தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தற்சார்பு சந்தை- ஜயமுண்டு பயமில்லை மனமே

முன்பு கெடுமுன் கிராமம் சேர் தொடரில் உழவன் விடுதலையைப் பற்றி 'சந்தைத் தற்சார்பு வந்தால் பின் எல்லாத் தற்சார்பும் தானே வந்து விடும்' என்று எழுதியிருந்தோம். அதை சாத்தியம் என்று சாதித்துக் காட்டியிருக்கும் பெல்காம் இயற்கை உணவுக் குழுமம் பற்றி இன்று பார்ப்போம்.

இன்றைய சந்தை என்பது உற்பத்தியாளரான விவசாயிக்கும் பயனுள்ளதாக‌ இல்லாமல் நுகர்வோருக்கும் இல்லாமல் நடுவில் வேறு எவரோ லாபத்தை எடுத்து இவ்விருவரையும் கட்டத்தில் ஆழ்த்துவதாகவே உள்ளது . இந்த இருவருக்கும் தொடர்பில்லாததால் பல தவறுகளும் கேடுகளும் நடந்தேறுகின்றன. ஒரு குழுமமோ ஒரு நபரோ சந்தையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்தால் இன்றைய நிலைமையை போல் பல இன்னல்களே உண்டாகும்.

சந்தை என்பது சில பத்தாண்டுகள் முன்பிருந்தது போல் அண்மை கடைகளாகவும் உள்ளூர் சந்தையாகவும் உள்ளூர் (local) வாழ்வாதாரத்தையும் உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதாக இருப்பதே நலம். தொலை தூரத்தில் இருந்து பொருட்கள் வந்தால், இருப்பு காலம் (Shelf life) மற்றும் போக்குவரத்து என விலை மிகவும் அதிகமாகவே இருக்கும். பின்னர் பொருளாதாரம் மற்றும் பல நெருக்கடிகள் காரணமாக உற்பத்தி தவிர மற்ற எல்லாம் வியாபாரிகளின் கைக்கு சென்றடையும். அதன் பின்னர் வியாபார தந்திரமாகவும் பேராசை (மற்றும் பெரும் லாபம்) என்னும் தரித்திரமாகவும் உருவெடுத்து பல தவறுகளுக்கு வழி வகுக்கும்.இப்படியே சென்று உற்பத்தியாளனான விவசாயியையும் சந்தையாக மாற்றி தற்சார்பை இழக்க செய்துவிடும். இங்கு கவனிக்கவேண்டியது என்னவெனில் விவசாயியிடத்திலிருந்து வாங்கும் பொழுது அடி மாட்டு விலைக்கும் அவனுக்கு அதே பொருளையோ அல்லது கொஞ்சம் மதிப்பு கூட்டியோ விற்கும் போது யானை விலைக்கும் வருகிறது.[ஆறு ரூபாய்க்குத் தேங்காய் விற்கும் உழவன் நூறு ரூபாய்க்குத் தேங்காய் எண்ணை வாங்கிச் சாப்பிடுகிறான்.]

இதனால் தான் விவசாயி பசுமை புரட்சிக்கு பின் மிகவும் நலிந்தான். ஓரின பயிருக்கும் பணப்பயிருக்கும் தவறாக வீழ்ந்ததோடல்லாமல் அவற்றுக்கான விதை மற்றும் இடுபொருள்களுக்கும் சந்தையாக மாறி, மற்றும் தனது விளைச்சலையும் ஓரிருவருக்கே விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு ஒட்டு மொத்த பொருளாதாரமும் சிதையும்படி தள்ளப்பட்டான். இதில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவெனில், ஓரினப் பணப் பயிரால், அதன் குறைந்த விலை நிர்ணயத்தால் மட்டும் நட்டம் ஆகவில்லை, அவன் தனது தினப்படி வாழ்க்கைக்கு வேண்டிய மற்ற எல்லா பொருட்களுக்கும் சந்தையை நாடியதால் தான் உழவன் நலிந்தான். அவனிடம் வாங்கப்பட்ட பொருட்களே இச்சந்தைகளில் யானை விலைக்கு வந்தன, இப்படி அழிந்தது அவனது பல்லுயிர் பெருக்கம் மற்றும் பொருளாதாரம் மட்டும் அல்ல, தற்சார்பாக வாழக்கூடிய திறனும்.

இப்படி திட்டமிட்டு மாற்றப்பட்ட சந்தை பொருளாதாரத்தில், நம் விவசாயி இன்று என்ன செய்ய முடியும்?

