தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

எண்கட்டு வித்தை - ராம்


[கடந்த சில மாதங்களாக ராம் அவர்கள் கிராமிய வாழ்வாதாரங்கள் குறித்து எழுதி வருகிறார். இவர், ஆரோவில்லுடனும், தமிழக அரசுடனும் இணைந்து, Sustainable Livelihood Institute என்ற பெயரில் முழுவதும் தற்சார்பான வாழ்வாதாரப் பயிற்சி மையம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளார்]

சென்ற இதழில் ‘எண்கட்டு வித்தை’ எழுதியதைச் சிலர் பாராட்டியுள்ளனர், பலர் இது இன்னமும் பல அரசு துறைகளுக்கும் உண்மைதான் என்று நேராகவே தெரிவித்துள்ளனர். ஆனால் சென்ற மாதம் கட்டுரையை எழுதி முடித்த தருவாயில்தான், இந்தியாவில் எத்தனை தண்டிக்கத்தக்க குற்றங்கள் நிகழ்கின்றன என்பதைக் கணக்கிட்டு வெளிவரும் தேசியக் குற்றப் பதிவு குழுமம் ( National Crime Records Bureau) அறிக்கை வெளியானது. இந்த வருடாந்திர நிகழ்வு சாலை விபத்தில் எவ்வளவு பேர் இற‌க்கின்றனர், தீ விபத்தில் எத்தனை பேர் இற‌க்கின்றனர், எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு பேர் இற‌க்கின்றனர் போன்ற புள்ளி விவரங்களை மட்டுமே வெளியிட்டு வந்தால், இதனை யாரும் பொருட்படுத்த‌மாட்டார்கள். ஒரு நாள் தலைப்புச்செய்திக்குகூட இத்தகைய புள்ளிவிவரங்களை நமது பிரபல ஊடகங்கள் பயன்படுத்தமாட்டா. ஆனால், இந்த புள்ளிவிவரப்படி ஒவ்வொரு வருடமும் நமது நாட்டில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளுகின்றார்கள் என்பதை அரசு நிறுவனமே ஒப்புக்கொள்ளுவதாக அமைவதால், இதனை சமூக சிந்தனையாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் மற்றும் ஊடகங்களும் மிகவும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இதனால் அரசு அதிகாரிகளுக்கும், அரசு நிறுவன‌ங்களுக்கும் பெரிய அளவு கேள்விள் வரத்துவங்கியிருப்பதால் இந்த நிறுவன‌ங்கள், உள்ள பிரச்சனையை தீர்க்காமல், இந்த புள்ளிவிவரத்தை எவ்வாறு மாற்றி எழுதலாம் என்று தீவிரமாக யோசித்து வந்துள்ளன. அதன் விளைவாக, இந்த வருடம், விவசாயிகளின் தற்கொலையை எண்ணும் விதத்தை மாற்றி “வெற்றி” பெற்றுள்ளன இந்த நிறுவனங்கள்! இதனை குறித்த ஒரு தீவிர ஆய்வுக்கட்டுரையை, சமூக எழுத்தாளர், திரு. சாய்நாத் அவர்கள் எழுதியுள்ளார். அதன் சாரம் :

“இந்தியாவில் 1995 முதல் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட அளவு 2014ஆம் ஆண்டு 300,000 என்னும் எண்ணை தாண்டியது. ஆனால் 2014ல் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் இதற்குமுன் 19 வருடங்களாக தேசிய குற்ற ஆய்வுத்துறை வெளியிட்ட தற்கொலை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க இயலாது. எனெனில், இந்த நிறுவனம் இந்த ஆண்டு விவசாயிகளின் தற்கொலைகளை எண்ணும் விதத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய கணக்கிடும் முறையின்படி, 2014ல் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய வருடம் (2013) இருந்த 11772வில் இருந்து, 5650வாகக் குறைந்தது. இந்த அருமையான சாதனையை இந்த நிறுவனம், கணக்கிடும் பட்டியலை மாற்றி அமைப்பதன்மூலம் சாதித்தது. ஒவ்வொரு வருடமும் எத்தகைய மக்கள் தற்கொலை செய்து கொள்ளுகின்றார்கள் என்று பட்டியலை வெளியிடும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளின் தற்கொலை” சரிபாதியாக குறைந்த அதே நேரத்தில், “மற்றவர்” என்னும் தலைப்பின்கீழ் உள்ள தற்கொலைகளின் எண்ணிக்கை அதிபயங்கரமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள கர்நாடக மாநிலம், 2014ல் 321 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக இந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இஃது, அதன் முந்தைய ஆண்டான, 2013லிருந்து மிகப்பெரிய சரிவு!

