தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

விசும்பின்துளி - 8

ஆற்றுப்பெருக்கால்... - பாமயன்

பட்டினப்பாலையும், பொருநராற்றுப் படையும் புகழ்ந்துபேசும் பெருமைக்குரிய மன்னன் கரிகாலன். இவன் வழக்கமான மன்னர்களைப்போல போர்களில் ஈடுபட்டாலும் வடநாட்டு அசோகனுக்கு இணையாக மரம் நடுவது, குளம் வெட்டுவது என்பதோடு கால்நடைகளுக்கான மருத்துவமனைகளையும் ஏற்படுத்தியுள்ளான்.

‘தண்கேணித் தகைமுற்றத்து பகட்டெருதின் பலசாலை’

என்ற பட்டினப்பாலை வரிகள் இதைக் கூறுகின்றன இவனது மிகப்பெரும் பணிகளில் ஒன்று காவிரியில் கல்லணை கட்டியது.இவன் வேளாண்மையைப் பெருக்குவதில் பெரும்பங்காற்றியவன். வடநாட்டு அசோகனுக்கு இணையாக வைத்துப் போற்றப்படவேண்டியவன்.

‘அரிகாலின் கீழுகூஉ மந்நெல்லே சாலும் கரிகாலன் காவிரிசூழ் நாடு’ (பொருநர்)

என்று இவனைப் பாடுகின்றன இலக்கியங்கள்.

கரிகால் பெருவளத்தானின் மற்றொரு பெயர் திருமாவளவன். இவன் தொடர்ந்து வெள்ளச் சேதம் ஏற்படுத்திவந்த காவிரிக்கு அணைபோட்டான். அந்த அணை இயற்கையின் போக்கை உணர்ந்து கட்டப்பட்ட அணை. இந்த அணை கட்டடப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை வியந்து போற்றுகிறார் ஆங்கிலேய நாட்டுப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன் என்பவர். இவர் தனது தொப்பியைக் கழற்றி ‘ஓடும் நீரில் அணை கட்டும் தொழில்நுட்பத்தை எனக்கு விளக்கிக் காட்டியுள்ள இந்தக் காவிரி அணை கட்டிய முன்னோர்களை நான் வணங்குகிறேன்’ என்றாராம். ஏனெனில் ஓடும் நீரின் மீது அணை கட்டுவது என்பது மிகவும் கடினமான பணி. காரையோ சுண்ணாம்போ கரைந்துகொண்டே போய்விடும், அல்லது நீரை வேறுபக்கம் திருப்பிவிட்டு அணையைக் கட்டிய பின்பு பாதை மாற்ற வேண்டும். ஆனால் இது காவிரியில் இயலாது. வெள்ளக் காலங்களில் இப்போதே நொடிக்கு 2 லட்சம் கனமீட்டர் நீர் பாயும் ஆற்றைத் திருப்புவத கடினம். அன்றைய காலத்தில் (இப்போதைய‌) கன்னட நாட்டில் அணை ஏதும் கட்டாதபோது, இப்போதைவிட மிகப் பெரிய அளவில் காட்டுவெள்ளம் உள்ளபோது எவ்வளவு தண்ணீர் வரும் என்று நாம் கணக்கிடலாம்!

