தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நகரங்களின் தீராத் தாகம் - பரிதி

மின்மினி

நேச்சர் கன்சர்வென்சி எனும் இயற்கைக் காப்புக் கழகம் உலக அளவில் 7,50,000-க்கும் அதிக மக்கள் தொகை கொண்ட ஐநூறு நகரங்களின் தண்ணீர் வழங்கல் கட்டுமானத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்தது. அவற்றில் தீராத் தாகம் கொண்ட முதல் இருபது நகரங்களில் நான்கு இந்திய நகரங்கள் உள்ளன: டெல்லி (இரண்டாமிடம்), ஐதராபாத், சென்னை, பெங்களூரு. சப்பான் தலைநகர் டோக்யோ முதலிடத்திலும் மெக்சிக்கோ நாட்டுத் தலைநகரமான மெக்சிக்கோ சிட்டி மூன்றாமிடத்திலும் உள்ளன. ச்சைனாவின் சாங்காய் நகரமும் முதல் இருபதில் இடம் பெற்றுள்ளது. தீராத் தாகம் கொண்ட நகரங்களில் கால் பங்கு நகரங்கள் உலகப் பொருளாதாரச் செயல்பாட்டில் முதன்மையான பங்கு வகிப்பவையாகும். அவற்றின் பொருளாதார மதிப்பு சுமார் 4,80,000 கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெரு நகரங்களின் பரப்பு புவியின் நிலப் பரப்பில் ஒரேயொரு விழுக்காடு தான். ஆனால், அவற்றுக்குத் தேவையான தண்ணீர் உற்பத்தியாகும் நிலப் பரப்பு புவியின் நிலப் பரப்பில் 41 விழுக்காடாக உள்ளது! இவ்வளவு பெரும் பரப்பு நிலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது (கையாளப்படுகிறது) என்பதுதான் அந்நகர மக்களுக்கு வழங்கப்படும் நீரின் தன்மையை முடிவுசெய்கிறது. பொருளாதார வளம் குறைந்த நகரங்கள் தம் நீர்த் தேவைக்குச் சராசரியாக 26 கி.மீ. சுற்றளவுப் பகுதியைச் சார்ந்திருக்கின்றன. பொருளாதார வளமிக்க நகரங்கள் சராசரியாக 57 கி.மீ. சுற்றளவில் உள்ள நிலங்களில் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்கின்றன.

பெரு நகரங்கள் தம் தண்ணீர்த் தேவையில் 78 விழுக்காட்டிற்கு நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீர் நிலைகளையே நம்பியுள்ளன. ஆகவே நெடுந்தொலைவில் இருந்து அந்த நீரைக் கொண்டுவரவேண்டியுள்ளது. [இதற்கு மிக அதிக அளவில் மின்னாற்றல் தேவைப்படுகிறது. இது சூழல் மாசுக்கு மற்றுமொரு முதன்மைக் காரணியாக உள்ளது. எடுத்துக்காட்டாக, 2011-ஆம் ஆண்டுப் புள்ளிவிவரப்படி, பெங்களூரு மக்கள்தொகை 85 லட்சம். அந்நகருக்கு நாளொன்றுக்கு 90 கோடி லிட்டர் காவிரி நீரை சுமார் 100 கி.மீ. தொலைவில் இருந்து 500 மீ. உயரத்திற்குக் கொண்டுவரவேண்டும். இதற்கு மாதம் ஒன்றுக்கு ஐந்து கோடி யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது!]

மொத்தத்தில், பெரு நகரங்கள் நாளொன்றுக்கு 50400 கோடி லிட்டர் தண்ணீரை 27,000 கி.மீ. தொலைவு இடமாற்றம் செய்கின்றன. இத்தகைய மாபெரும் கட்டமைப்பு இருந்துங்கூட நான்கில் ஒரு பெருநகரங்களைத் தீராத் தாகம் வாட்டுகிறது.

நகரங்களின் தண்ணீர்த் தேவை அதிகரிப்பதற்கு மக்கள்தொகைப் பெருக்கம் மட்டும் காரணமன்று. மக்களின் பொருளாதார நிலை வளர்ச்சியடையும்போது அவர்கள் நிலத்தடி நீரைக் காட்டிலும் நகராட்சி நீரே அதிகத் தூய்மையானது என்று கருதுகிறார்கள். அதனால் நகராட்சி நீர்த் தேவை அதிகரிக்கிறது. இதைக் கடந்த காலக் கள ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

(ஆசிரியர் குறிப்பு: சென்னை போன்ற நகரங்களில் குடி தண்ணீர் விநியோகம் என்பதே பலகோடி ரூபாய் பெறுமானமுள்ள வியாபாரம் ஆகி விட்டது. நகரத்தில் எவ்வளவுதான் நுகர்ச்சி குறைந்த வாழ்முறை வாழ்ந்தாலும், நகரத்தின் வடிவமைப்பாலேயே அதன் சூழல்சுவடு மிக அதிகம் என்று இச்செய்தி நமக்குத் தெளிவாக‌ விளக்குகிறது. கெடுமுன் கிராமம் சேர் என்ற தாளாண்மை தனிக்குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இக்குரல் சற்று வலுப்பட வேண்டுமானால் மக்கள் கிராமங்களுக்கு இல்லாவிடினும் சிறு ஊர்களுக்காவது பெயர முயற்சிக்க வேண்டும்.)

thiru.ramakrishnan@gmail.com

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org