தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்


இம்மாத நாயகர்கள் பகுதிக்கு நாம் நுழையுமுன் ஒரு சிறு தன்னிலை விளக்கம். நாம் அன்றாடம் பலதரப் பட்ட மக்களைச் சந்திக்கிறோம், வெவ்வேறான அனுபவங்களை பெறுகிறோம். அறிந்தோ அறியாமலோ இந்நிகழ்வுகள் நமக்கு வித்தியாசமான வாழ்க்கைப் பாடங்களை உணர்த்துகின்றன‌. சில மனதிற்குகந்தவை, சில அவ்வேளையில் கசந்தாலும் வாழ்வின் ஒரு புதிய பரிமாணத்தை, கற்றலை நமக்களிப்பவை. சில இனிமையும் கற்றலும் ஒருசேரக் கொண்டவை. இம்மாத நாயகர் வரிசைச் சந்திப்பு மூன்றாம் வகையைச் சார்ந்தது.

இம்முறை இத்தொடரில் நாம் சந்திக்கும் தம்பதிகள், சந்திப்பின் போதும் பின்னரும் நினைத்து நினைத்து வியக்க வைத்த, அன்பும் அறனும் அகத்தே நிறைந்த, அமைதியான இயற்கை வாழ்வு வாழ்பவர்கள்.

ரகு, நிஷா இருவரும் திருச்சி நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். சராசரி நடுத்தர இளைஞர்கள், பொருளாதார உயர்வுக்காக கல்வி கற்பதைப் போன்றே இவர்களும் கல்லூரிப் படிப்பு முடிந்து மென்பொருள், தகவல் தொழில் நுட்பம் தொடர்பான வேலை பெற்று பெரு நகரத்துக்கு இடம் மாறினர். 26ஆம் வயதில் பலரின் கனவான அமெரிக்கா நாட்டுக்கு குடிபெயர்தலும் நடந்தேறியது. தம்பதியரின் இயற்கையான அறிவுக் கூர்மையும், வேலையைத் திறம்படச் செய்யும் ஆர்வமும் அவர்களுக்கு தாம் மேற்கொண்ட பணியில் நல்ல உயர்வைக் கொடுத்தன. மேம்போக்கான கண்ணோட்டத்தில், அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர் நிலையை அடைந்து கொண்டிருந்தது. அமெரிக்காவில் சொந்த வீடும் வாங்கினர், ஒரு ஆண் மகவும் பிறந்தான்.

புறத்தேடல்கள் யாவும் ஒவ்வொன்றாய் ஈடேற, நிஷா ரகு இருவரும் இவ்வுலகின் இயந்திர மயமான போக்கைப் பற்றி சிந்திக்க தொடங்கினார்கள். அமெரிக்காவில் சில சமூக நல இயக்கங்களில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினர். ரகு உடல், ஆரோக்கியம், மருத்துவம், நல்ல உணவு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபாடு கொள்ளத் துவங்கினார். இவ்வாராய்ச்சி அவரை இயற்கை விவசாயத்தின் பாதைக்கு இட்டுச் சென்றது.

ரகு, நிஷா அமெரிக்காவின் பளபளக்கும் செயற்கை நுகர்வோர் கலாச்சாரத்திலிருந்து விலகத் தொடங்கினார்கள். ஒவ்வொரு வாரமும், Farmer's Market எனும் அமெரிக்க உழவர் சந்தையில் வீட்டிற்கு தேவையான உணவு பொருட்களை வாங்குதல், சிறு வீட்டுத்தோட்டம், அங்குள்ள இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள் / விவசாயிகள் நட்பு என்று இயல்பான இனிதான பாதையை நோக்கி வாழ்க்கை நகரத் தொடங்கியது. இணைய தளம் மூலம் ஒத்த சிந்தனையுடைய நண்பர்கள் வட்டமும் விரிவாகத் தொடங்கியது.

ரகுவின் எண்ணப்படி,

- ஒரு விசையைத் தட்டினால் மின் விளக்கு எரிவதைப் போல்,

- இந்த நொடியில் அல்லது நேரத்தில்,

- இப்புத்தகத்தில் இருந்த ஒரு குறிப்பிட்ட கருத்து / செய்தியால்

- இவருடைய உரையில் கிடைத்த சிந்தனையால்

- ஒரு மனிதரின் ஒரு சந்திப்பால்

என்று நம் எண்ண மாற்றங்களை அறுதியிட்டு என்றுமே சொல்ல இயலாது. நமக்குள்ளே அந்த விதை எப்போதோ இடப்பட்டிருந்தாலன்றி, அவ்வெண்ணங்கள் உயிர் கொண்டு செயலாக மாற வாய்ப்பில்லை.

