தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய புலவர்கள் - பாபுஜி


பாட மறுத்த புலவர் -

(ஒரு பன்னாட்டு மருந்து நிறுவனம் சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்ட கதை !)

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பூட்ஸ் (Boots) என்கிற மருந்து நிறுவனம் (இப்பொழுது BASF என்கிற ஜெர்மானிய நிறுவனத்தின் அங்கமாகிவிட்டது) சிந்திராய்டு (Synthroid) என்கிற மருந்தை 1980களின் முடிவில் சந்தைக்கு கொண்டு வந்தது. இந்த மருந்து தைராய்ட் சுரப்பி ஒழுங்காக வேலை செய்யாததால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு வரமாகவே கருதப்பட்டது; (தைராய்ட் சுரப்பி உடலின் திசுக்களில் நடக்கும் வேதி வினைக்கு தேவையான வினையூக்கிகளையும், உடலின் சுண்ணாம்பு விகிதம் சரியாக இருக்க தேவையான ஊக்கிகளையும் உற்பத்தி செய்கிறது). சிந்திராய்டு மருந்து இந்த ஊக்கிகளை செயற்கையாக உடலில் உண்டாக்குகிறது. 80 லட்சத்துக்கு அதிகமான அமெரிக்கர்கள் தினமும் பயன்படுத்தும் ஒரு இன்றியமையாத மருந்தாக சிந்திராய்டு குறுகிய காலத்திலேயே பெயர் வாங்கி விட்டது (அதாவது 60 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள தைராய்ட் மருந்து சந்தையில் பெரும் பங்கு!).

இந்த சந்தையில் எங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கடும் முயற்சியில் ஈடுபட்ட மற்ற நிறுவனங்களும் இந்த நோய்க்கான தங்கள் மருந்துகளை விரைவிலேயே ஒன்றன் பின் ஒன்றாக சந்தைப்படுத்த தொடங்கின (சிந்திராய்டு கொடுப்பது போன்றே அதே பலன் ஆனால் மிக குறைந்த விலையில்). இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா பூட்ஸ்? அது பெட்டி டாங் என்கிற UCSF (University of California at SanFransisco) ஆய்வாளரை 2,50,000 அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்து சந்தையில் சிந்திராய்டு போன்றே கிடைக்கும் மூன்று போட்டி மருந்துகளை அவை இயல்பிலேயே சிந்திராய்டு போன்ற பலனையே தருகின்றனவா என்று கண்டு பிடிக்கும் பணியில் அமர்த்தியது. டாக்டர். பெட்டி டாங் ஏற்கனவே சில ஆய்வறிக்கைகளில் காப்புரிமை பெற்ற (Branded) தைராய்ட் மருந்துகளில் இருந்து, காப்புரிமை அற்ற (generic) மருந்துகளுக்கு மாறுவதில் உள்ள ஆபத்துக்களை பற்றி ஆதாரங்களுடன் எழுதி இருந்ததால் அவர் மூலமாகத் தன் மருந்தான சிந்திராய்டு மட்டுமே நல்ல மருந்து என்று எழுதவைத்துத் தம் சந்தை நிலையை மேம்படுத்திக்கொள்ள பூட்ஸ் திட்டமிட்டு அவரைப் பணியில் அமர்த்தியது (காசு கொடுத்து இந்த 'புலவரை' த‌ன் மருந்தைப் போற்றிப்பாட சொல்வதற்காக!).

பெட்டி டாங் இன் ஆய்வறிக்கை 1990 இல் முழுமை நிலையை அடைந்துகொண்டிருக்கும்போது ஆய்வின் முடிவுகள் பூட்ஸ் எதிர்பார்த்ததைப்போல் இல்லை! பெட்டி டாங் ஆய்வு செய்த நான்கு மருந்துகளுமே ஒரே மாதிரியானவை என்பதே ஆய்வின் முடிவாக இருந்தது. இது பூட்ஸ் நிறுவனத்தை சங்கடத்தில் ஆழ்த்தியது. இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டால் பூட்ஸ் தன் மருந்தின் சந்தை மதிப்பைப் பாதியாகக் குறைத்து விற்கவேண்டியிருக்கும். அது பூட்ஸ் இன் லாபத்தை மிகவும் பாதிக்கும் என்பதே அதன் சங்கடத்துக்கு காரணம். எனவே பூட்ஸ் தானே அந்த ஆய்வின் அறிக்கையை ஊடகங்களில் வெளியிடாமல் தடுக்க தன் முயற்சிகளை தொடங்கியது. அது முதலில் டாக்டர் டாங் ஐ அவருடைய அறிக்கையின் முடிவுகளை நீர்த்துப்போகச்செய்யுமாறு (பூட்ஸ் க்கு ஆதரவாக) கேட்டுக்கொண்டது. அவர் மறுத்துவிடவே அவருடைய அறிக்கையின் நம்பகத்தன்மையைக் குறைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்ய ஆரம்பித்தது. முதலில் பூட்ஸ் பெட்டி டாங்கின் கல்வித்துறை தலைவருக்கு 'இந்த ஆய்வு சரியான முறையில் நடத்தப்படவில்லை. ஆய்விற்கான விபரங்களை சேகரிப்பதில் நிறைய தடங்கல்கள் இருந்தன. ஆகவே இந்த ஆய்வு உடனடியாக நிறுத்தப்படவேண்டும்' என்று ஒரு கடிதம் அனுப்பியது. அத்துடன் நில்லாமல், அந்த கல்வி நிறுவனத்தின் வேந்தர்,துணை வேந்தர் மற்றும் மற்ற தலைவர்களுக்கும் இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் அனுப்பியது.

