தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நெல்லில் நேரடி விதைப்பு - ஜெயகுமார்

இயற்கை வழியில் நெல் சாகுபடி பற்றிச் சில இதழ்களுக்கு முன்னர் கண்டோம். ஆனால், வேலையாட்கள் பற்றாக்குறையாக உள்ள தற்கால வேளாண் சூழலில், நாற்றங்கால் பராமரித்து, நாற்றடித்து, நடும் தொழில்நுட்பம் மிகுந்த மன உளைச்சலையும், பொருட் செலவையும் கொண்டதாக இருக்கிறது. நேரடி விதைப்பு இதற்கு ஒரு நல்ல மாற்றாகும் - எனினும், நேரடி விதைப்பில் களைகள் மண்டுவதுதான் மிகப் பெரிய செலவாகும். வேதி விவசாயத்தில் களைக்கொல்லி பயன்படுத்தி களைகளைப் பெருமளவு கட்டுப் படுத்தலாம். ஆனால் இயற்கை விவசாயத்தில் என்ன செய்வது? இதற்கு ஓரளவு விடை கண்டுள்ள ஒரு இயற்கை விவசாயியை நாம் இம்மாதம் சந்திக்கிறோம்.நாம் வழக்கமாய்ச் சொல்லும் எச்சரிக்கையையும் குறித்து விடுகிறோம். விவசாயம் என்பது அவ்வச் சூழலுக்கு ஏற்றது. எனவே இம்முயற்சியைப் பரிசோதனை செய்ய விரும்பும் உழவர்கள் முதலில் கால் காணி போன்ற ஒரு சிறு அளவில் இயற்கை வேளாண்மையையும் அதில் களைக் கட்டுப்பாட்டையும் ஆராய்ச்சி செய்துவிட்டுப் பின்னர் எல்லா பரப்பிற்கும் கொண்டு செல்லவும். தற்போதைய வேளாண் நெருக்கடிகளில் நேரடி விதைப்பில் நெல் விளைச்சல் என்பது மிக முக்கியமான தொழில்நுட்பம் என்பதால் உழவர்களுக்கு இதன் தேவையைப் பற்றி விளக்க வேண்டியதில்லை.

கும்பகோணத்தை அடுத்த தேனாம்பதுகை என்ற கிராமத்தில் பாஸ்கரன் என்ற விவசாயி 1988 முதல் அவருடைய வயலில் இயற்கைமுறையில் நெல் சாகுபடி செய்து, அதில் பல ஆர்ராய்ச்சிகளையும் செய்து வருகிறார். எம்.ஏ பொருளாதாரம் படித்து விட்டு கொல்கொத்தாவிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடுயூட்டில் பணி புரிந்து கொண்டிருந்த அவர் தந்தையின் மறைவின் காரணமாகத் தன் சொந்த கிராமத்திற்கு வந்து வேளாண்மை செய்யும் சூழலுக்கு ஆளானார். இயற்கை விவசாயத்தில் அவர் முதலில் பொன்மணி என்றழைக்கப்படும் CR-1009 என்ற ரகத்தில் தொடங்கிப் பின்னர் ADT- 43, CO- 43 போன்ற ரகங்களைப் பயிர் செய்தார். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் எழுத்துக்களாலும், பேச்சுக்களாலும் பெரிதும் கவரப்பட்ட இவர், பட்டீஸ்வரத்தில் 2007ல் நம்மாழ்வாரின் கூட்டத்தைக் கூட்டினார். அதன்பின் பாரம்பரிய ரகம் பயிர் செய்ய வேண்டும் என்று சீரக சம்பாவைப் பயிர் செய்தார். புதிய முயற்சிகளைத் துணிந்து செய்யும் இவர் தற்போது வெள்ளைப் பொன்னியில் களைக்கட்டுப்பாட்டை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்.

2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 முதல் 19 வரை நல்ல கனமான மழை பெய்தது. அப்பொழுது அவர் CR 1009 (பொன்மணி) என்ற ரகத்தைப் பயிர் செய்திருந்தார். அந்த மழையில் நெல் பதராகிவிடும் என்று அக்கம்பக்கத்தினர் அனைவரும் கூறியதும் எல்லோரும்போலத் தன் வயிற்றிலும் புளியைக் கரைத்தது என்று ஒத்துக்கொண்டார். அந்த நேரத்தில் மழையில் தன் வயலுக்குச் சென்று பார்த்த போது அந்தப் பயிரின் இலைகளில் நீர்த்துளி ஒட்டாமல் இருப்பதைக்கண்டு இன்ப அதிர்ச்சியானார். காரணம் இயற்கை விவசாயத்தில் இலையின் சுணை அதிகமாகவும் இலை நேராகவும் இருப்பதால் தண்ணீர் ஒட்டவில்லை. அண்மை வயல்களின் அதே CR1009 நெல் இலை முழுவதும் தண்ணீர் நின்று சாய்ந்து விட்டதாகவும் கூறினார்.

