தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி

நம்மாழ்வாரும் கிராம சுயராச்சியமும் - பசுமை வெங்கிடாசலம்

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் இளங்காடு கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் நம்மாழ்வார் பிறந்தார். அண்ணாமலை பல்கலைகழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் இணைந்துள்ள கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி பண்ணையில் வேளையில் அமர்த்தப்பட்டவர். பதவி உயர்வு பெற்று மேலாளராக பணிபுரிந்தார். அங்கு ஏழு வருடங்கள் வேலை செய்துள்ளார். அதில் அவர் செய்த விவசாய பயிர்களின் ஆராய்ச்சியில் வரவை விட செலவு அதிகமாக இருப்பதை உணர்ந்தார். அதன் அடிப்படையில் செய்யப்படும் பயிர்கள் ஒரு விவசாயிக்கும் இலாபத்தை கொடுக்காது என்பதை உணர்ந்து தனது வேலையை விட்டு விலகி தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் ஒரு கிருஸ்துவ மத அமைப்பில் தங்கி கிராம மக்களுடன் விவசாய பணியை செய்கிறார். அங்குள்ள கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலால் அங்கிருந்து வெளியேறி நெதர்லாந்து நாட்டின் டொமினிக் பியரின் (நோபல் பரிசு பெற்ற பங்குத்தந்தை) இந்திய இயக்கத்தில் சேர்ந்து அங்கு பல ஆண்டுகள் பணியாற்றுகிறார். அந்த அமைப்பு செய்த பல உதவிகளை பெற்ற அந்த பகுதி மக்களும் விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் அடைகின்றனர். அந்த சமயத்தில் பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெற்ற 'மனிதனும் உயிர்ச்சூழலும்' என்ற கருத்தரங்குக்கு சென்று அதில் கலந்து கொள்கிறார். அந்த கருத்தரங்கில்தான் அவர் இயற்கை விவசாயம் எனும் சூழலியல் விவசாய முறை பற்றி அறிந்து அதைப்பற்றி பல கருத்தரங்கங்கள் மூலமும், தனிப்பட்ட நபர்கள் மூலமும் விவசாயம் என்பது இயற்கையுடன் இணைந்து தனது தேவைகளை அடைவதற்காக செய்யப்படும்போதுதான் அது லாபகரமாக இருக்கும் என்பதை உணர்கிறார்.

தான் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்த திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள கீரனூர் என்ற இடத்தில் விவசாயம் செய்து கைவிடப்பட்ட நிலத்தை 'லீசா' மற்றும் 'குடும்பம்' என்ற இரண்டு அமைப்புகளுடன் தானும் இணைந்து 'கொழிஞ்சி' என்ற பண்ணையை உருவாக்கினார். இன்று அந்த பண்ணை அங்குள்ள குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் அந்த பகுதி விவசாயிகளின் பயிற்சி மையமாகவும், சுமார் 40 விவசாய குழந்தைகளுக்கு 'முறைசாரா கல்வி' கற்பிக்கும் பள்ளியாகவும் மாறியுள்ளது. அதன் பின்னர் அவர் தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடல், பயிற்சி மற்றும் கருத்தரங்கம், நடைபயணம் என தனது வாழ்நாளின் முழு நேரத்தையும் செலவிட்டார். தனது கடைசி காலத்தின் இறுதியில் கரூர் மாவட்டம் கடவூரில் 'வானகம்' என்ற அமைப்பை தோற்றுவித்து அதையும் விவசாய பயிற்சி மையமாக உருவாக்கியவர். 2013 டிசம்பர் இறுதியில் இறந்தபின் அங்கேயே விதைக்கப்பட்டார்.

இன்றும் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் என்றால் நம்மாழ்வார் என்ற பெயர்தான் முதலில் நினைவுக்கு வரும் என்ற அளவில் தனது வாழ்நாள் முழுவதும் அதற்காகவே பணி செய்தவர். அவரது கோட்பாடு 'உழவாண்மை' என்பதாகும். உழவு என்றால் துன்பம் என்றொரு பொருளும் உண்டு. அதனால் துன்பத்தில் இருந்து விடுபடுவதே உழவாண்மை என்று கூறிவந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கு உழவாண்மை அறிஞர் ஜப்பானின் மாசானபு புகுவொகா, ஆஸ்திரேலியாவின் பில் மொல்லிசன், நமது நாட்டிலுள்ள மகாராஷ்டிராவின் சிறிபாத தபோல்கர் ஆகியோரை நம் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி அவர்களது விவசாய கோட்பாடுகளையும் செயல்களையும் எளிமையான முறையில் நம் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தினார். தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை இல்லாமல் போனாலும் நம் விவசாயம் மழையை நம்பி இருப்பதால் இங்கு மரம் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றுடன் இணைந்த வேளாண்மையே நீடித்த நிரந்தர லாபத்தை கொடுக்கக்கூடிய விவசாய முறையாக இருக்கும் என்பதை பல விதங்களிலும் பல விவசாயிகளுடன் இணைந்து நிரூபித்துக் காட்டினார். இவர் தனது தொடர் பயணத்தின் மூலம் ஒரு விவசாயி பயன்படுத்தும் எளிய முறை செயல்பாட்டை அடுத்த விவசாயியிடம் எடுத்துக்கூறி அதைப் பயன்படுத்திப் பார்க்கச்செய்து இன்றுள்ள பல இயற்கை விவசாய உத்திகளை பரவலாக்கச்செய்தவர். 'இருமடி பாத்தி' (raised bed), 'பஞ்ச கவ்யம்', 'மண்புழு உரம்', 'அமிர்த கரைசல்' போன்றவை இதில் அடங்கும். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தவறாது கூறுவது மூலிகை பயன்பாடு, சிறு தான்ய உணவு, பாரம்பரிய கால்நடை வளர்ப்பு, இயற்கை வாழ்வியல், உணவே மருந்து மருந்தே உணவு போன்றவை பற்றியதாகும்.