கூட்டு முயற்சி செய்யலாம்தான்; ஆனால் அங்கும் அவச்செய்தியே காத்திருக்கிறதே!. இன்று கூட்டுறவு என்பதும் கெட்ட வார்த்தை ஆகுமளவுக்கு சீர்கேடுகள். இருந்தும் இன்றைய நிலையில் சில சீரமைக்கப்பட்ட கூட்டு முயற்சிகளும் சரியான ஆட்களுடன் நேர்மையான முயற்சிகளுடன் இயங்கினால் மட்டுமே தீர்வு. உழவர்கள் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

கடந்த பல மாதங்களில் தங்கள் வரை சிறப்பாக இயற்கை முறைகளில் வேளாண் பயின்று தற்சார்பாக வாழும் பல விவசாயிகளை பார்த்தோம். இதனுடன் கூட்டு முயற்சி செய்து வெற்றிக்கு பாதை அமைப்பதைத் தெரிந்து கொள்வதும் அவசியம் ஆகிறது.

பெல்காம் இயற்கை உணவு சங்கம் (Belgaum Organic Food Club) என்னும் இந்த சொசைடி, விவசாயிகளால் தங்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டது. இயற்கை விவசாயத்திற்கு மற்றவர்களை பயிற்சி கொடுத்து மாற்ற மட்டும் இல்லாது இந்த சங்கம் ஒரு இயற்கை சந்தையும் உருவாக்கியது. அதிலும் நடுத்தர‌ வர்க்கம் மற்றும் அதற்கும் கீழ் உள்ள மக்களுக்கு இயற்கை விளை பொருட்களை கொண்டு சென்றது இதன் பெரிய வெற்றி. அபய் முதாலிக், அசோக் துபச்சி, சுரேஷ் தேசாய் போன்ற கர்நாடகத்தில் (இன்று இந்திய அளவில்) நன்கு அறியப்பட்ட இந்த இயற்கை விவசாயிகளால் அமைக்கப்பெற்றது தான் இந்த சங்கம். அபய் அவர்கள் ஒருங்கிணைப்பு, அசோக் அவர்கள் சந்தை,சுரேஷ் அவர்கள் தொழில்நுட்பம் என ஒவ்வொருவர் ஒரு பகுதியினை பார்த்துக்கொள்ள, சிறப்பாக முன்னேறியது இந்த சங்கம். இதில் சுரேஷ் தேசாய் இயற்கை தொழில் நுட்பத்திற்கு அதிலும் குறிப்பாக கரும்புக்கு பெயர் பெற்றவர். அருமையான சீரிய இயற்கை வழிமுறைகளின் மூலம் ஏக்கருக்கு 80-90 டன் வரை மகசூல் எடுக்கும் இவர் கரும்புக்கெனவே சில சிறந்த விதை மற்றும் ஆக்கபூர்வமான விளை முறைகளையும் கண்டு பிடித்து மற்றவர்களுக்கும் பயிற்றுவிக்கிறார்.

இப்படி இயற்கைக்கு மாறியும் பலரை மாற்றியும் இயங்கி வந்த இவர்கள், தங்கள் சிறப்பான விஷமற்ற நன்பொருட்களுக்கு சந்தை ஏற்படுத்துவதே அடுத்த சரியான கட்டம் என தீர்மானித்து பல விவசாயிகளையும் இந்த சங்கத்தினுள் கொணர்ந்தனர். 24 விவசாயிகளுடன் துவங்கிய இந்த சங்கத்தில் இன்று 82 விவசாயிகள், 410 ஏக்கர் மொத்த நிலம், 25 கி.மீ. வட்டத்துக்குள் சேர்த்து, இயற்கை பொருட்களை பெல்காமில் 500 குடும்பங்களுக்கு விநியோகிக்கின்றனர். இதில் 27 விவசாயிகள், இயற்கை சான்றுடன், காய் கறிகள் மட்டுமே பயிரிடுபவர். எல்லோருக்கும் சான்றிதழுக்கு ஏற்பாடு செய்யப்படிருப்பினும், குழுவின் சீரிய கண்காணிப்பு முறை பெயர் போனது. சிறு தவறு நடந்தாலும் மற்ற விவசாயிகளே சேர்ந்து தவறிய விவசாயியை குழுவிலிருந்து உடனடியாக நீக்கி விடுகிறார்கள்.

