தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கற்பதும் கசடும் - வழிப்போக்கன்


நல்வழி எழுதிய அவ்வைக் கிழவி,


கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.

என்று வாழ்விற்குப் பணத்தின் இன்றியமையாமையை விளக்குகிறாள். தந்தை மகனுக்கு உதவியாய் அவையில் முந்தியிருக்கச் செய்ய வேண்டுமெனில் அவனுக்கு வருவாய்க்கு வழி தேடித் தருவதுதான் அவரின் தலையாய கடமையாகிறது. நவீன வாழ்முறையில் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை உற்பத்தியில் ஈடுபடுவோர் சமூக ஏணியின் கடைப்படிகளில் இருப்பதும், ஊடகம், நாடகம்,அரசியல் போன்ற‌ பேசுவதற்கு மட்டுமே ஊதியம் பெரும் "அறிவுப்பணி" செய்வோர் ஏணியின் மேற்படியில் வைத்துக் கொண்டாடப்படுவதும் எக்கேள்வியும் கேட்கப்படாமல் நடக்கிறது. இல்லாத ஒரு கற்பனை ஏணியின் படிகளில் முண்டியடித்து ஏறுவதே வாழ்வாக மாறிவிட்ட மாந்த இனம், இத்தகைய "அறிவுப்பணி" செய்யத் தம் குழந்தைகளுக்குக் கல்வி என்னும் பயிற்சி அளிக்கிறது. எனவே கல்வியின் நோக்கம் நல்ல வேலை பெற்றுத் தருவதுதான் என்று அனைவருமே ஒப்புக் கொள்கின்றனர். இதனால்தான் "புள்ள குட்டிகளப் படிக்க வெக்கறது" ஒரு பெற்றோரின் மிக முக்கிய கடமையாக இல்வாழ்வில் கருதப் படுகிறது.

பரபரப்பான ஓட்டத்தின் சற்று வெளிநின்று, நம் வாழ்வின் மேல்பரப்பைக் கிளறி ஆய்ந்தோமானால், நாம் பிள்ளைகளுக்கு அளிக்கும் கல்வி இருவகைப்பட்டது என்று புரியும்: ஒன்று கடவுக் கல்வி இன்னொன்று கடைகாற் கல்வி. பல நாடுகளுக்கும் செல்வதற்கு நம் எல்லையைக் கடக்கும் கடவுச்சீட்டு (passport) வாங்குவதுபோல் பொருள்தேடும் வேலைகளுக்குக் கடவுச் சீட்டாக இருப்பதைக் கடவுக் கல்வி என்று சொல்லலாம். இதை ஆங்கிலத்திலே qualification என்று கூறுவார்கள். இது ஒரு படியில் இருந்து அடுத்த படிக்கு நம்மைக் கொண்டு சென்றவுடன் மறக்கப்படும் குப்பைக் கல்வி. இன்னொன்று கடைகால் கல்வி - இதுவே இம்மைக்கும் மறுமைக்கும் நம் கூடவே வந்து மம்மர் அறுக்கும் மருந்தாய்த் திகழும் பயனுள்ள வாழ்க்கைக் கல்வி. கடைகால் தூண்கள் போல் நம்மைத் தாங்குவது இக்கல்விதான். இதை edification என்று கூறலாம். உதாரணமாக நீச்சல், மரமேறுதல், ஒரு மின்பழுதில் ஃப்யூஸ் போடுதல், மனக்கணக்காய் 165 x12 கணித்தல் போன்றவைக் கடைகால் கல்விகள். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுதல், மிக அதிக மதிப்பெண்கள் எடுத்தல், 12வது, பி.ஈ, டிப்ளமோ, டாக்டர், வக்கீல் போன்றவை கடவுக் கல்விகள்.

இதில் பொருள் ஈட்டக் கடவுக் கல்வியும், நல்வாழ்வு வாழக் கடைகால் கல்வியும் தேவையாய் இருக்கின்றன.

இப்போது எல்லோரும் மயங்கி விழும் மையப் பொருளாதாரத்தில், பெருநிறுவனங்களில் வேலை செய்வது அதிகப் பொருள் ஈட்டுவதால், அதை நோக்கியே கல்வித் திட்டம் செலுத்தப் படுகிறது. ஆனால் பெருநிறுவனங்களின் வடிவமைப்பினால் அதில் மனிதர்கள் மற்றும் அவர்களின் தனித்தன்மை ஒதுக்கப்பட்டு, விதிமுறைகளுக்கே (process) முக்கியத்துவம் தரப் படுகிறது. தனித்தன்மை இல்லாத ஒரு பணிச்சேர்க்கையில், கடைகால் கல்வி என்பது ஒரு செல்லாக் காசாகி விடுகிறது. ஏனெனில் வேலையாட்களைத் தேர்ந்தெடுக்கும் அலுவலர்களுக்கே கடைகாற்கல்விபற்றிய புரிதல் இல்லாமையே இதன் முதற் காரணம். எனவே தற்காலத்தில் கல்வி முழுவதுமாக கடவுக் கல்வியாகி விடுகிறது.

