தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பசுமைப் படை - அனந்து


சென்ற கட்டுரையில், உணவுப் பாதுகாப்புப் படை, உடல் உழைப்பையும, அதிக சலிப்பூட்டும் மெய்வருத்தலையும் (drudgery) எவ்வாறு குறைத்து, கூலித் தொழிலாளர்கள் இடம் பெயரா வண்ணம் திறமைகளைப் பாதுகாத்து, ஒரு சரியான மாதிரியையும் இயந்திரத்தையும் கொணர்ந்து விவசாயிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் (இருவருக்கும்) லாபகரமாக இருக்கும்படி பார்த்து, செயல்படுகிறது என்பதைச் கண்டோம். இவ்வியந்திர மயமாக்கல் ஒரு விதமான பொருந்திய தொழில்நுட்பமே என்று நாம் உணர வேண்டும். ஆலை மயமான இயந்திர மயமாக்கல், கிராமத்து மக்களின் வாழ்வாதாரங்களையும், வேலைவாய்ப்பையும் தட்டிப் பறித்து அவர்களை வேலை தேடி நகரங்களுக்குப் பெயரச் செய்கிறது. கிராமம் மேலும் நலிவுறுகிறது. நம் உணவுப் பாதுகாப்புப் படையோ, பெயரும் கிராம மக்களுக்குத் தான் இருக்குமிடத்திலேயே வேலை வாய்ப்புக்களை உருவாக்கி அவர்கள் நகரங்களில் பெறக் கூடிய ஊதியம் கிராமத்திலேயே கிடைக்க வழிவகுக்கிறது. மேலும் பஞ்சாயத்து மற்றும் வேளாண் வங்கிகளே இந்த இயந்திரங்களை இனாமாகவே ஏற்பாடு செய்து அவர்களுக்கு பெரிதும் உதவுகின்றன‌.

வேலையாட்கள் மிகவும் பற்றாக்குறையான கேரள‌ மாநிலத்தில் பெருமளவு வளமான விளை நிலங்கள் உணவு உற்பத்திக்குப் பயன்படாமல், தென்னை, காப்பி, பாக்கு, ரப்பர், முந்திரி, மிளகு போன்ற பணப்பயிர்கள் விளைச்சலுக்குப் பயன்படுவது உணவு உற்பத்தி செய்ய இயலாமையினால்தான். இது விவசாயச் சிக்கல‌ன்றி ஒரு சமூகச் சிக்கலாகவும் மாறி விட்டது. கேரளம் தன் பெரும்பகுதி உணவிற்குப் பிற மாநிலங்களையே சார்ந்துள்ளது. எனவே அம்மாநிலத்தில் இவ்வுணவுப் பாதுகாப்புப் படை ஒரு மிகப் பொருத்தமான , இன்றியமையாத தொழில்நுட்பப் புரட்சி என்றே கூற வேண்டும். இதை அப்படியே நம் தமிழ்நாட்டுக்குச் செலுத்த இயலாது. எனினும், விவசாய வேலை என்பது ஒரு திட்டமிடப்பட்ட உற்பத்தி முறைமையாக மாற வேண்டும், விவசாயத் தொழிலாளர்களும், விவசாயிகளும் இணைந்து, இசைந்து அண்மை உற்பத்தியில் ஈடுபட வேண்டும். வேளாண்மை என்பது உணவைத் தயாரிப்பதாக இருக்க வேண்டும். அதில் ஈடுபடும் தொழிலாளார்களுக்கு வருவாய்க்கு ஒரு நிரந்தரத்தன்மை வேண்டும் - விவசாயிக்கும் தன் நடவு மற்றும் இடுபொருள் செலவுகள் கட்டுக்குள் இருக்க வேண்டும். அரசும், வேளாண்துறையும் பரிந்துரைக்கும் தற்போதைய நவீன வேளாண்முறையில் விவசாயியையும், விவசாயத் தொழிலாளார்களையும் பிரித்தாளும் உத்தியே மேலோங்கி நிற்கிறது. ஒரு புறம் இலவசங்களைக் கொடுத்து வேளாண் தொழிலாளர்களை உழைக்காமல் செய்து விட்டு, மறுபுறம் விவசாயிகளிடம் ஆட்பற்றாக்குறையாக இருக்கிறது எனவே இயந்திர மயமான வேளாண்மை செய்யுங்கள் என்று அரசு கூறுவது நகரம் சார்ந்த‌ வேளாண் வியாபார நிறுவனங்களுக்கே நன்மை பயக்கும். மண்ணைச் சார்ந்து மண்ணில் வாழும் உழவனுக்கோ, தொழிலாளிக்கோ எந்த நன்மையும் பயக்காது.

