நம்மாழ்வார் என்னும் ஒரு மாபெரும் இயக்கம், ஒரு தனி மனிதப் புரட்சி, கடந்த மாதம் இயற்கையின் மடியில் உறங்கி விட்டது. கண் துஞ்சார், பசி நோக்கார், கருமமே கண்ணாயினார் என்று சதா உழவர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் தன் வாழ்வை அர்ப்பணித்த நம்மாழ்வார் ஒரு மகத்தான சக்தி என்பதை யாரும் மறுக்க இயலாது. அரசுப் பணியில் சேர நிலத்தை விற்று லஞ்சம் கொடுத்துத் தன் மகனைப் பலரும் ஆரம்ப பள்ளி ஆசிரியராக்கிக் கொண்டிருக்கையில், அந்தக் காலத்திலேயே வேளாண் பட்டப் படிப்பை முடித்து, உயர்ந்த அரசுப் பணியில் இருந்தவர் அவர். தான் செய்யும் ஆய்வுகளும், அதில் தன்னைச் செய்யச் சொல்லும் புரட்டுக்களும் பிடிக்காமல், தன் மனசட்சிக்கு ஒவ்வாமல், தான் சம்பளாம் பெற்றுச் செய்யும் அரசுப் பணி, உழவர்களை ஏமாற்றுகிறது என்று உணர்ந்து அதை உதறித் தள்ளி விட்டு இயற்கை வேளாண்மையே நல்லது என்று மக்களுக்கு எடுத்துரைக்கத் தனி மனிதனாய் ஒரு பாதையில் பயணித்த மாவீரன் அவர்.
உண்மையான தலைமை என்பது ஆளுமையால் நிறுவப்படாதது; ஆளுமையால் இட்டுக்கட்டப்படும் தலைமை, பயத்தை அடிப்படையாகக் கொண்டது - வன்முறையை உள்ளடிக்கியது. ஆளுமையின் பின்புலங்கள் ஆற்றல் இழந்தால் அந்தத் தலைமை அடியற்ற மரம்போல மடிந்துவிடும். மெய்யான தலைமை என்பது, அறிவால் ஏற்படும் ஆழ்ந்த புரிதலாலும், சேவை செய்ய வேண்டும் என்ற அன்பால் ஏற்பட்ட தாகத்தாலும், மக்களுக்கு வழிகாட்டும் ஒரு புதிய பாதையைக் கண்டறியும். யாரும் பின் தொடராவிடிலும், தன் அறிவின் தெளிவால் தனியே பயணிக்கத் தயங்காது. நம்மாழ்வாரின் தலைமை அப்படிப் பட்டது. ஒவ்வொரு கூட்டத்திலும், உழவைப் பற்றிப் பேசும்பொழுது, அதைத் தொழில் என்றோ, நுட்பம் என்றோ கூறினால் நம்மாழ்வார் ஏற்றுக்கொள்ள மாட்டார். வேளாண்மை என்பது அறம் என்பார்.
அதே போல் நம்மாழ்வாரின் ஆழ்ந்த இலக்கிய அறிவும், மிகப் பரந்த, அனைத்து விடயங்களைப் பற்றிய தெளிவான புரிதலும், நகைச்சுவை உணர்வும், எளிய தமிழில் மிகக் கடினமான விடயங்களை அலட்சியமாய்க் கூறுவதும், நரை கூடினாலும் கிழமையே அறியாத துள்ளும் மனமும், குழந்தை உள்ளமும் அவரை நெருக்கமாய் அறிந்தவர்களுக்குத் தெரியும். தன் கடைசி மூச்சுள்ள வரை மக்களுக்காகப் போராடியவர் அவர். அநீதி எதிர்ப்பு, ஆக்கப் பணி, சேவை என மூன்றையும் தனியாளாய்ச் செய்தவர். பல சமயங்களில் பலர் அவருடன் இருந்திருக்கின்றனர். சிலர் அவரைப் பயன்படுத்திக் கொண்டும் உள்ளனர். ஆனால் யார் வந்தாலும், வராவிட்டாலும் தான் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தவர் நம்மாழ்வார். தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மைக்கு ஒரு வடிவம், விஞ்ஞான அணுகுமுறை, சமூக மரியாதை என்று எல்லாவற்றையும் ஏற்படுத்தியவர் நம்மாழ்வார்.
அந்தக் கர்ம யோகியின் மறைவு உழவர் சமூகத்திற்கு ஒரு இழப்பு; ஆனால், தேம்பியழுது கொண்டிராமல், நாம் அனைவரும் இயற்கை வேளாண்மையை இயன்ற அளவு அங்கீகரிப்பதும், கடைப்பிடிப்பதும்தான் நாம் அவருக்குச் செய்யும் உண்மை அஞ்சலி. நுகர்வோராயின் இயற்கைப் பொருட்களை வாங்குவதும் , உழவர்கள் இயற்கைக்கு மாறுவதும், மற்றவர்கள் இதில் ஈடுபடுவதை மதிப்பதும் செய்தால் அவரின் ஆத்மா மிகுந்த நிறைவெய்தும்; நாமும் அவர் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை ஓரளவு நிறைவு செய்யலாம்.