தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

இந்தியாவில் அமெரிக்க ஊடுருவல்

கடந்த கால‌ நூற்றாண்டுகளில் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் வாழ்முறையையும், எண்ணங்களையும், தன் கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் சுதந்திரம் இருந்தது. அவ்வப்போது இச்சுதந்திரம் வளமான நாடுகளைத் திருடுவதற்காக அண்டை நாட்டு அரசர்கள் மேற்கொள்ளும் படையெடுப்பால் இடைஞ்சற்பட்டது. சில சமயம் அவ்வரசர்களின் வாரிசுகள் அந்நாட்டிலேயே தங்கி சாம்ராஜ்ஜியங்களை ஏற்படுத்தினார்கள்.

இயந்திரப் புரட்சிக்குப் பின், இத் தனிமனிதப் பேராசைகள் போய் நலிந்தோரை திட்டமிட்டுச் சுரண்டும் முறை உருவாயிற்று. விழிப்பு இல்லாத மக்களைப் பல வகுப்புகளாகவும், பூகோளப் பிரிவுகளாகவும் அல்லது முழு நாடுகளாகவும் பிரித்தடக்குவதன் மூலம் இச்சுரண்டல் நிறைவேற்றப் படுகிறது. இதற்குப் பயன் படுத்தப்பட்ட அணுகுமுறைகளை, அவற்றின் இயல்புக்கேற்பப் பெயரிட்டாலும் விளைவுகளில் அவை எல்லாம் ஒன்றாகவே இருந்தன. பெரும் இயந்திரத் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களும், வேலையாட்களும் உறுதி செய்வதற்காகவே இவை யாவும் செய்யப்பட்டன. இது தனி மனித அடிமைத்தனம், கொத்தடிமை, பிரபுத்துவம் போன்றவற்றை விட ஒரு படி மேலே இருந்தது.

பிரிட்டன் இந்தியாவிற்கு ஒரு நிலக்கிழாரியப் பின்புலத்துடன் வந்தது; எனவே அதன் கால‌னிகளுடன் கொண்ட‌ உறவு ஒரு சமூக-பொருளாதார அமைப்பைப் பின்பற்றி இருந்தது - அது அரசியல் ஏகாதிபத்தியமாக இருந்தது. சுரண்டலே அதன் உண்மைக் குறிக்கோளாய் இருந்தாலும் இது தன் பிரஜை தேசங்களுடன் சில கடமைகளைக் கொண்டதாய் இருந்தது. இம்முறை நல்லாட்சி என்னும் பொறுப்பைத் 'தலைநாட்டுக்கு' உரியதாக்கியது.

களத்தில் சற்றுப் பின்னர் அமெரிக்கர்கள் வந்தனர். அவர்கள் அடிமைகளை ஆண்ட மரபுடன் தோன்றினர். எனவே அவர்கள் 'மேம்படாத' நாடுகளை கட்டுப்படுத்திய முறை பிரிட்டனை விட வேறு வண்ணத்தில் இருந்தது. அவர்கள் ஒரு பணம்சார்ந்த ஏகாதிபத்தியத்தைப் பின்பற்றுகிறார்கள் - இது ஆளப்படுபவர்களின் நன்மைக்கு எந்தப் பொறுப்பும் எடுத்துக் கொள்வதில்லை.

