தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்

ஈன்ற பொழுதும் பெரிது உவக்கும்

மாடுகள் சினையாக்குவதற்கு, காளையுடன் சேர்த்த பிறகோ அல்லது சினை ஊசி போட்ட பிறகோ, சினை நின்று விட்டதா என்பதை எப்படி அறிவது? சென்ற முறை சினைக்கு வந்த நாளிலிருந்து 21 நாட்கள் கழித்து மாடுகளை உன்னிப்பாக சில நாட்களுக்கு கவனிக்கவும். மீண்டும் சினைத் தருண அறிகுறிகள் தென்பட்டால், சினை நிற்கவில்லை என்று பொருள். அறிகுறிகள் எதுவும் தென்படவில்லையானால், பெரும்பாலும் சினை நின்றிருக்கலாம். ஆனாலும், மாடுகளை மேலும் ஒரு 21 நாட்களுக்கு உன்னிப்பாக கவனிக்கவும். சினைத் தருண அறிகுறிகள் தொடர்ந்து தென்படாமலே இருந்தால் மாடு சினையாக இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

மாடு எப்போது கன்று ஈனும் என்பதை அறிய சினைக்கு விட்ட நாளிலிருந்து சினைக்காலத்தை கூட்டிக் கொள்ள வேண்டும். எந்த முறை சினைக்கு விடும் போது சினை நிற்கும் என்பதை ஊகிக்க முடியாது என்பதால், எல்லா முறையும் சினைக்கு விடும் நாளை குறித்து வைப்பது இன்றியமையாததாகும். மாடுகளுக்கு சினைக் காலம் மொத்தம் 280 நாட்களாகும். நீங்கள் கடைசியாக சினைக்கு விட்ட நாளிலிருந்து 280 நாட்களை கூட்டினால் கிடைக்கும் நாள், மாடு தோராயமாக கன்று ஈனும் நாள் என்று அறியலாம். இந்த நாளுக்கு பத்து பதினைந்து நாட்கள் முன்போ அல்லது பின்போ கூட கன்று ஈனலாம்.

மாடுகள் சினையானதும் சிறப்பு பராமரிப்பு ஒன்றும் தேவைப்படாது. அதிக வெயில் உள்ள இடமாக இருந்து, வெயில் காலமாக இருந்தால், மாடுகளை கடும் வெயிலில் மேய்ப்பதை தவிர்க்கவும். மேலும், பெரிய பண்ணையாக இருந்தால், உங்களிடம் வேறு சில மாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்கனவே ஏற்பட்டிருந்தால், அதன் அருகில் கட்டாமல் பார்த்துக் கொள்ளவும். இதைத் தவிர மற்ற எல்லாம் சாதாரணமாக பராமரித்தால் போதும். பால் கறப்பதிலும் எந்த வித மாற்றமும் தேவையில்லை.

சினை மாடுகள் தானாக பால் கறப்பது நிற்கவில்லையானாலும், ஏழாவது மாத சினைக்கு பிறகு பால் கறப்பது கூடாது. பால் கறப்பதை ஒரே நாளில் உடனடியாகவும் நிறுத்துவது கூடாது. பத்து நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு படிப்படியாக கறவையை நிறுத்தவும். இதற்கு பால் கறக்கும் நேரத்தை சிறிது சிறிதாக தள்ளிப் போடுதல், அடர் தீவனத்தின் அளவை குறைத்தல் போன்ற உத்திகளை கையாளலாம். அது வரையில் சென்ற முறை ஈன்ற கன்று பால் குடித்துக் கொண்டு இருந்தால் அதையும் நிறுத்தி விடவும். கன்றும் அதற்குள் புல் மற்றும் மற்ற தீவனங்களை சாப்பிட ஆரம்பித்து விடும். எனவே, படிப்படியாக பாலை மறக்கடிப்பது அவசியம். இல்லையென்றால் வயிற்றில் உள்ள கன்று பாதிக்கப்படும்.

ஏழு மாத சினையில் உள்ள பசுக்களை சற்று கவனமாக பராமரிக்க வேண்டும். அவற்றை அதிக தூரம், மேடு பள்ளங்கள் உள்ள பாதை ஆகியவற்றில் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வதை தவிர்க்கவும். பட்டியில் கட்டும் பொழுதும், மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் பொழுதும் மற்ற மாடுகள் அதை முட்டாத அளவில் பார்த்துக் கொள்ளவும். முட்டி சண்டை போடும் மாடுகளுக்கு அருகில் கட்டுவதை தவிர்க்கவும். மேய்ச்சலில் பசும்புல் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது முக்கியம். மேயச் செல்லாத சூழ்நிலையில் பசும் புல் வெட்டி அளிப்பது இன்றியமையாதது.

