தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நீரின்றி அமையாது உலகு - பரிதி


உலகளாவிய நீர்ச் சிக்கல் - முறையான தீர்வுகள்

[கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள அதிகம் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள் குறித்த விளக்கமும் பிறமொழிப் பெயர்ச் சொற்களின் ஆங்கில வடிவமும் இறுதியில் தரப்பட்டுள்ளன.]

உலக அளவில் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுவதாக – அதாவது, உலகில் நன்னீரின் அளவு குறைந்துவருவதாகவும் அதனால் கடும் சிக்கலில் மனித குலம் சிக்கியுள்ளதாகவும்- பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், மொத்தத் தண்ணீரின் அளவு மாறவில்லை. தண்ணீரைப் பயன்படுத்துவதில் நேரும் தவறுகளின் விளைவாகத்தான் சிக்கல்கள் வேரூன்றியுள்ளன.

மிகக் குறைவான செயல்திறன் உள்ளனவும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தனவுமான பாசனத் திட்டங்கள், தரக் குறைவான குழாய்களையும் பாகங்களையும் பயன்படுத்துவதால் பெருமளவு நீரை வீணாக்கும் நீர்க் கட்டுமானத் திட்டங்கள், மிதமிஞ்சிய வீண் நுகர்வில் ஈடுபடும் வசதி படைத்தவர்கள் வாழும் நகரங்கள் ஆகியவற்றுக்காக உலகெங்கும் உள்ள நன்னீர் நிலைகள் அணை கட்டித் தடுக்கப்பட்டும், வறளும் வரை சுரண்டப்பட்டும் வருகின்றன. தவறுகள் மலிந்த நீர் மேலாண்மை மற்றும் முறை பிறழ்ந்த முந்துரிமைகள் ஆகியவற்றின் விளைவாக நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் நீரின்றித் தவிக்கின்றனர். இருநூறு கோடிப் பேருக்குச் துப்புரவு வசதிகள் இல்லை.

அச்சுறுத்தும் கற்பனைக் கணக்குகள்

பெரும் கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் தண்ணீர் வழங்கல் துறையில் பெரும் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஆவன செய்தல் ஆகியனதாம் முதன்மையான தீர்வுகள் என்று உலக நீர் மன்றம், உலக வைப்பகம் உள்ளிட்ட ஆதிக்க நிறுவனங்கள் கூறுகின்றன.

உலக அளவில் தண்ணீர்க் கட்டுமானப் பணிகளுக்கு ஆண்டுதோறும் இப்போது செலவிடப்படும் 7500 கோடி டாலர்கள் போதாதென்றும் 18000 கோடி டாலர்கள் தேவைப்படும் என்றும் இந்த அமைப்புகள் கூறுகின்றன. இத்தகைய அச்சந்தரும் தோற்றத்தை உண்டுபண்ணுவதன் மூலம் அரசுகள் இத்துறையில் இருந்து விலகி தனியார்மயமாதலுக்கு வழிவிடவேண்டும் என்பது அவர்களுடைய வாதம். ஆனால் இந்த வழியானது சிக்கல்களை மேலும் மோசமாக்கும். அது மட்டுமன்றி, ஏற்கெனவே நம்மிடையே இருப்பனவும் குறைந்த செலவு பிடிப்பனவுமான தீர்வுகளை அது ஒதுக்கித்தள்ளுகிறது. உலகளவில் எழுபது விழுக்காடு அணைக்கட்டுகள் அவற்றின் திட்டக் குறிக்கோள்களை எட்டவில்லை; மேலும், பெரும் நீர்ப் பாசனத்திட்டங்களில் பாதி அவற்றின் முழு அளவில் இயங்கவில்லை என்று உலக அணைகள் ஆணைய ஆய்வு தெரிவிக்கிறது. சிறு அளவிலான மழை நீர் சேமிப்பு உள்ளிட்ட பாரம்பரிய முறைகளையும் ஏற்றத்தாழ்வுகள் அற்ற வழங்கல் முறைகளையும் பயன்படுத்துமாறு அந்த ஆணையம் அறிவுறுத்துகிறது.