ஆனால், இந்த 12 மாதத்தில் “மற்றவர்” கணக்கீட்டின் கீழ் எண்ணிக்கை 245% உயர்ந்தது. இது போலவே, இந்தியாவில் முக்கியமான 5 விவசாய தற்கொலை மாநிலங்களில் இந்த அறிக்கையின்படி “மற்றவர்” என்ற தலைப்பின் கீழ் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை சராசரி 128% உயர்ந்துள்ளது….” (பி. சாய்நாத் எழுதியுள்ள, “தற்கொலைக் கணக்குகளின் கொலை” என்னும் கட்டுரையிலிருந்து. முழு கட்டுரை இந்த இணைதளத்தில் படிக்க - http://psainath.org/the-slaughter-of-suicide-data/)

ஏன் நமது அரசில் இத்தகைய எண்கட்டு வித்தை நடக்கின்றது? இப்படி நம்பத்தகாத புள்ளிவிவரங்களை வைத்து எடுக்கப்படும் அரசு திட்டங்களும், முடிவுகளும் எவ்வாறு மக்களுக்கு பயனளிக்கும்? என்னும் நமது சிற்றறிவிற்கு எட்டிய சிந்தனை அரசின் உயர் பதவியில் அமர்ந்து ஆட்சியை நடத்தும் புத்திசாலிகளுக்கு ஏன் தெரியாமல் போனது? தெரியாமல் இல்லை. நமது அரசின் ஊழலின் முதல் கட்டமே, புள்ளிவிவர சேகரிப்பில்தான் துவங்குகின்றது. எப்படி என்று பார்போம் –.

நீங்கள் உங்கள் வீடு கட்டுதற்கு ஒரு காண்டிராக்டரை நியமிக்கின்றீர்கள் என்று வைத்துகொள்ளுங்கள், அவருக்குக் காசைக் கொடுக்கும் பொழுது, “வீடு எந்த அளவிற்கு கட்டிவிட்டீர்கள்?” என்று அவரிடமே கேட்டு, அதற்கு அவர் கொடுக்கும் பதிலை நம்பி மேலும் காசை கொடுப்பீர்களா? நம்மில் யாரும் இந்த தவறை செய்யமாட்டோம். காண்டிராக்டர் நமது சொந்தக்காரராய் இருந்தால்கூட கொஞ்சமாவது நாமே நேரில் சென்று நிச்சயத்த பிறகுதான் காசைக் கொடுப்போம். ஆனால், அரசில் இதற்கு முற்றிலும் மாறாக, கணக்கெடுப்பவனே அந்த கணக்கிற்கு அதிகாரம் படைத்தவனாகின்றான்!

இதனை ஒரு உதாரணம் கொண்டு பார்ப்போமேயானால் நமக்கு எண்கட்டு வித்தையின் வேர்கள் புலப்படும் - நமது ஊர்களில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் எவ்வளவு சிசுக்கள் பிறந்த தருவாயில் மரிக்கின்றன என்பதை எந்த அதிகாரி கணக்கெடுக்கின்றாரோ, அந்த மருத்துவமனையில் சிசுக்களின் மரணத்தைத் தடுக்கும் பணியையும் அந்த அதிகாரிதான் செய்ய வேண்டியிருக்கிறது. பிறந்த சிசுக்களின் மரணம் உலக அளவில் ஒரு சமூகத்தின் ஆரோக்கியத்தின் முக்கியமான ஒரு குறியீடாகக் கருதப்படுகின்றது. இன்று, நமது தேசத்தில் ஒவ்வொரு 10,000 பிறந்த சிசுக்களில், 60 சிசுக்கள் மரிப்பதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 22 ஆக உள்ளது. 12ஆவது 5ஆண்டு திட்டம் முடியும்முன் இந்த எண்ணை 13ஆக குறைக்கவேண்டும் என்று நமது மாநில அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