ஆக நம்மாழ்வார் கூறுவது போல் ஒரு பண்ணை அமையுமானால் அந்த பண்ணையில் இருந்து வெளியில் செல்லும் பொருட்கள்தான் அதிகமாக இருக்கும் (உள்ளே செல்லும் பொருட்களுடன் ஒப்பிடுகையில்). அவ்வாறு உள்ளே செல்லும் பொருட்களும் விதைகளாகவோ, தொழில்நுட்பமாகவோ மட்டுமே இருக்கும். அதனால் அந்த பண்ணை எந்த ஒரு கால கட்டத்திலும் பொருளாதார ரீதியில் நட்டம் அடைய வாய்ப்பே இல்லாமல் இருக்கும். எனவே ஒரு விவசாயி நிரந்தரமான லாபகரமான பண்ணையை நடத்த தற்சார்புடைய பண்ணையம் அமைக்க தனது பண்ணையில் தன் தேவைகளை மட்டுமே கருத்தில் கொண்டு பயிர் செய்து, தனது உற்பத்தியின் உபரியை தானே நேரிடையாக நுகர்வோருக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆக ஒரு விவசாயி உற்பத்தியாளனாகவும், விற்பனை செய்பவனாகவும் இருக்கவேண்டும் என்று அறுதியிட்டுக் கூறுவார். நம்மாழ்வாரின் கோட்பாடும், மகாத்மா காந்தி சொன்ன கிராம சுய‌ராசுய‌ய முறையும் ஒன்றே ஆகும். கிராமம் தனது பெரும்பான்மையான தேவைகளைத் தானே நிறைவு செய்துகொள்ளும். கூடவே அருகில் உள்ள நகரத்தின் பெரும்பான்மையான தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அதன் உற்பத்தி இருக்கும். நகரத்தில் உற்பத்தியாகும் துணி, இரும்பு, பித்தளை, அலுமினியம் போன்ற பொருட்கள் சிறிதளவே கிராமத்திற்குத் தேவைப்படும்.

இதே கொள்கையை ஜே. சி. குமரப்பாவும் தனது இந்தியப் பொருளாதாரக் கொள்கையாக வகுத்துள்ளார். இந்த கொள்கை வழி நடக்கும் ஒரு நாடு சிறந்த வல்லரசு நாடாகவும், நிரந்தரமானதாகவும் இருக்கும்.

அமெரிக்காவில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அனைத்து உணவையும் அங்கு வசிக்கும் 2 விழுக்காடு விவசாயிகள்தான் உற்பத்தி செய்கிறார்கள். மேற்கு நாடுகளின் இந்த பயிர்த்தொழிலை அனைவரும் வானளாவப்புகழ்கிறார்கள். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது? இந்த 2 சத விவசாயிகள் டிராக்டர்கள் முதல் கதிர் அடிக்கும் இயந்திரங்கள் வரை அனைத்து இயந்திரங்களையும் பயன்படுத்துகிறார்கள். இந்த பண்ணை இயந்திரங்கள், இராயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், விதை உற்பத்தி என்று எல்லாவற்றையுமே செய்பவர்கள் இருப்பது நகரத்தில். இறைச்சி, கோதுமை,பிற பண்டங்களை பதப்படுத்தி டப்பாவில் அடைப்பவர், பொட்டலம் மடிப்பவர் வாழ்வது நகரத்தில். அவை அனைத்துக்குமான தொழில் நுட்பத்தை உருவாக்குபவர், இவ்வளவு தேவைக்கும் வேண்டிய எரிசக்தியான மின்சாரம், பெட்ரோல் உற்பத்தி செய்பவர் இருப்பது நகரத்தில். ஆக அமெரிக்கா முழுவதுமே உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது என்பதே நிதர்சன உண்மை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதை தவிர கீழ்நாடுகளில் இருந்து மீன், தேயிலை, மாட்டிறைச்சி, முந்திரி, பழங்கள், சோயா போன்ற ஏராளமான பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. சராசரியாக‌ ஒரு அமெரிக்கருக்கர் உட்கொள்ளும் உணவை உற்பத்தி செய்ய வேற்று நாட்டவர்கள் 1.25 பேர் வேலைசெய்கிறார்கள் என்பதே உண்மை. மாறாக‌ இந்தியாவிலுள்ள 64 கோடி விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், 120 கோடி இந்தியருக்கு மட்டுமல்லாமல் மேலை நாட்டவருக்கும் உற்பத்தி செய்கின்றனர். ஆக ஒரு இந்திய விவசாயி ஒன்றரை மனிதருக்கு வேண்டிய உணவை உற்பத்தி செய்கிறார்.