தவறான மேலாண்மையால் விளையும் சிக்கல்கள்

நூறு கோடிக்கும் மேற்பட்டவர்கள் நன்னீர் இல்லாமல் அல்லலுறுவதற்கு அரசுகளின் தவறான செயல்பாடுகள்தாம் காரணமேயன்றி நீரில்லாமை அன்று. இப்போது உலகெங்கும் மனிதப் பயன்பாட்டுக்காக நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் நீரில் ஒரேயொரு விழுக்காடு நீர் இருந்தால் போதும்; மேற்கண்ட நூறு கோடிப் பேருக்கும் நாளொன்றுக்குத் தலைக்கு நாற்பது லிட்டர் தண்ணீர் வழங்க முடியும். இது மட்டுமன்று. 2025-ஆம் ஆண்டுக்குள் இவ்வாறு நீரின்றி அல்லல்படப்போகும் இருநூறு கோடிப் பேருக்கும் இந்த அளவு நீர் வழங்கவும் இயலும்.

அப்படியானால், நம் [உலகில் உள்ள] தண்ணீர் இப்போது எங்கே, யாருக்குப் போகிறது? ஏழைகளுக்கும் உணவு, நீர் ஆகியவற்றை வழங்குவதற்கு ஏற்ப அந்தத் தண்ணீரைப் பயன்படுத்துவது எப்படி?

வேளாண் நீர்ப் பாசனத்தின் தீராத் தாகம்

உலக அளவில் ஆறுகள், குளம் குட்டை ஏரிகள், நிலத்தடி நீர்நிலைகள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்படும் நீரில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான நீர் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. நடு மற்றும் தென் ஆசியா, அமெரிக்க ஒன்றியத்தின் மேற்குப் பகுதி போன்ற வறண்ட பகுதிகளில் இந்த விகிதம் இன்னும் அதிகம். பாசனத் திட்டங்கள் பெரும்பாலும் செயல்திறன் குறைந்தனவாகவே உள்ளன. வயல்களுக்குக் கொண்டுசெல்லப்படும் நீரில் பாதிக்கும் அதிகமான நீர் பயிர்களைச் சென்றடைவதில்லை. மேலும், அரசுகளின் தவறான திட்டக் கொள்கைகள் காரணமாக வறட்சியான பகுதிகளில் வாழும் உழவர்களும் கரும்பு, பருத்தி, குதிரை மசால் போன்ற அதிக நீர்த் தேவை உள்ள பயிர்களையே வளர்க்கத் தலைப்படுகின்றனர். உழவுக்குத் தேவையான நீரைக் கொண்டுவரும் செலவில் பெரும்பகுதி அரசுகளால் கொடையாக ஈடு செய்யப்படுகிறது. பெரும் பரப்பிலான நிலங்கள் நீர் தேங்குவதாலும் மண்ணின் உவர்த் தன்மை அதிகரித்ததாலும் தரிசாகிவருகின்றன.