இப் பசுமைப் படையினால் பயன்பெற்று, தன்மானம் நிறைந்த, பொருளாதார விடுதலை கண்ட, சமூக நீதி நிலை நாட்டிய பெண்களை நாம் காண முடிகிறது. ப‌ட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று வென்ற கிராமத்துப் பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் லதா ரவீந்திரன். இவர் தனது இளம் வயதில் கணவனை இழந்து தனது மக்களைக் காப்பாற்ற என்ன செய்வது என்று அறியாமல், பாலக்காட்டிற்கு அருகில் பரப்பபூர் என்னும் கிராமத்தில், சிறிய நிதி நிறுவனம் ஒன்றில் எழுத்தராக‌ வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். பின்னர் குடும்பஷ்ரீ என்னும் பெண்கள் குழுக்களின் இயக்கத்தில் சேர்ந்து செயலாற்றுவோராக‌ இருந்தார். அப்பொழுது பேராசிரிய‌ர் ஜெயகுமரானை சந்தித்து உணவுப் பாதுகாப்புப் படை வழங்கிய பயிற்சியில் சேர்ந்தார். இவர் உணவுப் பாதுகாப்புப் படையினால் பயிற்சி அளிக்கப்பட்டவர். உணவுப் பாதுகாப்புப் படையின் முதல் பயிற்சி வகுப்பில் இடம்பெற்ற‌வர்.

இன்று தனி ஆளாக 27 பெண்களையும் 17 ஆண்களையும் வேலைக்கு அமர்த்தி ஒரு வெற்றிகரமான சிறு தொழில் அதிபராக உள்ளார்! ஆம் இவர் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை 'தனி நபர் வணிக' பாதை. இவரது பயிற்சிக்குப்பிறகு இவர் இந்தப்பாதையில் தொடங்கி இன்று 7 நடவு இயந்திரங்களைச் சொந்தமாக வாங்கித் தொழில் புரிகிறார். சிவசக்தி அக்ரோ செர்விஸ் சென்டர் என்னும் இவரது வணிக கூடம் சென்ற ஆண்டு 4300 ஏக்கர்களில் இயந்திர நடவு செய்தது. ஏக்கருக்கு ரூ 3000/- வாங்கியது (ஆக 1.29 கோடி ரூபாய்!). இந்த பணி வருடத்தில் 7 மாதங்களுக்கு நடைபெறுகிறது. உண்மையில் இவருக்கு வரும் வாணிபத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார்.

இவருக்கு முதல் இயந்திரம் இவரது பயிற்சிக்குப்பின் பாதசேகர சமிதியால் இனாமாகக் கொடுக்கப்பட்டது. பின்னர் இவரது கிராம சேவைக் கூட்டுறவு வங்கி இயந்திரத்தை வாங்கி ஒரு நாளைக்கு 50 ரூ என்று மிகவும் மலிவான வாடகைக்கு கொடுத்தது. (இன்றும் கேரளத்தில் பல இடங்களிலும் பஞ்சாயத்து மற்றும் சேவை வங்கிகள் இயந்திரத்தை வாங்கி இனாமாக அல்லது மிக மலிவான வாடகைக்கு கொடுத்து உதவுகின்றன). இவை போக லதா அவர்கள் அறுவடை இயந்திரம், தெளிப்பான், பிரஷ் கட்டர் என பல இயந்திரங்களை வாங்கி நடவு தவிர வேறு பல வேலைகளையும் செய்து வர்த்தகம் பெருக்குகிறார்.

