தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி? - பசுமை வெங்கிடாசலம்


உழவாண்மை பண்ணை - டெல்டா பகுதிக்கு உண்டான தொழில்நுட்பங்கள்

சென்ற ஆறு மாதங்களுக்கு முன் தற்சார்பு இயக்கத்தைச் சேர்ந்த அனந்து, பாலாஜி சங்கர், பாபுஜி , ஜெயக்குமார் ஆகியோர் ஈரோடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்துள்ள உழவாண்மை பண்ணைகளை சுற்றிப்பார்க்க வந்திருந்த போது பலவிதமான சந்தேகங்களை முன் வைத்தனர். அவற்றுள் முக்கியமானது "நாங்கள் பார்த்த பண்ணைகள் அனைத்தும் மேடான பகுதியில் அமைந்துள்ளன. ஆனால் எங்கள் பகுதியில் வருடத்தில் பல நாட்கள் தண்ணீர் தேங்கி நிற்கும். இங்கு நீங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை நாங்கள் எப்படி அங்கு பயன்படுத்தமுடியும்?" என்பது. சென்ற மாதம் நான் அவர்கள் பகுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது வருடத்தில் 2 மாதங்கள் அவர்களது வயல்கள் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியாகவும், நீர் வடியும் நிலை மிகவும் மோசமாகவும் இருந்ததை கண்டேன். அந்த வயல்களை ஒட்டியுள்ள சாலைகள் சுமார் 2 முதல் 3 அடி உயரத்தில் அமைந்துள்ளன. அவர்கள் குடியிருக்கும் பகுதியும் 2 முதல் 3 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆக மழை காலத்தில் தேங்கி நிற்கும் நீரின் அளவு இரண்டு அடிக்கு குறைவாக இருப்பதை அறிந்தேன். நமது ஆசிரியருக்கு சொந்தமான பூமியும் அதே அமைப்புள்ளதாக இருந்தது. காரைக்கால் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் நிலையும் இவ்வாறே இருக்கக்கண்டேன். ஆக டெல்டா பகுதியின் சூழல் வேறு விதமாகவும் மற்ற மாவட்டங்களில் உள்ள சூழல் வேறு விதமாகவும் அமைந்துள்ளன.

டெல்டா மாவட்டங்களில் உள்ள வயல்களில் வாணி எடுத்தால் அதில் சுமார் 6 மாதங்களுக்கு தண்ணீர் தேங்கியிருக்கும். அதில் மரங்களை வைத்து உருவாக்க முடியாது. ஆக ஒரு போகம் நெல்லும் மற்ற காலங்களில் தரிசாகவும் இவை இருந்து வருகின்றன. இதை மாற்றி இவற்றை நிரந்தர உழவாண்மை பண்ணைகளாக மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனென்றால் நெல் விளைச்சலைக்கொண்டே ஒரு குடும்பம் வருடம் முழுவதும் வாழ்ந்துவிட முடியாது. மற்ற தேவையான பொருட்களையும் அவர்கள் உற்பத்தி செய்யவேண்டும். கால்நடை தேவைக்கு வைக்கோல் மட்டுமே போதுமானதாக இருக்கமுடியாது. வருமானமும் பல வழிகளில் வந்தால் மட்டுமே சந்தோஷமான வாழ்க்கை சாத்தியமாகும். உழவாண்மை பண்ணை என்பது வருடம் முழுவதும் உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கவேண்டும். பண்ணையில் வேலையும் வருடம் முழுவதும் ஒரே சீராக இருக்க வேண்டும். அந்த பண்ணை அதை சார்ந்துள்ள அனைத்து குடும்பங்கள் மற்றும் கால்நடைகளின் தேவைகளையும் ஈடு செய்யக்கூடிய உற்பத்தி நிலையில் அமையவேண்டும். தேவைக்கு மீந்த பொருட்கள் சந்தைக்கு செல்லவேண்டும். அதில் கிடைக்கும் வருவாய் மற்ற செலவினங்களை ஈடுகட்டும் வகையில் அமையவேண்டும். ஆக மூன்று, நான்கு மாதங்கள் தண்ணீர் தேங்கி நிற்கும் விவசாய பூமியிலும் வருடம் முழுவதும் வருமானம் எடுக்க வேண்டும் என்றால் அங்கு கால்நடைகளையும் மரங்களையும் வளர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது எப்படி சாத்தியப்படும் என்பதை பார்ப்போம்.