சரி, இந்த எண்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன? ஒவ்வொரு மருத்துவமனையிலும் பிறந்த சிசுக்களைக் குறித்த அனைத்துத் தகவல்களையும் மருத்துவமனையில் உள்ள குழந்தை பிறப்பு மற்றும் தாய்மார்கள் பிரிவில் வேலை செய்யும் சிப்பந்திகள் ஒரு ஆவணத்தில் பதிவு செய்யவேண்டும். அப்படி அவர்கள் பதிவு செய்த தகவல்களை – அவற்றில் எத்தனை குழந்தைகள் மரித்தன என்னும் தகவலும் அடங்கும் – அவர்கள் தங்களில் வட்ட அளவில் உள்ள அதிகாரகளுக்கு அளிக்கவேண்டும், அவர் அதனை மாவட்ட அளவிலான அதிகாரிக்கும், அவர் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளின் கணக்கையும் ஒன்று சேர்த்து மாநில அரசாங்கத்திற்கு அளிப்பார். அவரவர் மாவட்டத்தில், சிசு மரிப்பதை தடுப்பது அவரது வேலைதான். தற்செயலாக அவர், தனது மாவட்டத்தின் ஒரு மருத்துவமனையில் அல்லது மொத்த மாவட்டத்தில், சிசு மரிப்பு 50ஐ தாண்டிவிட்டது, ஆனால் தன்னை தவிர அதனை யாரும் உணரவில்லை என்றால், அவர் அந்த புள்ளிவிவரத்தை கொண்டு என்ன செய்வார்? ஒரு நேர்மையான அதிகாரியாக இருந்தால், “இது ஏன் நடந்தது?” என்று ஒரு ஆய்வு நடத்துவார். “எனது மாவட்டத்தில் ஏதோ குறை உள்ளது, நான் அதனை ஆய்வு செய்துகொண்டிருக்கின்றேன்” என்று உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவார். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அப்படி ஒரு நேர்மையான அறிக்கையை அவர் அனுப்பினால், அவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்படலாம் அல்லது தற்காலிக வேலை நீக்கம்கூட செய்யப்படலாம். இன்னமும் கொடுமை, அவர்மீது “வேலையை சரியாக செய்யவில்லை” என்று குற்றம்சாட்டி, அவரை விசாரிக்க ஒரு குழுவை நியமிக்கலாம்.

ஏன் உயர் அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கை எடுக்கின்றார்கள்? எப்பேர்ப்பட்ட நல்ல அதிகாரிகளின் மேற்பார்வையில் கூட சிலசமயங்களில் தவறு நடக்க வழி உள்ளது என்று அவர்கள் உணரவில்லையா? ஏனென்றால் அவருக்கும் மேலே உள்ள மந்திரிகள் பெரும்பாலும் தங்கள் ஆட்சியின் கீழ் மக்களுக்கு எந்தக் குறையும் வரவில்லை என்பதை எந்த அளவிற்கு பொய் சொல்லியேனும் நிரூபிக்கவே விரும்புகின்றனரே தவிர, அந்தக் குறைக்கு என்ன காரணம் என்றோ அல்லது அந்தக் குறையை நிரந்தரமாக எவ்வாறு அகற்ற வேண்டும் என்ற அக்கறையைக் கொண்டவர்களாக இருப்பதில்லை. அத்தகைய அரசியல்வாதிகளை நாம் அரசாங்கத்திற்குக் தேர்ந்தேடுப்பதில்லை. 3000 ரூபாய்க்கு நாம் ஓட்டை விற்று நமது சுதந்திர சன‌நாயக உரிமையை உதாசீனப்படுத்தும் பொழுது, தனது பொறுப்பை எந்த மந்திரி பெரிதாக எடுத்துக்கொள்ளுவார்? அவர் கீழ் வேலை செய்யும் உயர் அதிகாரிகளுக்கு, “நான் இருக்கும் வரை எந்தக் குறையும் இருக்கிற‌ மாதிரி தெரியக்கூடாது” என்று கூறுவாரே தவிர, “நான் இருக்கும் வரை சுதந்திரமாக எல்லாக் குறைகளையும் குறைக்க என்ன செய்யவேண்டுமோ அதனை செய்யுங்கள்” என்று கூறமாட்டார். அவர்கீழ் இயங்கும் உயர் அதிகாரியும் இதனையே பின் பற்றுவார்.

ஒரு நேர்மையான அதிகாரிக்கு, அவர் நேர்மையாக வேலை முற்படுவதற்கு ஏன் இந்த விபரீத விளைவு? என்று நாம் கேட்கலாம். ஆனால், எண்ணும் வேலையை கொடுத்த அரசாங்கம் அந்த எண் என்னவாக இருக்கவேண்டும் என்று அவருக்கு விதித்ததை, நியாயம்தானா என்று நாம் கேட்பதில்லை. இதனாலேயே, பெரும்பாலான அரசாங்க அதிகாரிகள், மாநிலத்தில் 22 ஆக இருக்கவேண்டுமென்றால், அதற்கு ஏற்றார்போல் தங்களது எண்களை சமைக்கின்றனர். “மேலே கீழே 2க்குள்ள வராமாதிரி (+- 2) பார்த்துக்குங்க”, என்பது அரசாங்க அலுவலகத்தில் அதிகமாக கேட்கப்படும் ஒரு வாக்கியம். யாருக்கும் நம்பிக்கையில்லாத ஒரு எண்ணை சமைப்பதில் மொத்த நிர்வாகமும் உழைக்கின்றது என்பதுதான் நமக்கு வேதனையளிப்பதாக உள்ளது.

இது ஒரு உதாரணமே, இதனை போலவே இன்னமும் பல துறைகளிலும் இதே நிலை. ஒரு நேர்மையான அரசாங்க அதிகாரி இன்று உள்ள நிலவரப்படி நீடித்து வேலை செய்யமுடியும் என்று நம்புவதற்கே இடமில்லாமல் ஆக்கிவிட்டோம்!

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org