தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வளர்ச்சியின் மறுபக்கம் - பரிதி


[உள்ளடக்கிய வளர்ச்சி என்று வாயளவில் பேசிக்கொண்டு ஏழைகள் மேலும் ஏழைகளாக வழிவகுக்கிறது தற்போதைய பொருளாதாரக் கொள்கை. வளர்ச்சியின் மறுபக்கத்தை மறவாதிருந்தால் நம் மட்டற்ற நுகர்ச்சிப் பசி சற்று மட்டுப்படும் என்பதால் இவ்விழிப்புணர்வுக் கட்டுரையை வெளியிடுகிறோம் - ஆசிரியர்]

கட்டுரையில் உள்ளவற்றில் அதிகப் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள், அருங்கலைச் சொற்கள், மற்றும் அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் போன்றவற்றின் ஆங்கில வடிவம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன - பரிதி (thiru.ramakrishnan@gmail.com)

இந்தியக் குடும்பங்களின் வாழ்நிலை குறித்த கள ஆய்வினை இந்திய அரசு 2011-ஆம் ஆண்டு மேற்கொண்டது. 'குமுகவியல் பொருளாதாரம் மற்றும் சாதிக் கணக்கெடுப்பு' எனப்படும் அந்த ஆய்வு மூன்று பகுதிகளைக் கொண்டது: (அ) ஊர்ப்புறக் கணக்கெடுப்பு, (ஆ) நகர்ப்புறக் கணக்கெடுப்பு, (இ) சாதிவாரிக் கணக்கெடுப்பு. அதில் ஊர்ப்புறக் கணக்கெடுப்புத் தொடர்பான தரவுகளை சூலை 3 அன்று அரசு வெளியிட்டது [பார்க்க: மேற்கோள் 1]. அதன்படி, இந்தியாவில் மொத்தம் உள்ள குடும்பங்கள் 24 கோடியே 39 லட்சம் எனவும் அவற்றில் ஊர்ப்புறக் குடும்பங்களின் எண்ணிக்கை 17 கோடியே 91 லட்சம் எனவும் அறிகிறோம். கீழ்க்கண்ட பதினான்கு அளவைக்கட்டளைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை ஒரு குடும்பத்திற்குப் பொருந்தினால் அந்தக் குடும்பம் இந்தக் கணக்கெடுப்புக்கு அப்பாற்பட்டதெனக் கொள்ளப்படும் என்றும் அத்தகைய குடும்பங்கள் இந்திய ஊர்ப்புறக் குடும்பங்களில் ஏழு கோடியே ஐந்து லட்சம் இருப்பதாகவும் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

அ) பின்வருவனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை வைத்திருக்கும் குடும்பங்கள்:

1. 2, 3, அல்லது 4 உருளிகள் (சக்கரங்கள்) கொண்ட மோட்டார் ஊர்தி

2. 3 அல்லது 4 உருளிகள் கொண்ட மோட்டர் பொருத்தப்பட்ட வேளாண் கருவி

3. ஐம்பதாயிரம் ரூபாய்களுக்கும் அதிகம் கடன் பெறும் உரிமையுள்ள உழவர் கடன் அட்டை

4. உறுதியான சுவர்களும் கூரையும் உள்ளதும் மூன்று அல்லது அதற்கு அதிகமான அறைகளைக் கொண்டதுமான வீடு

5. குளிர்பதனி

6. கம்பிவழித் தொலைபேசி இணைப்பு

7. பாசன வசதி, நீரிறைப்பு இயந்திரம் ஆகியவற்றுடன் இரண்டரை ஏக்கருக்கும் அதிக நிலம்

8. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்ப் பருவங்களுக்குப் பாசன வசதியுடன் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஏக்கர் நிலம்

9. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நீரிறைப்பு இயந்திரமும் ஏழரை அல்லது அதற்கு மேற்பட்ட ஏக்கர் நிலமும்.

