தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்

மதிப்புக் கூட்டிய பொருட்கள்

[ஆசிரியர் குறிப்பு: திரு.ஜெய்சங்கர் அவர்கள் இந்த மாத‌க் கட்டுரையை என்னுடைய வற்புறுத்தலின் பேரிலேயே எழுதுகிறார். ' மாட்டுப் பண்ணை வைத்தால் மாடு உற்பத்தி பண்ண வேண்டும்; பால் அல்ல' என்ற நம்மாழ்வாரின் ஞானத்தை முதல் கட்டுரையில் வெளியிட்டு விட்டுப் பின்னர் பால் மற்றும் மதிப்புக் கூட்டிய பொருட்கள் என்ற வியாபார நோக்கில் எழுதுவது என்ன நேர்மை என்பது அவரது நியாயமான கேள்வி. எனினும், உழவன் விடுதலை - குறிப்பாக உழவனின் பொருளாதாரத் தற்சார்பு என்பது தாளாண்மையின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. சந்தைத் தற்சார்பு வந்தால் பின் எல்லாத் தற்சார்பும் தானே வந்துவிடும் என்பது நடைமுறை நிதர்சனம். 'மாடல்ல மற்றையவை' தொடர் மாடு வளர்த்துப் பராமரிக்கும் அனைவருக்கும் பயனுள்ள ஒரு முழுமையான‌ கையேடாக வியங்க வேண்டும் என்பது நம் அவா. மேலும் கிராமத்து வாழ்வாதாரங்களை உருவாக்குவதும் பாதுகாப்பதும் காந்தி கூறிய கிராம சுயராச்சியத்திற்கும், குமரப்பா திட்டமிட்ட நிலைத்த பொருளியலுக்கும் இன்றியமையாதது. எனவே மாடு வளர்ப்பதைச் சிறுதொழிலாக்க விரும்புவோரின் பொருளாதாரத்தை மனதில் இருத்தி இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இதில் உள்ள கருத்துக்களை அவரவர் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும். வேளாண்மையைப் போல் கால்நடை வளர்ப்பும் அவ்வச் சூழலுக்கு ஏற்றதாய்க் கைக்கொள்ள வேண்டும்.]

சென்ற மாதம் தயிர், மோர், பன்னீர் மற்றும் கோவா செய்வதைப் பற்றி பார்த்தோம். அவற்றை எல்லாம் சில நாட்களுக்கு மட்டுமே கெடாமல் சேமிக்க முடியும். வெண்ணெய், நெய் போன்ற பொருட்களாக மாற்றினால் இன்னும் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும். நெய்யை குளிர் சாதனப் பெட்டியில் கூட வைக்காமல் மாதக் கணக்கில் வைத்திருக்கலாம். நம் எல்லோருக்கும் பொதுவாக வெண்ணெய் மற்றும் நெய் எப்படி செய்வது என்று தெரிந்திருக்கும். வீடுகளில் செய்த அனுபவம் இருக்கும். பாலை தயிராக்கி பின்னர் அடுத்த நாள் ஏடை எடுத்து சில நாட்கள் சேமித்து வைத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து மத்தால் கடைந்தால் வெண்ணெய் திரண்டு வரும். அதனை காய்ச்சினால் நெய் கிடைக்கும். சிறிய அளவு செய்யும் போது இந்த முறையில் செய்யலாம்.