பிரசவ நாட்கள் நெருங்கும் போது அந்த மாடு படுக்கும் இடத்தில் சிறிது வைக்கோல் போட்டு தரை சற்று மிருதுவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கன்று ஈனுவதற்கு சில நாட்களுக்கு முன்பே மாட்டினுடைய மடி சற்று இறங்கி, உப்பி பால் சுரப்பிற்கு தயாராகும். இதை கன்று ஈனுவது எப்போது என்பதற்கு ஒரு அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், கன்று ஈனப் போகும் மாடுகளின் மேய்ச்சல் குறையும். அடிக்கடி உட்கார்ந்து, உட்கார்ந்து எழுந்திருக்கும். மாடுகள் ஒரு நாளில் எந்த நேரத்திலும் கன்று ஈனலாம். எனவே, பெரிய பண்ணைகளில் கன்று ஈனும் அறை தனியாக இருந்தால் அதில் மாட்டை இரவில் கட்டுவது அவசியம். சிறிய பண்ணையாக இருந்தாலும், வழக்கமான வரிசையில் கட்டாமல் தனியாக கட்டுவது அவசியம். இது ஒரு வேளை இரவில் நாம் பார்க்காத போது கன்று ஈன்றால் மற்ற மாடுகளுக்கும், ஈன்ற மாட்டுக்கும், பிறந்த கன்றுக்கும் தொந்தரவு இல்லாமல் இருக்க உதவும்.

கன்று ஈனுவதற்கு சற்று முன்னால், பனிக்குடம் உடைந்து சவ்வு போன்ற திரவம் பிறப்பு உறுப்பிலிருந்து வெளிப்படுவது இயல்பே. கன்று ஈனும் போது, பொதுவாக மாடுகள் நம்மிடமிருந்து எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி தானாகவே ஈன்று விடும். கன்றும், பிறந்த சிறிது நேரத்திற்கெல்லாம் தள்ளாடி எழுந்து நின்று, மடியை தேடி பால் குடிக்க பழகி விடும். மாடுகளும் கன்றை நன்றாக நக்கிக் கொடுத்து அதன் மேல் எந்த வித ஈரம் கூட இல்லாத படி செய்து விடும். சில சமயம், இரவில் கன்று ஈனும் மாடுகள் நாம் காலையில் தொழுவத்திற்கு செல்லும் போது, தரையில் உள்ள சவ்வு பொன்ற திரவம் தவிர கன்று ஈன்றதற்கான அறிகுறியே இல்லாமல் சாதாரணமாக கன்றுக்கு பால் ஊட்டிக் கொண்டிருக்கும். கன்றும் சாதாரணமாக நடக்க, பால் குடிக்க, பழகி விட்டிருக்கும். எனவே, நாம் கன்று ஈனும் போது நாம் கவனித்து, அருகில் இருந்தாலும் கூட, உதவி தேவைப்படும் போது மட்டும் செய்தால் போதுமானது.

கன்று ஈனும் போது, தலையும் கால்களும் இணைந்து முதலில் வெளியில் வர வெண்டும். மாடு முக்கி, முக்கி கன்றை வெளியில் தள்ளும் போது, வெகு நேரமாக கன்று சிறிதும் வெளி வராமல், இருந்தால் மட்டுமே நாம் மருத்துவரை அணுக வேண்டும். கன்று பெரும்பகுதி வெளி வந்து கடைசி கட்டத்தில் மாடுகள் வெளித் தள்ள சிரமப்பட்டால், நாம் கையினால் கன்றை இலேசாக வெளிக் கொண்டு வரலாம். கையை முதலில் சுத்தமாக கழுவி, அதிக நகங்கள் இல்லாமல் வைத்திருப்பது முக்கியம். முதலில், கன்றின் மூக்கிற்கு அருகில் உள்ள சளியை அகற்ற வேண்டும். கன்று சீராக மூச்சு விட இது பயன்படும். பசுவே கன்றை முழுமையாக சுத்தம் செய்து விடும். சில மாடுகளுக்கு சிறிது உதவி தேவைப்படும். மாடு, கன்றை நக்கி, நக்கி சுத்தம் செய்ய, செய்ய பால் சுரப்பு ஏற்படும். உதவி தேவைப்பட்டால் கன்றை மாட்டின் மடிக்கு அருகில் கொண்டு செல்லலாம். முதலில் சுரக்கும் பாலை சீம்பால் என்று அழைப்பர். இது முழுவதுமாக கன்றிற்கு அளிப்பது மிகவும் முக்கியம். சீம்பாலில் கன்றிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. மேலும், கன்றின் வயிற்றில் உள்ள, வெகு நாளைய அழுக்குகளும் வெளியேற இது உதவும்.