இதனால் பண்டைத் தமிழர்கள் மிக அருமையான நுட்பத்தைக் கடைப்பிடித்தனர். நாம் நீரோடும் ஆற்றங்கரையிலோ அல்லது அலைவந்து விழும் கடற்கரையிலோ நின்றோமென்றால் நீர் வந்து பாயும்போது நமது கால்கள் மண்ணில் மெல்ல மெல்ல பதிவதைக் காணலாம். அதாவது நீரோட்டம் மணலை அரித்துக் கொண்டுபோக கனமான நமது கால்கள் மண்ணுள் பதியும். இந்த நுட்பத்தைத்தான் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஓடும் நீரோட்டத்தின்மீது பெரிய பாறைகளை வைப்பர். அது மெல்ல மெல்ல மணலுள் பதிந்து அடியில் பாறைப் பகுதியை அடையும். அதன்பின்னர் அதே இடத்தில் மற்றொரு பாறைத்துண்டை வைப்பர். அதுவும் கீழே சென்று தங்கும். இவ்வாறு வைக்கும்போது இரண்டு பாறைகளுக்கிடையில் ஒருவகையான கரையாத தன்மை கொண்ட களிமண்ணைப் பயன்படத்தியுள்ளனர். தஞ்சைப் பகுதியில் பெரும் பாறைகள் கிடைப்பது மிகவும் கடினம். புதுக்கோட்டையில் இருந்தோ அல்லது திருச்சிப் பகுதியில் இருந்தோ அல்லது அதைவிடத் தொலைவில் இருந்தோதான் கல் கொண்டுவர வேண்டும். இத்தகைய இடர்ப்பாடுகளைத் தாண்டி கல்லணை கட்டப்பட்டதை நினைத்தால் நமக்கு வியப்பாகவும் பெருமையாகவும் உள்ளது.

தென்னிந்திய பாசனம் (மிக்ஷீக்ஷீவீரீணீtவீஷீஸீ வீஸீ ஷிஷீutலீ மிஸீபீவீணீ) என்ற நூலில் இது ஒரு மிகச் சிறந்த சாதனை என்று குறிப்பிடுகிறார். ஏனெனில் ஆற்றுப்படுகையில் அணைகட்டும் தொழில்நுட்பம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியால்தான் கண்டறியப்பட்டது. ஆர்தன் காட்டன் இந்த அணையை ‘பெருமித அணை’ (நிக்ஷீணீஸீபீ கிஸீணீவீநீut) என்று பெயரிட்டழைத்தார். இப்பெயர்தான் இன்று உலகெங்கும் அழைக்கப்படுகிறது.

ஏன் இந்த அணை அன்று கட்டப்பட்டது என்றால் திருவரங்கம் எனப்படும் தீவுப்பகுதியில் காவிரி பிரிந்து கொள்ளிடம் என்றும் காவிரி என்றும் ஓடி மீண்டும் கல்லணைப் பக்கம் இணைகிறது. பொதுவாக காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் கொள்ளிடம் என்று கூறுவார்கள். திருவரங்கம் அருகே கொள்ளிடத்தின் அமைப்பு நிலமட்டத்தைவிட உயர்வாக உள்ளது. அதே சமயம் கல்லணைப் பக்கம் வந்தவுடன் அதன் நிலமட்ட உயரம் குறைகிறது. இதனால் அந்தக் காலத்தில் அடிக்கடி காவிரி உடைந்து பெரும் வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தடுக்கும் பொருட்டு உடைக்கின்ற இடத்தில் ஆற்றின் போக்கை மிக இயல்பாக ஒரு அணை ஒன்று கட்டி திருப்பிவிட்டுள்ளனர். இதனால் வெள்ளச் சேதம் குறைந்ததோடு வேளாண்மையும் பெருகிற்று.

