தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தாளாண்மைச் சங்கம்


பாபுஜி & கௌரிமோகன்

23 ஆகஸ்ட் 2014 எல்லா நாளும் போலவே விடிந்தாலும், வெகு தூரம் பயணம் செய்து தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து திண்டுக்கல்லில் குவிந்த 150 'தாளாண்மை மலர்கிறது' (தா.ம) வாசகர்களுக்கும் அவர்களோடு கலந்துரையாடுவதற்காக 'செவிக்குணவில்லாதபோழ்து', 'மாடல்ல மற்றையவை', 'அக்கரை பார்வை', 'உழவை வெல்வது எப்படி', 'வானத்துப் பறவைகளைப் பாருங்கள்', 'குமரப்பாவை கேட்போம்', 'உண்ணும் கலையும் கலையில்லா உணவும்' போன்ற மிக வித்தியாசமான தலைப்புகளில் வாசகர்களுக்கும் வருங்கால புவி நுகர்வோர்களுக்கும் தேவையான கருத்துக்களை பதிவு செய்யும் எழுத்தாளர்களுக்கும், தா.ம வின் எழுத்தாசிரியருக்கும், பதிப்பாசிரியருக்கும் அன்றைய பொழுது ஒரு சிறந்த நோக்கத்தை உள்ளடக்கிய ஒன்றாகியது.

எழில் கொஞ்சும் சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள காந்தி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி தாளாண்மை சங்கத்தின் வருடாந்திர கூட்ட தொடர் நடைபெற்றது. ஏற்கனவே நம் தாளாண்மையில் எழுதியது போல், இக்கூட்டம் “ஒரு கூடுதல், ஒரு அமர்வு, ஒரு பகிர்தல்” என்றபடி அமைந்தது. பல்வேறு தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள். பசுமை போராளிகள், இயற்கை வேளாண் விவசாயிகள், இயற்கையை நேசிப்பவர்கள், இயற்கை அங்காடியாளர்கள், அண்மை தொழில் முனைவோர், கணினி துறையை சேர்ந்தவர்கள் மற்ற மாநிலத்து வல்லுனர்கள் என்று இன மொழி பேதமின்றி சிறந்த சிந்தனையாளர்களான‌ வாசகர்கள் வந்திருந்தனர்.பல்வேறு பின்புலம் கொண்ட, ஒத்த கருத்துடைய வாசகர்களை ஒருங்கே, ஒரே நூலில் மாலையாக தொடுத்ததாக இருந்தது. “தாளாண்மை சங்கம்”.

கிராமம் சார்ந்த த‌ற்சார்புடைய வாழ்வு முறை பற்றிய பதிவுகளை எவ்வித வணிக சமரசங்களுமின்றி (விளம்பரங்களே வேண்டாம் என்ற துணிவுடன் நடக்கும் ஒரே தமிழ் விவசாய வாழ்வியல் இதழ்!) அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது. எண்ணங்களை பற்றிய பதிவுகளாக மட்டும் இல்லாமல் செயல்படுத்தப்பட்ட, செயல்படுத்தக்கூடிய வாழ்வியல் முறைகளை பதிவு செய்வது (உதாரணம்: மண் வீடு கட்டுவது பற்றி ஒரு மண் வீடு கட்டி அதில் வாழும் ஒரு குடும்பத்தின் அனுபவத்தை பதிவு செய்வது, அறிவியல் எவ்வாறு வணிகத்தின் பிடியில் சிக்குண்டு மக்களை ஏமாற்ற துணை போகிறது என்பதை பல்வேறு நாடுகளில் நடந்த உண்மை சம்பவங்கள் மூலமாக விளக்குவது…), போன்ற தாளாண்மையின் நோக்கங்கள் விளக்கப் பட்டன.

இதழில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர்கள் பதிப்பாசிரியர் திரு அனந்தசயனம் மற்றும் ஆசிரியர் திரு. பாலாஜி ச‌ங்கர் மூலம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். இயற்கை விவசாயத்தின் பிதாமகரான சத்தியமங்கலம் திரு.சுந்தரராமன், எழுத்தாளர்கள் ராம், பாமயன், பரிதி (ராம்கி),பாபுஜி, அமரந்தா, நாச்சாள் ஆகியோரை வாசகர்களுக்கு பதிப்பாளர் அனந்து அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்பின் நம் தாளாண்மையின் கோட்பாடுகளுக்கு ஆசானாய் விளங்கும் திரு. ஜே.சி.குமரப்பாவை நினைவு கூறும் கருத்தரங்கு நடை பெற்றது. குமரப்பா என்னும் மா மனிதரை பாமயன் மிகச் சுவையான ஒரு சொற்பொழிவால் அறிமுகம் செய்து வைத்தார்.