நம் உணவின் நீர்ச்சுவடு

வெள்ளையர்கள் உண்ணும் ஒரு கிலோ மேய்ந்த மாட்டின் இறைச்சி உற்பத்தி செய்ய 16600 லிட்டர் வேளாண் பாசன நீர் தேவைப்படுகிறது. நெல் உற்பத்திக்குக் கிலோவிற்கு 3000 லிட்டரும் , கோதுமைக்கு சுமார் 1600 லிட்டரும், வெள்ளைச் சர்க்கரை உற்பத்தி செய்ய 1 கிலோவிற்கு சுமார் 3000 லிட்டரும் நீர் தேவைப்படுகிறது. மானாவாரிப் பயிர்களோ எந்த நிலத்தடி நீரையும் குடிக்காது மிகச் சத்தான புஞ்சைத் தவசங்களை இயற்கையின் கொடையாக வாரி வழங்குகின்றன. நம் தமிழகக் காவிரிக் கடைமடைப் பாசனப் பகுதிகளில் குறுவையும், மேல் மடைப் பகுதிகளில் கரும்பு, மஞ்சள் போன்ற நீர்குடிக்கும் பயிர்களும் தடை செய்யப்பட்டால் காவிரி நீர்ப் பிரசினையே முற்றிலும் இருக்காது. வேதி வேளாண்மை இயற்கை வேளாண்மையைப் போல் 5 மடங்கு நீர் குடிக்கின்றதை நான் என் சொந்த அனுபவத்தில் கண்டுள்ளேன். உலகெங்கும் நீர்ப் பற்றாக்குறை சூழ்வதாகவும், இதற்கு நீர் தனியார் மயமாவதே தீர்வு என்றும் நெஸ்லே, சோஸ் போன்ற நிறுவனங்கள் அச்சுறுத்தி வருகின்றன. பொலிவியாவின் சிகுபாம்பே நகரின் நீர் வழங்கும் உரிமை சோஸ் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டு அங்கு பெரும் புரட்சி வெடித்து ஆட்சியே மாறியதை நாம் முன்னர் தாளாண்மையில் விரிவாக எழுதியிருந்தோம். விதை மற்றும் உரக் கும்பணிகள் உணவுப் பற்றாக்குறை என்ற போர்வையில் சந்தையை ஆளுமை கொள்ளத் துடிக்கையில், நீர் விற்கும் கொழுத்த நிறுவனங்கள் எல்லாக் குடிநீரும் தாங்கள் விற்பதாய் இருக்க வேண்டும் என்று பேராசைப் படுகின்றன. நுகர்வோர் விழிப்புணர்வு நம் கடமையாதலால், பரிதியின் இக்கட்டுரை நல்லதொரு கைவிளக்காய் வந்துள்ளது - ஆசிரியர்.

வேளாண்மையில் நீர் சேமித்தல்

இப்போது பயன்பாட்டில் உள்ள பாசனத் திட்டங்களின் நீர்த் தேவையை பத்து விழுக்காடு குறைத்தாலே உலகம் முழுவதும் வீட்டுப் பயன்பாட்டுக்குத் தரப்படும் தண்ணீரின் அளவை இரண்டு மடங்கு உயர்த்தலாம். வளம் குறைந்த நிலங்களில் வேளாண்மை செய்வதைத் தவிர்த்தல், அதிக நீர்த் தேவை உள்ள பயிர்களைத் தவிர்த்தல், நீர் சேமிக்கும் பாசன முறைகளைப் பயன்படுத்துதல், வேதியுரங்களையும் உயிர்க்கொல்லிகளையும் தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் தண்ணீர்ச் சிக்கனத்தை மேலும் அதிகரிக்க இயலும்.

நகர்ப் பகுதிகளில் நீர் வீணாதல்

வேளாண்மைக்கு அடுத்தபடி நகர்ப்புற நீர் வழங்கல் முறைமையில் பெருமளவு நீர் வீணாகிறது. உலகில் பல பகுதிகளில் மொத்தம் வழங்கப்படும் நீரில் நாற்பது விழுக்காடு வரை வீணாகிறது. 2000-ஆம் ஆண்டில் மலேசியாவின் செலாங்கோர் மாநிலத்தில் சுமார் நூறு கோடி லிட்டர் நீர் வீணாயிற்று. இது இரண்டரைக் கோடி மக்களுக்குப் போதுமானது!

பருண்மையான தீர்வுகள்: நீர் சேமிப்பு

நீர் வழங்கலுக்கெனப் புதிய கட்டமைப்புகளை நிறுவுவதற்கு ஆகும் செலவில் மிகச் சிறு பங்கினைச் செலவிட்டாலே நீர்த் தேவையைப் பெருமளவு மட்டுப்படுத்தலாம். எ.கா. தண்ணீர் [பயன்பாட்டுச்] செயல்திறன் அதிகம் கொண்ட பாகங்களையும் இயந்திரங்களையும் பயன்படுத்துதல், ஆலைகளில் நீர் சேமிப்பை ஊக்குவித்தல். மெக்சிக்கோ நாட்டுத் தலைநகரான மெக்சிக்கோ சிட்டியில் 350,000 பழைய கழிவறைக் கருவிகளைப் புதுப்பித்ததில் மிச்சமான தண்ணீர் மேலும் 250,000 பேருக்குத் தருவதற்குப் பயன்பட்டது.