பல்லவர் தந்த பாசனம்

சங்ககாலத்திற்குப் பின்வந்த களப்பாளர்கள் எனப்படும் களப்பிரர்கள் பற்றிய செய்திகள் குறிப்பாக வேளாண்மை பற்றிய செய்திகள் அவ்வளவாக இன்னும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படவில்லை. இப்பகுதி இன்னும் ஆய்வுக்கான களமாகவே உள்ளது. இவர்களை அடுத்து அரியணைக்கு வந்தவர்கள் பல்லவர்கள் இவர்கள் ஆனாலும் காஞ்சியில் ஒரு பெரிய அரசன் இப்பல்லவர்களுக்கு முன்னமே இருந்துள்ளான். சிம்மவிஷ்ணு என்று கூறப்படும் ஒருவன் திடீரென பல்லவப் பேரரசை கி.பி. ஆறாம் நூற்றாண்டின் அமைப்பதற்கு முன்பாக இந்த புகழ் பெற்ற அரசன் இருந்துள்ளான். இவன் கரிகால் பெருவளத்தான் எனப்படும் திருமாவளவனைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணணார் என்பவரால் பாடப் பெற்றுள்ளான். இவன் பெயர் இளந்திரையன். இதிலிருந்தே இவனது பெருமை காணக்கிடைக்கிறது. பொதுவாக கரிகாலன் காலத்திலேயே ஆரியமயமாக்கம் தொடங்கிவிட்டதை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். பி.டி. சீனிவாச அய்யங்கார் போன்றவர்கள் இதைக் குறிப்பிடுகின்றனர். அதே வழியில் இளந்திரையனும் ஆரியமயமாக்கத்தில் மிகுதியாக ஈடுபட்டுள்ளனான். இன்னும் சொல்லப்போனால் இவன் காஞ்சி மாநகரை சமஸ்கிருதக் கோட்டையாக்கியதில் மிக முதன்மையானவன் என்று சொன்னால் அது மிகையாகாது. இக்காலத்தில்தான் வைதீக மதத்திற்கு மாற்றாக சமண, புத்த மதங்கள் ஆழமாகக் கால் கொண்டன அல்லது நிறுவனமயப்பட்டன. மணிமேகலை காஞ்சியின் ஒரு தமிழ்ப் புலவராகவும் சமயத் தலைவராகவும் இருந்ததை மயி¬ல் சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார். இவனுக்குப் பின்பு அரியணைக்கு வந்த வடக்கத்திய பல்லவஅரசர்கள் சமஸ்கிருதத்தை போன்றியதைக் காண முடியும். தமிழிலக்கியங்களில் இந்தப் பல்லவர்கள் பற்றிய செய்திகள் மிகக்குறைவாக அல்லது இல்லை என்று சொல்லுமளவிற்கு உள்ளதை நாம் காணலாம்.

இது ஒரு புறம் இருக்க இளத்திரையன் கரிகாலனின் பேரன் என்ற செய்தியும் உள்ளது. இப்படியான இந்த தமிழ் மன்னன் மிக அருமையாக பாசனப் பணிகளை மேற்கொண்டவன். இவன் அமைத்த ஏரி தென்னேரி என்று அழைக்கபடும் திரையன் ஏரி ஆகும். இந்த ஏரி காஞ்சிபுரத்திற்கு தெற்கே 10 மைல் தொலைவில் உள்ளது.

நந்திவர்மனின் காசாக்குடிச் செப்பேடு இந்த திரையன் ஏரியைப் பற்றி குறிப்பிடுகிறது. பேரசை பல்லவர்கள் பல்வேறு வகையான பாசனக் கட்டுமானப் பணிகளைச் செய்துள்ளனர். இவர்கள் பல வாரியங்களை அமைத்துள்ளனர். இவர்களைப் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் குறைவாக இருந்தாலும், செப்பேடுகள், கல்வெட்டுகளின் இவர்களைப் பற்றிய செய்திகள் உள்ளன.

இவர்கள் தமிழரல்லாத இனத்தவர்கள் ஆயினும் பின்னர் தமிழோடு இரண்டறக் கலந்துவிட்டனர். இவர்கள் நிறையக் காடுகளை வெட்டி வயல்களாக மாற்றியுள்ளனர். தமிழகத்தின் வடபகுதியில் இவர்கள் செய்த பாசனப் பணிகளால் இன்றும் அங்கு வேளாண்மை சிறப்பாக நடைபெறுகிறது.

