- QA//// தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள்

“வானத்துப் பறவைகளைப் பாருங்கள், அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை, கிடங்குகளில் சேமிப்பதுமில்லை” - என்ற‌ விவிலியத்தில் உள்ள‌ ஏசுநாதரின் வரிகள் மிகப் பிரபலமானவை. விடுதலையை பற்றிப் பாட ஆரம்பித்த பாரதி, “விட்டு விடுதலையாகி நிற்பாய்” என்று சிட்டுக்குருவியைத்தான் மேற்கோள் காட்டுகிறான். சங்க இலக்கியங்களில் 'சிறுவெள்ளாங்குறுகே', 'நாராய், நாராய்' என்றெல்லாம் பற்பல பறவைகளைப் பாடியிருக்கின்றனர். இறையுணர்வுக்கே தங்களை அர்ப்பணித்த ஆண்டாள், மாணிக்க வாசகர் போன்ற ஞானிகள் கூட, 'கீதமினிய குயிலே' என்றும் ' உன்னை உகப்பன் குயிலே, உன் துணைத் தோழியும் ஆவன்' என்றும் கவி பாடியுள்ளனர். பறவைகளைப் பாடாத கவிஞனே எம்மொழியிலும் இல்லை என்று கூறலாம்.

நம் இந்திய நாட்டில் 1301 பறவை இனங்கள் இருப்பதை ஆய்வாளார்கள் குறித்துள்ளனர்.தமிழ் நாட்டில் 508 பறவைகள் இனங்கண்டு குறிக்கப் பட்டுள்ளன. தற்சார்பு வாழ்வியலுக்கு இயற்கை இன்றியமையாதது. 'பாரடியோ வானத்துப் புதுமையெல்லாம்' என்று பார்த்தனைப் போல் நாம் இயற்கை ரசிகர்கள் ஆக வேண்டும். நீல வான் பின்னணியில் ஒரு பறவையை வானில் பார்க்கும் போது நம்முள் எழும் ஆனந்தம் சொற்களில் சிக்காதது. வானமே பார்க்காத வாழ்முறையில் சிக்கித் தவிக்கும் தற்கால மாந்தர்க்கு விடுதலை உணர்வூட்ட நாம் வானத்தையும் அதன் பறவைகளையும் பார்க்க வேண்டும்! இந்த எண்ணங்களுடன் மாதம் ஒரு (நம் தமிழ் நாட்டில் நாம் காணக் கூடிய) பறவையைப் பற்றி எழுதத் துவங்கி உள்ளோம்.

பஞ்சவர்ணப் புறா

நம் இந்திய நாட்டின் தேசியப் பறவை என்னவென்றால் ஒரு குழந்தை கூட மயில் என்று கூறிவிடும். ஆனால் நம் தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது என்று கேட்டால் வெகு சிலருக்கே தெரியும். இச் சிறப்பைப் பெற்றதுதான் பஞ்சவர்ணப் புறா அல்லது மரகதப் புறா என்று அழைக்கப்படும் புறா.

ஆங்கிலப் பெயர்: Common Emerald Dove

அறிவியற் பெயர்: Chalcophaps Indica

இருப்பிடம்: இந்தியத் துணைக்கண்டம், மியான்மர்(பர்மா), தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரியேலியாவின் வட,கிழக்குப் பகுதிகள்.மழைக்காடுகளிலும், அடர்ந்த ஈரமுள்ள‌ மரத் தோப்புக்களிலும், வயல், தோட்டம், சரபுன்னைக் காடுகள் மற்றும் கடற்கரையோரங்களிலும் வசிக்கும். இரண்டு பால்வண்ண முட்டைகளை வைத்துக் குஞ்சு பொரிக்கும்

அளவு & அங்க அடையாளங்கள்:

பறக்கும்பொழுது அடிப்பகுதி சிகப்பு நிறமாக இருக்கும். பின்புறமும், மேல் இறக்கைகளிலும் மரகதப் பச்சைபோல் இருப்பதால் இப்பெயர் பெற்றது. பெரிதாயும் இல்லாமல், சிறிதாயும் இல்லாமல் நடுத்தர அளவு கொண்ட இப்புறா, 23லிருந்து 28 செ.மீ வரை இருக்கும் (10 முதல் 11.5 அங்குலம்). தலையும், உடலின் அடிப்பகுதியும் மங்கிய செந்நிறமாய் (pink) இருக்கும் - அடி வயிறு சாம்பல் நிறமாகும். கண்கள் காப்பிக்கொட்டை வண்ணத்தில் இருக்கும். அலகு சிவப்பாகவும் கால்கள் பழுப்பு நிறத்திலும் இருக்கும். ஆண் பறவைக்குத் தோளில் வெள்ளைப் பகுதியும் நெற்றியிலும் கண்ணைச் சுற்றியும் சாம்பல் நிறக் கொண்டையும் இருக்கும்.

பிற செய்திகள்:

பழங்களும் விதைகளும் உணவாய்க் கொள்ளும் மரகதப் புறா ஒரு சாதுவான பறவை. இனச்சேர்க்கைப் பருவத்தில் ஆண் பறவை ஒரு வகை நடனமாடிப் பெண்ணைக் கவரும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org