தண்ணீர் வரிகளை நுகர்வுக்கு ஏற்ப அதிகரிப்பதன் மூலம் வீண் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்தலாம். மோட்டர்கள், குழாய்கள் உள்ளிட்ட கட்டுமானங்களைப் புதுப்பித்துச் சீரமைப்பதன் மூலம் நீர் கசிந்து வீணாவதையும் திருட்டையும் தடுக்கவியலும். பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்தல், மழைநீர் சேமிப்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதன்வழியாக புதிய நீரேற்றுத் திட்டங்கள், அணைகள் ஆகியவற்றுக்கெனப் பெருந்தொகையைச் செலவிடுவதைத் தவிர்க்கலாம்.

தனியார் துறை தோல்விகள்

உலக வைப்பகம், நாட்டிடை நிதியம் ஆகிய நிறுவனங்கள் தண்ணீர் வழங்கல் துறையில் தனியார்மயத்தைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் மக்கள் மீது திணித்துவருகின்றன. ஆனால், இந்த முயற்சி தோல்வியில் முடிந்திருப்பது தெளிவு. தண்ணீர் வழங்கலில் தனியார்மயம் என்பது நகர்ப்புற நுகர்வோருக்கும் ஒத்துவரவில்லை. அவற்றில் குதித்த பன்னாட்டுப் பெருநிறுவனங்களும் கடும் இழப்புகளைச் சந்தித்துள்ளன. எடுத்துக்காட்டு: 2003 சனவரியில் சூயெச் எனும் ப்ரெஞ்ச் நிறுவனம் அர்சென்ட்டினாவில் தான் செய்த முதலீடுகளில் ஐம்பது கோடி டாலர் இழப்பு நேர்ந்ததாக அறிவித்தது. 2005-க்குள் அதுபோன்ற சந்தைகளில் தன் பங்கினை மூன்றில் ஒரு பங்கு குறைத்துக்கொள்ளவும் முடிவு செய்தது.

இப்போதைய நிலைமையில் தண்ணீர்த் துறையில் தனியார்மயத்திற்கு மிகக் குறைந்த பங்குதான் இருக்கும் என்று உலக வைப்பகத்தின் நீர்வளத் துறை அறிக்கை முன்வரைவு தெரிவிக்கிறது. அரசுத் திட்டக்கொள்கை வகுப்போர் இவ்வாறு தோல்வியுற்ற ஒரு செயலுத்தியை முன்னுக்குத் தள்ளுவதைக் காட்டிலும் அரசுத் துறை நீர் வழங்கல் அமைப்புகளைச் செம்மைப்படுத்துவதே சாலச் சிறந்தது. அந்த அமைப்புகள் பெரும்பாலும் முறையாக இயக்கப்படுவதில்லை. அவற்றின் செயல்பாடுகளைக் கேள்விக்குட்படுத்த முடிவதில்லை. வறியவர்களுடைய தேவைகளையும் சூழல் தேவைகளையும் அவை கண்டுகொள்வதில்லை. அவை மக்களுக்கு பதில் சொல்லும்வண்ணம் செயல்படுமாறு அவற்றைச் சீரமைக்கவேண்டும். இது செயல்படுத்தக் கூடியது என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இது தொடர்பாக வேறொன்றையும் நாம் மனதில் இருத்தவேண்டும். தண்ணீர்ப் பற்றாக்குறையால் வாடுவோரில் எண்பது விழுக்காட்டினர் ஊர்ப் புறங்களில் வாழ்கின்றனர். நகர்ப் புறங்களில் இருப்பதைக்காட்டிலும் ஊர்ப் புறங்களில் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக இருக்கும். மேலும், ஊரக மக்கள் குழாய் நீரைக் காட்டிலும் கிணறு, குளம், குட்டை ஆகிய நீர்நிலைகளில் உள்ள நீரைத் தான் அதிகம் சார்ந்திருப்பர். ஆகவே, தனியார் தண்ணீர் வழங்கல் நிறுவனங்கள் அத்தகைய பகுதிகளில் நுழைய விரும்பமாட்டா.