பால் பண்ணையில் கிடைக்கும் பாலை நெய்யாக்க இந்த முறையில் செய்வது கடினம். எனவே, சில இயந்திரங்களை சார்ந்துதான் ஆக வேண்டும். பாலிலிருந்து கொழுப்பை மட்டும் முதலில் நீக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு கிரீம் செபரேட்டர் (Cream Seperator) என்ற இயந்திரம் தேவை. இது ஒரு மிக்ஸி போன்றது. விலை பத்தாயிரம் ரூபாய்க்குள் தான் இருக்கும். இதில் பாலை ஊற்றி கடைந்தால் பால் கொழுப்பு தனியாகவும், கொழுப்பு நீக்கிய பால் தனியாகவும் பிரிந்து கிடைக்கும். மிக்ஸி போல் இதன் வேகத்தையும் மாற்றலாம். அதிக வேகமாக சுழற்றினால் பாலில் உள்ள எல்லா கொழுப்பும் நீங்கி விடும். தேவையானால், குறைந்த வேகத்தில் ஓட்டி பாதி கொழுப்பையோ அல்லது தேவையான அளவு கொழுப்பை மட்டும் நீக்கிக் கொள்ளலாம். பாலில் உள்ள கொழுப்பு எல்லாவற்றையும் நீக்கி விட்டால் வெண்ணெய் அதிகம் கிடைக்கும், ஆனால் எஞ்சிய பொருளை பாலாக விற்க இயலாது. பசும்பாலில் ஏறத்தாழ 4 முதல் 4.5 விழுக்காடு கொழுப்பு இருக்கும். இதில் 2 விழுக்காடு மட்டும் கொழுப்பை எடுத்து விட்டு எஞ்சிய (2.5 விழுக்காடு கொழுப்புள்ள) பாலை சிலுப்பிய‌ பாலாக (Skimmed Milk) விற்கலாம். சரி, கொழுப்பு குறைந்த பாலை குறைந்த விலைக்கு விற்கலாம். தேநீர் கடைகள் அல்லது நகரத்தில் உள்ள சிலர் மட்டுமே இதனை வாங்குவர். சிலுப்பிய‌ பாலுக்கு உங்களிடம் சந்தை இல்லாவிடில் என்ன செய்வது? ஒன்று, கொழுப்பு குறைந்த பன்னீர் செய்யலாம். அதற்கும் நல்ல கிராக்கி இருக்கிறது. எஞ்சியுள்ள வே தண்ணீரை புளிக்க வைத்து இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். மற்றொரு வழி, பாலில் உள்ள எல்லா கொழுப்பையும் எடுத்து வெண்ணெய் செய்யலாம். எஞ்சியுள்ள கொழுப்பில்லாத பாலிலிருந்து கேசீன் (Casein) என்ற பொருளை தயாரித்து விற்கலாம். கேசீன் எப்படி செய்வது என்று பின்னர் பார்க்கலாம்.

பாலிலிருந்து எடுத்த கொழுப்பை தனியாக ஒரு சுத்தமான பாத்திரத்தில் வைத்து அதில் சிறிது தயிரை விட்டு ஒரு நாள் அப்படியே விட்டு விடவும். கொழுப்பு நன்றாக உறைந்த பிறகு அதை வெண்ணெயாக்க வேண்டும். இதற்கு அதனை நன்றாக கடைய வேண்டும். அதிக அளவில் இருப்பதனால் சர்னர் (Churner) என்ற இயந்திரத்தை பயன்படுத்தலாம். இதில் மின்சாரத்தில் இயங்குவது, கையால் சுழற்றுவது என்று இரண்டு வகை உண்டு. நமக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், நேரம் சற்று அதிகமானாலும், உடலுழைப்பு தேவைப்பட்டாலும் கையால் சுழற்றுவது சிறந்தது. இதில் கிடைக்கும் வெண்ணெய் அதிக ருசியுடன் இருக்கும். வேகமாக சுழற்றி வெண்ணெய் எடுத்தால் அது சிறிது கசந்து விடும்.

சர்னர் என்ற கையால் சுழற்றும் இயந்திரம், நாம் பொதுவாக வீட்டில் வெண்ணெய் எடுக்க ஒரு பாட்டிலில் போட்டு குலுக்குவோமே அதே போல் இயங்குவதுதான். ஒரு கைப்பிடியில் சில மர மத்துகள் இணைக்கப்பட்டிருக்கும். மத்துகள் ஒரு கண்ணாடி பாத்திரத்திற்குள்ளும் அதன் கைப்பிடி வெளியில் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். கண்ணாடி பாத்திரத்திற்குள் உறைந்த கொழுப்பை இட்டு கைப்பிடியை நன்றாக சுழற்றி கடையக் கடைய, வெண்ணெயும் மோரும் தனியே பிரியும். கண்ணாடி பாத்திரம் முதலில் மங்கலாக ஆகும். பின்னர் காண்ணாடியின் மங்கல் மாறி தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும். தெளிவாகத் தெரியும்போது கடைந்தது போதும் என்று பொருள். பாத்திரத்தை திறந்து அதில் குளிர்ந்த நீரை சேர்த்தால் வெண்ணெய் மட்டும் தனியே மேலே மிதக்கும். இதனை தனியே தண்ணீர் இல்லாமல் பிரித்து வெண்ணெயாக விற்கலாம். இந்த வெண்ணெயைக் காய்ச்சி அதிலிருந்து எல்லா நீரையும் எடுத்து விட்டால் கிடைப்பதே நெய். இது மாதக்கணக்கில் கெடாதிருக்கும். நெய் செய்ய உறைந்த பால் கொழுப்பை கடையாமல் அப்படியே காய்ச்சியும் நெய் எடுக்கலாம். சுவை சற்றே மட்டுப்படும்.