ஆனால் ஆரம்பத்திலிருந்து எல்லாம் சுகமான லாபகரமான செய்தியாக இருக்கவில்லைதான். இவர்களுக்கு இயந்திரங்களை பராமரிக்கத் தெரியாததால், முதல் 2 வருடங்கள் நட்டமே. இன்றோ லதாவே ஒரு பெரும் வல்லுனர். ஒவ்வொரு இயந்திரத்தையும் பிரித்து முழுவதுமாகச் சரி பார்த்துத் துல்லியமாக இயங்க வைப்பார். இன்று அவரே தலைமைப் பயிற்சியாளரும் கூட. இன்று பல பயிற்சியாளர்களை இவரே பயிற்சி அளித்து, களத்தில் வரும் இயந்திரச் சிக்கல் களுக்குக் கூட இவர் தொலை பேசியிலேயே தீர்வு/உதவி வழங்குகிறார்.நாம் சென்ற இதழில் குறிப்பிட்ட 2009ல். 'ஆபரேஷன் பொன் அமுதா' விற்கு பிறகு ஏறுமுகம் தான்.

ஒரு நாளில் 5 முதல் 7 ஆட்கள் கொண்ட குழு 2 முதல் 4 ஏக்கர் வரை நடவு செய்கின்றனர் .ஒரு நாள் ஊதியமாக‌ ஆண்களுக்கு இவர் ரு 750 மற்றும் பென்களுக்கு ரு 400் கொடுக்கிறார். (ஆண்கள் நீண்ட நேரம் வரை இருப்பதால் அதிக சம்பளம்). இவை தவிர உணவு, போக்குவரத்து கொடுக்கப்படுகிறது. இவை தவிர காப்பீடு, சேமலாப நிதியும் (PF) உண்டு. திருமணம் போன்ற செலவுகளுக்கும், மற்ற அவசியச் செலவுகளுக்கும் இந்த சேமலாப நிதி பயன்படுகிறது.

சிறிது, சிறிதாக‌ இவர் இயற்கைக்கும் மாறிக் கொண்டிருக்கிறார். தனது சொந்த நிலத்திலும் வேறு குத்தகைக்கு எடுத்துள்ள நிலத்திலும் இயற்கை விவசாய முறைகளையே கையாண்டு கீரை, காய்கறிகள் விளைவிக்கிறார். சந்தை? அதே பஞ்சாயத்து மற்றும் சேவை வங்கிகள் வருகின்றன- இயற்கை சந்தைக‌ளை அவர்கள் ஒருங்கிணைத்து இவரது இயற்கை பொருட்களை சந்தை படுத்த உதவுகின்றனர்.

நாம் இவரை சந்தித்தது பேருந்து நிலயத்தின் அருகில். ஏனென்றால் இவர் பயிற்சி அளிக்க அடுத்த மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார் . இன்று மிகவும் பிரபலமான சற்றும் ஓய்வின்றி உழைக்கும் பெண் லதா ரவீந்திரன். ஒரு சிறுதொழில் அதிபர்.

அடுத்து நாம் பார்க்க இருப்பது கூட்டுறவு மாதிரி.

அனூப் கிஷோர் என்னும் பஞ்சாயத்து தலைவர் உருவாக்கிய பசுமை போராளிகள் என்னும் இயற்கை வேளாண் வழிகள் சார்ந்த கூட்டுறவு.

இவர் பஞ்சாயத்து தலைவராக இருந்த பொழுது பேராசிரியர் ஜெயகுமாரனின் வழிகளையும் அந்த இயந்திர நடவின் நலன்களையும் கூர்ந்து கவனித்து தனது பஞ்சாயத்தின் சார்பாக சிலரை பயிற்சிக்கு அனுப்பி, இயந்திரத்தையும் வாங்கி இனாமாக கொடுத்து ஒரு பெரும் சரித்திரம் தொடங்க காரணமாக இருந்தார்.

