தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மறக்கப் பட்ட மாமேதை


குமரப்பாவைத் தெரிந்து கொள்வோம் - பாமயன்

புதிய (modern) பொருளியலின் தந்தை என்று அழைப்படும் ஆடம்சுமித் கட்டுப்பாடற்ற பொருளியலை உலகிற்குப் பரிந்துரைத்தார். அப்போது ஏற்பட்டிருந்த தொழில்புரட்சியும் அதன் பின்னணியில் உருவான முதலீடுகளின் குவியலும் அவரது நெறிமைகளை (principles) பெரிதும் விரும்பி ஏற்றுக்கொண்டன. அதன் பின்னர் காரல் மார்க்சு கட்டற்றுத் திறந்துவிடப்பட்ட பொருளியில் திரட்சியால் உருவான முதல் (capital) அதன் பெருக்கம் இதனால் ஏற்பட்ட சுரண்டல் இவற்றை கணக்கில் கொண்டு கட்டற்ற பொருளியலை மாற்றியமைக்கும் நெறிமைகளை உருவாக்கினார். ஆட்ம்சுமித் மறைந்து ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் பிறந்த குமரப்பா பொருளியலில் உலகச் சிந்தனையாளர்கள் வியக்கும் அளவிற்கு அழுத்தமான கருத்துகளை நெறிமைகளை வகுத்துக் கொடுத்துச் சென்றுள்ளார். இன்று மிக ஆழமான முறையில் பேசப்பட்டு வருகின்ற நீடித்த மேம்பாடு (sustainable development) என்பது பற்றியும் திணையவியல் பொருளியல் (ecological economics) பற்றியும் மிக நுட்பமான வரையரைகளைவிட்டுச் சென்றுள்ளார். திணைப்பொருளியலின் தந்தை (father of eco-economics) என்று இவரை எவ்விதத் தயக்கமின்றியும் அழைக்கலாம்.

தஞ்சையில் வாழ்ந்துவந்த ஒரு கிறித்துவக் குடும்பத்தில் 1892ஆம் ஆண்டு சனவரி மாதம் 4ஆம் நாள் ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தார். இவரது பாட்டனார் மதுரையில் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர். அரசுப் பணியின் காரணமாக குடும்பம் தஞ்சைக்கு இடம்பெயர்ந்தது. தஞ்சை, சென்னை என்று கல்வியைப் பெற்று தனது 21ஆம் அகவையிலேயே இலண்டன் சென்று கணக்கியலில் பணியாற்றத் தொடங்கினார். இவரது தந்தை கல்வியின் முதன்மையை உணர்ந்து தனது அனைத்துச் சொத்துகளையும் விற்று பிள்ளைகளை நன்கு படிக்க வைத்துள்ளார். குமரப்பாவின் பெற்றோர் இட்ட பெயர் ஜோசப் செல்லத்துரை கொர்னீலியஸ், அவரது நண்பர்களும் உறவினர்களும் ‘செல்லா’ என்றே செல்லமாக அழைப்பர் ஆனால் அவர் பின்னர் தனது மரபு வழித் தமிழ்ப் பெயரான குமரப்பா என்றே அழைத்துக் கொண்டார். அவ்வாறே புகழும் பெற்றார்.

குமரப்பாவின் காலத்தில் இரண்டு பெரும் பொருளியல் சிந்தனைப் பள்ளிகள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. கட்டற்ற பொருளியலை முன்வைத்த முதலாளியம் ஒருபுறம் முதலியத்தை அரசு கட்டுப்படுத்தி ஓரிடத்தில் குவியும் முதலத்தைப் பகிர்ந்து கொடுத்து சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பேசிய பொதுவுடமை ஒருபுறம். ஆனால் இந்த இரண்டு கோட்பாடுகளும் உருவாக்க முறைபற்றி பெரிதும் கவலை கொள்ளவில்லை. அறிவியல் நுட்பவியல் முன்னேற்றங்களால் பெருகும் பொருளாக்கம் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வாகிவிடும் என்று கருதினர். அதாவது பொருளாக்கத்தில் முதலீடு + மூலப்பொருள் + உழைப்பு என்ற மூன்றை மட்டுமே கருத்தில் கொண்டனர். ஆனால் வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அத்துடன் பொருளாக்க முறை (mode of production) பற்றியும் அவர்கள் கலைப்படவில்லை. ஆனால் குமரப்பா அந்த இரண்டு கூறுகளையும் கணக்கில் கொண்டார். இயற்கை வளங்கள் தொடர்ந்து கிடைப்பதரிது என்றும் பெருமளவு பொருளாக்கம் தவறு பெருமளவு மக்களால் பொருளாக்கம் நடக்க வேண்டும் என்று கூறினார்.