நிஷாவும் ரகுவும் சிறு வயது முதலே நண்பர்கள், அண்டை வீட்டுக்காரர்கள். இரு வீட்டாரும் வீட்டுப் புழக்கடையில், சிறு காய்கறி தோட்டம் அமைத்தல், நிஷா, திருச்சியை அடுத்துள்ள முத்தரச நல்லூர் கிராமத்தில் உள்ள தன் தாத்தா தோட்டத்திற்கு விடுமுறையில் செல்லுதல், ரகு உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பூளவாடி கிராமத்தில் இருந்த பாட்டனாரைக் காணச் செல்லுதல் என்று கிராம வாழ்க்கைக்கும் உடல் உழைப்புக்கும் உள்ள மகத்துவத்தை உணர்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அமெரிக்காவில் வாழ்ந்த காலையும், வழக்கமான புல்வெளி அமைப்பது போன்ற பயனற்ற புற அழகு விரயங்களை தவிர்த்து, வீட்டைச் சுற்றியுள்ள இடத்தில் காய்கறி வெள்ளாமை, சிறு மரம் வளர்த்தல் போன்ற வாழ்வாதார அவசியங்களிலேயே கவனம் செலுத்தியுள்ளார்கள்.

ரகுவின் கூற்றுப்படி, அவர்கள் எப்போது இந்தியா திரும்ப வேண்டும், இயற்கை விவசாயத்தில் முழுமையாய் ஈடுபட வேண்டும், மகன் முறைசாரா வீட்டு கல்வி பயிலுதலே நலம், போன்ற முடிவுகள் யாவும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நிகழ்ந்தவை அல்ல. இவையெல்லாம் ஒரு பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுகளே.

ஒரு கால கட்டத்தில், அவர்கள் தம் தாய் நாடு திரும்பத் திட்டமிட்டு, அமெரிக்காவில் வாங்கிய வீட்டை விற்க எத்தனித்தனர். அப்பொழுது, அங்கிருந்த விற்பன்னர்கள் இவர்களை வேண்டாமெனத் தடுத்து, வீட்டின் விலை மதிப்பு சில ஆண்டுகளில் மிகவும் உயரும் என்று அறிவுரை கூறியுள்ளனர். ரகு தம்பதிய‌ர்கள் பரிந்துரையை மறுதலித்து, முடிவில் எந்த மாற்றமும் செய்யாமல் அமெரிக்காவில் இருந்து வேலையை விடுத்து, வீட்டை விற்று இந்தியாவுக்குத் திரும்பினர். இதில் ஒரு சிறு ஆச்சரியமான, நகைப்புக்குரிய செய்தி என நிஷா கருதுவது என்னவென்றால், அவர்கள் வீட்டை விற்ற பின்னர் (2008 ஆம் ஆண்டு) விற்பன்னர்களின் கருத்துக்கு மாறாக, அமெரிக்க வீட்டு வணிகம் பெரும் வீழ்ச்சிக்குள்ளானது. கோவை நகரத்துக்கு மேற்கே, சிறுவாணி செல்லும் சாலையில், ஆலந்துறை கிராமத்தில் அமைந்துள்ளது, ரகு குடும்பத்தினர் இல்லம் மற்றும் தோட்டம். இந்தியா வந்த பின்னர், இங்கே நிலம் வாங்கி, லாரி பேக்கர் அமைப்பின் ஆலோசனையுடன், குறைந்த சிமென்ட் பயன்படுத்தி, அருகில் கிடைக்கும் பொருட்களை முடிந்த அளவு சேகரித்து ஒரு வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு ஏக்கர் இவர்களுடையதும், ஆறுக்கும் மேற்பட்டது நண்பர்களுடையதுமாய், எட்டு ஏக்கருக்கு பரந்திருக்கிறது இவர்களது பண்ணை. வழக்கமான பராமரிக்கப் பட்டு சதுரங்களாய் வெவ்வேறு பயிர்கள் வளர்ந்திருக்கும் விவசாய நிலங்களை போல் அல்லாமல், ஒரு காட்டைப் போன்ற தோற்றமளிக்கிறது. வித‌ விதமான மரங்களினூடே அங்கங்கே பல வித பயிர்கள், இடையிடையே மருந்துச் செடிகள் என அற்புதமாய் முரட்டு இயற்கையாய் பண்ணை தோற்றமளிக்கிறது.

