தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பீடையிலாத‌தோர் கூடு - 03

மண் பயனுற வேண்டும் - உழவன் பாலா

சென்ற கட்டுரையில் லாரி பேக்கர் மண்கட்டிடத்தைப் பற்றி எழுதியுள்ளதைப் பார்க்கப் போவதாகக் கூறி இருந்தோம். அவர் தனக்கே உரித்தான எளிமையான நடையில் மண்ணில் வீடு கட்டுவதைப் பற்றி எழுதிய‌ mud என்ற குறு நூலிலிலிருந்து தொகுத்தவை: (படங்கள் அவரே வரைந்தவை).

நடுத்தர மக்கள் நாம் எல்லோரும் செங்கல்லால் ஆன வீடுகளைக் கட்டுகிறோம். ஆனால் ஒரு சாதாரண வீட்டைக் கட்டத் தேவைப்படும் கற்களைச் சுட, இரண்டு அல்லது மூன்று நன்கு வளர்ந்த மரங்கள் தேவை!

நம் நாட்டில் உள்ள எல்லோரும் மரங்களை வெட்டிச் செங்கற்களைச் சுட்டால், காடுகள் எல்லாம் அழிந்து விடும். கல்லால் வீடு கட்டலாம் என்றால் எல்லாப் பகுதிகளிலும் கல் கிடைப்பதில்லை.பின் எதனால் வீடு கட்டுவது என்று கேட்டால், என்னுடைய பதில் மண்ணால் வீடு கட்டலாம் என்பதே. மண் ஏழை மக்களின் பொருள் அல்லவோ, மண் வீட்டிற்கு சமூக அங்கீகாரம் இல்லையே, மண்வீட்டில் வசித்தால் என் பெண்ணை யார் திருமணம் செய்து கொள்வார்கள், யார் என்னை மதிப்பார்கள் போன்ற கேள்விகள் எழும். மண் வீட்டை நேர்த்தியாய்க் கட்டினால் ஐந்து நட்சத்திரக் கட்டிடம் போல் மிளிரச் செய்ய முடியும். மண் பழமையானதாய் இருந்தாலும் அதனால் மிகச் சிறப்பான வீடுகளைக் கட்ட முடியும். எப்படி என்று பார்ப்பதே இப்புத்தகத்தின் நோக்கம்.

எல்லாப் பொருளையும் போல மண்ணுக்குச் சில இயலாமைகள், எதிரிகள் உண்டு. அவை என்னவென்று புரிந்து கொண்டு, அதை எப்படிச் சமாளிப்பது என்று நுட்பங்களைத் தெரிந்து கொண்டு கட்டினால், மண்ணால் மிகச் சிறந்த வீடுகளைக் கட்டலாம்.பொதுவாய் மண்ணைத் தண்ணீருடன் பிசைந்து ஒரு வடிவ‌ம் செய்தால் அது காய்ந்ததும் அந்த வடிவிலேயே இருக்கும். ஆனால் காய்ந்த பின் மண்ணுக்கு நிரந்தர எதிரி அதே தண்ணீர்தான். எனவே மண்சுவர்களை ஈரப்பதத்திலிருந்தும், நீரிலிருந்தும் காப்பாற்றுவது மிக முக்கியம். இதை மறக்கவோ, ஒதுக்கவோ கூடாது. இப்புத்தகத்தின் பெரும் பகுதி மண்சுவர்களை நீரிலிருந்து பாதுகாப்பது பற்றியதே.

மண்ணை ஈரத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.

மண் வீடு என்றதும் நம் மனதில் தோன்றும் உருவம் என்ன? இது போன்ற வீடா?

மண்ணால் இது போன்ற வீடும் கட்டலாம்

மண் சுவர்களுடன் மூன்று மாடிகளும் கான்க்ரீட் கூரையும் கொண்ட இது போன்ற வீடும் கட்டலாம்!

[ இன்று இங்கிலாந்தின் கிராமப் பகுதிகளில் பல நூறு வருடங்களைத் தாண்டி மிக அழகான மண் வீடுகள் இருக்கின்றன. மண் வீட்டிற்குக் கனமான‌ காலணியும் (shoe), நல்ல தொப்பியும் போட்டால் அவை காலத்திற்கும் இருக்கும் என்று ஒரு பழஞ்சொல் அங்கு உண்டு. கடுமையான குளிரும் பனியும் உள்ள‌ லிங்கன்ஷயர் என்ற பகுதியில் உள்ள 200 வருடங்கள் ஆன இரண்டு மாடி மண் வீட்டின் படம் - உழவன் பாலா]

மண் பரிசோதனை

மண் களிமண், வண்டல் மண், சரளை, செம்மண், மணற்சாரி என்று பல வகைப்படும். மக்கு கலந்த விவசாய மண் வீடு கட்டப் பயன்படாது. மண்ணில் களிமண் அதிகமானால் காய்ந்ததும் வெடிப்பு விடும்; மணற்பாங்கான மண்ணாயின் பிசைந்து இறுகாது. மணலும், களிமண்ணும் கலந்த கலவையே வீடு கட்ட மிகச் சிறந்தது. நாம் கட்டும் இடத்திலேயே ஆழத் தோண்டினால் பல வகைப்பட்ட மண் கிடைக்கும். அவற்றை வைத்தே கட்டலாம். முதலில் நாம் கட்டத் தேர்ந்தெடுத்த மண் எப்படி இருக்கிறது என்று சில எளிய பரிசோதனைகள் மூலம் அறியலாம். அவற்றை வைத்து மேற்கொண்டு எவ்வாறு அதை உறுதிப்படுத்துவது, வலுவாக்குவது என்றும் பார்க்கலாம்.