வழமையான ஆடம்சுமித்தின் கோட்பாடுகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதற்கான மாற்றுகளையும் முன்மொழிந்தார். ‘மக்களின் பொருளியல் நடவடிக்கைகள் சொத்துச் சேர்க்க வேண்டும் என்ற ஒரே பேராவலிலேயே உள்ளன’. ‘வணிகத்திலுள்ள தன்னலப்பண்பு என்ற ‘அருவக் கை’ (invisible hand) பொதுமக்களின் நலனுக்காக செயலாற்றுகிறது’ போன்ற ஆடம்சுமித் சிந்தனைகளில் இருந்து குமரப்பா முரண்பட்டார். அவர் மக்களிடம் உள்ள அறப்பண்புகளை முன்னிறுத்தினார். அவற்றை விரிவான முறையில் பெரிதாக்க வேண்டும் என்றார். ரிக்கªர்டா என்ற பொருளியல் அறிஞரின் சிந்தனைகள் அன்று ஆடம்சுமித்தைப்போலவே புகழ்பெற்று இருந்தன. அவர் உழைப்பு என்பதும் பொருளைப்போல வாங்கவும் விற்கவும் கூடிய ஒன்றுதான் என்றார். சந்தையின் போக்கை வைத்து உழைப்பை கூட்டிக்கொள்ளவோ குறைத்துக்கொள்ளவோ முடியும் என்றார். இதன் அடிப்படையில் அவர் பிரிட்டானிய நாடாளுமன்றத்தில் உழைப்பாளிகளின் குழந்தைகளுக்கு நாட்பராமரிப்பு நடுவங்களை (daycare centres) அமைப்பதை எதிர்த்து வாக்களித்தார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான வழியைத் தடுப்பது இதுவாகும் என்றார்! அதாவது பட்டாளி வகுப்பு அதிகமாகிவிடும் என்பது அவரது கவலை.

இவரது கருத்துக்களுக்கு மாற்றான சிந்தைனைகளும் உருவாயின, குராபோட்கின், லியோ டால்ஸ்டாய் ஆகிய அறிஞர்களின் வன்முறையற்ற பொருளியல் குமரப்பாவின் சிந்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. காந்திக்கு டால்ஸ்டாயின் தாக்கம் அதிகம் உண்டு. அவருடனான கடிதப் போக்குவரத்து அவரது பெயரில் உருவாக்கிய பண்ணை போன்றவை குறிப்பிடத்தக்கன. காந்தி உணவுக்கான உழைப்பு (bread labour) என்று பொருளாக்க முறையை வரையறுத்தார். குராபோட்கின் கூற்றுப்படி நலவாழ்க்கை எனப்படும் உடலியல், அறவியல், அழகியல் தேவைகள் ஒருவருக்கு நிறைவு செய்யப்படும்போது அவரது உழைப்பு உச்ச அளவாக இருக்கும். எனவே ஒரு குமுகம் அனைவரது நலத்தையும் முன்னிறுத்தி இயங்குமானால் அங்கு தன்னார்வமாகவே வேலைகள் நடைபெற்றுவிடும் என்கிறார். இது அடிமை உழைப்பு, வலுக்கட்டாய உழைப்பு இவற்றுக்கு மாற்றானது.

குமரப்பா இன்னும் ஒருபடி மேலே சென்று விளையாடும்போது நமக்கு களைப்பு ஏற்படுவதில்லை, உழைக்கும்போதுதான் களைப்புத் தோன்றுகிறது, எனவே உழைப்பை விளையாட்டாக மாற்றிவிட்டால் அதாவது விருப்ப மிக்க ஒன்றாக விளையாட்டை மாற்றிவிட்டால் அது அதிக விளைச்சல் திறன் மிக்கதாயும் மகிழ்ச்சியூட்டக் கூடியதாகவும் இருக்கும் என்கிறார். மார்க்சின் அயன்மையாதல் என்ற கருத்தாக்கம் குமரப்பாவின் சிந்தனைக்கு வித்தாக இருந்துள்ளது. உழைப்பவன் தனது உழைப்பில் இருந்து கிடைக்கும் விளைச்சலை நுகர முடியாமல் போகும்போது அதன் மீது அவன் அயன்மைப்பட்டுப் போகிறான். இளம் மார்க்சின் எழுத்துகளில் இந்தக் கருத்து மிக ஆழமாக இருந்தது. தொழிற்சாலைமயமாகும் பொருளாக்கத்தில் அயன்மையாகுதல் அதிகமாகிறது. யாருக்காவோ தான் உழைப்பதாக உழைப்பாளி நினைக்கிறான், நுகர்பவனுக்கோ யார் உருவாக்கியது என்றே தெரியவில்லை. இதை பரவல்மயப்படுத்தப்பட்ட பொருளாக்கத்தின் மூலம் தீர்க்க முடியும் என்பது குமரப்பாவின் கருத்து.

