தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தோரோ பக்கம் - சாட்சி

எனவே தீவிர வேளாண்மையைப் பற்றி நான் கூறக்கூடியது எல்லாம் நான் விதைகளைத் தயாராக வைத்திருந்தேன் என்பது மட்டுமே. விதைகள் நாட்பட நன்றாகும் என்று பலரும் எண்ணுகின்றனர். காலம் நல்ல விதைகளைப் பழுதானவற்றில் இருந்து பிரித்தெடுக்கும் என்பதில் ஐயமில்லை; எனவே நான் இறுதியில் நடும்பொழுது என் ஏமாற்றங்கள் குறைவாக இருக்கும். ஆனால் என் சகமனிதர்களுக்கு நான் கூறுவதெல்லாம், இயன்றவரை சுதந்திரமாகவும் தளைகள் இன்றியும் வாழுங்கள் என்பதுதான். நீங்கள் ஊர்ச் சிறையில் சிறைப்படுவதற்கும், உங்கள் பண்ணையில் சிறைப்படுவதற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை!

கிழவன் கேட்டோ [கிரேக்க அறிஞன்] கூறுவான் - “நீங்கள் ஒரு பண்ணையை வாங்க எண்ணும் பொழுது அதை எண்ணங்களில் நன்றாய்ச் சுழற்றுங்கள், பேராசையுடன் (அவசரமாய்) வாங்காதீர்கள்; அதை நன்றாய்ப் பார்க்க முயற்சிக்கவும் சோம்பல் படாதீர்கள்; ஒருமுறை மட்டும் சுற்றிப் பார்த்தால் போதும் என்று எண்ணாதீர்கள். அது நல்ல பண்ணையாய் இருந்தால், நீங்கள் எவ்வளவு முறை செல்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக உங்களை மகிழ்விக்கும்” என்று. நான் அவசரமாக எந்தப் பண்ணையையும் வாங்கப் போவதில்லை; அதை என் வாழ்நாள் முழுவதும் சுற்றிச் சுற்றி வரப் போகிறேன் - இறுதியில் என்னை அதிலேயே புதைத்து விட்டால் அது எனக்கு மிக அதிக மகிழ்வைத் தரும்! தற்போதையை முயற்சி [வால்டன் குளக்கரையில் இரண்டு வருடங்கள் வாழ்ந்தது] இது போன்ற ஒரு பரிசோதனையே. இரண்டு வருட அனுபவத்தை வசதிக்காக‌ ஒரு வருடமாகச் சுருக்கி அதை நான் விரிவாக விவரிக்க விரும்புகிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல், நான் துக்கத்திற்குப் பிலாக்கணம் பாட விழையவில்லை; பெரும் ஆரவாரத்தோடு வைகறையை வரவேற்கும் ஒரு சேவற்கோழியைப் போல் என் வெற்றிகளைப் பறை சாற்ற விரும்புகிறேன் - என் சக மனிதர்களை எழுப்புவதற்காகவேனும்!

நான் முதன்முதலில் காட்டில் வசிக்க ஆரம்பித்த பொழுது , அதாவது பகல் மட்டுமின்றி இரவும் அங்கு தங்க ஆரம்பித்த போது, என் வீடு குளிர்காலத்திற்குத் தயாராக இருக்கவில்லை. (நான் அங்கு வசிக்க ஆரம்பித்தது அமெரிக்க விடுதலை தினமான ஜூலை 4 1845 - இது திட்டமிடாமல் தற்செயலாய் நடந்தது). சுவற்றுப் பலகைகளுக்குப் பூச்சோ, வீட்டைச் சூடாக்க தீமூலையோ, சிம்னியோ இல்லை - இடைவெளிகளுடன் இருந்த பலகைகள் இரவை மிகவும் தண்மையாக்கின. புதிதாய் இழைக்கப்பட்ட பலகைகளும் சன்னல் நிலைகளும் அதற்கு ஒரு அழகான, காற்றோட்டமான தோற்றத்தைக் கொடுத்தன. காலை வெய்யிலில் என் மரப் பலகைகள் பனித்துளி மின்ன ஒரு பொலிவுடன் திகழ்ந்தன.

என் கற்பனைக்கு இவ்வீடு நாள் முழுதும் ஒரு விடியலின் இயல்பைக் காட்டியது. நல்ல காற்றோட்டமான, பூச்சற்ற இம்மர வீடு, பயணிக்கும் ஒரு கடவுளை விருந்தோம்ப ஏற்றதாகவும், ஒரு பெண்கடவுள் தன் துகிலைத் தரை வரை தழைய விட ஏற்றதாகவும் பட்டது. என் வீட்டைத் தாண்டிச் செல்லும் தென்றல் மலைமுகடுகளைத் தழுவி, அங்கிருந்த இசையின் பகுதிகளைக் கொண்டு வந்தது - மண்ணின் இசையின் வானுலகப் பகுதிகளை மட்டுமே பிரித்து! காலைக் காற்று எப்போதும் வீசிக் கொண்டிருக்கிறது; படைப்பெனும் கவிதை தடையின்றி இசைக்கிறது ; ஆனால் அதைக் கேட்கவோ மிகச் சொற்பமான காதுகளே உள்ளன. ஒலிம்பஸ் [கிரேக்கப் புராணத்தில் கடவுள்கள் வாழும் மலை] என்பது புவியின் எல்லா மேற்பரப்பும்தான்! - வால்டன் (Walden or Life in the Woods) நூலில் இருந்து

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org