தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நிரம்பிய நூல் - நூல் விமர்சனம்

அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய‌ நூலின்றி கோட்டி கொளல் - வள்ளுவர்

நமது மரபின் உச்சம் - ஆதி வள்ளியப்பன்

கல்லூரியில் படித்த காலத்தில் 'உலகத்தில் எந்த மொழி இலக்கியத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு தமிழுக்கு உண்டு. அது என்ன?' என்று எங்கள் தமிழ்ப்பேராசிரியர் கேட்டார். பிறகு அவரே “திணைக் கோட்பாடு” பற்றி விளக்கினார். கல்லூரிப் படிப்பு முடித்தபின் சூழலியல், காட்டுயிரியலில் எனது ஆர்வம் திரும்பிய காலத்தில் நவீன உயிரியல் கோட்பாடுகளைப் பற்றியும், சூழல் மண்டலங்களை அதன் அடிப்படையில் பிரித்துள்ளது பற்றியும் படிக்கும் போதெல்லாம் திணையியல் கோட்பாடு என் மனதில் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். நமது மண், நமது மொழி, நமது மரபு பற்றிய பெருமித உணர்வு தோன்றும்.

நவீன அறிவியல் வானைக் கடந்து விட்டது, பிரபஞ்சத்தைத் தொட்டு விட்டது என்றெல்லாம் பேசுகிறோம், ஆனால் நமது மரபு சார்ந்த அறிவியல் பற்றி, உலகின் முதல் அறிவியல் துறையான நமது உயிரியல் துறை பற்றி நமது பண்டைக்கால அறிவு எப்படிப்பட்டதாக இருந்தது என்பது பற்றிய தெளிவு இல்லை. நமது மரபு பற்றித் தெளிவு இல்லாத ஒரு குற்ற உணர்ச்சியும், அதன் பெருமிதங்கள் பற்றிய உணர்வின்மையின் வெளிப்பாடும்தான் நாம் இன்றிருக்கும் நிலைக்குக் காரணம்.

ஆங்கிலேயர்கள் நம்மிடையே புகுத்திய மெக்காலே கல்வி முறை அல்லது “கிளார்க் வேலைக் கல்வி முறை” நமது சிந்தனை முறைமையில் தேவையற்ற விடயங்களை ஏற்றி வைத்திருக்கிறது. அதன் காரணமாக ஆங்கிலேயக் கல்வி, ஐரோப்பிய நவீன அறிவியல் போன்றவை உயர்ந்தவை என்ற கருத்து நமது மூளையில் ஏற்றப்பட்டு விட்டது. அதனால் நமது மரபு சார்ந்த அறிவை இரண்டாம் தரமாகவே கருதுகிறோம்.உயிரியல், அறிவியல், சித்தாந்தம், சமூகவியல் பற்றிப்பேசும் பலரும் கூட நமது சங்க இலக்கியங்களையோ, நமது மரபு சார்ந்த தொடர்ச்சியையோ அறியாமல்தான் பேசுகிறார்கள்.

ஆனால், திணைக் கோட்பாட்டை வெற்றுப் பெருமையாக நினைத்து வானில் பறப்பதில் எந்தப் பயனும் இல்லை. இந்தக் கோட்பாடு, நமது மரபு வளம் பற்றி நமது நண்பர்களுக்கும் நமது குடும்பத்தினருக்கும் பெரிய விழிப்புணர்வில்லை. நமது பாடப் புத்தகங்களில்கூட குழந்தைகளுக்கு வெறும் இலக்கிய வகைமையாக “திணையியல் கோட்பாடு” சொல்லித்தரப் படுகிறதே ஒழிய, இது நமது அறிவுச் செல்வம், இதை மேன்மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உணர்வு ஊட்டப்படுவதில்லை. இந்தச் சிறுநுல்லில் ஆசிரியர் குறிப்பிடுவது போலவே, நமது கல்விப்புலத்தைச் சேர்ந்தவர்களில் நாருக்கும் நமது மரபுத் தொடர்ச்சி பற்றி எந்தவொரு அக்கறையும் இல்லை (வழக்கம்போல ஒரு சிலர் இதற்கு விதிவிலக்கு).நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் நிலையில், சாதாரண மக்களுக்கு இது பற்றித் தெரியவில்லையே என்று விரக்தி அடைவதில் எந்தப் பயனும் இல்லை.