பருண்மையான தீர்வுகள்: நீர் வழங்கலைப் பரவலாக்குதல்

சிறு சிறு அளவுகளிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 2025-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் அனைவருக்கும் போதுமான அளவு நீரையும் பிற அடிப்படைச் துப்புரவு வசதிகளையும் செய்து தருவதற்கு ஆண்டொன்றுக்கு 900 கோடி டாலர் போதுமானது என ஒன்றிய நாடுகளவையுடன் தொடர்புள்ள நீர் வழங்கல் மற்றும் துப்புரவுக்கான கூட்டுச்செயல்பாட்டு மன்றம் கணித்துள்ளது. 900 கோடி டாலர் என்பது பெருந்தொகைதான். ஆனால், இது வளரும் நாடுகளில் இப்போது நீர் வழங்கல் மற்றும் துப்புரவுக் கட்டுமானப் பணிகளுக்காகச் செலவிடப்படும் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் காட்டிலும் குறைவே. மேலும், அமெரிக்க ஒன்றிய அரசு ஒன்பதே நாள்களில் இதற்குச் சமமான தொகையைப் “பாதுகாப்புக்காகச்” செலவிடுகிறது.

பரந்து கிடக்கும் ஊரகப் பகுதிகளுக்கு மழை நீர் சேமிப்புத் தான் மிகப் பொருத்தமான நீர் வழங்கல் முறையாகும். சிறு சிறு தடுப்பணைகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட அமைப்புகளை ஏற்படுத்தி வெள்ளப் பெருக்கைக் குறைப்பதுடன் நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்தவியலும். மேற்கு ராசச்தானில் இருப்பதைப் போன்ற பாலைவனப் பகுதிகளில் கிடைத்த பட்டாங்கின்படி, மிக மோசமாக வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் மழைநீர் சேமிப்பு மிகச் சிறந்த தீர்வாகும்.

மழை நீர் சேமிப்புத் திட்டங்களை மக்கள் தாங்களாகவே வடிவமைத்துச் செயல்படுத்த முடியும். பெருமளவு வெளியுதவி தேவைப்படாது. ஆகவே மழைநீர் சேமிப்பை முன்வைப்பதன் மூலம் பெரு நிறுவனங்கள் சம்பாதிக்க இயலாது. அரசு இயந்திரத்திற்கும் இதில் “பலன்” இராது. இதனால்தான் அவை மழை நீர் சேமிப்பை அவ்வளவு தீவிரமாக மக்கள் முன் வைப்பதில்லை. பரவலாக மழை நீரைச் சேமிப்பதால் வேறு முதன்மையான பலன்களும் உள்ளன. புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட சூழல் மாற்றங்களால் பருவ மழைப் பொழிவு தாறுமாறாக உள்ளது. வறட்சியும் வெள்ளமும் மாறிமாறித் தாக்குகின்றன. மழை நீர் சேமிப்புக்கென அமைக்கப்படும் கட்டுமானங்கள் (தடுப்பணைகள், குளம் குட்டைகள் போன்றவை) வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதோடு வறட்சிக் காலங்களில் நீராதாரமாகவும் பயன்படும்.