இதனை தொடங்க காரணமாக இருந்த அனூப், பெரிங்கானூர் சேவை கூட்டுறவு வங்கியின் தலைவரும் ஆவார். இந்தப் பசுமைப் படை இயற்கை விவசாய முறைகளையும், விதை அதிலும் நாட்டு விதைகளின் முக்கியத்தையும் உணர்ந்து அவற்றைப் பெரிதும் கடைபிடிக்கின்றன.

இந்தக் கூட்டுறவு மாதிரி, சமூகப் பார்வையுடன் அறம் சார்ந்த ஒரு இயக்கம்.

கடந்த 7 ஆண்டுகளில் 300 அங்கத்தினர் கொண்ட இந்தப் பசுமைப் படை முதல் ஆண்டில்,விவசாயிகளின் தயக்கத்தையும் சந்தேகத்தையும் தீர்க்க, இலவசமாகவே நடவு இயந்திரம் கொண்டு நடவு செய்தது.

இன்று 67 இயந்திரங்கள் உள்ளன ( 52ன் உரிமை பஞ்சாயத்துக்கும் 15 வங்கிக்கும்). பசுமைப் படை இவர்களிடமிருந்து எடுத்து உபயோகித்து லாபத்தில் 5% இயந்திரச் சொந்தக்காரர்களுக்குக் கொடுக்கிறது. 300 அங்கத்தினரில் 164 பெண்கள் கொண்ட இந்த படை உழவர் குழுக்களிடமிருந்து (பாடசேகர சமிதிகள்) நடவு ஆணைகளைப் பெறுகின்றனர். 5 அங்கத்தினர் கொண்ட அணி அமைக்கப்பட்டு ஐந்து அணிக்கள் ஒரு குழுவாக அமைக்க‌ப்படுகின்றன.குழுக்களின் தலைவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர். மெக்கானிக் குழு உற்பட பல குழுக்கள் உண்டு. அவரவர் இடத்திற்கும் தொழிலுக்கும் ஏற்ப சம்பளம் குறிக்கப்படுகிறது. இவர்களனைவருக்கும் சேம லாப நிதி, காப்பீடு. எல்லாம் உண்டு.

நடவு, களை எடுப்பு, அறுப்பு என எல்லா வேலைகளையும் மேற்கொள்கின்றனர்.

வரவின் 84% அங்கத்தினர்களுக்கும், 16% அலுவலக செலவுகள் (7 ஊழியர்களின் சம்பளம், வாடகை ) எனப் பகிர்ந்து கொள்ளப் படுகிறது . இவர்களிடம் ஒரு பயிற்சிக் கூடமும், ஒரு இயந்திரக்கூடமும் இருக்கிறது. இந்த பசுமை படை இன்று வரை நட்டம் அடைந்ததே இல்லை! ஒவ்வொரு ஆண்டும் 3-5 லட்சம் லாபமே ஈட்டுகிறது .

பெரும் பகுதி பெண்களைக்கொண்ட இந்த பசுமை படையினால் சுற்று வட்டாரத்தில் எந்த விளை நிலமும் தரிசாக விடப்படுவதில்லை. ஆக நெல் விளை நிலங்கள், ஒரு அற்புதமான பகிர்ந்துண்ணும் வழியில் தரிசாக வீணாகாமல், இயற்கை முறையில் மீட்கப்படுகின்றன.

எல்லோரும் மேம்படுத்துல், அந்நிய முதலீடு என்று "வளர்ச்சிப் (போ)பாதை"யில் வெகு விரைவாக இடறியடித்து ஓடிக்கொண்டிருக்கையில் தாளாண்மை மட்டுமே "கிராம முன்னேற்றத்திற்கு குமரப்பாவின் காந்தியப் பொருளியல் கோட்பாடுகளே விடை" என்று தனிக்குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. கேட்பதற்குப் பித்துக் குளித்தனமாகத் தோன்றினாலும் உண்மை நம் பக்கம்தான் என்று இந்தப் பசுமைப் படை போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே வாழ்வாதாரங்களையும் கிராம மலர்ச்சியையும் ஏற்படுத்தி, நம் கோட்பாடுகளை உறுதி செய்து கொண்டிருக்கின்றன!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org