தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நடவுத் திருவிழா - ஜெயக்குமார்


கடந்த இரு இதழ்களாகத் தாளாண்மையில் “பாரம்பரிய நெல் ஒரு பணப்பயிரே” என்ற தலைப்பில் திரு. ஆலங்குடி பெருமாள் அவர்கள் கண்டறிந்த வழியில் 50செ.மீ 50 செ.மீ இடைவெளியில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் தொழில்நுட்பத்தைப் பற்றி எழுதியிருந்தோம். இம்முறைமையில் இயற்கை வேளாண்மை செய்வதும், அதை எல்லா விவசாயிகளுக்கும் பரப்புரைமை செய்யும் எண்ணத்துடனும், அசோகன், ஸ்ரீராம், மற்றும் பலர் கூடி நண்பர் ஸ்ரீராம் பண்ணையில் 06.09.2015 அன்று நடவுத்திருவிழா ஒன்று நடைபெற்றது. இதில் பெருமாள் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.மிகவும் சிறப்பாக நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சுமார் 120 விவசாயிகள் மற்றும் மாணவர்கள் வந்து ஆர்வத்துடனும் சிறப்புடனும் விழாவை முடித்துவைத்தார்கள். இந்த விழாவின் நாயகன் திரு ஆலங்குடி பெருமாள் அவர்கள் அங்கு வந்த அனைவருக்கும் பொறுமையாகவும், ஆர்வமாகவும் வழிமுறைகளை சொல்லிக்கொடுத்தார்.

முதலில் பண்ணையின் உரிமையாளரான திரு ஸ்ரீராம் அவருடைய தந்தை மற்றும் அண்ணன் வந்திருந்த அனைத்து விவசாயிகளையும் காலையில் இயற்கை இடுபொருளை கொண்டு கஞ்சிசெய்து பருகச் சொல்லி விருந்தோம்பினார்கள். காலை 10மணிக்கு தொடங்கி விழா மதியம் 2மணிவரை வயல்களிலும், அதன் பிறகு கேள்வி, பதில் நேரகமாகவும் பிரிந்து இருந்தார்கள். அனைவருக்கும் மதிய உணவும் மிகச் சிறப்பாகப் பரிமாறப்பட்டது .

காலை 10மணிக்கு விதைகளை எப்படி விதைக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பெருமாள்அவர்கள் விரிவாக சென்னார்.

விதைத் தேர்வு மற்றும் நேர்த்தி

விவசாயிகள் முதலில் விதைகளை நன்றாக தேர்வு செய்யவேண்டும் முதலில் அறுவடையின் போது விதைநெல் வயல்களை தேர்வு செய்தவுடன் விதை நெல்லை கைகளால் ஆள் வைத்து அறுவடை செய்து ஒரு நாள் நன்கு காய வேண்டும். மீண்டும் மூன்றாம் நாள் இரண்டு மணிநேரம் காயவேண்டும். விதையின் அளவு சன்னரகம் என்றால் ஒரு ஏக்கருக்கு250 கிராம் - மோட்டா ரகம் என்றால் 500 கிராம்!

விதைப்பதற்கு ஒரு நாள் முன் விதைகளை நன்றாக சலித்து சுத்தம் செய்து தேவையான அளவை எடுத்துக் கொள்ளவும். அந்த விதைகளை 10லிட்டர் தண்ணீருக்கு 1கிலோ கல் உப்பை போட்டு கரைத்து அதில் விதைகளை போடவேண்டும். இப்போது அதில் மேலே மிதக்கின்ற விதைகளை எடுத்துக் களைந்துவிடவேண்டும். அதன் பின் உப்புத்தன்மையை விதையிலிருந்து போக்க மீண்டும் மீண்டும் மூன்று முறை நல்லத் தண்ணீரில் போட்டு கழுவ வேண்டும். அதன் பிறகு 1கிலோ விதைக்கு 10கிராம் 'சுடோமோனாஸ்' போட்டுக் கரைத்துத் தண்ணீர் ஊற்றி விதைகளை சுமார் 18 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். 18மணிநேரம் கழித்து விதைகளை தண்ணீரிலிருந்து வடிகட்டி சணல் சாக்கில் போட்டு மேலே வைக்கோல் அல்லது சாக்கு போட்டு நன்கு மூடி இருட்டறையில் சுமார் 18 முதல் 24 மணி நேரம் வைத்துப் பின் விதைக்க வேண்டும்.

நாற்றங்கால் தயாரிப்பு

நாற்றாங்கால் ஒரு ஏக்கருக்கு 5 சென்ட் என்ற அளவில் இருக்க வேண்டும். நாற்றாங்கால் தயார் செய்யும் போது ஒரு ஏக்கருக்கு தேவையான 5சென்ட் நிலத்தில் ஒரு டன் நன்கு மக்கிய சாணி எரு அடித்துக் கலைக்க வேண்டும். பிறகு தண்ணீர் பாய்ச்சி ஒரு வாரம் களைவிதைகளை முளைக்கச் செய்து பின்பு டிராக்டர் மூலம் ஒரு சால் உழவு ஓட்டவேண்டும். அதன்பின் பசுந்தழைகளை வெட்டிப் போட்டுக் காலால் மிதித்து மூன்று நாட்கள் கழித்து டிராக்டர் மூலம் 2ம் சால் உழவு ஒட்ட வேண்டும். இரண்டு முறை உழவுஒட்டி சுமார் 15நாட்கள் சேற்றை கனியவிட வேண்டும். இப்போது கை டிராக்டர் (power tiller) மூலம் ஒரு சால் ஒட்டி நன்கு சமன் செய்து பிரம்பு பலகை மூலம் சமன் செய்து 250கிராம் (அ) 500கிராம் விதை நெல்லை விதைக்கலாம். விதைகளை அதிக இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள் மாலையில் முளை தண்ணீர் வைத்து மறு நாள் காலை வடிகட்டிவிடவும்.

