தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உணவில் ஒளிக்கப்பட்ட‌ உண்மைகள் - பரிதி


[சென்ற இதழ்த் தொடர்ச்சி]

12. உலக உணவு உற்பத்திக்கான தண்ணீரை யார், எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்

நாட்டு எல்லைகளைத் தாண்டிச் செல்லும் மொத்த நீரில் 76% விளைச்சலுக்கும்
அதிலிருந்து பிற பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் பயன்பட்டது.
(எ.கா. உலகளாவிய சோயா மொச்சை வர்த்தகம் நாட்டிடைத் தண்ணீர்ப்
பயன்பாட்டில் 20%-க்குக் காரணமாக இருக்கிறது.)

கால்நடைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மற்றும் ஆலைப்
பொருள்கள் தொடர்பான உலக வர்த்தகம் தலா 12% தண்ணீர்ப் பயன்பாட்டுக்குக்
காரணமாக இருக்கின்றன.

வீணாக்கப்படும் உணவுப் பண்டங்களின் உற்பத்திக்கும் பக்குவப்படுத்தப்படுத்தலுக்கும்
பயன்படும் தண்ணீர் 900 கோடி மக்களின் வீட்டுப் பயன்பாட்டுக்குப் போதுமானது!

வேதிப் பொருள்களைப் பயன்படுத்தாத வேளாண் முறைகள் நான்கு
மடங்கு குறைவாக நைட்ரேட்களை வெளியிடுகின்றன.

ஐம்பது நாடுகளில் 5 கோடி ஏக்கர் விளைநிலங்களில் நகர்ப்புறக்
கழிவு நீர் பயன்படுத்தப்படுகின்றது.

அவ்வாறு விளைவிக்கப்பட்ட விளைபொருள்கள் சுமார் நூறு
கோடிப் பேருக்கு உணவாகின்றன.

பத்து லட்சம் மக்கள்தொகை உள்ள நகரின் கழிவு நீர் 3750-8750

ஏக்கர் [தமிழகத்தின் பெரும்பாலான நிலங்களைப் போன்ற] வன்பாலை

நிலங்களில் வேளாண்மை செய்வதற்குப் போதுமானது. (எ.கா. உலக

உணவு உற்பத்தியில் 15-20% நகர்ப்புறங்களில் இருந்து கிடைக்கிறது.)

மரக்கறி உணவைக் காட்டிலும் இறைச்சி சார்ந்த உணவு உற்பத்திக்கு ஐந்து
மடங்கு அதிகத் தண்ணீர் தேவைப்படுகிறது.

13. யாருக்கு அதிக அளவு [மின்னாற்றல் உள்ளிட்ட] ஆற்றல் தேவைப்படுகிறது?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்

எரிபொருள், செயற்கை உரம், உயிர்க் கொல்லிகள் ஆகியவற்றுக்காகப்
பெருமளவு படிமக் கரிமத்தைப் பயன்படுத்துகிறது. அதன் விளைவாகச்
சூழலை மாசுபடுத்துகிறது; பசுமைக் குடில் வளிகளை வெளியிடுகிறது.

எ.கா. கோதுமை உற்பத்திக்குத் தேவைப்படும் ஆற்றலில் பாதி வேதியுரங்கள்
மற்றும் உயிர்க் கொல்லிகளை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுகிறது.

எ.கா. வேதியுர ஆலைகளின் ஆற்றல் தேவையில் 90% செயற்கையாக
வெடியத்தை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

சிறு குறு உழவர்கள் ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்வதற்கு 30,000
கலோரி ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால், ஆலைமயமான உணவுச்
சங்கிலித் தொடர் முறையில் இதற்கு 2,70,000 கலோரிகள் தேவைப்படுகின்றன.

மக்காச்சோளத்தைப் பொருத்தவரை ஆற்றல் தேவை சிறு குறு உழவர்களின் உணவு
வலையத்தில் 40,000 கலோரிகளாகவும் சங்கிலித் தொடர் முறையில்
140,000 கலோரிகளாகவும் உள்ளது.

ஒரு ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் விளைவிப்பதற்கு வேதி வேளாண் முறையில்
தேவைப்படும் ஆற்றலில் மூன்றில் ஒரு பங்கு தான் உயிர்ம
வேளாண்மையில் தேவைப்படுகிறது.