குமரப்பாவின் கருத்துகளை தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் அவரது ஆசிரியரான எட்வின் செலிக்மென் முதன்மையானவர். அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கைகளை தீர்மானித்தவர்களில் முதன்மையானவர். துணித்தொழில் பணியாளர்களுக்காகப் போராடியவர். அறப்பண்பாட்டு சங்கத்தின் (Society for Ethical Culture) தலைவராகப் பணியாற்றிவர். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் போராசியராக இருந்த இவர் குமரப்பாவை இந்தியாவின் பொருளியல் வறுமை பற்றிச் சிந்திக்கத் தூண்டியவர். இவர் அம்பேத்காரின் ஆசிரியரும் ஆவார். இதில் சுவையான செய்தி என்னவெனில் பிரிட்டானிய இந்தியாவின் நிதியியல் பரிணாமத்தைப் (The evoloution of provincial finance in British India) பற்றிய ஆய்வை 1916ஆம் ஆண்டிலேயே அம்பேத்கர் செய்து முடித்துள்ளார். இதற்கு அறிமுக உரை கொடுத்தவர் பேராசிரியர் செலிக்மன். அமெரிக்காவில் படிக்கச் சென்ற குமரப்பாவை தனது உடன் படித்த நண்பர்கள் ஏன் இந்தியா அடிமைப்பட்டது என்ற வினாவை எழுப்பியதன் பயனாக அது பற்றிய ஆய்வை குமரப்பா மேற்கொண்டார். குமரப்பா சமுதாய தேவாலயம் ஒன்றில் பிறகு ஏன் இந்தியா ஏழ்மையில் உள்ளது? (Why then is India poor?) என்ற தலைப்பில் பேசியதை செலிக்மன் கேள்வியுற்று குமரப்பாவை பொருளியல் ஆய்வில் நுழையுமாறு நெறிப்படுத்தியுள்ளார்.

குமரப்பா தனது ஆய்வுப் பொருளாக ‘பொதுநிதியும் இந்தியாவின் வறுமையும்’ (Public Finance and India's poverty) என்ற தலைப்பை எடுத்து ஆய்வு செய்தார். இதன் விளைவாக அவர் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தார். பிரிட்டானிய அரசு எவ்வாறு இந்தியாவைச் சுரண்டுகிறது என்பதை பல்வேறு புள்ளியியல் தரவுகளாடு விளக்கினார். இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் யாவும் பிரிட்டனின் படைக்குவிப்பிற்கு பயன்படுத்தப்பட்டது. 1925-26ஆம் ஆண்டளவில் அமெரிக்கா தனது போர்ப்படைக்காக 48.8 விழுக்காடு செலவு செய்தபோது பிரிட்டன் அடிமை நாடான இந்தியா 93.7 விழுக்காடு செலவிடப்பட்டது. இதனால் பொதுப்பணிக்கான செலவினங்கள் மிகவும் குறைவாக இருந்தன. இதன் தொடர்ச்சியே பஞ்சங்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இவரது இந்த ஆய்வேடு காந்தியை வெகுவாகச் கவர்ந்ததும், குமரப்பாவும் காந்தியும் இணைந்து பணியாற்ற உதவியதும் ஆகும். நோபல் பரிசு பெற்ற அமர்த்திய சென் தனது நலன்மைப் பொருளியல் (welfare economics) என்ற கருத்தாக்கத்தை குமரப்பாவிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் காந்தியப் பொருளியல் பற்றி இவர் பேசுகிறார். இந்தியாவில் பஞ்சங்கள் வந்த போதெல்லாம் உணவுப் பொருள் ஏற்றுதியாகியிருந்ததை சென் குறிப்பிட்டுள்ளார். இது குமரப்பா பிரிட்டானிய இந்தியா பற்றிய ஆய்வின் எதிரொலிபோல் இருப்பதை மறுப்பதற்கில்லை.