சரி, இப்போது கேசீன் செய்வது எப்படி என்று பார்க்கலாமா? கேசீன் என்பது பாலில் கொழுப்பு தவிர‌ உள்ள மற்ற திடப் பொருட்களாகும். இதனை பிரித்து மாவாக்கி விற்கலாம். இது பெயிண்ட், வஜ்ஜிரம், காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க ரென்னெட்டை பயன்படுத்தி கேசீன் தயாரிக்க வேண்டும். லாக்டோஸ் எனப்படும் பால் சர்க்கரையுடன் கலக்க, ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை பயன்படுத்தி தயாரிக்க வேண்டும். மற்ற உபயோகங்களுக்கு லாக்டிக் அமிலம் அல்லது நன்கு புளித்த மோரையே பயன்படுத்தலாம். கேசீன் தயாரிக்க பாலில் சிறிதளவு கூட வெண்ணெய் இருக்கக் கூடாது. அந்த பாலை நீராவி செலுத்தி 38C டிகிரி சூடு செய்யவும். பின்னர் அதை ஒரு மரத் தொட்டியில் ஊற்றி 10 லிட்டருக்கு 1 லிட்டர் என்ற விகிதத்தில் நன்கு புளித்த மோரை கலந்து மரத் துடுப்பினால் கிளறி விட்டுக் கொண்டே இருந்தால் நன்றாக கெட்டிப்பட்டு விடும். அதை அப்படியே ஒரு நாள் வைத்தால் தொட்டியின் அடியில் கேசீன் பிரிந்து நிற்கும். மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை அகற்றி விட்டு இரண்டு மூன்று முறை நன்றாக தண்ணீரில் அலசி படிந்துள்ள அமிலச் சத்தை அகற்றவும். பிறகு, ஒரு கோணியில் போட்டு பன்னீருக்கு செய்வதுபோல் அழுத்தி தண்ணீரை எடுக்கவும். பின்னர் வெயிலில் நன்றாக உலர்த்தி அரைத்தால் கேசீன் தயார்.

சரி… இவ்வளவு மெனக்கெடலும் எதற்கு? ஒன்று… பாலை வைத்திருந்து விற்க முடியாது. எனவே, தினமும் இரண்டு முறை பண்ணையிலிருந்து வெளியில் அனுப்பியே ஆக வேண்டும். மேலும், பால் அனுப்புபவர் எல்லோருக்கும் தெரியும், நமது தவறு எதுவும் இல்லாமலேயே மாதத்தில் ஒரு முறையாவது பால், வண்டியில் சென்று அடைவதற்குள் கெட்டுப் போய் விடுவது என்பது தவிர்க்க இயலாத ஒரு தொந்தரவு. இதனால் நமக்கு பொருள் சேதம் ஏற்படுகிறது. அதைத் தவிர‌ நாம் நமது வருமானத்தையும் பெருக்கிக் கொள்ள முடியும். பெரிய அளவில் செய்தால், நமது கிராமத்திலேயே சிலருக்கு வேலை வாய்ப்பையும் நாம் அளிக்க முடியும்.