தரமான பொருட்களை உற்பத்தி செய்து நியாய விலைக்கு சரியான சந்தைக்கே கொடுக்க வேண்டும் என முடிவு செய்து அந்த சந்தையை தாங்களே நிறுவினர் இவர்கள்! இடைத்தரகர்கள் மற்றும் இடைப்பட்ட வணிகர்களையும் தவிர்த்து விவசாயிகளை நுகர்வோருடன் நேருக்கு நேர் கொணர்ந்து வெற்றியும் கண்டனர். மேலே கூறியது போல் 500 குடும்பங்களுக்கு நேரடியாக இயற்கை பொருட்கள் செல்வதால் தங்களின் உற்பத்தியில் 50% இங்கேயே சந்தை படுத்தப்படுகிறது. மீதியை அசோக் துபச்சி அவர்களின் தொடர்பால் பெங்களூர் மற்றும் வேறு சில நகரங்களின் இயற்கை அங்காடிக‌ட்க்கு விற்றுவிடுகின்றனர்.

ஒரு சில முன்னோடியான விவசாயிகளால் ஒட்டுமொத்த குழுவும் பயனடைந்து இன்று ஏற்றுமதிக்கும் தயாராக நிற்கிறார்கள்! உற்பத்தி தொழில் நுட்பங்கள், விதை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை என்று பல்வேறு பகுதிக்கும் ஒரு குழு அமைத்து சீராக செயல்படுவதே இவர்களது வெற்றிக்கு முக்கிய காரணம். வேறு சில குழுக்கள் மதிப்பு கூட்டுதல், மற்றும் பதப்படுத்துதல், போக்குவரத்து என்று செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் எல்லோரும் தன்னார்வலர்(volunteers) என்பது குறிப்பிடதக்கது. அரசாங்கம் உட்பட வெளியிலிருந்து பெரும் உதவிகள் எதவும் வருவதில்லை. இன்றும் 2 முழு நேர ஊழியர்கள் மட்டுமே. பண்ணை திட்டமிடல், என்ன பயிர் ஒவ்வொருவரும் எப்பொழுது போடுவது என்பது முதல் சந்தை மற்றும் போக்குவரத்து வரை தானே முன் வந்து இயங்கும் தன்னார்வலர்களினால் நடக்கிறது. முதல் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் சான்றிதழுக்கான செலவை அரசாங்கத்திடம் பெற்றனர். இன்று சான்றிதழுக்கான செலவை சங்கமே மேற்கொள்கிறது.

இதற்கான முதலீடு உட்பட எல்லாமும் இவர்களே முயன்று ஏற்படுத்தியது தான். முதலில் 2002-இல் 25 விவசாயிகள் ஒன்று சேர்ந்த பொழுது தலா ரூ.10,000/- கொணர்ந்து ரூ. 2.5 லட்ச‌ம் சேர்த்து அதிலிருந்து தான் சந்தைப்படுத்துதலை உருவாக்கினர். அப்படியே உறுபினர்கள் அதிகரித்ததை வைத்தே இன்று 3 கிடங்குகள் கட்டி உள்ளனர். சமீபத்தில் ஒரு சீரிய வெல்லம் தயாரிக்கும் ஆலை ஏற்படுத்த முடிவு செய்து அதற்கான ரூ.18.6 லட்ச‌மும் சங்க உறுப்பினர்களிடமே பெறப்பட்டது.

நுகர்வோர் மற்றும் விவசாயிகள் அடிக்கடி தொடர்பில் இருப்பது முக்கியம் என்கின்றனர் இவர்கள். 3 மாதங்களுக்கு ஒரு முறை யமன்காரண்டி ஏன்னும் கிராமத்தில் உள்ள பண்ணையில் குடும்பத்துடன் சந்திக்கின்றனர். விவசாய உறுப்பினர்கள் மாதம் ஒரு முறை கூடுகின்றனர்.