இப்போது நாம் ஒரு முடிவுக்கு வருவோம். எந்த உற்பத்தி முறை திறமை வாய்ந்தது? நாம் வாழும் பூமி நிலைத்து நீடித்திருக்க நாம் பின்பற்றப்போவது எந்த பாதையை? வருங்காலத்தலைமுறைக்கு எதை 'கைமாற்றி'க்கொடுக்கப்போகிறோம்? உடனடியாகக்கிடைக்கும் லாபத்துக்கான வாழ்க்கை ஆதாரமான நிலம்,நீர், விதை, காடு, கடல், கால்நடைகளை நாம் அழியவிடப்போகிறோமா? இப்படி எல்லாம் கேள்வி எழுப்புகிறார் ஆஸ்திரேலிய பேராசிரியர் பில் மொல்லிசன். மற்றொரு உண்மையும் கொண்டு வருகிறார்…மனிதர்கள் கற்பனைத்திறன் கொண்டவர்கள், படைப்பாற்றல் மிக்கவர்கள், விவசாயத்தில் நிலத்தை கொத்துவது, சமப்படுத்துவது, வரப்பெடுப்பது என்று செய்வதையே திரும்பத்திரும்ப செய்யும்பொழுது மனிதர்கள் சலிப்படைகிறார்கள். உழவர்கள் மாடாக உழைப்பதால்தான் விவசாயத்தொழிலில் இளையவர்களுக்கு நாட்டம் இல்லை. கால் ஏக்கர் நிலத்தில் உணவுப்பயிர் சாகுபடி செய்தால் அதை ஒட்டி முக்கால் ஏக்கர் நிலத்தில் கால்நடை, இருப்பிடம், மேய்ச்சல் நிலம், தழை எரு தரும் மரம், செடி, கொடிகள், மண்புழு உரம் தயாரிப்புக்கு இடம் ஒதுக்கப்படவேண்டும். அந்த இடம் பழம், கீரை, விறகு, பலகை, மருந்து வழங்கக்கூடிய காடாகவே அமையலாம். நீர் சேமிக்கும் பரப்பாகவும், மீன் வளர்க்கும் பரப்பாகவும் அது மாறலாம் என்று பில் மொல்லிசன் ஒரு விவசாயியின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யும் உத்திகளையும், வேலை பளுவை குறைத்து அதை இயற்கை சூழலில் நிலைத்து நிறுத்துவதற்கான எளிய முறைகளையும் பின்பற்ற சொல்கிறார். ஆக பருவ மழையையே நம்பி இருக்கும் நம் நாட்டுச்சூழலுக்கு மிகவும் உகந்த முறை கால்நடை வளர்ப்புடன் இணைந்த பயிர்த்தொழிலே ஆகும் என்பதையே பில் மொல்லிசன் கருத்தை ஒத்து நம்மாழ்வாரும் உறுதிபடக்கூறுகின்றார்.

எனவே நமது செயல்பாடுகள் அனைத்தும் இந்த கருத்தை ஒட்டியே அமையவேண்டும். இதுவே விவசாயத்தை மிக எளிமையான முறையில் லாபகரமானதாக செய்ய உதவும்.

குறிப்பு: 2 சத அமெரிக்கர்கள் தம் நாட்டுக்குத்தேவையான மொத்த உணவை உற்பத்தி செய்வதாக புள்ளி விபரங்கள் பட்டியலிட்டாலும் இந்த 2 சத மக்கள்கூட விருப்பமின்றியே இப்பணியை செய்து வருகின்றனர் என்றும், அவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்றும், அமெரிக்கா மட்டுமல்ல, உலகெங்கிலுமுள்ள விளை நிலங்களின் பரப்பளவு அதிவேகமாக குறைந்து வருகிறதென்றும், கீழ்நாடுகளிலுள்ள அரசுகளும் உலக வர்த்தக அமைப்பு தரும் அழுத்தத்தினால் தம் நாடுகளில் விவசாயிகளுக்கு அளித்து வரும் சலுகைகளை படிப்படியாக குறைத்து வருகின்றனவென்றும் பில் மொல்லிசன் சுட்டிக்காட்டுகின்றார். இக்குறிப்பினை படிப்பவர்களுக்கு நாம் சந்திக்கப்போகும் உணவுப்பற்றாக்குறை, உணவுப்பஞ்சம் போன்ற கவலை தரும் எண்ணங்கள் தோன்றினால் அவை மிகையல்ல!

கட்டுரை வடிவாக்கம் - பாபுஜி

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org