 | 2003-04 |
---|---|---|---|---|---|---|---|---|
நெல் | 20.6 | 34.6 | 42.2 | 53.6 | 74.3 | 80.5 | 72.66 | 87.00 |
கோதுமை | 6.4 | 11.0 | 23.8 | 36.3 | 55.1 | 68.7 | 65.10 | 72.06 |
அதே சமயம் இந்தியா உணவு விளைச்சலில் தன்னைறைவு பெற்றுவிட்டதாகவும் அறிவித்துவிட்டனர். ஆனால் ஓர் உண்மையை அனைவரும் வசதியாக மறந்துவிட்டனர் அல்லது மறைத்துவிட்டனர். அதாவது 1950இல் 20.6 டன்னான இருந்த நெல் விளைச்சல் 2003இல் 87 டன்னாக உயர்ந்துள்ளது. அதாவது 4.2 மடங்கு உயர்ந்துள்ளது. அதேபோல கோதுமை 6.4 டன்னில் இருந்து 72.06 டன்னாக உயர்ந்துள்ளது. அதாவது 12 மடங்கு உயர்ந்துள்ளது. இது முற்றிலுமாக வேதி உரங்களின் பயன்பாட்டில்தான் உயர்ந்தது என்று சொல்கின்றனர். இதை நாம் ஒரு பேச்சுக்காக ஒப்புக்கொள்வோம். ஆனால் 1950ஆம் ஆண்டில் ஒரு எக்டரில் அப்போது பயன்படுத்திய வேதி உரத்தின் அளவு 0.55 கிலோ ஆகும். அதுவே 2001ஆம் ஆண்டு 90.12 கிலோவாக உயர்ந்துள்ளது. அதாவது ஏறத்தாழ 164 மடங்கு உயர்ந்துள்ளது[13]. இதில் விலை ஏற்றம் வேறு. இதில் 90 விழுக்காட்டிற்கு மேல் இறக்குமதியாகிறது. இன்னும் சொல்லப்போனால் பெட்ரோலிய மூலப் பொருட்களை வைத்துப் பார்த்தால் 100% இறக்குமதிதான். ஆக ஒரு போலியான உணவுத் தன்னிறைவை நாம் எப்படி முழுமையான தன்னிறைவு என்று கூறமுடியும்?
இது ஒரு புறம் இருக்க, இப்படி உருவாக்கிய உணவுப் பொருள்கள் யாவும் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியதாகவும் மண்வளத்தைச் சிதைக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளன. நாளாவட்டத்தில் மண்ணில் இருந்த நுண்ணூட்டங்களின் அளவு குறைந்து பலவகையான நோய்கள் பயிரைத் தாக்கத் தொடங்கின. அத்துடன் பூச்சிகளின் தாக்குதல் யாவும் விளைச்சலில் வீழ்ச்சியைக் கொடுத்தன. ஆண்டுக்கு ஆண்டு விளைச்சல் குறைந்து வந்தது. செலவோ அதிகமாகிக் கொண்ட இருந்து. குறிப்பாக வேதி உரங்களின் விலை உயர்ந்து கொண்ட போனது. அரசு மானியங்கள் வேதி உரங்களுக்கு அதிகமாகிக் கொண்ட போனது. 2008ஆம் ஆண்டு ஒரு லட்சம் கோடிக்கு மேல் மானியம் வழங்கியதாக அரசு அறிவித்தது. இந்தத் தொகை யாவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பன்னாட்டுக் கும்பணிகளுக்கே போய்ச் சேர்ந்தது. மொத்தத்தில் நமது உழவர்கள் தற்சார்பையும் இழந்து, மண்வளத்தையும், உடல்நலத்தையும் இழந்து கையறுநிலைக்கு உள்ளாயினர். இதன் விளைவாக தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் ஊரகங்களில் நன்றாகத் தெரிந்தன. தமிழகம்தான் இப்போது மிக அதிகமான அளவில் உழவர்களை நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தும் மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் ஏறத்தாழ 50% பேர் நகரத்திற்கு வந்துவிட்டனர். இதற்கு அடுத்தாற்போல் மராட்டியமும், குசராத்தும் உள்ளன[14]. வேளாண்மை முற்றிலும் தோல்வியுற்றதால் உழவர்கள் வேறு வேலை தேடி வெளியேறிக் கொண்டே இருக்கின்றனர்.