தஞ்சையில் தன் குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாக (மொத்தம் 13) பிறந்து, மிக உயர்ந்த கல்விக்கூடங்களில் பொருளாதாரம் பயின்று, தணிக்கையாளராக பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து பின்னர் ஒரு குஜராத்தி நல்மனிதரை (காந்தி என்று அம்மனிதர் அறியப்பட்டார்) 'கோட்டு, சூட்டு' ஆடையில் சந்திக்க சென்று அம்மனிதரின் எளிமை மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, காந்தி கேட்டுக்கொண்டதால் சோசியலிசமும் கம்யுனிசமும் அல்லாத ஒரு பொருளாதாரக்கொள்கையை காங்கிரசுக்காக வடிவமைத்து, கடைக்கு சென்று தன் இடுப்பு சுற்றளவை சொல்லி வேஷ்டி கேட்டு, எல்லா சுற்றளவு இடுப்புக்கும் பொருந்தும் அந்த ஆடையின் எளிமையில் தன் அடையாளத்தை மீட்டுக்கொண்டு இந்தியாவுக்கு பொருந்தாத எந்த ஒரு பொருளாதாரக்கொள்கையை யார் முன் வைத்தாலும் கடுமையாக விமரிசித்து அதனால் காந்தியின் மரணத்திற்கு பின் அரசியலில் ஒதுக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராகும் தகுதி மறுக்கப்பட்டு, இறுதி வரையில் இந்திய பொது ஜனத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த குரல் கொடுத்து அது சரியானதாயிருந்தும் ஒதுக்கப்பட்டதால் 'நேர்மையான முன்கோபி' என்ற பெயர் மட்டும் தங்கி இறந்து போன ஒரு மேதை!

திட்டக்குழுவின் உறுப்பினராக இருக்கையில் புது தில்லியின் ஒரு திட்டக்குழு கலந்துரையாடலுக்கு மாட்டு வண்டியில் சென்று நேருவின் பொறுமையை சோதித்தது, திட்டக்குழுவின் திட்டங்கள் பொது ஜனங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியதா என்பதை கண்டறிய ஒரு எளிய முறையை முன்வைத்தது (ஒரு ஏழையின் விலா எலும்புகளை திட்டங்களுக்கு முன்பும் செயல்பாடுகளுக்கு பின்பும் எண்ணுவது - சதை கூடி கண்ணில் தெரியும் எலும்புகளின் எண்ணிக்கை குறைந்திருந்தால் வெற்றி, இல்லையென்றால் தோல்வி! ), நிலைத்த‌ பொருளாதாரம் (economy of permanance) என்கிற கருத்தை அறிமுகப்படுத்தியது, 'Grow More' என்கிற 'பசுமைப் புரட்சியின்' முன்னோடி திட்டத்தை இந்தியாவில் ஆங்கில அரசு புகுத்தியபோது அதைக் கடுமையாக எதிர்த்து அது எவ்வாறு வளர்ந்த நாடுகளிலேயே தோல்வியுற்ற முயற்சி என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கியது, அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வாறு மக்களின் வாழ்வாதார மேம்பாடு சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று அடிக்கோடிட்டது (Small is Beautiful எழுதிய ஷூமாகருக்கும் இவரே முன்னோடி) போன்ற பல குமரப்பா நினைவுகளை திரு. பாமயன் அவர்கள் பகிர்ந்து கொண்டு, காந்தியின் மறைவிற்கு பிறகு “தற்சார்பு பொருளாதார மேதை குமரப்பா எவ்வாறு மறக்கடிக்கப்பட்டார்” என்பதையும், மற்ற தெரியாத செய்திகளையும் கூறி, ஒட்டு மொத்த வாசகர்களை அந்தந்த கால கட்டத்திற்கு அழைத்து சென்று, மறுபடியும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார். அவர் பேசி முடித்த பிறகு, நாம் ஏதோ “விலை மதிக்க முடியாத பொருளை தவறவிட்ட மனோநிலைக்கு தள்ளப்பட்டதை போல் உணர்ந்தோம்.

ஆசிரியர் பாலாஜி சங்கர் குமரப்பாவின் அண்மை பொருளாதாரத்தையும், தற்சார்பு வாழ்க்கை முறையும் மிக விரிவாக பேசினார். இதுபற்றி தாளாண்மையில் எழுதியும் வருகிறார். தற்போது உள்ள பொருளாதார‌க் கொள்கையை மிக எளிதாக, அனைவருக்கும் புரியும் படியாக, ஈசாப்பின் கதை மூலமாக, நரி கொக்குக்கு விருந்து அளிப்பதும் அதற்கு பிறகு கொக்கு நரியை விருந்துக்கு அழைப்பதும் கதை வாயிலாக விளக்கி அண்மை பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

