தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


பணியெனப் படுவது நிலத்தொடு நீரே!


இந்த மாதம் த‌மிழகத்தில் "வெற்றிகரமாக" நடந்தேறிய உலக முதலீட்டாளார் சந்திப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுமார் இரண்டு லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை ஈர்த்து அந்நிய நேரடி முதலீட்டில் தமிழகம் முன்வரிசையில் நிற்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு வருடம் 38% வளருவதாக அரசின் இணையதளம் மார்தட்டிக் கொள்கிறது. இந்திய மாநிலங்களில் முதலீட்டாளார்களைக் கவர்வதில் மூன்றாம் இடத்தில் தமிழகம் இருக்கிறது. எல்லாம் நல்ல விஷயம்தான், கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் சற்று உட்சென்று பார்த்தால் இதன் பயனாளிகள் யார்? இதனால் விளையும் நன்மை என்ன? கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் மிக அதிக முதலீடு செய்துள்ள 10 நிறுவனங்களின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் 4 நிறுவனங்கள் கார் உற்பத்தி செய்பவை. எல்லாமே உற்பத்தியில் ஈடுபடுபவை. கடந்த 10 ஆண்டுகளில் 20,000 கோடி நேரடி அந்நிய முதலீடு செய்து உருவாக்கப்பட்ட வேலைகள் 1 லட்சத்திற்கும் கீழ்தான் என்பதே தாளண்மையின் கணிப்பு. இது குறித்து யாரும் வெளிப்படையான தகவல்களை அளிப்பதோ , பேசுவதோ இல்லை. முதலீட்டின் முக்கிய குறிக்கோளாகப் பறைசாற்றப் படும் வேலை வாய்ப்பு பற்றி எந்தக் கணக்கெடுப்பும் இல்லை

தற்போதைய, (உறுதி செய்யப்பட்டுள்ள, ஒப்பந்தங்கள் அளவில் இருக்கும்) , 2 லட்சம் கோடி முதலீடும் கூட 2 லட்சம் வேலைகளை உருவாக்கக் கூடும் என்றுதான் அரசு கூறுகிறது. இந்நிறுவனங்களின் ஆலைகள் எவ்வளவு விளைநிலங்களை எடுத்துக் கொள்ளும், எவ்வளவு ஆற்றலைத் தின்று தீர்க்கும், அதற்கு நம் அரசும் நாமும் கொடுக்கும் மானியங்கள் என்ன, இதன் சூழல் பாதிப்புக்கள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் யாரும் பேசுவதாகவே தெரியவில்லை. ஒரு வேலை உருவாக்க ஒரு கோடி முதலீடு தேவை என்றால் 3 கோடிக்கும் மேல் இளைஞர்களைக் கொண்ட தமிழகத்தில் எவ்வளவு முதலீடு தேவைப்படும் ,யாரிடம் அவ்வளவு பணம் இருக்கிறது, அதற்கான கட்டமைப்புக்களும், ஆற்றலும் நம்மிடம் இருக்கிறதா என்பதையும் சற்றும் சிந்திப்பாரில்லை. முன்னர் நோக்கியா நிறுவனத்திடம் பட்ட சூடு போதாதா?

இன்னும் சற்று உள்ளே இறங்கி, ஒப்பந்தம் இட்டுள்ள நிறுவனங்களை ஆராய்ந்தால், உபர் போன்ற வாடகைக்கார் நிறுவனமும் இதில் அடங்கும்! உபர் நிறுவனம் எண்ணற்ற வேலைகளைத் தட்டிப் பறிப்பதாக ஆட்குறைந்த அமெரிக்காவிலேயே பல சர்ச்சைகள் உண்டு. அவர்கள் புதிதாகவா கார் ஓட்டுனர்களை உருவாக்கப் போகிறார்கள்? ஏற்கனவே கார் ஓட்டிக் கொண்டிருக்கும் ஓட்டுனர்களைத் தங்கள் நிறுவனத்தில் இணைத்துக் கொள்ளப் போகிறார்கள் - இது எப்படிப் புதிய வேலை வாய்ப்பாகும்? மேலும் ஓடும் வருவாய்க்கேற்ப ஓட்டுனரின் வருமானம் இருக்கும் கமிசன் தொழில் எப்படி நிரந்தர வேலையாகும்?

இதன் மறுபக்கமாகக் கேரளத்தில், தனியார் முயற்சியில், எந்த முதலீடும் இன்றி லதா ரவீந்திரன் போன்றோர் வேளாண் சார்ந்த சிறு தொழில்களில் 44 பேருக்கும் நிரந்தர‌ வேலை, காப்பீடு, சேமலாப நிதி கொண்ட வேலைகளை உருவாக்குகின்றனர் (பார்க்க: இவ்விதழில் பசுமைப் படை கட்டுரை).

மேம்படுத்துதல் என்னும் ஆலைமயமாக்கல், பணக்காரர்களால், பணக்காரர்களைக் கொண்டு, பணக்காரர்களுக்காக நடத்தப்படும் ஒரு சுரண்டல் நாடகம். இதில் ஏழைகள் வெறும் பகடைக் காய்கள்தான். தமிழகம், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து நிலத்தைப் பேணி வாழ்ந்த ஒரு மிகப் பெரிய சமூகம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே கலப்பையொடு முன்தோன்றி மூத்த குடி. நாம் நிலத்தையும், நிலம் சார்ந்த கிராமத்தையும், கிராமம் சார்ந்த தொழில்களையும் புறக்கணித்து, இந்த மேம்படுத்துதல் என்னும் குருட்டுக் கொள்கையைக் கைவிட்டு கிராமிய வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க வேண்டும். விவசாயம் போல வேலைவாய்ப்பு அளிப்பது எதுவுமே இல்லை. பணியெனப் படுவது நிலத்தொடு நீரே! அரசு சற்று மாற்றி யோசிக்க வேண்டும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org