மேலும் இக்காலத்தில் உலக நாடுகளை இரண்டு சித்தாந்தங்களின் அடிப்படையில் பிரிக்கும் முய‌ற்சி நடைபெற்று வருகிறது - தனியார் வாணிபம் மற்றும் சமூக நீதி. கொள்கை மாற்றுவர்களுக்கான இப் போராட்டத்தில், உலகம் இரண்டு எதிர்மறை வகுப்புக்களாகப் பிரிந்துவிட்டது. தனியார் சொத்துரிமை சார்ந்த தனியார் வாணிபம் அதன் மூலம் தனியார் பொருளீட்டல் என்ற பிரிவிற்கு அமெரிக்காவும், பொதுவுடமை சார்ந்த‌ சமூக நீதிக்கும், அனைவருக்கும் சம உரிமைக்கும் ருசியாவும் தலைமையாய் விளங்குகின்றன. இவ்விரு கோட்படுகளும் உலகை இரண்டு பிளவுகளாகப் பிளக்கின்றன. ருசியா மதபோதகர்கள் போல் தான் சொல்வதைச் செய்துவருவதும், தன் கொள்கை விளக்கப் பல பரிசோதனைகளில் ஈடுபட்டும் அதன் மூலம் தன் அண்டை நாடுகளைத் தன் கொள்கையில் இணைக்க முயல்கிறது.

அமெரிக்காவோ நாடகம், கட்டாயம், வ‌ன்முறை மற்றும் கடனுதவி போன்ற பல திட்டங்களுடன் உலக நாடுகளைத் தன் பொறியில் பிடிக்கிறது. இம்முறைகள் சிக்கியவர்களை விடுவிக்க செய்யப்பட்டவை அல்ல - ஒரு சிலந்தி வலையைப் போல் அவர்களைச் சுரண்டுவதற்குத்தான். சிக்கியவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியாத அளவில் வலை மிக நேர்த்தியாகவும், நெருக்கமாகவும் பின்னப்பட்டு இருக்கிறது - சிக்குண்டபின் எவ்வளவு நெளிந்தாலும் அது முடிவை வேகப்படுத்துமே அன்றி விடுவிக்காது.

துரதிட்ட வசமாக, மக்கள் இந்நாளில் மிகுந்த வேலைப்பளுக்களுடன் இருப்பதால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று நின்று பார்க்கவே அவர்களுக்கு நேரமில்லாமல் போகிறது. அலைச்சலும், இறைச்சலும் சூழ்ந்த வாழ்வில் தன் சூழலை நோக்கவோ, நிலைமையைப் புரிந்து கொள்ளவோ எவ்வித ஓய்வும் இல்லை. இவ்வழுத்தத்தை சாதகமாக்கி அவர்கள் அழிவு வேகமாக்கப்படுகிறது.

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா தன் பண வலையை உலகமெங்கும் விரித்து வருகிறது. பிரிட்டனின் சுயநல நோக்காலும், பொறாமையினாலும் இதிலிருந்து இந்தியா ஓரளவு பாதுகாக்கப்பட்டது. சமீப காலமாக இவ்வேலி விலக்கப்பட்டதால் மனச்சாட்சியற்ற இச்சுரண்டலுக்கு ஒரு திறந்தவெளியாக இந்தியா தென்படுகிறது. நேரு போன்ற ஒரு தேசப்பற்று மிக்க ஒரு தலைவரின் ஆட்சியில் இச்சுரண்டல் நடப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நவீன உளவியலின் துணையுடன் தங்கள் பணிகளைச் செய்யும் அமெரிக்கர்களின் கபடமும், சூதும் நேரு போன்ற எளிமையான, வெளிப்படையான, அனைவரையும் நம்பும் தலைவரால் அடையாளம் காண முடியவில்லை.

தற்சமயம் உலகின் மொத்தத் தீமைக்கும் உருவகமாக அமெரிக்கா இருக்கிறது. ஆசியாவின் கிழக்கில் பெரும் வன்முறையை அது புரிந்து வருகிறது. இவ்வபாயத்தைத் தடுக்க நாம் விரும்பினால் போரின் ஆணிவேரை நாம் தாக்க வேண்டும். இதற்கு நாம் இயந்திர உற்பத்தியில் உருவான பொருட்களைப் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும் - குறிப்பாக அமெரிக்காவில் தயாரான பொருட்களை.

குமரப்பாவின் ஏடுகள் - Kumarappa Papers- March, 1953

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org