கிராமம் சார்ந்த தொழில்களை துவங்கி கிராம வளத்தையும், கிராம மக்களின் பொருளாதாரத்தையும் எவ்வாறு நிரந்தரமாக மேம்படுத்துவது, இவற்றை எவ்வாறு அளவீடு செய்வது (உதாரணம் - JPL - Jobs Per Lakh - ஒவ்வொரு லட்ச ரூபாய் முதலீட்டிற்கும் எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன? ஃபோர்டு கார் நிறுவனம் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்து 4000 பேருக்கு மட்டுமே வேலை கொடுத்தது போலல்லாமல்!!) போன்றவற்றிற்கான எளிதில் செயல்படுத்தக்கூடிய வழிகளை பட்டியலிட்டு விளக்கினார்.

தற்சார்பைப் பற்றி அதிகமாக பேசப்பட்டது. ஒரு சிலர் பேசும் போது “வாழ்க்கை என்பது படிப்பது, மதிப்பெண் எடுப்பது, நுழைவு தேர்வு எழுதி கம்பெனிகளில் சேர்வது, அதன் பின் அதில் தொடர்ந்து இருப்பது அல்லது வேறு வழியில்லாமல் தொடர்ந்து இருப்பது” என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு, தாளாண்மை ஒரு விளக்காக இருந்து மற்ற வாழ்க்கை முறையும் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. வேறு சில வாழ்க்கை முறையில் குறைந்த சம்பளம் இருந்தாலும், மிகுந்த மகிழ்சியும், சுற்றம் சூடி சேர்ந்து வாழலாம்” என்பதை கூறி தற்சார்பில் வெற்றி கண்டவர்களை வெளிச்சம் போட்டி காட்டியது. தற்சார்பில் வெற்றி கண்டவர்களில் சிலர், நன்கு படித்து பட்டம் பெற்றவர்கள், வேலைக்கு சென்று, பொருள் ஈட்டி, மனநிறைவு அடையாமல், வேலையை துறந்து தத்தமது இடங்களுக்கு சென்று, சுயமாக தொழில் தொடங்கி மற்றவர்களுக்கு வேலை அளித்து, தாங்கள் வாழ்க்கையை நடத்தும் அளவுக்கு பொருளிட்டு, மகிழ்ச்சியாக இருந்தை காண முடிந்தது. சென்னகுண‌ம் கிராமத்தில் சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட தற்சார்பு முயற்சி வளர்ந்து கொண்டு வருவதையும் விளக்கினார்கள்.

இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த காந்திகிராம கிராமப்புற வேலை வாய்ப்பு திட்ட மேலாளர் ரேவதி அவர்கள், திட்டங்களால் பயனடைந்த சில மகளிர் சுய உதவி குழு அமைப்பாளர்களை தம் வெற்றிக்கதைகளின் இறக்க ஏற்றங்களை (இறங்கியிருந்த அவர்கள் வாழ்வு எவ்வாறு மேம்பட்டது) அனைவருடனும் பகிர்ந்துகொள்ளச்செய்தார். பயிற்சிக்கான குறைந்த பட்ச தகுதி கூட இல்லாத ஒரு கிராமப்பெண்மணி எவ்வாறு பயிற்சிக்காக போராடி இடம் பெற்று வெற்றியாள‌ரானார் என்பதை கண்ணீருடனும் பெரு நம்பிக்கையளிக்கும் விதமாகவும் அனைவருடனும் பகிர்ந்து கொண்டது மனதை விட்டு அகலாது.

அதன் பின்னர் சிறுதானியங்களைப் பதப் படுத்தும் தொழில்நடத்தும் தினேஷ் ,தன்னுடைய‌ தொழில் எவ்வாறு ஆந்திராவில் மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரங்களைக் காக்கிறது என்று விளக்கினார். சமன்வயா அமைப்பைச் சேர்ந்த ராம் பேசுகையில் ” கடந்த பத்தாண்டுகளாக நாம் தொடர்ந்து கூச்சலிட்டு 'ஆர்கானிக்' என்றால் நல்லது என்ற தெளிவு மக்களுக்கு ஏற்பட்டு விட்டது. இனி நாம் செய்ய வேண்டியது 'லோக்கல்' என்றால் நல்லது என்று பறைசாற்றுவதே” என்றார்.இவ்விழாவை ஒருங்கிணைத்து நடத்திய “பாதுகாப்பான உணவிற்கான கூட்டணி”யைச் சேர்ந்த அனந்து நன்றியுரை கூற விழா இனிதே நிறைவேறியது. வந்திருந்த சில நூறு பேர் 'அதிகம் கேட்காவிடினும் தனித்து ஒலிக்கும் இக்குரல் ஆழமானது'' என்ற‌ நிறைவுடன் சென்றனர்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org