14. வீணாவது எங்கே, எவ்வளவு?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்

இந்த முறையில் உற்பத்தியாகும் உணவில் 33-40% உற்பத்தியின்
போது, போக்குவரத்தில், பக்குவப்படுத்துகையில், அல்லது
நுகர்வோருடைய இல்லத்தில் வீணாகப்போய்விடுகிறது.

அளவுக்கதிகம் உண்பதால் 25% (கால் பங்கு!) வீணாகிறது. ஐரோப்பாவிலும்
வட அமெரிக்காவிலும் சராசரியாக ஒவ்வொருவரும் ஆண்டுதோறும்
95-115 கிலோ உணவுப் பண்டங்களை வீணாக்குகின்றனர்.

ஆனால், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும் மொத்த
நிதியில் 5% தான் அறுவடைக்குப் பின்னர் வீணாவதைத் தடுக்கும் நோக்கில்
செலவிடப்படுகிறது.

ஆலைமயமான மீன்பிடிக் கப்பல்கள் ஆண்டுதோறும் 4 கோடி
சுறா மீன்களைக் கொன்று அவற்றின் துடுப்புப் போன்ற பகுதியை
வெட்டி எடுத்துக்கொண்டு மீதி உடம்பைக் கடலிலேயே எறிந்துவிடுகின்றன!
இதைத் தவிர தம் வலைகளில் அகப்பட்டுச் சாகிற கடல்வாழ்
உயிரினங்களைக் கடலில் வீசியெறிகின்றன; அவற்றின் எடை 700
கோடி கிலோ!.

ஆப்ரிக்காவில் சகாராப் பாலைவனத்திற்குத் தெற்கில் உள்ள நாடுகளிலும்
தெற்காசிய நாடுகளிலும் சராசரியாக ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 6-11 கிலோ
உணவுப் பண்டங்களை வீணாக்குகின்றனர் (வளர்ந்த நாடுகளைக்
காட்டிலும் இது 10 மடங்கு குறைவு!).


பிற வகைச் சேதங்கள் ஆண்டுக்குத் தலா 120-170 கிலோ
(ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் 280-300 கிலோ!).

பயிர்க் கழிவுகள், உணவுக் கழிவுகள் ஆகியவற்றில் பெரும்பகுதி உரமாக
மக்கி மண்ணுக்கு வளம் சேர்க்கிறது அல்லது மீன்களுக்கும்
கால்நடைகளுக்கும் உணவாகிறது.

15. பூந்தூள்ச் சேர்க்கைக்கு இன்றியமையாத உயிரினங்களை யார் காக்கின்றார்கள்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்

தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் மூன்றில் ஒரு பங்குப்
பயிர்களில் பூந்தூள்ச் சேர்க்கை நடைபெறுவதற்குக் காரணமாக
இருப்பவை வணிக நோக்கில் வளர்க்கப்படும் தேனீக்களே!

உலகில் பயன்படுத்தப்படும் உயிர்க்கொல்லிகளின் விளைவாகத்
தேனீக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் 12,60,000 கோடி
ரூபாய் மதிப்புக்கு உற்பத்தித் திறன் பாதிக்கப்படக்கூடும்!

உணவுப் பயிர்களைப் பொருத்தவரை, முதன்மையான நூறு வகைகளில்
71 வகைப் பயிர்களில் பூந்தூள்ச் சேர்க்கை இயற்கையாக வாழ்கின்ற
[அதாவது, மனிதரால் வளர்க்கப்படாத] தேனீக்களால் நடைபெறுகிறது.
அந்தத் தேனீக்கள் வாழும் காட்டுப் பகுதிகள் மனிதருக்குப் பிற வகைகளிலும்
உதவுவதால் சிறு குறு உழவர்கள் அவற்றை இயல்பாகவே பாதுகாக்கின்றனர். [எனவே,
தேனீக்கள் பெருமளவில் அழிவதும் அதனால் பூந்தூள்ச் சேர்க்கை
பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தி குறைவதும் இந்த உணவு வலையத்தில்
நிகழ்வதில்லை.].

16. உலக நுண்ணுயிர் வளங்களை யார் காக்கின்றார்கள்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்
வலையம்

செயற்கை உரங்களையும் உயிர்க்கொல்லிகளையும் பயன்படுத்தி ஒரே
மாதிரியான [பன்மயத் தன்மையற்ற] பயிர்களும் கால்நடைகளும்
வளர்க்கப்படுகின்றன. விளைவு:

பன்மயம் அழிகிறது:

கணக்கிலடங்கா வகை நுண்ணுயிர்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன;

மண் வளமிழக்கிறது.