நம்மாழ்வார் கூறுவார்: ” ஒவ்வொரு இயற்கை விவசாயியுமே ஒரு விஞ்ஞானிதான்” என்று. அதை மெய்ப்பிக்கும் வகையில் இவர், நெற்பயிரில், மகரந்தம் மழைத்துளி பட்டவுடன் மாவுபோல் கரைந்து மகரந்தச் சேர்க்கை நடக்கிறது; பவிழ மல்லி மாலை 7.15 முதல் 7.25க்குப் பூத்து 7.30க்குக் கொட்டிவிடும்; வெள்ளைச் செம்பருத்தி காலை 9.00க்கும் பூக்கும், மனோரஞ்சிதம் மாலை 5.30 முதல் 6.00 மணிக்குப் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் நிறமாக மாறும்பொழுது வாசனை வீசும்; கோடை காலத்தில் இலைகளை மிகச் சிறியதாக்கிக் கொண்டும், மழைக் காலத்தில் மிகப் பெரியதாக்கிக் கொண்டும் செம்பருத்திச் செடி தன் நீர்த்தேவைகளைச் சமாளித்துக் கொள்ளுகிறது என்பது போன்று தன்னைச் சுற்றி உள்ள இயற்கையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கிறார்.

களைக் கட்டுப்பாடு

2008ம் ஆண்டு ஆடுதுறை 36 என்ற ரகத்தைச் செம்மைநெல் சாகுபடி முறையில் ஒற்றை நாற்றாக நட்டார். அப்போது அதில் அதிகமாகக் கோரை வளர்ந்து பூத்து விட்டதால், அதை அறுத்து வயலில் போட்டார். அது கோரையின் விதை பரவுவதைத் தடுத்ததுடன், எருவாகவும் பயன்பட்டது.அந்தக் கோரையால் நெல் விளைச்சல் குறையவில்லை என்றும் கூறினார்.

2009ம் ஆண்டு பொன்மணி நட்டபோது அதில் நீர்க்கோரை அதிகம் இருந்தது. அதை ஆள்வைத்துப் பிடுங்கி வரப்பில் போட்டுவிட்டுப் பார்த்தபோது அதில் பொறிவண்டு அதிக அளவில் இருந்தது. பின்னர் ஒரு வாரம் சென்று அந்தக் காய்ந்த களைச்செடிகளைப் புரட்டிப் பார்த்தபோது அதில் அதிக அளவு மண்புழு இருந்தது என்று வியப்புடன் கூறினார். “களை என்பது நாம் இன்னும் ப‌யன்படுத்தத் தெரியாத‌ ஒரு செடி” என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது!

2012ம் ஆண்டு மழை குறைவான சூழலில் இவர் செய்த ஆராய்ச்சி மிக முக்கியமானது. வெள்ளைப்பொன்னை ரகத்தை புழுதி உழவில் நேரடி விதைப்பு செய்தார். விதைத் தெளிப்பின்போது ஏக்கருக்கு 15 கிலோ நெல் விதையுடன் , 5 கிலோ காராமணியும், 3 கிலோ கொள்ளும் சேர்த்து விதைத்தார். இந்தப் பருப்புவகை நெல்லுடன் சேர்ந்துமுளைத்து மேல் மண்ணை மூடுவதால் களை பெருமளவில் கட்டுப் படுகிறது என்கிறார். விதை தெளித்து 30 நாள் கழித்து நீர்க்கட்டினால் பயறுவகைகள் தானாகவே மக்கி எருவாகிவிடுகின்றன என்கிறார். நேரம், பணம், பாசன நீர், ஆள் போன்ற எல்லாவற்றிலும் சிக்கனத்தைக் கையாளும் அவரின் 2012ம் ஆண்டின் 8 ஏக்கர் பண்ணைக்கான வரவு, செலவு விவரங்களைப் பெட்டியில் காண்க. ஃபுகுவோகாவைப் போல் ஒன்றும் செய்யா விவசாயத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் இவர் ஏக்கருக்கு 8500/- ரூபாய் மிச்சப் படுத்துகிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்!

(please put this in a box)

8 ஏக்கருக்கான செலவு

புழுதி உழவு - 8000

வரப்பு மற்றும் சமன் செய்ய - 4000

விதை - 3000

பருப்பு விதைகள் - 1500

அறுவடை - 12000

பிற - 3500

மொத்தம் = 32000

அறுவடை = 80 மூட்டை ( 60 கிலோ மூட்டை) = 4800 கிலோ நெல்.

அரிசி = 2500 கிலோ x 45ரூ/கிலோ = 1,00,000

நிகர லாபம் = 68,000

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org