வீட்டிற்கு அருகே ஒரு சிறு சமூக கூடம் அமைத்துள்ளார்கள். அதைப்பற்றி விசாரித்தோம். அங்குள்ள கிராமத்துச் சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும் இவர்கள் வார இறுதிகளில் ஆங்கில பேச்சுத் திறமை, கணிதம், இயற்கை வாழ்வு, யோகாசனம், உடற் பயிற்சி வகுப்புகள் நடத்துவதாக தெரிவித்தார் ரகு. இள வயதினர், மிகவும் ஆர்வத்துடன் இயற்கை வேளாண்மை வழிமுறைகளைக் கற்று கொள்கிறார்கள். அதுவே பிற்காலத்துக்கு சரியான வழி என்றும் நன்றாக உணர்கிறார்கள் என்று அவர்கள் கூறியது நமக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.

விவசாயம் பற்றி, பயிர்களைப் பற்றி, ஒவ்வொரு பயிரின் மருத்துவ குணம் பற்றி, பயிர்களைச் சார்ந்து வாழும் பூச்சிகள், பறவைகள், மற்ற விலங்குகளைப் பற்றி அவர்களின் புரிதல் எங்களுக்கு மிக வியப்பாக இருந்தது. அவர்களின் இயற்கை ஈடுபாடு இரசாயனங்கள் இல்லாமல் வேளாண்மை செய்வதில் மட்டுமல்லாது, உலகில் சூழல் பாதுகாப்பில் மற்ற விலங்குகளின் பங்கு, நாம் காட்டு விலங்குகளிடமிருந்து அறிந்து கொள்ளக் கூடியவை என பரந்ததாக உள்ளது. எடுத்துக்காட்டாக, கடந்த ஐயாயிரம் ஆண்டுகளாக, மனித குலம் எவ்வாறு வேம்பின் பலன்களை படிப்படியாக அறிந்து கொண்டிருக்கிறார்கள் என்று இருவரும் விளக்கினார்கள். வேப்ப மரத்தின் இன்னும் பல பயன்களை நாம் கற்க முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம். இவ்வறிவும் அதன் உண்மையான பயன்பாடும், ஒரு தனி மனித முயற்சி என்றெண்ணுவது சிறுபிள்ளைத்தனம். இது வழி வழியாக மனித இனம் அடையும் புரிதலே என்று நம‌க்கு விளக்கினார்கள்.

நாங்கள் இருவர் ரகு குடும்பத்தைச் சந்திக்கச் சென்றிருந்தோம். அதில் ஒருவர் உடல் நலக்குறைவால், இருமிக் கொண்டிருந்ததை கண்ட நிஷா, ஏதும் கூறாமலே, தோட்டத்தில் இருந்து, ஆடா தோடா இலையைப் பறித்து கசாயம் செய்து கொடுத்தார். நாங்கள் புறப்படுகையில், ஒரு சிறிய பையில், ஆடா தோடா இலை, இரு வித துளசி இலைகள் ஆகியவற்றைக் கொடுத்து கசாயம் வைக்கும் முறையையும் சொல்லி இரண்டு நாட்கள் தொடர்ந்து அருந்துங்கள், உங்கள் இருமல் குணப்படும் என்று கூறினார். அச்செயலின், அடக்கமான அன்பு எங்களை மிக்க நெகிழச் செய்தது.

சுருக்கமாக இவர்களைப் பற்றி சொல்ல இந்த ஒரு சிறு கருணையே சிறந்த அடையாளம்.

இவர்கள் இருவரும் அன்பும் அறனும் உள்ளத்தில் நிறைந்து காணப்படுகிறார்கள். யாரைப் பற்றியும் எந்தக் குறையும் அவர்களுக்கு பேச அவசியமும் இல்லை, கசடான எண்ணங்களே இவர்களிடம் சிறிதும் எக்கணமும் இல்லை. இது போன்ற அன்பின் வழி செல்பவர்களைச் சந்திக்கும் பொழுது, நாம் எவ்வளவு புத்துணர்வடைகிறோம் என்பதைப் பற்றி மட்டுமே, அவர்களிடமிருந்து விடை பெற்று எங்கள் இடம் சேரும் வரை நாங்கள் பேசிக் கொண்டே இருந்தோம்.

[தொடர்பிற்கு : செம்மல் 9994447252; ரகுநாத் - 9488442897 ]

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org