பயிர்களும் கால்நடைகளும் தம் உணவுகளைப் பயன்படுத்தும் திறன் குறைகிறது.

இதற்கு மறுவினையாகச் சுமார் 14 லட்சம் வகை நுண்ணுயிர்களின் உயிர்மூலங்கள்
ஆய்வகங்களில் காக்கப்படுகின்றன; நுண்ணுயிர்ப் பன்மயத்தில்
2%-க்கும் குறைவானவையே கண்டறியப்பட்டுள்ளன.

மண் வளத்தைப் பாதுகாப்பதன் மூலமும் பல்வகைக் கால்நடைகளையும்
பயிர்களையும் பராமரிப்பதன் மூலமும் இந்த வேளாண் முறைகள் மண்ணிலுள்ள
நுண்ணுயிர்களின் பன்மயத்தை காக்கின்றன.

கால்நடை வகைகளைப் பொருத்தும் அவற்றின் உணவைப் பொருத்தும் அவற்றில்
வாழும் நுண்ணுயிர்கள் மாறுபடுகின்றன; அதனால் கால்நடைகளின் உணவு
செரிக்கும் திறன் அதிகரிப்பதுடன் அவை வெளியிடும் (பசுமைக் குடில்
வளிகளில் ஒன்றான) மீத்தேன் வளியின் அளவும் குறைகின்றது.

17. யாருடைய தொழில்நுட்பங்கள் நமக்கு வருங்காலத்தில் உணவு தரும்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்

சோதனைச் சாலைத் தீர்வுகளைப் பரந்த வெளியில் பயன்படுத்துவதால்
சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம் (எ.கா. மரபீனி
மாற்றத் தொழில்நுட்பம்)

ஒரு சில நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருந்து உலகெங்கும் பரப்புவதால் பன்மயம் ஒழிதல், நோய்கள்
மிக எளிதில் பரவுதல், உழவர்களின் தற்சார்பு ஒழிந்து வெளியிடுபொருள்
செலவு அதிகரித்தல் போன்ற தீமைகள் உள்ளன.

ஆராய்ச்சிகளும் பாரம்பரிய அறிவும் கட்டற்றவை (காப்புரிமை போன்ற
தளைகள் அற்றவை); எனவே அவை அனைத்து உழவர்களுக்கும்
பயன்படுகின்றன.

சூழலில் பரந்த அளவில் இருந்து பெறும் அறிவையும் தீர்வுகளையும்
உழவர்கள் தம் சிறு நிலங்களில் பயன்படுத்துகின்றனர். [இதனால் சூழல்
எவ்வகையிலும் பாதிக்கப்படாது.]

18. நம் வேலையையும் நலத்தையும் யார் பாதுகாக்கின்றனர்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்

வளர்ந்த நாடுகளில் கடந்த அரை நூற்றாண்டில் சிறு உழவர்களின்
எண்ணிக்கை பாதிக்குக் கீழ் குறைந்துவிட்டது.

ஒன்றிய அரசியத்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் வேளாண்
தொழிலாளர் கூலிகள் 39% குறைந்துவிட்டன.

உயிர்க்கொல்லிகளால் ஆண்டுதோறும் முப்பது லட்சம் பேர்
கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்; 220,000 பேர் இறக்கின்றார்கள்.

சகாராப் பாலைவன நாடுகளில் உயிர்க்கொல்லிகளுக்குச் செலவிடும்
ஒவ்வொரு ரூபாய்க்கும் உடல் நலக் குறைவு மற்றும் அதன் விளைவாக உற்பத்தித் திறன்
குறைவு ஆகியன காரணமாக உழவர்கள் மேலும் மூன்று ரூபாய் இழப்பைச்
சுமக்கின்றனர். (இந்த இழப்பின் மதிப்பு ஆண்டுக்கு 39,700 கோடி ரூபாய்.)

வறிய நாடுகளின் ஊர்ப்பகுதிகளில் வாழும் குடும்பங்களில் 80%-க்கும்
அதிகமானவை (அவற்றில் பெரும்பாலானவை பெண்களால் நிர்வகிக்கப்பெறுபவை)
உணவு உற்பத்தியில் ஈடுபடுகின்றன.

260 கோடிப்பேர் வேளாண்மை, மீன் பிடித்தல், கால்நடை
வளர்ப்பு ஆகியவற்றைச் சார்ந்து வாழ்கின்றனர்.

உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் பண்ணைகள் வேதி வேளாண் பண்ணை
களைக் காட்டிலும் 30% அதிகப்பேருக்கு வேலை தருகின்றன.

19. கொழுத்துப்போனவர்கள் எவ்வளவு பேர், பசியால் வாடுவோர் எவ்வளவு பேர்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்

140 கோடிப்பேர் தேவைக்கு அதிகமான உடல் எடையுடன் இருக்கின்றார்கள்.

அவர்களில் ஐம்பது கோடிப்பேர் பருமனாக உள்ளார்கள்.

ஆனால், 200 கோடிப்பேர் நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறையால் அல்லலுறுகின்றார்கள்.

அவர்களில் 87 கோடிப்பேர் பசியால் வாடுகிறார்கள்.

வளர்ந்த நாடுகளில் மருத்துவர்கள் பரிந்துரைத்ததைக் காட்டிலும் மக்கள்
2.2 மடங்கு அதிகம் இறைச்சி உண்கின்றனர்.

பருமனால் அவதிப்படுவோர் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டு
வாக்கில் இரட்டிப்பாக உயரும்.

உணவுப் பற்றாக்குறை, அளவுக்கு அதிகம் உண்ணுதல் ஆகிய இவ்விரு நேரெதிரான கூறுகளால்
உற்பத்தித் திறன் பாதிக்கப்படுதல், உடல் நலம் தொடர்பான செலவுகள் ஆகியவற்றின்
மதிப்பு ஆண்டுக்கு 2,52,00,000 கோடி ரூபாய். இது
உலகளவில் உணவு தொடர்பான சில்லறை வணிகச் சந்தை மதிப்பில் பாதி!

பசியாலும் சத்துப் பற்றாக்குறையாலும் வாடுவோரில் பெரும்பாலானோருக்குக்
கிடைக்கும் கொஞ்சநஞ்ச உணவும் இந்த வலையத்தில் இருந்துதான் கிடைக்கிறது.

பயிர்கள், கால்நடைகள் ஆகிய அனைத்திலும் உயிரினப் பன்மயத்தைப் போற்றிக் காக்கிறது.

ஊட்டச் சத்தும் பன்மயமும் மிக்க உணவை உற்பத்தி செய்வதன் மூலம்
2,52,00,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிதியைச் சேமிக்க இயலும்.

உயிரினப் பன்மயத்தைக் காப்பதால் உணவுப் பயிர்களில் உள்ள சத்துகளை
ஆயிரம் மடங்கு அதிகரிக்க இயலும். எ.கா. நாளொன்றுக்கு 200 கிராம் அரிசிச் சோறு
உண்பதால் ஒருவருக்குக் கிடைக்கும் புரத்தச் சத்தின் அளவு அன்றாடத்
தேவையில் 25% முதல் 65%-க்கும் அதிகமாக இருக்கலாம் (அரிசி
வகையைப் பொருத்து). ஒரு வாழைப் பழம் அன்றாட 'ஏ' வைட்டமின் தேவையில்
1% முதல் 200%-க்கும் அதிகமான அளவைத் தரலாம் (வாழை வகையைப்
பொருத்து)!

20.கலைத் துறையில் யார் பன்மயத்தை ஊக்குவிக்கின்றார்கள்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்
கலைத் துறை உட்பட எதிலுமே பன்மயம் நிலவுவது பெரு நிறுவனங்களின்
முற்றுரிமைகளுக்கும் உபரிப் பெருக்கத்திற்கும் எதிரானது. ஆகவே
அவை பன்மயத்தைக் குறைப்பதற்கான அனைத்து வேலைகளையும்
செய்கின்றன. விளைவு: உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளில் 3,500
மொழிகளும் அவை சார்ந்த பண்பாடுகள், கலைகள் ஆகியனவும் இந்த
நூற்றாண்டில் ஒரேயடியாக அழிந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பண்பாட்டுப் பன்மயம் வேளாண் பன்மயத்துக்கு இன்றியமையாத் தேவையும்
அதன் ஒரு பங்குமாகும் என்பது இந்த வலையத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று.