ஆ) குடும்பத்தில் ஒருவருக்காவது கீழ்க்கண்டவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை பொருந்துதல்:

10. அரசுப் பணியாளராக இருத்தல்

11. வேளாண்மையல்லாத, அரசுப் பதிவு பெற்ற வணிகம் அல்லது தொழிலகத்தின் உரிமையாளராக இருத்தல்

12. மாதம் பத்தாயிரத்துக்கு அதிகமான வருமானம் கிடைத்தல்

13. வருமான வரி செலுத்துதல்

14. வாழ்தொழில் வரி செலுத்துதல்

[இத்தகைய குடும்பங்கள் இந்தக் கணக்கெடுப்பில் இருந்து ஒதுக்கப்பட்டன. எனவே, இவை பின்வரும் தரவுகளில் இடம்பெறவில்லை.]

இந்திய ஊர்ப்புறங்களில் 16 லட்சத்து ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு (மொத்த ஊர்ப்புறக் குடும்பங்களில் ஏறக்குறைய ஒரு விழுக்காடு) கீழ்க்கண்டவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை பொருந்துவதாக இந்தக் கணக்கெடுப்பில் தெரியவருகிறது.

1. வீடு இல்லாதிருத்தல்

2. இரந்து ('பிச்சையெடுத்து') வாழ்தல்

3. கையால் மலம் அள்ளுதல் உள்ளிட்ட துப்புறவுப் பணியில் ஈடுபடுதல்

4. பின்தங்கிய பழங்குடியினர்

5. பிணைத் தொழிலில் இருந்து சட்டப்படி விடுதலையானவர்

மொத்த ஊர்ப்புறக் குடும்பங்களில் எட்டுக் கோடியே 69 லட்சம் குடும்பங்கள் பின்வருவனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இன்னல்களால் வாடுகின்றன:

அளவைக்கட்டளை (தேர்வு முறை) எத்தனைக் குடும்பங்கள்?
கோடி லட்சம் ஆயிரம் விழுக்காடு

உறுதியான சுவர்களும் கூரையும் இல்லாத, ஒரே அறை உள்ள வீடுகளில் வாழ்தல்

2 37 00 13.25

18-59 அகவைக்குள் யாரும் இல்லாத நிலை

0 65 15 3.64

16-59 அகவைக்குள் ஆண்கள் இல்லாது, பெண் தலைமை தாங்குதல்

0 68 96 3.85

மாற்றுத்திறனாளிகளைத் தவிர வேறு பெரியோர் இல்லாதிருத்தல்

0 7 16 0.40

பட்டியல் சாதியினர் (தாழ்த்தப்பட்டவர்கள்) அல்லது பட்டியல் பழங்குடியினர் குடும்பங்கள்

3 86 00 21.53

25 அகவைக்கு மேற்பட்ட, எழுதப் படிக்கத் தெரிந்த பெரியோர் இல்லாதன

4 21 00 23.52

நில உரிமை இல்லாமையால் வருமானத்திற்கு உடலுழைப்பை மட்டும் பெரிதும் சார்ந்துள்ளவை

5 37 00 29.97

எழுபத்தைந்து விழுக்காடு ஊர்ப்புறக் குடும்பங்களில் அதிகம் சம்பாதிக்கும் குடும்ப உறுப்பினர் மாதம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய் கூடச் சம்பாதிப்பதில்லை! எட்டு விழுக்காடு

குடும்பங்களில்தான் ஒருவராவது மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார். (தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினக் குடும்பங்களைப் பொருத்தவரை நூற்றில் ஐந்துக்கும் குறைவான குடும்பங்களில் தான் ஒருவராவது மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்.) ஐந்தில் ஒரு குடும்பந்தான் ஊர்தி வைத்துள்ளது. நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்களில் யாருக்கும் தொடர்ந்து சம்பளம் தரும் வேலை இல்லை. பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நாள்கூலி வேலைகளை நம்பி வாழ்கின்றனர்.