சந்தைக்கு வருவோம்: முதலிலேயே ஒரு முக்கிய வசீகரமான எண்ணை பதிவுசெய்கிறேன். நேரடியாக நுகர்வோருடன் பரிமாறுவதால், 40% ஈட்டளவு உள்ளதாக கூறுகின்றனர்! மற்ற தானியங்களில் 25% உள்ளது. இவை எல்லாம் சாதாரண‌ சந்தை விலையில், இயற்கை பொருட்கள் என்று அதிக விலை வைத்து அல்ல, என்பது முக்கியமாக உணரவேண்டும். இவர்களது காய் கறிகளுக்கு ஒரு பருவத்திற்கு`முழுவதும் ஒரே விலை தான். வெளி சந்தை விலை பற்றிக் கவலைப் படுவதில்லை. இந்த விலை நிர்ணயம் விவசாயிகளின் உற்பத்தி செலவைக் கொண்டு அமையும். வாரத்திற்கு 12 கிலோ காய் கறிகள் ( உருளை, வெங்காயம், இஞ்சி, பூண்டு உட்பட) தருகின்றனர். இவர்களது உறுபினர்களே 13 வகையான காய்களை விளைவிக்கின்றனர். இவை தவிர ஆடரின் பேரில் கோதுமை, பருப்பு வகைகள், நாட்டு சோளம் முதலியனவும் அனுப்ப படுகின்றன. 12 கிலோ காய்க்கான விலை ரூ.200/- தான். நுகர்வோர் 8 வாரங்களுக்கான காசினை முதலிலேயே முன் பணமாக கொடுக்க வேண்டும். விவசாயிக்கு 15 நாட்களுக்குள் அவர்களது பணம் கிடைக்கும். இப்பொழுது வாரத்திற்கு இவர்கள் 30 டன் காய்கறிகள் (ரூ.4.8 லட்ச‌ம் ) விற்கின்றனர்! அது தவிர 3-4 டன் தானியங்கள். வாரவாரம் 6 டாட்டா ஏஸ் போன்ற வண்டிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட தடங்களில் செல்கின்றன. நஷ்டம் வந்தால்? அதுவும் இந்த குழுவின் மேல் தான்! இது வரை அவர்கள் நினைவறிந்து நட்டம் வந்ததில்லை. எப்பொழுதோ ஒரு முறை பெரு மழையால் நட்டம் அடைந்தனராம். இது வரை காப்பீடு எதுவும் இல்லை. விவசாயிகள் விரும்பினால் தனிப்பட்ட முறையில் எடுக்கலாம்.

முன்பே கூறியது போல் இந்த பகுதி கரும்பு மற்றும் வெல்லத்திற்கு பெயர் போனது. கரும்பிலிருந்து 7 விதமான பொருட்கள், நீர் வெல்லம், சிறு கட்டிகள், மண்டை வெல்லம் உற்பட பல்வேறு நிலைகளில் எடுக்கின்றனர். இவர்களில் 52 விவசாயிகள் கரும்பு பயிரிடுகின்றனர். சுரேஷ் தேசாய் அவர்களது பயிற்சியினால் சராசரி 60 டன் கரும்பு எடுகின்றனர். முன்பு வெல்லம் ஆடுவதற்கு இவர்கள் வெளியில் சான்றிதழ் பெற்ற கரும்பு ஆலை தேடி சென்றனர். இப்பொழுது அவர்களே சொந்தமாய் நிறுவிவிட்டனர். இதுவே கூட்டு முயற்சியின் பலம். உறுப்பினர்கள் எல்லோரையும் ஒரு சிறு பகுதியில் கரும்பு பயிரிடும் படி வற்புறுத்துகின்றனர். அதனை சர்க்கரை ஆலைகளுக்கு கொடுக்காமல் சங்கத்தின் ஆலையில் வெல்லமாக்கி லாபம் பார்க்கும் படி அறிவுறுத்துகின்றனர். இயற்கை வெல்லகட்டிகளாகவும், பொடியாகவும் நல்ல விலைக்கு இயற்கை அங்காடிகளுக்கும் நேரடி நுகர்வோருக்கும் விற்கின்றனர். இப்படி தொழில்நுட்பமும், மதிப்பு கூட்டுதலும், நியாய வியாபாரமும் கூடி நல்ல இயற்கை சந்தை நிறுவி 82 விவசாயிகளும் சந்தோஷமாக இயங்கி வருகின்றனர்.

சந்தை என்பது- நாமே நம்மை சுற்றி அமைப்பது தான் என்றும் கூட்டு முயற்சி நல்ல பலனை அளிக்கும் என்றும் வாழ்ந்து, நடத்தி காட்டி வரும் இந்த பெல்காம் இயற்கை உணவு குழுவை போல் அங்கங்கே விவசாயிகள் செயல்பட்டால் வருடா வருடம் கரும்புக்கும் அரிசிக்கும் விலை நிர்ணயத்திற்கு கொடி பிடிக்காமலே சிறப்பாக வாழலாம். நாம் ஒவ்வொருவரும் சந்தையாக வேண்டும், ஓரிரு கும்பனிகளே நமக்கு எல்லாவற்றையும் விற்று காசு பார்க்கும் இன்றைய ஆதாரமற்ற பொருளாதார சிந்தனையிலிருந்து விடுபடுவோமாக. நாமே சந்தையாக மாறாமல் சந்தையை நாம் மாற்றி அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால் உற்பத்தியில் மட்டுமல்ல நுகர்விலும் தற்சார்புட‌ன் திகழ்ந்து நமது வாழ்வாதாரத்தையே திருத்தி அமைக்கலாம்.

ஜயமுண்டு பயமில்லை மனமே இந்த ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org