உதாரணமாக, ஒரு மாதத்திற்கு உங்கள் பண்ணையில் சராசரியாக முன்னூறு லிட்டர் பால் உற்பத்தி என்று வைத்துக் கொள்வோம். இப்போது பசும் பாலின் கொள்முதல் விலை சுமாராக 25 அல்லது 26 ரூபாய். இதன் மூலம் உங்கள் மாத வருவாய் 300 X 25 = 7500 ரூபாய் ஆகும். இந்த பாலை நீங்களே விற்றால் 32 ரூபாய்க்கு விற்கலாம். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பால் 36 முதல் 45 ரூபாய் வரை விற்கிறது. எனவே, 32 ரூபாய்க்கு நல்ல பாலை விற்பது கடினமாக இருக்காது. அப்படி செய்தாலே நமது மாத வருமானம் 300 X 32 = 9600 ரூபாயாகும். 2100 ரூபாய் வருமானம் அதிகரிக்கும். பாலையே தயிராக்கி விற்றால், லிட்டர் 60 முதல் 80 ரூபாய் வரைக்கும் விற்கலாம். ஒரு லிட்டர் பாலிலிருந்து 1 லிட்டர் தயிர் கிடைக்கும். எனவே, மாத வருமானம் 300 X 60 = 18000 ரூபாய் ஆகும். வீட்டில் உள்ளவர்களே சுலபமாக தயாரிக்கலாம். பாத்திரம் போன்ற பொருட்கள் வாங்க வேண்டி இருக்கும். தயிரை விற்பனைக்கென எதிலாவது அடைக்க வேண்டும். அதன் செலவுகள் ஒன்றும் அதிகம் இருக்காது. மாத வருமானம் இரு மடங்கிற்கும் மேல் கிடைக்கும். அதே போல், மோர் கூட தனியாக விற்றால் லிட்டர் 40 முதல் 50 ரூபாய்க்கு விற்கலாம். நாம் கடைகளில், பேருந்தில், வெயில் காலங்களில் வாங்கி அருந்தும் மோர் எல்லாம் பொதுவாக அரிசிக் கஞ்சி கலந்தே விற்பனை செய்யப்படுகிறது. 300 லிட்டர் தயிரிலிருந்து சுலபமாக 600 லிட்டர் நல்ல மோர் தயாரிக்கலாம். 600 X 40 = 24000 ஆகும் உங்கள் மாத வருமானம். ஆனால், தினமும் 20 லிட்டர் மோரை விற்பனை செய்ய நீங்கள் ஒரு வழியை கண்டு கொண்டு தக்க வைத்துக் கொள்ள வேண்டும். பேராசையில்லாமல், கலப்படமில்லாத, நல்ல மோர் தயாரித்து விற்றால் நுகர்வோரை தக்க வைத்துக் கொள்வது சிரமமல்ல. மாத வருமானம் மூன்று மடங்காகி விடும். தவிர‌, மோரில் அமுல் மஸ்தி போன்று மசாலா பொருட்கள், கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து ருசியூட்டி விற்றால் அதே மோரை ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு கூட விற்கலாம். அமுல் மஸ்தி ஒரு லிட்டர் 150 ரூபாய்க்கு விற்கிறது.