அருஞ்சொற்பொருள், கலைச்சொற்கள், அயல்மொழிப் பெயர்ச்சொற்கள்

அமேசான்.............................................................................amazon

உலக உணவுப் பேராயம்...................................................................the world food congress

ஒன்றிய அரசியம்.........................................................................the united kingdom

ஒன்றிய நாடுகளவை...................................................................the united nations

கரியீருயிரகை ('கரியமில வளி')....................................................CO2

செர்மனி......................................................................................germany

நைட்ரேட்.....................................................................................nitrate

பசுமைக் குடில் வளிகள்................................................................green house gases

புதைபடிம எரிபொருள்..................................................................fossil fuel

புரதச் சத்து................................................................................protein

பூந்தூள் ('மகரந்தம்' என்பதன் தமிழ் வடிவம்)................................pollen

பைவலைப் படகு.........................................................................trawler

ப்ரெசீல்.....................................................................................brazil

மரம் அருகிய, வறண்டு தழைகின்ற, வெப்பமண்டலப் புல்வெளி........savanna(h)

மீத்தேன்......................................................................................methane

முற்கோள்....................................................................................premise

முற்றுரிமை.................................................................................monopoly

வன்பாலை.................................................................................semi-arid

விழுக்காடு...............................................................................percentage

மேற்கண்ட பட்டியல்களில் ஆங்கில மூலத்தில் பண மதிப்பைப் பொருத்தவரை அமெரிக்க டாலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தமிழாக்கத்தில் ஒரு டாலருக்கு 63 ரூபாய் என்ற கணக்கில் பண மதிப்பைக் காட்டியுள்ளோம்.

குறிப்பு

உலகெங்கும் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், அதனால் பட்டினிச் சாவுகள் மலிந்து இருப்பதாகவும், இனி வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு இருக்கும் நிலப்பரப்பைக் கொண்டு உணவு விளைவிக்க வேண்டுமெனில் புதிய வேளாண் தொழில்நுட்பங்களால் மட்டுமே இயலும் என்றும் வேளாண் பெருநிறுவனங்கள் ஒரு வித பயத்தை வியாபாரம் செய்து வருகின்றன. இதன் உள்நோக்கம் பிரேசில், இந்தியா போன்ற‌ வளர்ந்து வரும் நாடுகளில், பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்சார்பு வேளாண்மையைச் சிதைத்து அந்நாட்டு உழவர்களைத் தங்கள் வாணிபத்திற்குச் சந்தையாக‌ மாற்றுவதே ; அன்றி ஏழைகளுக்கு உணவளிப்பது ஒருபோதும் பெருநிறுவனங்களின் நோக்கம் அல்ல.

இதற்குக் கைக்கூலிகளாக நம் அரசியல்வாதிகளும், அறிவியலாளர்களும் நவீன வேளாண்மை என்ற போர்வையில் நம் பாரம்பரிய வேளாண் கட்டமைப்புக்களைச் சிதைத்து வருகிறார்கள். ஆனால் சூழலுக்கும், மண்நலத்திற்கும், உற்பத்திக்கும், உயிரிப் பன்மையத்திற்கும், உடல்நலத்திற்கும் ஏற்றது சிறு,குறு உழவர்களின் பாரம்பரிய உழவே. இக்கருத்துக்களை நாம் கூறுவதை விட, மேலைநாட்டு அறிவியலாளர்களும், பொருளியல் நிபுணர்களும் கூறுவது மேலும் எடுபடும். பரிதி அவர்கள் தொடர்ந்து இவ்வகையான கட்டுரைகளைத் தூய தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். உணவுப் பற்றாக்குறை என்பது ஒரு வாணிப உத்தியே அன்றி உண்மையே அல்ல. நாம் இப்போது உற்பத்தி செய்யும் உணவு 1400 கோடிப் பேருக்குப் போதுமானது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன! மேலும், மேலும் தொழில்நுட்பம் என்ற போர்வையில் வாணிபம் செய்யும் போலி அறிவியலாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ஊடகங்களுக்கும் பதிலாகப் பரிதியின் மொழியாக்கங்கள் அமைந்துள்ளன. இக்கருத்துக்கள் எமக்குத் தெரிந்தவரை அறிவியல் பூர்வமாகத் தமிழில் இதுவரை வெளிவரவேயில்லை. இக்கருத்துக்களை உழவர்களும், தன்னார்வலர்களும், உயிர்ம வேளாண்மையைப் பரப்புரை செய்பவர்களும் உள்வாங்கிக் கொண்டு பொது மேடைகள், தொலைக்காட்சி போன்ற விவாதங்களில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.]

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org