தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

சுதேசியம் - தமிழில் அமரந்தா


(’கிராம இயக்கம் எதற்காக ?’ நூலின் அத்தியாயம் 9 லிருந்து)

மது கொடுக்கல் வாங்கல்களில் நியாய‌ம் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமெனில் அக்கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் நமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட வட்டத்தினுள் நிகழ வேண்டும். இதுவே சுதேசியத்தின் அடிப்படையாகும். சுதேசி என்பது வெறும் அரசியல் முழக்கமல்ல. அது நமது வரையறைகளைச் சுற்றிச் சூழ்ந்துள்ளது, வட்டம் எத்தனை சிறியதாக இருக்கிறதோ அந்தளவிற்கு நமது செயல்களின் விளைவுகளைத் துல்லியமாக அறிவது சாத்தியமாகும். அறங்காவலர்களாக நமது கடமைகளை மென்மேலும் மனசாட்சிக்கிணங்க நிறைவேற்றுவதும் எளிதாகும்.

நியாய‌மாக வாங்குவதில் உள்ள நன்மை

நமது செயல்பாடுகள் நியாய‌மானவையாக இருக்க வேண்டுமானால், நமது தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு குறுகிவிடுவதால், தேவை நிறைவடைந்தாலும் மனநிறைவு குறைவாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. புடவைக் கடையில் பெல்ஜியம், பாரீஸ், இன்னபிற நாடுகளிலிருந்து வந்த எண்ணற்ற கண்ணைப் பறிக்கும் ரகங்களை வியாபாரி உங்களிடம் காட்டுவார். விலையும் நியாய‌மாகவே இருக்கும். ஆனால் ஒரு அறங்காவலராக நாம் அண்டை அயலில் நெய்யப்பட்ட முரட்டு காதித்துணிப் புடவையையே வாங்க வேண்டி வரும். இந்தப்புடவை சற்றே விலை அதிகமாக, கட்டிக்கொள்ள கனமாக, உங்களுக்கு பிடித்ததுபோல் அழகாக இல்லாதிருக்கலாம். அந்நிய நாட்டிலிருந்து வந்த நயமான பொருளை நிராகரித்து காதியை வாங்குவதால் உங்கள் கடமையை நிறைவேற்றுகிறீர்கள். இது ஒரு பெரிய தியாகம்தான்.

இது போன்ற சுயகட்டுப்பாடு ஒரு தவம் போன்றது. தவம் என்றால் முள் படுக்கையில் அமர்வதோ, கன்னங்களில் வேலைக் குத்திக் கொள்வதோ அல்ல. வாழ்வில் ஏதோ ஒரு தேவையை விட்டுக் கொடுப்பதும் அறைகுறை திருப்தியால் ஏற்படும் வசதிக் குறைவை பொறுத்துக் கொள்வதும் கூட தவம்தான். இவ்வுலக வசதிகளைப் புறந்தள்ளிவிட்டு தனிமையில் கடுந்தவம் புரியும் முனிவர்களின் தவத்திற்கு இது சற்றும் குறைந்ததல்ல. எல்லா மதங்களும் இத்தகைய தவத்தை முன் வைக்கின்றன. ‘உங்கள் சிலுவையை சுமந்து கொண்டு என்னைப் பின் தொடருங்கள்’ என்றார் யேசு. எப்போதெல்லாம் ஒரு கொள்கைக்காக நிமிர்ந்து நிற்கிறோமோ அப்போதெல்லாம் நாம் சிலுவை சுமக்க வேண்டிவரும். ஆனால் அது சங்கிலியால் கோத்து கழுத்தில் அணியத்தக்க தந்தத்தில் செதுக்கிய சிலுவையாகவோ, ரத்தினங்கள் பதித்த தங்கச் சிலுவையாகவோ இருக்காது. எத்தனையோ நல்லெண்ணம் கொண்ட வல்லவர்களின் முதுகை முறித்த கனமான சிலுவையாகவே அது இருக்கும். ஆனால் இந்த முயற்சி நன்மை பயக்கும் என்பது உறுதி.