மிகப் பகட்டான மேற்கத்திய உடையாளராக இருந்த குமரப்பா காந்தியைச் சந்தித்த பின்னர் நான்கு முழ வேட்டியில் உருவாக்கிய ‘தோத்தி ஜாமா’ (வடநாட்டார் பைஜாமா எட்டுமுழுத்தில் இருக்கும்) என்ற எளிய உடையை அணிந்து வாழ்நாள் முழுவதும் இருந்தார். இவரது காந்தியுடனான சந்திப்பு மிகவும் உணர்ச்சிமயமானதும் சுவையானதுமாகும். இந்தி மொழியோ குசராத்தியோ தெரியாத குமரப்பா குசராத்தில் உள்ள மடார் வட்டத்தில் தனது பொருளியல் கணக்கெடுப்பை நடத்தி வறுமையின் உண்மையான உருவத்தை வெளி உலகிற்குக் காட்டினார். பெரும்பாலான பொருளியல் அறிஞர்கள் அறைகளுக்குள் அமர்ந்துகொண்டு செய்தித்தாள்களில் வரும் தரவுகளை வைத்து தலைவருமானம் போன்ற தரவுகளை நிறுவவார்கள். இதன்படி அன்றைய காலகட்டத்தில் ஆண்டுத் தலைவருமானம் என்பது 60 ரூபாய்களுக்கு மேல் என்று கருதிக் கொண்டிருந்தபோது, உண்மையில் ஆண்டுக்கு 12 ரூபாய்க்கும் குறைவாக மக்களின் தலைவருமானம் உள்ளதை நேரடி கள ஆய்வு மூலம் நிறுவினார். நாட்டின் மிகப் பெரிய பணக்காரரின் வருமானத்தையும் எண்ணற்ற ஏழைகளின் வருமானத்தையும் நிரவை (சராசரி) போட்டுப் பார்க்கும் தவறான கணக்கீட்டை மறுதலித்தார். நடைமுறை சார்ந்த பொருளியல் மேதையாக இருந்ததால் மக்களின் நேரடிச் சிக்கல்களை கண்டறிய முடிந்தது.

குமரப்பாவை பல மேலை அறிஞர்கள் பொருளியல் மெய்யியலாளர் என்றே குறிக்கின்றனர். இவரது பொருளியல் சிந்தனைகள் வன்முறையற்ற, நீடித்த வாழ்வுக்கு வழிகாட்டும் இயக்கியல் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆடம்சுமித், ரிக்கார்டோ போன்றவர்கள் பணக்காரர்கள் எவ்வாறு மேலும் பணத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதற்கான சிந்தனைகளையே முன்வைத்தனர். குமரப்பா அறத்தை தனது முதல் மதிப்பீடாக வைத்துக் கொண்டார். தமிழகத்தின் திருக்குறள், சங்க இலக்கிய மரபு போன்றவை அறத்தை வலியுறுத்தும் கூறுகளைக் கொண்டவை. இந்த மரபில் வந்த குமரப்பாவிற்கு அறம் பற்றிய பார்வையும் ஈர்ப்பும் இயல்பாகவே இருந்தது. வழமையான கருத்தாக்கங்களான வேலையின் தன்மை, உழைப்புப் பிரிவினை, அரசின் பங்கு, சொத்துரிமை, பரிமாற்றத்தில் பணத்தின் பங்கு போன்றவன்றில் இவர் புதிய சிந்தனைகளைப் புகுத்தினார். பணத்தின் ஆளுமையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து. பண்டமாற்று என்பதே பெரிதும் ஊரகப் பகுதிகளில் நடைபெற வேண்டும். தாளில் அச்சடித்த பணத்திற்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது என்றார். கிராம உத்யோக் பத்திரிகா இதழில் 1942ஆம் ஆண்டு ‘உணவுக்காக கல்’ (stone for bread) என்ற கட்டுரையில் பிரிட்டானிய அரசு சேமவங்கி (reserver bank) வெளியிட்ட பண மதிப்பிற்கும் உண்மையான பொருளுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கினார். மார்க்சும் அச்சடித்த பணத்தின் தீமைகளை விளக்கியுள்ளதை குறிப்பபிட்டாக வேண்டும்

(தொடர்ச்சி அடுத்த இதழில்…)

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org