நாற்றுப் பராமரிப்பு

10ம் நாள் (அ) 12ம் நாட்களில் அமுத கரைசலை 10-20 லிட்டரை மடைவாய் தண்ணீரில் கலந்து விடவும். தேவைப்பட்டால் பஞ்சகவ்யம் தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். தயார் செய்த நாற்றை 18 முதல் 20 நாட்களில் நடவு செய்ய வேண்டும்.

நடவு வயல் நடவு வயல் தயார் செய்யும் போது தக்கை பூண்டு, சணப்பு,காவாளை போன்ற பசுந்தாள் உரத்தை 50 நாட்கள் கழித்து உழவு செய்தால் இது போன்ற நடவு முறையில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக சொன்னார்கள். விதைகளை விதைப்பதற்கு முன்போ நடவு வயல் உழவு செய்திருக்க வேண்டும். நடவு வயல் மிகவும் சமமாக இருக்கவேண்டும். நாற்றுகளை பெண் வேலை ஆட்கள் மூலமாகவே பறித்து விடலாம். ஒரு ஏக்கர் நடவு செய்ய 10 பெண் ஆட்கள் இருந்தால் போதுமானது.

நடவு

நடவில் இடைவெளி (50செ.மீ * 50செ.மீ) பட்டம் இருக்குமாறு சதுர நடவு நட வேண்டும். முதலில் வயலின் நான்கு ஒரங்களிலும் போட வேண்டும் அப்போழுது தான் வரிகள் ஒரே நேராக வரும்.(படத்தில் காண்க)

பெருமாள் நடவு முறையில் நடவு செய்தால் ஒரு குத்துக்கு ஒரு நாற்று மட்டுமே வைக்கவேண்டும். நாற்றுகளை வேர் பகுதி மட்டும் நடவு செய்தல் வேண்டும். இவ்வாறு அதிக இடைவெளி கொடுப்பதனால் களைகளை சுலபமாகவே காலால் மிதித்துவிடலாம். களைகளைப்பற்றி கவலைவேண்டாம். இந்த முறையில் நடும் போது ஒரு குத்தில் சுமார் 70 முதல் 120 வரை தூர்கள் வெடிக்கின்றன. ஒரு கதிரில் சுமார் 250 முதல் 400 நெல்மணிகள் இருக்கின்றன. நெல் மணிகள் திரட்சியாகவும் உள்ளன‌.

நல்ல‌ விளைச்சலுக்கான கணக்கு


அ.குத்துகள்/சதுர மீட்டர் =4
ஆ.தூர்கள்/குத்துகள் =70
இ.நெல்மணிகள்/தூர்கள் =200
ஈ.1000 நெல்மணிகள் எடை =17கிராம்
உ.சதுர மீட்டர்/ஏக்கர் =4000

கிடைக்கக் கூடிய விளைச்சல் = அ * ஆ * இ * ஈ * உ /1000

= 4 * 70 * 200 * 17 * 4000 / 1000

= 3808000 கிராம்/ஏக்கர் = 3.8 ட‌ன்

நன்றாக நிர்வாகம் செய்தால் இயற்கைச் சேதாரத்தை 20% முதல் 25% ற்குள் கட்டுப் படுத்த இயலும் (குறிப்பாகச் சிறு விவசாயிகள்). மேற்கண்ட முறையில் பாரம்பரிய நெல் வகைகளை ஸ்ரீராம் பண்ணையில் சென்ற ஆண்டு சுமார் 12 வகையான நெல் வகைகள் ஆராய்ச்சி செய்துள்ளனர். பாரம்பரிய நெல் ரகங்கள் ஏக்கருக்குச் சுமார் 2 டன் வரை விளைச்சல் கண்டதாக ஏற்கனவே ஸ்ரீராம் கூறியிருந்தார்.

மாப்பிள்ளை சம்பா , கிச்சிலி சம்பா, தேங்காய்ப் பூ சம்பா, கருடன் சம்பா போன்ற வகைகள் மிகவும் நன்றாக வந்தது என்றும் ஸ்ரீராம் கூறினார்.

பெருமாள் நடவு முறையின் நன்மைகள்

1. விதை நெல் மிகவும் குறைவே.(ஏக்கருக்கு 250 - 500 கிராம்)

2. நாற்றடி மற்றும் நடவு செலவு மிகவும் குறைவு.(ஏக்கருக்கு 2500 ரூபாய் மட்டுமே)

3. பயிரின் இடைவெளி அதிகம் இருப்பதால் அதிக தூர் மற்றும் அதிக நெல்மணிகள்.

4. அதிக இடைவெளி காரணமாக பூச்சி நோய் மற்றும் எலிகளின் தாக்குதல் அறவே இல்லை என்று சொல்லலாம்.

5. களை எடுப்பது மிகவும் சுலபம்.

மொத்தத்தில் சாகுபடி செலவு ஏக்கருக்கு ரூபாய் 5000 வரை குறைவதாலும், மகசூல் 500 - 1000 கிலோ அதிகமாவதாலும் மகசூலில் ரூபாய் 10,000 வரையிலும் மொத்தத்தில் ரூபாய் 15,000 வரை அதிக‌ வருமானம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கடைமடைப் பாசன விவசாயிகள் இம்முறையில் இயற்கையாகப் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து பாரம்பரிய நெல் ஒரு பணப்பயிரே என்று யாம்பெற்ற இன்பத்தைப் பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

[தொடர்பிற்கு: ஜெயக்குமார் - 9962009302; பெருமாள் - 9486835547]

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org