இது ஒருபுறம் இருக்கக், கடவுக் கல்வி இல்லாமலே நன்றாய்ப் பொருள் ஈட்ட இயலும் என்று சமூகத்தில் நம்மைச் சுற்றியுள்ள பலரும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இவையெல்லாம் தொகுத்துப் பார்க்கையில், நல்ல கடைகால் கல்வியும், வருவாய்க்குத் தேவையான அளவு கடவுக் கல்வியும் இணைந்து தன் குழந்தைகளுக்குக் கொடுப்பதுதான் அறிவுள்ள பெற்றோர்களின் பொறுப்பாகிறது. சந்தை அழுத்தங்களுக்குத் தம்மை உட்படுத்திக் கொண்டு விட்ட பள்ளிகளில் கடைகால் கல்வியைப் பற்றிப் பேசினாலே ஏதோ தீண்டத் தகாதவன் போல் நம்மைப் பார்க்கிறார்கள். இச்சூழலில் நல்ல கல்வி வேண்டுமென்றால் நம் குழந்தைகளைத் தற்சார்பாக நாமே கல்வி பயிற்றுவதுதான் ஒரே வழியாகத் தெரிகிறது. பெருநகர வாழ்க்கையில் இருந்து விடுபட்டுக் கல்ராயன் மலைத்தொடரில் இயற்கை வேளாண்மை செய்யும் நண்பர்கள் ராமசுப்ரமணியம்- ரமா தம்பதியினர், தங்கள் இரு குழந்தைகளையும் 8ஆம் வகுப்பு சேரும் வரை தாங்களே பயிற்றுவித்துள்ளனர். அவர் சென்ற கட்டுரையைப் படித்து விட்டு இவ்வாறு எழுதியிருந்தார். இதன் முற்பகுதி http://magicalchildhood.wordpress.com/2010/08/31/what-should-a-4-year-old-know/ என்ற வலைத்தளத்தின் சாரம். இரண்டாம் பகுதி அவரின் சொந்த அனுபவம்.

"நாலு வயதுக் குழந்தைக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்?

நாலு வயசாச்சு, ஒண்ணுமே தெரியல இவளுக்கு! அலுத்துக் கொண்டார் அந்தத் தாய். நாலு வயசு குழந்தைக்கு என்ன என்ன தெரிந்திருக்க வேண்டும் என்ற அவரது கேள்விக்கு கிடைக்கும் பெரும்பான்மை பதில்கள் எனக்கு கவலையையும் எரிச்சலையும் தருகின்றன.

ஒரு தாய் மிகப் பெருமையாக கொடுத்த பட்டியலில், நூறு எண்ணத் தெரியும், பெயர் எழுதத் தெரியும், ஒன்பது கோள்களின் பெயர்கள் என்று அடுக்கிக் கொண்டே போனார். இன்னும் சில தாய்மார்கள் தமது பிள்ளைகளுக்கு பல விஷயங்கள் மூன்று வயதிலிருந்தே தெரியும் என்று வெறுப்பு ஏற்றினார்கள். மிகச் சில பேர் ஒவ்வொரு குழந்தையும் அதனது வேகத்தில் கற்றுக் கொள்ளும், கவலைப்படத் தேவையில்லை என்றார்கள்.

ஏற்கனவே நொந்து போய் கேள்வி கேட்ட அந்த தாய், மற்ற குழந்தைகளுக்கு இவ்வளவு தெரியுமா என்று இன்னும் அதிகமாக கவலைப்பட ஆரம்பித்துவிட்டார். பெற்ற பிள்ளைகளையே வெறும் பரிசுப் பொருளாக மதிக்கும் "போட்டிக் கலாசாரம்" நமது சமுதாயத்தில் புரையோடிப் போய்விட்டது. இவர்கள் குழந்தைகளா இல்லை பந்தயக் குதிரைகளா?

என்னுடைய கருத்தில், ஒரு நாலு வயது குழந்தைக்கு தெரிய வேண்டியது:

1. தான் முழுக்க முழுக்க நேசிக்கப்படுகிறோம் என்ற உணர்வு.

2. பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வு பொது இடங்களில் பாதுகாப்புடன் இருக்கும் அறிவு, தன் சுதந்திரம் மற்றும் அதை எப்போதும் தன் குடும்பத்தினர் காப்பார்கள் என்ற நம்பிக்கை.

3. மனம்விட்டு சிரிக்க, உற்சாகமாக இருக்க , பயமில்லாமல் தனது கற்பனையை வெளிப்படுத்த ; முயலுக்கு மூனு கால் போட்டாலும், ஆகாயத்திற்கு பச்சை சாயமடித்தாலும் திட்ட மாட்டார்கள் என்ற நம்பிக்கை.

4. தன்னுடைய ஈடுபாடு எதில் என்பதை அறிதல்; அதில் கவனம் செலுத்த பெற்றோரின் உற்சாகமான ஆதரவு. கணக்கு போட மறுத்தால் கவலைப்படாதீர்கள், அவளாகவே ஒரு நாள் எண்களைப் பற்றி கேட்க ஆரம்பிப்பாள். இப்போது அவள் ராக்கெட் விடட்டும், மணலில் விளையாடட்டும், ஓவியம் போடட்டும், மகிழ்ச்சியாக இருக்கட்டும்!

5. உலகமும் அவளும் ஆச்சரியமானவை என்று உணரட்டும். அவனுக்குத் தெரியட்டும் தான் மிக அருமையானவன் என்று, களங்கமில்லா அறிவுடையவன் என்று, கற்பனை வளமிக்க படைப்பாளி என்று. பாடம் படிப்பதைப் போல், வெளியில் சென்று விளையாடுவதும் முக்கியமானது தான் என்று பழகட்டும்.

பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

1. ஒவ்வொரு குழந்தையும் அதனதன் வேகத்தில் நடக்க, பேச, படிக்க, கணக்கு போட நன்றாகவே கற்றுக் கொள்ளும். எப்போது ஆரம்பிக்கிறது என்பதற்கும் எவ்வளவு நன்றாக செய்கிறது என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

2. குழந்தையின் ஆர்வத்தை தூண்டும் ஒரு இன்றியமையாத செயல் பெற்றோர் கையில் தான் இருக்கிறது - சின்னஞ் சிறு வயதில் பள்ளியில் கொண்டு தள்ளுவது அல்ல, விலை உயர்ந்த புத்தகமோ, பொம்மையோ அல்ல. ஆனால் அம்மாவோ அப்பாவோ (இருவரும் என்றால் உத்தமம்) குழந்தையோடு தினமும் உட்கார்ந்து ஏதாவது ஒரு புத்தகம் வாசிப்பது அந்த குழந்தையை ஒரு நல்ல அறிவாளியாக பண்பாளராக உருவாக்கும்.

3. வகுப்பிலே முதலிடம், எந்தப் போட்டியிலும் வெற்றி, எல்லாத் துறைகளிலும் வெற்றி என்று எல்லா நேரமும் நெருக்கப்படும் குழந்தைகள், தங்கள் இனிமையான, மீண்டும் பெற முடியாத குழந்தைப் பருவத்தையே இழக்கிறார்கள். மகிழ்ச்சிகரமான, கவலையற்ற குழந்தைப் பருவத்தை கெடுக்காதீர்கள்.

4, நல்ல புத்தகங்கள், சித்திரக் கலை சாதனங்கள், இசைக் கருவிகள் வாங்கிக் கொடுங்கள். இயற்கையான சூழல் ஏற்படுத்திக் கொடுத்து இவற்றை எந்த தடையுமில்லாமல் பயன்படுத்தும் உரிமையும் கொடுங்கள். வீட்டுக்கு வெளியே மண்ணிலும் சேற்றிலும் விளையாட அனுமதியுங்கள்.

5. நமது குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் வேண்டாம், பள்ளி முடிந்தவுடன் நேராக ட்யூஷன் வேண்டாம், பரத நாட்டியம் தேவையில்லை, கிரிக்கெட் கோச்சிங் வேண்டாம்; அவர்களுக்கு நாம், பெற்றோர், கூட இருக்க வேண்டும். அருகில் உட்கார்ந்து தோழமை பேசும் தந்தை வேண்டும்; படம் வரையும் போது , கப்பல் செய்யும் போது அம்மா அருகில் இருக்க வேண்டும்; கும்மாளம் போடும் குட்டிகளாய் பெற்றோர் மாற வேண்டும்; மாலைப் பொழுதில் எல்லோரும் அந்தப் பிஞ்சுக் கால்கள் நடக்கும் வேகத்தில் நடக்கலாம்; இரண்டு பங்கு நேரமானாலும், குழந்தையோடு சேர்ந்து சமையல் செய்யலாம்; அவர்கள் தான் நமது வாழ்வின் ஒளி விளக்கு என்பதை வெளிப்படுத்தலாம்.