கன்றின் தொப்புள் கொடி நீளமாக இருக்கும் படி அறுந்திருந்தால், ஒரு அங்குலம் நீளம் மட்டும் இருக்கும்படி விட்டு மீதியை சுத்தமான கத்தரியால் வெட்டி விட வேண்டும். வெட்டுவதற்கு முன்னால், ஒரு அங்குலம் மட்டும் விட்டு, ஒரு சுத்தமான கயிறால் இறுக்கி கட்டி விட்டு அதன் கீழ் வெட்டவும். வெட்டிய இடத்தில் கிருமி நாசினி, டிஞ்சர் போன்றவற்றை பூசி ஆற விட வேண்டும்.

கன்று ஈன்ற மாட்டின் பின் பகுதியை வெதுவெதுப்பான வெந்நீரால் கழுவி விட வேண்டும். அந்த தண்ணீரில், வேப்பிலை, மஞ்சள் தூள் அல்லது பொட்டாசியம் பெர்மாங்கனேட் போன்றவற்றை சேர்க்கலாம். இதன் பிறகு, மாடு நஞ்சுக்கொடி (Placenta) தள்ளுகிறதா என்று கவனிப்பது இன்றியமையாதது. கன்று மாட்டின் வயிற்றில் உள்ள கருப்பையில், பலூன் போன்ற ஒரு சவ்வுப் பையின் உள்ளே தான் இருந்திருக்கும். இந்தப் பையில் உள்ள சவ்வு போன்ற திரவம் முதலிலும், பின்பு கன்றும் வெளி வந்து விட்டது. இப்போது, இந்தப் பையும் கருப்பையிலிருந்து பிரிந்து தனியாக வெளியே வர வேண்டும். இது பொதுவாக இரண்டு மணியிலிருந்து பனிரெண்டு மணிக்குள் வெளியே வர வேண்டும். நஞ்சுக்கொடி வெளி வந்து விழுந்தவுடன் அதை ஒரு உரப்பை போன்ற சாக்கு பையில் போட்டு சுற்றி எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையானால், மாடு அதை சாப்பிட முயற்சிக்கும். மாடு நஞ்சுக்கொடியை சாப்பிட்டு விட்டால் செரிமானம் ஆகாது. அதனால், உடல் உபாதையும், பால் சுரப்பு குறைவதும் ஏற்படும். எனவே, நஞ்சுக்கொடியை உடனே அகற்றுவது அவசியம். பெரும்பாலும் நஞ்சுக்கொடியை சாக்கில் சுற்றி, பால் மரங்களில் (ஆல், அரசு, பாலா, பலா போன்ற மரங்கள்) கட்டி விடுவது வழக்கம். இப்படி செய்தால் பால் அதிகம் சுரக்கும் என்பது நம்பிக்கை. இல்லையானால், புதைத்தும் விடலாம். எப்படி இருந்தாலும் மாட்டிற்கு ஒவ்வாத இந்த நஞ்சுக்கொடியை கவனமாக பார்த்து அகற்றுவது அவசியம். மேலும், மரத்தில் கட்டி விட்டால் நாய்கள் அதை சாப்பிட முயற்சிப்பதும் அதனால் அது ஆங்காங்கே இரைவதும், கிருமிகள் பரவுவதும் தவிர்க்கப்படும். கன்று ஈன்ற இடத்தில் அல்லது கொட்டகையில் நாய்கள் அண்டாமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் முக்கியம். நாய்கள் கன்றுகளின் கழிவின் மணத்தினாலும், இரத்தத்தின் வாடையினாலும் ஈர்க்கப்பட்டு வரும். எனவே, இரவில் கூட கன்றும் மாடும், நாய்கள் அண்டாத இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மாட்டிற்கு சிரமத்தை குறைக்கும். மாட்டிலிருந்து வெகு நேரம் ஆகியும் நஞ்சுக்கொடி வெளி வரவில்லையானால் அதை வெளிக்கொண்டு வர அரை கிலோ வெல்லத்துடன் அரைக்கிலோ வில்வப்பழச் சதை, 20 கிராம் சுக்கு மற்றும் ஓமம் கலந்து அளித்தால் வெளி வரும் இல்லையானால், கால் கிலோ எள்ளுடன் அரைக் கிலோ வெல்லம் சேர்த்து இடித்து, உருட்டி கொடுக்கலாம். இதைத் தவிர உங்கள் பகுதியில் உள்ள பெரியவர்களும் வேறு ஏதாவது உபாயம் அளிக்கலாம். வீட்டு வைத்தியம் எதுவானாலும் முதலில் முயற்சி செய்து பார்க்கவும். அப்படியும் வெளி வரவில்லையானால் அது வயிற்றிலேயே தங்கி அழுகி மாட்டிற்கு பல நோய்களை உண்டாக்கும். எனவே, மருத்துவரை அணுகி தேவையான நடவடிக்கை எடுக்கவும். நஞ்சுக்கொடி வெளி வந்த பின்னரும் ஒரு முறை மாட்டின் பின் பகுதியை இளம் வெந்நீரால் கழுவி விடுவது நல்லது.

