தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கேழ்வரகு-வெந்தயக்கீரை தயிர் அடை

புஞ்சைத் தவசங்களில் மிகுந்த சத்துள்ள ஒன்று ராகி எனப்படும் கேழ்வரகு. நாட்டுப் புறங்களில் இதனைக் “கேப்பை” என்றும் அழைப்பர். அதிகமான கால்சியம் சத்தும், பிற தானியங்களில் கிடைக்காத/குறைவாயுள்ள‌ மெதியோனின், லாய்சின், வேலின் போன்ற அமினோ அமிலங்களும் தருவதால் வாரம் இரண்டு முறையேனும் கேழ்வரகை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.வளரும் குழந்தைகளுக்கு எலும்பும் தசை நார்களும் வலுப்பெற கேழ்வரகு மிக நல்லது.குறைவான நீர் இறைப்பிலேயே நன்கு வளரக் கூடிய கேழ்வரகை உணவாய்க் கொள்வது, உடலுக்கு மட்டுமின்றி சூழலுக்கும் மிக உகந்தது இதனுடன் வெந்தயக் கீரை கலந்து தாதுக்களும், வைட்டமின்களும் நிறைந்த ஒரு சத்தான உணவை இம்முறை காண்போம். அரிசியை விடவும் மெதுவாய்ச் செரிமானம் ஆவதால் இது நீரீழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு - 2 கோப்பை (4-5 அடைகள் செய்ய)

நன்கு பொடியாக நறுக்கப்பட்ட வெந்தயக் கீரை - 2 கோப்பை

நன்கு பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம் - 1 கோப்பை

தயிர் - 1/2 கோப்பை (புளித்த தயிர் விரும்புவோர் அதற்கேற்றபடி சேர்த்துக் கொள்ளவும்)

பச்சை மிளகாய் - 1 (காரத்தின் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளவும்)

சீரகப்பொடி - 1 சிட்டிகை (1/2 teaspoon)

மஞ்சள் பொடி - 1 சிட்டிகை (1/2 teaspoon)

பெருங்காயப் பொடி - 1/2 சிட்டிகை (1/4 teaspoon)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - அடை தட்ட.

செய்முறை

எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும். தோசை மாவுபோல் நீர்த்து விடக்கூடாது. கையினால் உருட்டி ஒரு பந்து போல் செய்ய முடிய வேண்டும். இம்முறையில் ஊற வைக்கவோ, புளிக்கவோ தேவை இல்லை.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்துக் காய்ந்ததும் கல்லில் லேசான எண்ணெய் விட்டு, பிசைந்த மாவைக் கையில் எடுத்துக் கல்லில் இட்டு மெதுவாய் விரல்களால் அடைபோல் தட்ட வேண்டும். படத்தில் காணும் பருமனுக்குத் தட்டவும். (கையைச் சுட்டுக் கொள்ளாமல் கவனமாய்த் தட்ட வேண்டும் - தீயை மிதமாக வைக்கவும்). அடையைச் சுற்றி எண்ணெய் விட்டு மிதமான தீயில் பொறுமையாய்ப் பொன்னிறமாகப் பொரிக்கவும். வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் பொரிக்கவும். இரு புறமும் முறுகலானதும் இறக்கிவிடவும்.

எண்ணெய்க்குப் பதில் வெண்ணெய், நெய் விருப்பத்திற்கேற்பப் பயன்படுத்தலாம்.

நம் பாரம்பரிய உணவுகளான தேங்காய்ச் சட்டினி, வெங்காயச் சட்டினி, மிளகாய்ப் பொடி இவற்றுடன் மட்டுமன்றி, நவீன உணவுகளான சாஸ், ஜாம், சீஸ் போன்றவற்றுடனும் இது சுவையாயிருக்கும் ( எனினும் உடல்நலத்திற்கும், தற்சார்புக்கும் பாரம்பரிய உணவுகளே உகந்தது)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org