பசியால் வாடுவோருக்கு உணவு

'உலகில் பசியால் வாடும் அனைவருக்கும் உணவு தரவேண்டுமானால் இன்னும் அதிக அளவில் உணவுப் பண்டங்களை விளைவிக்கவேண்டும்; அதற்கெனப் பாசன வசதிகளை அதிகரிக்கவேண்டும்' என்பது தண்ணீர்த் துறையில் ஆதிக்கம் செலுத்துவோருடைய வாதம். ஆனால், பசிக் கொடுமைக்குக் காரணம் பற்றாக்குறையன்று. தேவைக்கு அதிக அளவில் உணவுப் பண்டங்கள் உள்ளன. ஆனால், அவற்றை வாங்கும் பண வசதி பல கோடி மக்களிடம் இல்லை. எடுத்துக்காட்டாக, உலக அளவில் இருப்பில் உள்ள உணவுப் பண்டங்களில் கால் பங்கு இந்தியக் கிடங்குகளில் உள்ளது. இருப்பினும், இந்தியக் குழந்தைகளில் பாதிக்கு மேற்பட்டோர் குறைந்த எடையினராக உள்ளனர். பெரிய அணைக்கட்டுகள், அவற்றிலிருந்து நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்கள் ஆகியன அடங்கிய பாசனத் திட்டங்களால் உலகின் பசிக் கொடுமையைப் போக்க இயலாது என்பதைக் கடந்த காலப் பட்டாங்கு தெளிவாகக் காட்டியுள்ளது. பெருமளவில் முதலீடு தேவைப்படுகிற இத்தகைய திட்டங்கள் சிறிது காலத்திற்கு விளைச்சலை அதிகரிப்பதற்கு உதவக்கூடும்; குறிப்பாக, பாசனத்திற்கு முதலீடு செய்யும் வசதியும் வாய்ப்பும் படைத்த உழவர்களுக்கும் அத்தகைய திட்டங்களின் ஆயக்கட்டுகளில் நிலம் வைத்திருப்போருக்கும் அவை சில காலம் பயன்படலாம். ஆனால், ஏழை உழவர்களில் பெரும்பாலானோர் பாசன வசதியற்ற நிலங்களுக்கு உரிமையாளர்கள். அவர்களிடம் முதலீடு செய்வதற்குப் போதிய பணம் இருக்காது; ஆகையால் அவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். அவர்களுடைய உணவாதாரம் மோசமாகிறது.

நிலச் சீர்திருத்தம், நிலைத்த வேளாண்மைக்கு ஏதுவாகச் சூழலுக்கு ஒத்திசைந்த பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், ஏற்றுமதிச் சந்தையை நம்பிய உற்பத்திக்கு மாறாக உள்ளூர் நுகர்வுக்கேற்ற உணவுப் பண்டங்களை விளைவித்தல் முதலியவற்றை ஊக்குவிக்கும் திட்டக்கொள்கைகளே பசிப்பிணியைப் போக்குவதற்கு உதவும். மேலும், உணவுப் பண்டங்களை ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகள்தாம் உலக மக்களுடைய சத்துணவுத் தேவையை நிறைவு செய்யும். கடந்த முப்பதாண்டுகளில் உலகளவில் நுகரப்பட்ட தானியங்களில் நாற்பது விழுக்காடு கால்நடைகளுக்கு [அவற்றைக் கொழுக்கவைத்துப் பணக்காரர்களுக்கு இறைச்சியாக விற்பதற்காக] உணவாகத் தரப்பட்டது. அந்தத் தானியங்களையும் அவற்றை விளைவிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் உள்ளிட்ட வளங்களையும் மக்களுக்கு உணவு உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தியிருக்கலாம்.

நீர்வள மேம்பாட்டுச் செலவு - கட்டுப்படியாகும் செலவே!

நீரை வணிகப் பொருளாக்கும் நிறுவனங்கள் நம்மை அச்சுறுத்துவதற்குப் பயன்படுத்தும் தரவுகளைக் கவனமாக ஆராய்ந்தால் அவர்களுடைய வாதங்களில் இருக்கும் ஓட்டைகளைக் காணலாம். நீர்ச் சிக்கல் குறித்த முறையான ஆய்வு நமக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது: உலகளவில் நீர்ச் சிக்கல்களுக்கான தீர்வுகள் நம்மால் செயல்படுத்தக்கூடியன; அதற்கான பொருள்வளம் நம்மிடம் உள்ளது என்பதை அந்த ஆய்வு தெளிவாக்குகிறது.