அக்கடிதத்தில் 'இந்த ஆய்வு நடத்தப்படவேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டு அனுமதி அளித்திருந்த போதிலும் இந்த ஆய்வு நடைபெற்ற விதத்தில் (எந்த வித கோட்பாடுகளுமின்றி, வரையறையின்றி, நியாயமற்ற வழியில்) எங்களுக்கு ஒப்புமையில்லை என்று குறிப்பிட்டிருந்தது. பல்கலைக்கழகமும் அக்கடிதத்தின் பேரில் இரண்டு தீவிர விசாரணைகளை நடத்திய பின்னர் அந்த ஆய்வறிக்கை பூட்ஸ் சொல்வது போல் தவறானதல்ல என்றும் பூட்ஸ் இன் நோக்கம் அந்த கல்வி நிறுவனத்தையும், டாக்டர் டாங் ஐயும் தொல்லைப்படுத்துவது மட்டுமே என்றும் முடிவு செய்தது.

டாக்டர் டாங் த‌ன் குழுவினருடன் அந்த ஆய்வறிக்கையை அதன் முடிவுகள் கெடா வண்ணம் அதே வேளையில் அந்த அறிக்கை பூட்ஸ் இன் சந்தை மதிப்பை குறைக்காதவகையில் மாற்றி எழுத கடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தம் நீண்ட முயற்சி வீண்போக கூடாது என்று முடிவு செய்து டாக்டர் டாங்கின் குழு தம் அறிக்கையை The Journal of American Medical Association (JAMA) என்ற புகழ் மிக்க பத்திரிகைக்கு ஏப்ரல் 1994 இல் அனுப்பி வைத்தது. அந்த அறிக்கையுடன் டாக்டர் டாங் ஒரு இணைப்புக் கடிதமும் அனுப்பியிருந்தார். அதில் இந்த ஆய்வு பூட்ஸ் நிறுவனம் தந்த நிதியினால் நடத்தப்பட்டது என்றும், அந்த நிறுவனத்திற்கு அறிக்கையின் முடிவுகளில் சம்மதம் இல்லை என்றும் அந்த நிறுவனம் த‌ன் குழுவோடு பல முறை விவாதங்கள் நடத்திய பின்னும் இருவர் நிலைப்பாட்டிலும் மாற்றம் இல்லை என்றும் தம் ஆய்வுக்கு மூலமான அத்தனை விபரங்களையும் இந்த ஆய்வறிக்கையையும் அவர் ஏற்கனவே பூட்ஸ் க்கும் அனுப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். JAMA வும் அந்த அறிக்கையை 5 வெளி நபர்களுக்கு (ஆய்வாளர்கள்) அனுப்பி அவர்களின் கருத்துகளையும் பெற்ற பின்னர் ( ஆராய்ச்சி சரிதான் என்பதே அவர்களின் கருத்து) அந்த அறிக்கையைப் பதிப்பிக்கும் வேலையில் இறங்கியது. இதைக் கேள்விப்பட்ட பூட்ஸ் உடனே தன்னிடமிருந்து நிதி பெற்றுத் த‌ன் 'கொள்கைகளை'ப் பரப்பி வந்த சில ' நிபுணர்களை' வேலைக்கமர்த்தி அவர்களிடம் த‌ன் தரப்பு நியாயங்களை மட்டுமே சொல்லி , டாக்டர் டாங் குக்கு அவர்களைச் சந்திக்க வாய்ப்பு தராமலேயே, அவர்கள் மூலம் 'டாக்டர் டாங் இன் ஆய்வு முடிவுகள் தவறான விபரங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டவை என்றும் அதனால் முடிவும் தவறு என்றும் ஒரு கோப்பைத் தயார் செய்தது. பின்னர் பூட்ஸ் நிறுவனத்தின் ஆய்வுத்துறை தலைவர் அந்த கோப்பின் அடிப்படையில் JAMA வுக்கு ஒரு கடிதம் எழுதி தவறான ஆய்வு பதிப்பிக்கப்படக்கூடாது ; டாக்டர் டாங் பூட்ஸ் இடம் இருந்து அனுமதி பெற்ற பின்னரே அவர் தம் அறிக்கையை பதிப்பிக்கமுடியும் என்ற ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார் ; இப்போது அவர் அனுமதி பெறாமலே தம் ஆய்வறிக்கையைப் பதிப்பிக்க முயல்கிறார் என்றும் குறிப்பிட்டு அவருடைய அறிக்கையைப் பதிப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் (மீறினால் சட்டம் அவர்கள் மீது பாயுமாம்!).