சுருட்டுப் பரிசோதனை:

மண்ணைப் பிசைந்து இரு கைகளால் ஒரு சுருட்டுப் போல் உருட்டவும். பின் அச் சுருட்டை வலது கையினுள் வைத்துப் பிதுக்கவும்.

பிஸ்கட் பரிசோதனை:

மண்ணால் தட்டையாய் பிஸ்கட் போல் ஒரு வடிவம் செய்யவும். அதை வெய்யிலில் நன்றாய்க் காய வைத்துக் காய்ந்ததும் இரு கைகளில் வைத்து இரண்டாய் உடைக்க முயற்சி செய்யவும்.

கை கழுவும் பரிசோதனை:

வீடு கட்டத் தேர்ந்தெடுத்த மண்ணில் தண்ணீர் விட்டுப் பிசைந்து, அதில் இரு கைகளையும் விட்டு முடிந்தவரை கைகளை மண்ணில் அளையவும். அதன் பின்னர் கையைக் கழுவவும்.

உறுதிப்பொருட்கள்

ஒரு வகைப்பட்ட மண் பொலபொலவென்று உதிர்ந்தாலோ, அல்லது மிகுந்த களிப்புத்தன்மையுடன் இருந்தாலோ அது பயனற்றது என்று முடிவு செய்ய முடியாது. வேறு சில பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் அவற்றை நல்ல சுவர் கட்டும் மண்ணாக மாற்ற இயலும். உதாரணமாக, களிமண் வெடிப்பு விடாமல் இருக்க நெல் உமியைக் கலந்து பிசைந்து செய்யலாம். இவ்வாறு மண்ணை உறுதிப்படுத்தப் பயன் படுத்தும் பொருளை உறுதிப்பொருள் (stabiliser) என்று கூறலாம். தற்காலத்தில், உறுதிப்பொருள் என்றதுமே நாம் எண்ணுவது சிமென்ட்டைத்தான். ஆனால் பல‌ ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாய் மண் கட்டிடங்களுக்குப் பயன்பட்டிருக்கிறது. சிமென்ட்டோ 100 வருடங்களுக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டதே. நம் முன்னோர், தொடர்ந்த பரிசோதனைகளின் மூலம், ஒவ்வொரு சூழலுக்கும், தட்ப வெட்பத்திற்கும் ஏற்ற உறுதிப்பொருட்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். அவர்களின் பட்டறிவை அலட்சியப் படுத்துவது நம் மூடத்தனமாகும்.

சிமென்ட் ஒரு நல்ல உறுதிப்பொருள்தான் - ஐயமில்லை. ஆனால், அதன் விலையையும், சூழல் சுவடையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 5% சிமென்ட் கலந்தால் மண் மிகவும் உறுதிப்படும் என்று நாம் எழுதினால், 100 கன அடி மண் தேவைப்படும் ஒரு வீட்டிற்கு 5 கன அடி சிமென்ட் தேவை - இது ஏறக்குறைய 125 மூட்டைகள் ஆகும். ஆனால், நாம் சற்றுப் பொறுமையாகப் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து நம் மண்ணிற்கு 2% சிமென்ட் போதும் என்று கண்டறிந்தால் கிட்டத்தட்ட 75 மூட்டைகள் மிச்சமாகும். எனவே கட்டும்முன் மண் பரிசோதனை மிக இன்றியமையாதது. இன்னொரு மிக முக்கியமான உறுதிப்பொருள் சுண்ணாம்பு. சிமென்டோ, சுண்ணாம்போ 2% முதல் 6% வரை தேவைப்படும் (மண்வகைப் பொறுத்து). பொதுவாய் 3% போதுமானது. சுண்ணாம்பும் மண்ணும் கலந்து கட்டிய சுவர்கள் அமர்வதற்கு (setting) நாட்கள் அதிகமாகும். வேகமாய்க் கட்ட வேண்டி இருந்தால் 2% சுண்ணாம்பும், 1% சிமென்டும் கலந்து கொள்ளலாம். மண் நல்ல வாகாய் இருந்து உறுதிப் பொருட்களே தேவைப்படாவிடிலும் இவை ஈரப்பதத்தை ஈர்த்துக் கொள்வதால், மண்சுவர்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கிறது.

நாட்டுப்புற உறுதிப்பொருட்கள்

பண்டைய கட்டிடங்களில் பல இயற்கை உருதிப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். இவற்றில் சில:

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org