ராசச்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் 1986 முதல் தருண் பரத் சங் எனும் தன்னார்வ நிறுவனம் செய்துவரும் பணி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அந்நிறுவனத்தின் உதவியுடன் மக்கள் சுமார் பத்தாயிரம் நீர் சேமிப்பு நிலைகளைப் புதுப்பித்துள்ளனர் அல்லது புதிதாக உருவாக்கியுள்ளனர். அவ்வாறு சேமிக்கப்படும் நீர் நிலத்தடியில் செல்கிறது. பின்னர் கிணறுகளில் ஊறுகிறது. அதை அம்மக்கள் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் சுமார் ஏழு லட்சம் பேர் பயனடைவதாக அந்நிறுவனம் கணிக்கிறது. அந்நிறுவனம் இதற்கெனச் சுமார் ஏழு கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இத்தொகையை மொத்தப் பயனாளிகள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் ஒரு எக்ட்டேருக்குப் பாசன வசதி செய்வதற்கு ஐநூறு ரூபாயும் ஒரு மனிதருக்குக் குடிநீர் தருவதற்கு நூறு ரூபாயும் செலவாகிறதென்பதைக் காணலாம். நர்மதா அணைத் திட்டத்துடன் இதை ஒப்பிட்டால் ஒரு மாபெரும் உண்மை புலனாகிறது. அத்திட்டத்தில் ஒருவருக்குத் தண்ணீர் தருவதற்குப் பத்தாயிரம் ரூபாயும் ஒரு எக்ட்டேருக்குப் பாசன வசதி தருவதற்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரூபாயும் தேவைப்படும். ஆல்வார் மாவட்டத்தில் ஆகும் செலவைக்காட்டிலும் இது 340 மடங்கு அதிகம்!

- ஐந்து வறண்ட நதிகளையும், ஆயிரம் கிராமங்களையும் வறட்சியில் இருந்து மீட்ட ராஜேந்தர் சிங்

எனவே, நம்மை ஆளும் ஆட்சி முறைகளில்தான் தவறு உள்ளது. தன்னலத்தையே முன்வைத்துச் செயல்படும் தண்ணீர்த் துறைக் கட்டுமான நிறுவனங்களையும் அவற்றின் சார்பில் அரசுகளிடம் உறவாடும் தரகர்களையும் புறக்கணிக்குமாறு மக்கள் ஒன்று திரண்டு அரசுகளை நெருக்கவேண்டும்.

- பரிதி (thiru.ramakrishnan@gmail.com)

நன்றி: “a crisis of mismanagement – real solutions to the world's water problems”, international rivers network, www.irn.org

  அமெரிக்க ஒன்றியம் the united states of america
 • அர்சென்ட்டினா argentina
 • ஆல்வார் alwar உலக அணைகள் ஆணையம் the world commission on dams
 • உலக நீர் மன்றம் world water council
 • உலக வைப்பகம் the world bank
 • ஒன்றிய நாடுகளவை the united nations
 • கொடை 'மானியம்' என்பதன் தமிழ்வடிவம்
 • சூயெச் suez
 • செயல்திறன் efficiency
 • செலாங்கோர் selangor
 • தருண் பரத் சங் tarun bharat sangh
 • நாட்டிடை நிதியம் the international monetary fund
 • நீர் வழங்கல் மற்றும் துப்புரவுக்கான கூட்டுச்செயல்பாட்டு மன்றம் water supply and sanitation collaborative council
 • ப்ரெஞ்ச் french
 • மெக்சிக்கோ சிட்டி mexico city
 • ராசச்தான் rajasthan
 • விழுக்காடு ''சதவீதம்' என்பதன் தமிழ்வடிவம்
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org