கன்று ஈன்ற மாடு மிகவும் களைப்பாக இருக்கும். எனவே, அதற்கு வெதுவெதுப்பான தண்ணீர் அருந்த கொடுக்கவும். முதலில் அரிசி நொய் கஞ்சி அல்லது கம்பு மாவுக் கஞ்சி அளிக்கவும். அவையும் இளம் சூட்டில் இருத்தல் நல்லது. இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு சாதாரண அடர் தீவனம் கொடுக்க வேண்டாம். எளிதில் செரிக்கும் கஞ்சிகளையே அளிக்கவும். கம்பு, வெல்லம், பூண்டு ஆகிய மூன்றையும் கலந்து இடித்து உருண்டைகளாக்கி வாயில் போடலாம். சுரைக்காயை வேகவைத்து சூப் போல வழங்கலாம். இவை எல்லாம் மாட்டிற்கு வேகமாக களைப்பை நீக்க உதவும். இதிலும் ஊருக்கு ஊர் வெவ்வேறு பழக்கங்கள் உள்ளது. கன்றிற்கு தாயின் பாலைத் தவிர எதுவும் தேவைப்படாது. கன்று ஈன்ற பின் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மாட்டையும் கன்றையும் பிரிக்காமல் தேவைப்பட்ட போதெல்லாம் பால் அருந்த அனுமதிக்கலாம். பிறகு, மாடு எப்படியும் மேய்ச்சலுக்கென்று வெளியே செல்ல வேண்டி வரும். அப்போது கன்றை கொட்டகையில் பாதுகாப்பாக வைத்து விட்டு மாட்டை மட்டும் மேய அனுப்பலாம். பின்னர் வரும் நாட்களில் மெதுவாக கன்றிற்கு மூன்று காம்பு விட்டு ஒரு காம்பை மட்டும் கறக்கலாம். அதையும் இரண்டு காம்பு, ஒரு காம்பு என்று குறைத்துக் கொள்ளலாம். இதற்குள் கன்றும் சிறிது சிறிதாக புல் சாப்பிட ஆரம்பித்து விடும். முதலில் கறக்கும் பால், சில நாட்களுக்கு காய்ச்சினால் உடைந்து விடும். இதை கடும்பால் என்று கூறுவர். பண்ணையிலிருந்து பாலை வெளியே அனுப்புவதாயிருந்தால், பாலை காய வைத்துப் பார்த்து அது உடையாமல் இருக்கிறதா என்று பார்த்த பிறகே மற்ற மாட்டுப் பாலுடன் கலக்கவும். இல்லையேல், இந்தப் பால் மற்றப் பாலையும் கெடுத்து விடும். கன்று ஈன்ற மாடுகள் வழக்கமான உணவை உட்கொள்ள ஒரு வாரம் வரை ஆகும். கறக்கும் பால் தெளிய நான்கு நாட்களிலிருந்து ஒரு வாரம் வரை ஆகலாம். எனவே, ஒரு வாரத்திற்கு பிறகு, கன்று ஈன்ற மாட்டை மற்ற மாடுகளுடன் மேய்வதற்கும், தீவனம் அளிக்கவும், வழக்கம் போல் பால் கறக்கவும் செய்யலாம்.

அடுத்த இதழில் கன்றுகளை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org