முப்பது விழுக்காடு குடும்பங்கள் உழுதுண்டு வாழ்கின்றன. பாதிக்கும் அதிகமான குடும்பங்களுக்குச் சொந்த நிலம் இல்லை. சொந்த நிலம் வைத்திருப்பவற்றில் நாற்பது விழுக்காடு குடும்பங்கள் பாசன வசதியற்ற நிலங்களுக்கு உரிமையாளராக உள்ளன. பாசன வசதி உள்ள குடும்பங்களில் பத்தில் ஒரு பங்குக் குடும்பங்கள்தாம் நீரிறைப்பு இயந்திரங்களை வைத்துள்ளன. [2]

இந்தக் கணக்கெடுப்பு குறித்து அரசு வெளியிட்டுள்ள தரவுகள் முழுமை பெறாதவை, நம்பகத் தன்மை குறைந்தவை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. [3] மக்களுடைய நிலைமை இந்தக் கணக்கெடுப்பில் தெரிவதைக் காட்டிலும் மோசமாக இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. இருப்பினும், இந்திய ஊர்ப்புறக் குடும்பங்களின் அவல நிலையை இந்தத் தரவுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. பொது நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இதனைக் குறித்து மேலும் கற்றறிந்து செயல்படவேண்டும் என்கிறார் மாந்த நேயமிக்க முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி அர்சு மேந்தர் [4].

"குமுக நலன் பேணுவதில் இருந்து அரசு விலகவேண்டும்; சந்தைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி பல லட்சக் கணக்கான இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டுவிட்டது" என்பது “தாராளமயம், தனியார்மயம், உலகமயம்" (தா.த.உ.) ஆகியவற்றைப் பரப்பும் முதலாளி வர்க்கம் தொடர்ந்து சொல்லிவரும் மந்திரம். தா.த.உ. திட்டங்கள் நடைமுறைக்கு வந்து இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், பல கோடி இந்தியர்கள் இன்னும் கடும் வறுமை, கல்வியறிவின்மை, அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்பது தெரியாத நிலைமை ஆகியவற்றால் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இழந்து வாழ்வதை இந்தக் கணக்கெடுப்பில் இருந்து அறிகிறோம்.

1951-ஆம் ஆண்டு முதல் உழவுக் குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. உழவர்கள் அரசு உதவிகளை அதிகம் எதிர்பாராமல் தம் உழைப்பை மட்டும் சார்ந்து வாழும் நிலையில் இருந்திருக்க முடியும். ஆனால் இப்போது அவர்களில் பலர் எவ்வித உரிமைகளும் அற்றவர்களாக, அடுத்த வேலை எப்போது, எங்கு கிடைக்குமோ என்ற நிலையற்ற வாழ்க்கை வாழ்கின்றனர். பல லட்சக்கணக்கான குடும்பங்கள் வேலைக்காக வெகு தொலைவு இடம்பெயர வேண்டியுள்ளது. அத்தகையோருக்கு வழங்கல் அட்டை ('ரேசன் கார்டு') மூலம் குறைந்த விலையில் உணவுப் பண்டங்களோ பிற அரசுத் திட்டப் பலன்களோ கிடைப்பதில்லை. அவர்களுடைய குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை. இடம்பெயர இயலாத நிலையில் உள்ளவர்கள் தத்தம் ஊர்களில் வறுமையால் வாடிச் செத்து மடிகின்றனர்.

ஆனால், நம் அரசுகள் இந்தக் கள ஆய்வில் இருந்து என்ன கற்றுக்கொண்டுள்ளன? குமுக நலன் பேணுவதில் இருந்து அரசுகள் மேலும் விலகிவருகின்றன. நம் நாட்டின் இயற்கை வளங்களை மேன்மேலும் சூறையாடுவதற்கு ஏதுவாகப் பெருநிறுவனங்களுக்குச் சாதகமாகச் சட்டங்கள் திருத்தப்படுகின்றன அல்லது புதிதாக இயற்றப்படுகின்றன!

அருஞ்சொற்பொருள்

அர்சு மேந்தர் -harsh mander; அளவைக்கட்டளை-criterion; குமுகவியல் பொருளாதாரம் மற்றும் சாதிக் கணக்கெடுப்பு-socio economic and caste census (secc).

மேற்கோள்கள்

1. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=122963

2. Rukmini S and Sanath Bansal, “8 Reality Checks from the SECC”, The Hindu, July 3, 2015

3. Rohini Mohan, “Socio Economic and Caste Census data unreliable or incomplete: Experts”, The Economic Times, July 20, 2015

4. Harsh Mander, “Many degrees of hopelessness in India's villages” Hindustan Times, July 30, 2015

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org