சொந்த அனுபவம்

எங்களுக்கு இரண்டு குழந்தைகள். பெரியவனுக்கு 15ம் சிறியவனுக்கு 10 வயதும் ஆகிறது. பெரியவன் எட்டாம் வகுப்பிலிருந்து பள்ளிக்குப் போகிறான். இளையவனும் நாங்களும் வீட்டிலேயே வாழ்க்கை பழகி வருகிறோம். மூத்தவன் நாலு வயதில் படிக்கவும், ஐந்து வயதில் எழுதவும் ஆரம்பித்தான். இளையவன் ஆறு வயதில் படிக்கவும் ஏழு வயதில் எழுதவும் ஆரம்பித்தான். மெதுவாக ஆரம்பித்தாலும் ஓரிரு மாதத்தில் முழுவதுமாக கற்றுக் கொண்டுவிட்டான். பெரியவனுக்கு மண்ணைக் கண்டாலே பிடிக்காது - அசுத்தமென்று நினைப்பான். சிறியவனோ விழித்திருக்கும் பாதி நேரம் மண்ணிலேயே தான் இருப்பான். இருவருக்குமே நாலு வயதில் சித்திரம் வரைய மிகவும் பிரியம். ஏதாவது கிறுக்கிக் கொண்டே இருப்பார்கள். புதியதாக ஏதாவது கற்க வேண்டிய போது , நாங்களும் குழந்தைகளோடு சேர்ந்து கற்கிறோம். நாங்கள் எதையெல்லாம் செய்ததில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். விருந்தாளிகளிடம் ABC சொல்லிக் காட்டு, பாட்டுப் பாடு , நடனம் ஆடு என்று சொன்னதில்லை. மற்றவனைக் காட்டிலும் கெட்டிக்காரனாய் இருக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தியதில்லை; வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி வைக்கவில்லை; தின்பண்டங்களை, பொம்மைகளை லஞ்சமாக வாங்கிக் கொடுத்ததில்லை.

கேள்விக் கணைகள்

சமீபத்தில் ஒரு நண்பர் தயங்கித் தயங்கி கேட்டார், " பையனுக்கு நாலு வயசாச்சு, கையெழுத்துப் பயிற்சின்னாலே ஓடுறான். புத்தகம் படிக்க மாட்டேங்கிறான். என்ன செய்யறதுன்னு தெரியல." இன்னொரு நண்பர் சொன்னார், " இடது கையில தான் எழுதுவேன்னு அடம் பிடிக்கிறான். கையிலேயே அடிச்சுப் பாத்துட்டேன், மாற மாட்டேங்கிறான் ". எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. நான் அவர்களுக்குச் சொன்னேன், " அந்தப் பிஞ்சு விரல்கள் எழுதுவதற்காக படைக்கப் படவில்லை. மண்ணில் விளையாட, பொருட்களை தொட்டு உணர்ந்து கொள்ள, சித்திரம் வரைய (உடனே மதன் / கோபுலு அளவிற்கு போய்விடாதீர்கள்!) ஏற்றவை. எழுதச் சொல்லி அவற்றை உடைத்து விடாதீர்கள். இடது கைப் பழக்கம் உள்ளவர்க்கு வலது மூளை வலுவாக வேலை செய்கிறது - நல்ல படைப்பாற்றல் பெற்றிருப்பார்கள். கட்டாயப்படுத்தி இந்த அறிய படைப்புத்திறனை அழித்து விடாதீர்கள். குழந்தை படிக்க வேண்டுமென்றால் நீங்களும் கூட உட்கார்ந்து கொண்டு தினமும் படியுங்கள்."

அடுத்த முறை குழந்தையை அடிக்க குச்சியை எடுக்குமுன் இவற்றை எல்லாம் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்."

வீட்டிலேயே பயின்றால் அதிக அளவு கடைகால் கல்வியும், தேவையான அளவு கடவுக் கல்வியும் நம் விருப்பம்போல் புகட்டலாம். ஆனால் வீட்டில் பயின்று பின் எப்படிக் கல்லூரியில் சேருவது? இதற்கு அங்கீகாரம் உண்டா என்ற கேள்விகளுக்கு விடைகளைத் தொடர்ந்து தேடுவோம்.

(தொடரும்...)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org