இது வரையில் (மற்ற மாவட்டங்களில்) வாணிகள் எடுத்து மழை நீரை சேகரித்தோம். அதே வாணிகளில் மரப்பயிர்களை நட்டு வளர்த்தோம். அதே போல நீர் தேங்கி நிற்கும் டெல்டா பகுதியிலும் வாணியை அகலமாக எடுத்து (அகலம் 15 அடி, ஆழம் 5 அடி முதல் 6 அடி வரை) அந்த மண்ணை வாணியை ஒட்டியுள்ள பூமியில் சுமார் 35 அடி அகலத்திற்கு பரப்பும்போது அந்த 35 அடி அகலமுள்ள பூமியும் சுமார் 3 அடி உயர மேட்டு பூமியாக ஆகிவிடும். இந்த மேட்டில் நீர் தேங்கி நிற்க வாய்ப்பில்லை. ஆக நமது பூமி முழுவதும் சுமார் 35 அடி மேட்டு இடமாகவும்,15 அடி பள்ளமான இடமாகவும் இருக்கும். பள்ளங்களில் சுமார் 6 மாதங்களுக்கு குறையாமல் நீர் வற்றாமல் இருக்க வாய்ப்பு உண்டு. இதில் தாராளமாக மீன் வளர்க்கலாம். மேடாக உள்ள பகுதியில் மரங்கள் மற்றும் காய்கறிகள், மூலிகைச்செடிகள், கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் ஆகியவற்றி சுலபமாக உற்பத்தி செய்துகொள்ள முடியும். இந்த மேடான பகுதியில் மேட்டு பாத்தி அமைத்து சொட்டுநீர் பாசனம் அல்லது தெளிப்பு நீர் பாசனம் செய்துகொள்ள முடியும். இங்கு போதிய அளவு தண்ணீர் வசதி உள்ளது. மிக குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தினாலே போதும். அந்த பண்ணையின் பரப்பை பொறுத்து 20% பூமியை மட்டும் நெல் பயிர் செய்வதற்கு பயன்படுத்திக்கொண்டு மற்ற பரப்பு முழுவதும் மற்ற பயிர்கள் செய்வதற்கு ஏற்ப மேற்கூறியபடி மாற்றி அமைத்துக்கொள்ளலாம். மரங்களில் இருந்து கொட்டும் இலையானது பள்ளத்தில் வளரும் மீன்களுக்கு உணவாக இருக்கும். மீன் வளர்ப்பதற்கு தனியாக நாம் ஏதும் செய்யத்தேவையில்லை. ஆக மீன் வளர்ப்பும் ஒரு எளிமையான வேலையாக இருக்கும். உழவாண்மை பண்ணை என்பது எந்த இடத்திலும் எந்த சூழலிலும் சாத்தியப்படும். நாம் நமது அறிவை சிறிதளவு பயன்படுத்தினாலே போதும். சூழலை புரிந்துகொள்ளும் அறிவு மட்டுமே நமக்கு தேவைப்படுகிறது. டெல்டா பகுதிகளுக்குண்டான உழவாண்மை பண்ணையை எப்படி வடிவமைப்பது என்பதனை தொடர்ந்து பேசுவோம்.

உழவை வெல்வது எப்படி? - நடைமுறைப் பயிற்சி

"பசுமை" மா. வெங்கடாசலம் ஒருங்கிணைப்பில், இரு நாட்கள் பயிற்சி.

இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு. கோ. நம்மாழ்வாரின் கனவான தற்சார்பு வாழ்வியலை நோக்கி பல பண்ணைகள் நாடெங்கும் வளர்ந்து வருகின்றன. ஆயினும் அவற்றுள் எவ்வளவு பண்ணைகள் தற்சார்புடனும் ஆதாயத்துடனும் இயங்குகின்றன என்பது கேள்விக்குறியே.

நட்டமின்றி இயங்குவதே நிலைத்த வேளாண்மையாக இருக்க முடியும். இதற்கான பயிற்சியே இந்த 'தற்சார்பு வாழ்வியல் அறிமுகப்பயிற்சி' ஆகும். இப்பயிற்சி நடக்குமிடம் நட்டத்திலிருந்து ஆதாயத்திற்கு திரும்பியுள்ள ஒரு மாதிரிப்பண்ணை என்பது இதன் சிறப்பு. இப்பயிற்சி இயற்கை வேளாண்மையை விரும்பி ஏற்கும் புதியவர்களுக்கும் ஆதாயத்துடன் கூடிய நிலைத்த வேளாண்மையை விரும்பும் அனைவருக்குமென வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு அவசியம். கட்டணம் உண்டு (உணவு, தங்குமிடம் உட்பட).

ஒருங்கிணைப்பு:

"பசுமை" மா. வெங்கடாசலம், அம்மாபேட்டை, ஈரோடு.

தொடர்பு எண் : 9443545862

பயிற்சிக்காலம் : இரண்டு நாட்கள் (ஒவ்வொரு சனி,ஞாயிறும் தொடர் பயிற்சி, அக்டோபர் 2015 முதல் தொடக்கம்)

பயிற்சி நிகழுமிடம்: "பூர்வ பூமி", கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம்.

முன்பதிவிற்கு :

தா. குலசேகரன்,

திருவருள் பவுண்டேஷன்,

தஞ்சாவூர்.

தொடர்பு எண் : 9750583738

[வெங்கிடாசலம் அவர்கள் பல பண்ணைகளைப் பல்வேறு சூழல்களில் நட்டத்தில் இருந்து லாபத்திற்கு மாற்றியிருக்கிறார். இது தாளாண்மை இதழ் நடத்தும் பயிற்சி அல்ல. பசுமை வெங்கிடாசலம் அவர்கள் தனிப்பட்ட முறையில் நடத்தும் பயிற்சி. - ஆசிரியர்]

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org