கூரம் செப்பேடு ‘வித்யா விநீத பல்லவ பரமேச்சுர கரம் எடுத்து ஏரி தோண்டி’ என்று குறிக்கிறது. மகேந்திரவாடிக் கல்வெட்டு மகேந்திர தீர்த்தம் என்ற குளத்தைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு வைரமேகத் தடாகம் என்ற குளத்தை உருவாக்கியதற்கான செய்தியைக் கூறுகிறது. இது தவிர நாட்டுக்கால், ஆற்றுக்கால் என்ற இரண்டு வாய்க்கால் கட்டுமான முறை பற்றிய குறிப்புகள் உள்ளன. இது ஆற்றிலிருந்து நேரடியாக நீரை வயலுக்கு கொண்டுவரக்கூடிய அமைப்புகள் மற்றும் ஏரிக்கு நீர் கொண்டு வரும் அமைப்புகள் என்று தெரிகிறது. இது தவிர நீரூற்று வாய்க்கால்கள் ஊற்றுக்கால் என்று கூறுப்படுகின்றன. இதை ஔவையார் குறிப்பிடும் ‘ஊற்றுக்காலால் உலகூட்டும்’ என்ற தொடர் நினைவூட்டுகிறது. பாலாற்றில் இருந்து நீரானது பல ஏரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இவை தவிர கூற்றன் வாய், வாய்த்தலை, தலைவாய், முகவாய் என்று பெயருள்ள பாசனக் கட்டுமானங்கள் ஆற்றிலிருந்து நீரை வயலுக்கு கொண்டு செல்லப் பயன்பட்டுள்ளன. திருச்சி அருகே உள்ள பெட்டவாய்த்தலை இதற்கு நல்ல சான்று. இவற்றைப் பராமரிக்க நிலமானியங்கள் வழங்கப்பட்டிருந்தன.

சிற்றூர்களில் குடியாட்சி முறை நன்கு நிலவியிருந்தது. முறையான தேர்தல்கள் நடந்துள்ளன. தன்னாட்சியுடன் கூடிய நிர்வாக அமைப்பு இருந்தது. இந்த சிற்றூராட்சியின் கீழ் அலுவல் முறைப்படி பல சிறு குழுக்கள் இருந்தன. இவற்றுக்கு வாரியங்கள் என்று பெயர். இன்றைய அரசு அமைத்துள்ள வாரியங்களுக்கு முன்னோடியாக அன்றைய பல்லவ நாட்டு மக்கள் முன்னோடியாக இருந்தததை அறிய முடியகிறது. அவை

  1. சம்வத்சர வாரியம்- பொது வாரியம்
  2. தோட்ட வாரியம் - தோட்டக்£ல் பயிர்களைப் பற்றியது
  3. ஏரி வாரியம் - ஏரிகள் பராமரிப்பு, ஏரிப் பாசனம்.
  4. கழனி வாரியம் - மருத நில வயல்களைப் பற்றியது
  5. பஞ்ச வாரியம் - வரிவசூல் பற்றியது
  6. கணக்கு வாரியம் - ஏரி, மதகு, அணைக்கட்டு, கலிங்கு போன்றவற்றை நிர்வகிப்பது
  7. தடிவழி வாரியம் - வயல், பாத்திகளுக்கு செல்லும் பாதைகளைப் பற்றியது.

இவ்வளவு நுட்பான அறிவியல்முறையில் மேலாண்மை அமைப்பை உருவாக்கியமை இன்றும் வியப்பாகவே உள்ளது. இந்த வாரியங்கள் கிராமசபையின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வந்துள்ளன.கொடிக்கால் தோட்டந்தோப்புகள் ஆகியவற்றின் வேலிகளைக் கவனிப்பதற்கு வேலிநாயம் என்ற அலுவலர் இருந்ததுள்ளார்.

ஏரிகள் உடைப்பொடுத்தபோது உடனடியாக அதைச் செப்பனிட்ட செய்திகள் கல்வெட்டுக்களின் பதியப்பட்டுள்ளன. சோமங்கலக் கல்வெட்டு ‘சோமங்கலமான பஞ்சநதி வாணச் சதுர்வேதி மங்கலத்து ஏரி இத்தேவர்க்கு பன்னிரண்டாவது பெருவர்ஷம் பெய்து ஒரு நாளே ஏழிடத்தில் பெருமடையாய உடைத்த இது திருச்சுரக் கண்ணப்பந் திருவேங்கம்பமுடையான் காமன் கண்டவானன் இம்மடை ஏழும் அடைப்பித்து …’ என்று குறிபிட்டுச் செல்கிறது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org