இன்றைய நவீன உயிரியல் பகுப்பு முறை சூழல்தொகுதிகளை () எப்படிப் பிரிக்கிறதோ, அதேவகையில் நமது திணைப்பகுப்பு இருக்கிறது என்கிறார் தாவரவியல் அறிஞர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி. (பார்க்க: அவர் எழுதிய “தமிழரும் தாவர‌மும்”). இதுவே உலகின் முதல், அறிவியல் அடிப்படையில் அமைந்த சூழல்தொகுதி வகைப்பாடு. உலகின் பண்டிஅய நாகரிகங்களில் இது போன்ற பகுப்பு முறைகளைப் பார்க்க முடிகிறது என்றாலும், அந்த பகுப்பு முறைகள் எதுவும் நமது திணையியல் கோட்பாடு போல திட்டவட்டமானதாக, இன்றைய நவீன அறிவியல் பகுப்பு முறைகளுடன் பொருந்திப் போவதாக இல்லை என்பதே திணையியல் கோட்பாட்டின் சிறப்பு என்கிறார் அவர். அது மட்டுமன்றி, ஒவ்வொரு திணையையும் சுட்ட ஒரு மலரின் பெயரைத் தந்தது, ஒவ்வொரு திணைக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்றவற்றை வகுத்து அளித்து, பண்பாட்டு வாழ்வுடன் பிணைப்பை உருவாக்கியிருந்தது போன்றவை திணையியலின் மற்ற சிறப்புகள். அது மட்டுமல்லாமல், சூழலியல் சிதைவு பற்றியும் முதன்முதலில் எடுத்துக்காட்டியது திணைக் கோட்பாடுதான். இந்தக் கோட்பாட்டின் பின்னணியில் இருக்கும் சிந்தனை முறைமையை, அது முன்வைக்கும் அறத்தை, நமது சமூகத்துடன் இந்தக் கோட்பாடு கொண்டுள்ள உறவு முறைமையை எளிதாகவும், சிறப்பாகவும் விளக்குகிறது இந்தச் சிறு நூல்.

நமது மரபு, அறிவியல், வளம் பற்றி நீண்டகாலமாகப் பேசி வரும் பாமயன் எஙிற மு.பாலசுப்ரமணியன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். நமது மரபு வளங்கள் பற்றி தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்து, அதிலிருந்து நமக்கான சூழலியலை மீட்டெடுத்துத் தரும் முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருபவர் இவர். ஒரு பக்கம் எழுத்து மூலம் சூழலியல் உணட்வைப் பரப்பி வரும் இவர், மற்றொருபுற‌ம் நமது பாரம்பரிய‌ வேளாண் முறைகளைக் கொண்டு அடிசில் என்ற இயற்கை வேளாண் பண்ணையையும் நடத்தி வருகிறார். அவரது தேர்ந்த மொழிநடையையும், தமிழால் அறிவியலை எப்படிச் சிறப்பாகப் பேச முடியும் என்பதையும் இந்தப் படிக்கும்போது உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள், சிற்றுயிர்கள், ப்பெருயிர்கள், பறவைகள், பூச்சிகள், சூழல் போன்றவற்றைப் பற்றிய குறைந்தபட்ச அறிதலோ, பாதுகாப்பு உணர்வோ இல்லாமால் எல்லாம் நம் கண் முன்னே அழிவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாமே சிலவற்றை அழிக்கவும் செய்கிறோம். இந்தப் பின்னணியில் திணையியல் கோட்பாட்டை வீண் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பதிலோ, அதை நமது சிந்தனையின் உச்சம் என்று பேசுவதிலோ என்ன அர்த்தம் இருக்கிறது? வீண்பெருமைகள் பேசுவதை நிறுத்திவிட்டு, நமது மூதாதைகளின் அறிவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், நமது மூதாதைகள் போற்றிக்காத்த இயற்கைச் செல்வங்களில் எஞ்சியுள்ள சிறு விகிததையாவது பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொள்வோம். அதுவே நமது மரபுக்கும், மூதாதிகளுக்கும், நமக்கும், ஏன் நமது சந்ததிகளுக்கும்கூட பொறுப்புமிக்க செயல்பாடாக இருக்கும்.

குறள் சொல்லுவது போல,

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org