பத்து லிட்டர் பசும் பாலில் 1 கிலோ பன்னீர் எடுக்கலாம். பன்னீரின் அங்காடி விலை ரூபாய் 300 முதல் 350 வரை உள்ளது. அதனால் நாம் 250 ரூபாய்க்கு விற்க முடியும் என்று கொண்டால் நமக்கு 30 X 250 = 7500 ரூபாய் மட்டுமே மாத வருமானமாக வரும். அதற்கு நாம் பாலாகவே விற்கலாமே! ஆனால், ஒன்றை நுகர்வோருக்கு புரிய வைக்கலாம். அவர்கள் வீட்டில் அவர் பால் வாங்கி ஒரு கிலோ பன்னீர் செய்தாலே செலவு 350 ரூபாய் வரை ஆகிவிடும் என்றால் கடைகளில் 300 ரூபாய்க்கு விற்கும் பன்னீர் எவ்வளவு சுத்தமானதாக இருக்கும் என்பதை ஊகிக்கலாம். நுகர்வோரை இதை புரிந்து கொள்ள செய்தால் நிச்சயமாக பாலை விட அதிக இலாபம் வரும் அளவில் உங்கள் சுத்தமான பன்னீரை விற்பனை செய்ய இயலும். இதே போன்று, பல பொருட்களின் கலப்படத்தை நாம் சுலபமாக அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக, வேர்க்கடலை கடைகளில் விலை கிலோ சுமார் 100 ரூபாய். மொத்த கொள்முதல் விலை கூட கிட்டத்தட்ட 60 ரூபாய். ஒரு லிட்டர் கடலை எண்ணெய் தயாரிக்க குறைந்தது இரண்டேகால் கிலோ கடலை வேண்டும். அதாவது 135 ரூபாய் கடலை. அதன் மேல் எண்ணெய் ஆட்டும் செலவு, பாக்கெட்டில் அடைத்தல், விளம்பரம் போன்றவை எல்லாம் பிண்ணாக்கின் விலைக்குள்ளேயே அடங்கி விட்டது என்று வைத்துக் கொண்டால் கூட ஒரு லிட்டர் கடலை எண்ணெயை பெரிய பிராண்டுகள் எப்படி 100 அல்லது 105 ரூபாய்க்கு விற்க முடியும். இதில் கலப்படம் (Adulteration) என்ற பெயரில் இல்லாமல் கலத்தல் (Blending) என்ற பெயரில், எவ்வாறு சட்டப்படியே, பருத்திக் கொட்டை எண்ணெய், பாமாயில் போன்றவை கலக்கப்படுகின்றன என்று அடிசில் பார்வையில் கூட விவரமாக பார்த்தோமல்லவா. நான் இரண்டு வருடம் தொடர்ந்து பன்னீர் செய்து விற்ற அனுபவத்தினாலேயே உறுதியாக அதிக விலைக்கு விற்க இயலும் என்று சொல்லுகிறேன். பன்னீர் விற்பனையில் ஒரு சுதந்திரம் என்னவென்றால் வாரம் ஒரு முறை விற்பனைக்கு எடுத்துச் சென்றால் போதும். தயிர், மோர் போன்று தினமும் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.

வெண்ணெயின் கடை விலை சராசரியாக 350 முதல் 500 ரூபாய் வரை பெயரைப் பொருத்து உள்ளது. நெய்யின் விலை 450 முதல் 600 ரூபாய். 300 லிட்டர் பாலில் சுமார் 12 லிட்டர் “சுத்தமான” நெய் தயாரிக்கலாம். உப பொருளாக நமக்கு கேசீன் அல்லது மோர் கிடைக்கும். அதன் சந்தை மற்றும் விலையை பொறுத்து நிச்சயமாக உங்கள் சுத்தமான நெய்யை நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்று உங்கள் வருமானத்தை பெருக்க இயலும். இதையும் செய்து பார்த்த அனுபவத்தினாலேயே உறுதியாக கூறுகிறேன். பால் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் எல்லாமே பாலை மட்டுமே விற்பதில்லை. எல்லோருமே பனிக் கூழ் (ஐஸ்கிரீம்-Icecream) தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். அதை தயாரிக்க அதிக பால் கொழுப்பு தேவைப்படும். எனவே, நாம் முன்பே பார்த்தது போல் பாஸ்டரைசேஷனுக்கு பிறகு ஒரே தரமாக்குதல் -(Standaradisation) என்ற பெயரில் பாலில் உள்ள கொழுப்பு எல்லாவற்றையும் நீக்கி விட்டு மீண்டும் பால் கொழுப்பை (பால் கொழுப்பு மட்டும் தான் கலக்கப்படுகிறதா என்பதை அவரவர் ஊகத்திற்கே விட்டு விடலாம்) சராசரியான அளவில் கலந்து விற்கின்றனர். அதிகப்படியான பால் கொழுப்பு ஐஸ்கிரீம், வெண்ணெய், நெய் போன்ற பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. எல்லா பால் பொருட்களிலும் ஏதாவது “கலத்தல்” நடக்கிறது என்ற சூழலில் சுத்தமாக, நன்றாக பராமரிக்கப்பட்ட, மேய்ந்து திரியும் நாட்டு மாடுகளின் பச்சைப் பாலில் கலப்படம் எதுவும் இல்லாமல் நன்றாக தயாரிக்கப்பட்ட பால் பொருட்களுக்கு கண்டிப்பாக மவுசும் உண்டு… விலையும் உண்டு. நாட்டு மாட்டின் கறந்த பாலை சுவைத்த யாருக்கும் நிச்சயமாக 'பாலல்ல மற்றையவை’.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org