தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மின்மினி! - அர. செல்வமணி


மழையொன்று பெய்துவிட்டால் மண்ணுயிர்கள் பெருகும்
மாலையிலே விளக்கொளிக்கு மகிழ்ந்தவையுங் கூடும்
அழையாத விருந்தாக அவைநுழையும் வீட்டில்
அயர்ந்திரவில் உறங்கையிலே அவைஎம்மைக் கடிக்கும்
தழைத்திருக்கும் புல்லூடே தங்கிவிடும் உயிர்கள்
தருந்தொல்லை தாங்காமல் தவிர்த்திடுவோம் விளக்கை
மழைக்காலம் பெரும்பாலும் மண்டுகின்ற இருளில்
மனம்போல எரிக்காமல் மறந்திருப்போம் ஒளியை

வீட்டினுள்ளே ஒருவிளக்கு வெளியினிலே இல்லை
வெகுவாக நுகர்வின்றேல் வேறேது தொல்லை
ஆட்டிவைக்கும் பூச்சிகளால் அதையுமிங்கே அணைத்தோம்
அதனாலே தாழ்வில்லை அமைதியிலே மகிழ்ந்தோம்
ஏடொன்றும் படிக்காமல் இருட்டறையில் இருந்தோம்
எம்வீட்டுப் பலகணியில் இறங்கியதோர் விண்மீன்
காட்டிநின்ற ஒளியாலே களித்திருந்த வேளை
கண்டுவிட்டோம் மின்மினிதான் கண்சிமிட்டு தென்றே!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org