தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்

நாளை இது நமக்கும் வரும்!

நாள்: செப்டம்பர் 20, 2012. இடம்: ஹென்னபின் கௌன்டி என்னும் அமெரிக்க சிறூர் நீதிமன்றம். அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ளது. ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஆலன் சிலெங்கென் என்னும் 54 வயது இயற்கை விவசாயி குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார். அவர்மேல் மூன்று குற்றங்கள் மின்னசோட்டா மாநில அரசால் சுமத்தப்பட்டுள்ளன:

  1. அதிவெப்பத்திற்குக் காய்ச்சாத பாலை விற்றது (unpasteurized milk)
  2. அனுமதிச் சான்று இல்லாமல் உணவு விற்றது (unlicensed food)
  3. கலப்படமான அல்லது தவறான பெயர் கொண்ட‌ உணவுப் பொருளைக் கையாண்டது (handling adulterated or misbranded food).

நிரூபணம் ஆனால் ஒவ்வொரு குற்றத்திற்கும் மூன்று மாதம் வரை சிறையிலிடலாம். அப்படி அவர் என்ன குற்றம் செய்து விட்டார்? அவரும் அவர் மனைவியும் “விடுதலை உழவர் கூட்டுறவு” (Freedom Farmers Co-operative) என்ற பெயரில் ஒரு இயற்கை முட்டைக் கோழிப்பண்ணை வைத்துள்ளனர். அக்கூட்டுறவில் சுமார் 130 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில், வேண்டுவோருக்குத் தினமும் தன் காரில் சென்று முட்டைகளை விநியோகம் செய்வது அவரின் வழக்கம். அப்போது சில உறுப்பினர்கள் அவருக்கு அருகிலுள்ள இயற்கைப் பால் பண்ணையிலிருந்து காய்ச்சாத, அன்று கறந்த பாலை, வாங்கி வரச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பாலைத் தன் வண்டியில் சென்று, எந்தக் காசும் பெறாமல் ஒரு உதவியாக, கொடுத்ததுதான் ஒன்பது மாதங்கள் வரை சிறைத்தண்டனை பெற்றுத் தரக் கூடிய குற்றம்! இதற்கு மூன்று நாட்கள் வழக்கு நடந்த பின்னர், ஜூரி உறுப்பினர்கள் 4 மணி நேரம் ஆலோசனை நடத்தி 'அவர் குற்றமற்றவர், ஏனெனில் அவர் எந்த விற்பனையிலும் ஈடுபடவில்லை; எனவே உணவு விற்பனைச் சட்டம் செல்லுபடியாகாது' என்று ஒரு சட்ட நுணுக்கத்தின் மூலம் அவரை விடுவித்தனர்!

மின்னசோட்டா வேளாண்மைத் துறை அதிகாரிகள் சிலெங்கனின் வண்டியை ரகசியமாகப் பின் தொடர்ந்ததோடன்றி தேடும் வாரன்டு எதுவும் இன்றியே அவர் வண்டியைச் சோதனையிட்டும், அவர் கிடங்கில் உள்ள உணவுப்பொருட்களைக் கைப்பற்றியும் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் ($5000) மதிப்புள்ள சேதத்தை ஏற்படுத்தினர். இந்தத் தீர்ப்பு தவறானது என்று கூறியுள்ள மின்னசோட்டா வேளாண்துறை, ஸ்டெர்ன்ஸ் கௌன்டி என்ற வேறு ஒரு ஊரில் சிலெங்கனின் மேல் இதே குற்றங்களைச் சுமத்தியுள்ளது. இத்தீர்ப்புக்குப் பின், அண்டை மாநிலமான விஸ்கான்ஸினில் வெர்னான் ஹெர்ஷ்பெர்கெர் என்ற இயற்கை விவசாயிமேல் இதே போன்ற குற்றம் சாட்டப்பட்டதை அங்குள்ள மக்கள் வலுவாக எதிர்த்து வருகிறார்கள்.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, உணவுப் பாதுகாப்பு மசோதா, BRAI சட்ட வரைவு, விதைச் சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்று நிறுவனங்களுக்குச் சாதகமான சட்ட திருத்தங்களைத் தொடர்ந்து அமல் படுத்தி வரும் நம் நாட்டில், விவசாயிகள் தங்கள் பொருட்களைத் தாங்களே விற்பது சிறைப்படுத்தத் தக்க குற்றமாக மாற எவ்வளவு நாள் ஆகும்?

புரட்சி என்பது வரலாற்றில் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராய் நடப்பது. மக்களாட்சியில் விளம்பரங்களால் ஊடகங்களையும், ஓட்டு வங்கி அரசியலால் அறியா மக்களையும் வாங்கி விடலாம் என்பதால்தான் வியாபார நிறுவனங்கள் உலகெங்கும் மக்களாட்சியை நிறுவத் துடிக்கின்றன. விழிப்புடன் இருப்பதும், சுரண்டலை இனங்கண்டு கொள்வதும், பிறருக்கு எடுத்துரைப்பதும் தனிமனிதனின் கடமை!

- ஆசிரியர் குழு

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org