இக்கடிதத்தின் விளைவாக பல்கலைகழகமும் (UCSF) பத்திரிக்கையும் நமக்கெதற்கு வம்பு என்று ஒதுங்கிக்கொண்டன. டாக்டர் டாங் இடம் பல்கலைகழகம் 'வழக்கு என்று வந்தால் நீயே பார்த்துக்கொள்ளப்பா ;செலவு நிறைய ஆகும், நமக்கு கட்டுப்படியாகாது' என்று சொல்லி நழுவிக்கொண்டது. நடு நிலையான நிபுணர்கள் அந்த ஆய்வறிக்கையில் பூட்ஸ் சொன்னது போல் குறைகள் ஒன்றும் இல்லை என்று கருத்து தெரிவித்தபோதும் அந்த அறிக்கை பதிப்பிக்கப்படாமலேயே போனது.

வெற்றி வெற்றி என்று கொக்கரித்த பூட்ஸ் நிறுவனத்தை 2005 இல் BASF என்ற பன்னாட்டு நிறுவனம் விலைக்கு வாங்கி தன் Knoll Pharmacheutical நிறுவனம் மூலம் சிந்திராய்டு மருந்தை விற்க ஆரம்பித்தது. அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும் இன்னும் சிலரும் இணைந்து டாக்டர் டாங் இன் ஆய்வு விபரங்களை மறு ஆய்வு செய்து சிந்திராய்டு தான் சிறந்தது என்ற நேர்மறையான அறிக்கை ஒன்றை தயாரித்தனர். அந்த அறிக்கை 'American Journal of Therapeutics' என்ற பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது. ஆய்வறிக்கையை எழுதியவர் அந்த பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் பணி செய்து வந்தார்!

இத்தகைய பூட்ஸ் கட்டிய அழகான தேன்கூடு 1996 இல் Wall Street Journal என்ற அமெரிக்க நாளிழதில் (பூட்ஸ் இன் முகத்திரையை கிழிக்கும் வண்ணம்) வெளிவந்த ஒரு செய்தியினால் உடைந்தது. மக்கள் BASF க்கு ஏராளமான குற்றச்சாட்டுகளை அனுப்பத்தொடங்கினர். அமெரிக்க கட்டுப்பாட்டு துறையும் (FDA) விழித்துக்கொண்டு விசாரணையை தொடங்கியது. வேறு வழியின்றி BASF (Knoll Division) பல்கலைகழகத்தை அணுகி 'அந்த ஆய்வறிக்கை தவறானது, ஆனாலும் அதை மாற்றமின்றி நீங்கள் பதிப்பிக்கலாம்' என்று அனுமதி அளித்தது. இறுதியாக அந்த ஆய்வறிக்கை ஏப்ரல் 1997 இ JAMA வில் பதிப்பிக்கப்பட்டது. சிந்திராய்டு க்கு மாற்றாக குறைந்த விலையில் கிடைத்த மற்ற மருந்துகளை பயன்படுத்தியிருந்தால் ஆண்டுதோறும் மக்கள் 35.6 இலட்சம் அமெரிக்க டாலர்கள் சேமித்திருக்க முடியும் என்ற ஒரு மதிப்பீடும் .முன்வைக்கப்பட்டது. ஏப்ரல் 29, 1997 இல் அமரிக்காவில் BASF மற்றும் அதன் knoll pharma division மீதும் ஒரு பொது நல வழக்கு தொடங்கப்பட்டது. Wall Street Journal இல் இதை பற்றிய ஒரு அருமையான செய்தி தொகுப்பு வெளியானது. [ 'Bitter Pill: How a Drug Firm Paid for University Study, Then Undermined It'] இது பற்றி மேலும் அறிய விருப்பமுள்ளோர், இணைய தளத்தில் இதைத் தேடிப்பிடித்துப் படிக்கலாம்! காசுக்கு மன்னரைப் பாடும் புலவர்கள், பாடாவிட்டால் எவ்வளவு துயர்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் தெரிந்து கொள்வோம்!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org