இந்தத் தியாகம் அல்லது தவம் அல்லது சிலுவை சுதேசியத்தைப் பின்பற்றும் நமது முயற்சியில் பல்வேறு வடிவங்களைப் பெறும். உப்பு வாங்கப் போகும் போது ‘செரிபோஸ்’ உப்பு கண்களைக் கவரும் விதத்தில், வசதியான ஜாடிகளிலிருந்து சரித்து எடுத்து விற்பனை செய்யப்படுவதைப் பார்த்த மாத்திரத்தில், அதை வாங்க முடிவு செய்து விடுவோம். கறுப்பாய் தூசு படிந்து அழுக்குக் கோணிப்பைகளில் நிரப்பட்டிருக்கும் கூழாங்கற்களைப் போன்ற நாட்டு உப்பை யார் வாங்க முன் வருவார்கள்? எளிதானதைத் தேர்ந்தெடுப்பதை விட்டுவிட்டு, நாட்டு உப்பை வாங்கிக் கழுவி சுத்தகரித்துப் பயன்படுத்தும் பக்குவம் மன உறுதி கொண்டவர்களுக்கே சாத்தியம். நாட்டு உப்பை ‘செரிபோஸ்’ உப்பைப் போலாக்க சிறு தவம் போதும். அமெரிக்க பெண் மருத்துவர் ஒருவர் எப்போதும் சந்தையில் வெல்லம் வாங்கி அதனை உருக்கி வடிகட்டி சுத்தம் செய்து திரவ நிலையில் வைத்தே தன் குழந்தைக்குப் பயன்படுத்துகிறார், கிராமத் தொழில்களை நேசிப்பதால் அவர் இதைச் செய்யவில்லை; வெள்ளைச் சர்க்கரையைவிட சத்துக்கள் மிகுந்தது என்பதாலேயே அவர் வெல்லத்தைப் பயன்படுத்துகிறார். கிராமத் தொழில்களை ஆதரிக்கும் கடமை அந்த அமெரிக்க சகோதரியைவிட நமக்கு அதிகம் உண்டு. அவரைப் போன்ற மன உறுதி நமக்கு உண்டா?

அது போலவே தன்னலமற்று நமது இலக்கை நோக்கிச் செல்கையில், தடைகள் ஏற்பட்டால் கசப்படைந்து விடாதிருக்க ‘ எப்போதும் இவ்வாறு நடக்காது’ என்று கூறி நம்மை நாமே தேற்றிக் கொள்ளவேண்டும். விற்பனையை அதிகரிக்கக் கடன் வழங்குவது, மாதிரிகளை அனுப்பி வைப்பது, வலிந்து வலிந்து அதிகமான விற்பனைக்கு முயற்சிப்பது, குறித்த காலத்தில் தவறாமல் சரக்குகளை அனுப்பி வைப்பது போன்ற முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு ஏற்ற வழிமுறைகளுக்கு நாம் பழக்கப்பட்டுள்ளோம். ஆனால் அவ்வாறு நடக்க முடியாமல் போகும் போது மனம் தளர்ந்து போய் விடக்கூடாது. இயந்திரங்களால் பின்பற்ற இயலாத, பின்பற்ற முடியாத தனித்துவமிக்க பொருட்களை உற்பத்தி செய்யும் கை வினைஞர்கள் நியாய‌மற்ற போட்டியின் காரணமாக வேலை இழந்து வருமானமின்றி வறுமையில் வீழ்த்தப்பட்டுள்ளனர். அவர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு நிரந்தரமான வாடிக்கையாளர்கள் இல்லாமல் போனதுதான் இதற்குக் காரணம். முன்பு நம்மால் கைவிடப்பட்ட கைவினைஞர்களைச் சுற்றிலும் நாம் ஒன்று கூடி மீண்டும் அவர்களை சொந்தக்காலில் நிற்க உதவுவோமா? அவர்களெல்லாம் மறுபடி நிலையாகக் காலூன்றிவிட்டால், முதலாளித்துவ முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களில் நாம் பெறுவதாக்க் கருதும் வசதிகள் அனைத்தும் நமக்குக் கிடைத்துவிடும்.

விடுதலைக்கு வழி

அந்நியப் பொருட்களையும், மில் தயாரிப்புகளையும் வாங்குவது இல்லை என்று உறுதியாக முடிவெடுத்து அண்டை அயலிலிருந்தே நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வோமானால் நம்மை அடிமைப்படுத்தும் அந்நிய தேசங்களுக்கு இங்கே என்ன வேலை?

அன்றாடம் சிலுவையை சுமக்கத் தயாராகி, நமது சகோதரர்களுக்கு நமது கடமையை ஆற்றும் கொள்கையை விடாப்பிடியாகப் பின்பற்றினால் நமது சுமையை அவர்கள் மீது திணிக்காமல் இருக்கலாம். அப்படிச் செய்வதால் பல லட்சம் பேருடைய வாழ்வையும் நமது வாழ்வையும் நமது தவத்தால், தியாகத்தால் காத்துவிட முடியும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org