தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


ஒத்துழையாமைக்கு ஒரு அறைகூவல்

'உலகமே ஒரு நாடக மேடை' என்ற ஷேக்ஸ்பியரின் வரி அழியாப் புகழ் பெற்றது. இன்று உலகெங்கும் நடக்கும் ஆட்சி முறைமைகளைக் காணின் 'உலகமே ஒரு சந்தை' என்ற தெளிவு நமக்குப் புலப்படும். ராமர், அல்லா, புத்தர், யேசு என்பது எல்லாம் வெளிப்பூச்சுத்தான் என்பதும், மனிதனின் உண்மையான‌ மதம் பணம்தான் என்பதும் தெளிவாகும். வாழ்வில் எல்லா வெற்றிகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வியாபாரத்திறமையின் வெற்றியாவதையும், த‌ம் திறமைகளையோ, சேவைகளையோ வாய்ப்பந்தல் போட்டு சந்தைப்படுத்தத் தெரிந்தவர்கள் எளிதாய் வெல்வதையும் பார்க்கிறோம். “பேச்சாற்றல்” என்று பல கல்லூரிகளில் தனிப் பாடம் நடத்தப் படுகிறது. உருவக மொழிதல், பொதுஜன‌ மொழிதல் போன்ற பட்டங்கள் உருவாகியுள்ளான.தொழிலிலும், கல்வியிலும், மருத்துவம் போன்ற சேவைப் பிரிவுகளிலும் நேர்மை என்பது குறைந்து கொண்டே வருகிறது. வாய்ப்பூச்சே செயலுக்கு மாற்றாகி விடுகிறது. வாயடிக்கத் தெரியாமல் அடிப்படை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏழைகளின் நிலைமையோ மிகக் கவலைக்கிடமாக உள்ளது.அரசியலோ சொல்லவே முடியாத அளவு நெறிகெட்டுள்ளது. இந்தச் சுயநலம் மிகுந்தெழும் குமுகச் சூழலை அடிமட்டத்தில் இயக்குவது சந்தைச் சக்திகளே என்பது உற்றுணர்ந்தால் புலப்படும். ஊடகங்களும், ஆட்சியில் உள்ளோரும் சந்தைச் சக்திகளால் ஆளப்படுகிறார்கள், இயக்கப் படுகிறார்கள் என்பதும், எல்லா நாடுகளிலும் அரசுகள் வியாபாரிகளின் கைப்பாவைகளே என்பதும் வெளியிருந்து பார்த்தால் தெளிவாய்ப் புரியும்.

பொருளாதார வெ(ற்)றியே வெற்றி என்றும், மற்றெல்லாம் வெற்றே என்றும் பரவலாய் ஏற்றுக்கொள்ளப் பட்ட இச்சூழலில் தனிமனிதத் தற்சார்பும், கிராமம் போன்ற சிறுகுமுகங்கள் தற்சார்பு அடைவதும் இச்சந்தைச் சக்திகளால் சிறிதும் ஏற்றுக் கொள்ள இயலாத கொடுமையான குற்றமாகிறது. இயற்கை வளங்களைப் பாதுகாக்கவோ , சுரண்டலை எதிர்க்கவோ குரல் கொடுப்போர் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப் பட்டு, sedition என்னும் தேசத்துரோகக் குற்றத்தில் சிறைப்படுத்தப் படுகின்றனர். அரசு செய்ய வேண்டிய நலப் பணிகளைத் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் செய்ய வேண்டியிருக்கிறது. தற்சார்பு என்பது சந்தைப்படுத்துதலுக்கு நேர் எதிரி ஆதலால், காந்தியப் பொருளியல் என்று கிராமத் தற்சார்பைப் பரப்பும் நாமெல்லாம் கூடத் தீவிரவாதிகளாகத்தான் கருதப் படுவோம்.

அமெரிக்காவில் ரயில் பாதை அமைத்துப் போக்குவரத்துப் புரட்சிகள் செய்ய ஆரம்பித்த போது, அப்பாதை அமைப்பதற்காக சீனாவிலிருந்தும் அயர்லாந்திலிருந்தும் கூலித் தொழிலாளார்கள் வரவழைக்கப் பட்டனர். இதனைக் கடுமையாக எதிர்த்த தோரோ, ' நான் தண்டவாளத்தைக் காணவில்லை; அதன் ஒவ்வொரு குறுக்குக் கட்டையிலும் ஒரு சீனத் தொழிலாளியின் உடலைத் தான் காண்கிறேன்' என்று எழுதினார். 'ஒரு அரசு அநியாய‌த்திற்கு துணை போக ஆரம்பித்து விட்டால் அப்போது நேர்மையான மனிதர்களின் இடம் சிறைதான்' என்றும் 'எவ்வரசு மிகக் குறைவாக நிர்வாகம் செய்கிறதோ அவ்வரசே நல்லரசு' என்றும் அப்போது அவர் எழுதிய “பண்பட்ட ஒத்துழையாமை” (civil disobedience) என்ற கட்டுரை மிகுந்த ஆழ்நோக்குடன், அன்றை விட‌ இன்று அதிகப் பொருத்தமாய் இருக்கிறது.

இன்று மத்தியிலோ, மாநிலத்திலோ எவ்வரசு ஆண்டாலும் அவை சந்தைச்சக்திகளின் கைப்பாவையாகத்தான் இருக்க இயலும் என்பது நிதர்சனம். தனிமனித நுகர்ச்சியே சந்தைகளை உருவாக்குவதால், நாமெல்லாம் பொருளாதாரத் தீவிரவாதிகளாகி அண்மைப் பொருட்களை, அவற்றையும் குறைந்த அளவில் நுகர்வதே இன்று மிகவும் தேவைப்படும் பண்பட்ட ஒத்துழையாமை.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org