தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

இயற்கை வழி நெல் சாகுபடி

சென்ற இதழ் ...»

பூச்சிக கட்டுப்பாடு பூச்சிகளைக் கட்டுப்படுத்த பின்வரும் மூலிகைப் பூச்சிவிரட்டியைப் பயன்படுத்தலாம். பின்வரும் இலை. தழைகள் பூச்சிகளை விரட்டப்பயன்படும். இவை சாதாரணமாக நமது வயல்வெளிகளில் எங்கும் கிடைக்கும்.

1.ஆடு, மாடுகள் உண்ணாத இலை தழைகள் - ஆடுதொடா, நொச்சிபோன்றவை.

2. ஒடித்தால் பால் வரும் இலை தழைகள் -எருக்கு, ஊமத்தை போன்றவை.

3.கசப்புச் சுவை மிக்க இலை தழைகள் - வேம்பு, சோற்றுக் கற்றாழை போன்றவை.

4. உவர்ப்புச் சுமைமிக்க இலை தழைகள் - காட்டாமணக்கு, போன்றவை.

5. கசப்பு, உவர்ப்புச் சுவைமிக்க விதைகள் - கடுக்காய், வேப்பங்காய், எட்டிக்காய் இந்த வகையான செடிகளில் இருந்து ஊறல் போட்டு எடுக்கப்படும் சாறு அல்லது காய்ச்சி வடித்த நீர் போன்றவை மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகின்றன.

இந்தப் பூச்சி விரட்டிகள் ஒருவித ஒவ்வா மணத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக புழுக்கள் மணத்தைக் கொண்டுதான் பயிர்களைக் கண்டறி கின்றன. இதனால் மணம் பிடிபடாத காரணத்தால் அவற்றால் பயிர்களைத் தின்ன முடிவதில்லை. மூலிகைகளும், சாணம், சிறுநீர் கரைசல்களும் வெறுப்பூட்டும் நெடியை ஏற்படுத்துவதால் பூச்சிகளும், புழுக்களும் விலகிச் செல்கின்றன. பல பூச்சிகள் உண்ணாமல் பட்டினி கிடக்கின்றன. இன்னும் பூச்சிகள் தவறித் தின்றுவிட்டு வயிற்றுக்குள் தொல்லை ஏற்பட்டு இறந்துவிடுகின்றன.இதனால் முட்டை பொரிப்பது குறைந்து விடுகிறது, இனப் பெருக்கம் தடைப்பட்டுவிடுகிறது, எண்ணிக்கையும் குறைந்து விடுகிறது, தப்பியவை ஊனமடைகின்றன, இவற்றைப் பறவைகள் எளிதில் கொத்திச் சென்று விடுகின்றன.

மாதிரி அளவு சோற்றுக் கற்றாழை அல்லது பிரண்டை எருக்கு அல்லது ஊமத்தை நொச்சி அல்லது பீச்சங்கு அல்லது சீதா இலை வேம்பு அல்லது புங்கன் உண்ணிச் செடி அல்லது காட்டாமணக்கு அல்லது ஆடாதொடா மேலே சொன்ன தழைகளில் ஒவ்வொன்றிலும் 2 கிலோ எடுத்துக் கொள்ளவும். ஆக 10 கிலோ இலைகளுடன் முதலில் சொன்ன விதைகளின் ஏதாவது ஒன்றை (கடுக்காய் 1 கிலோ, வசம்பு 200 கிராம், வேப்பங்காய் 2 முதல் 3 கிலோ, எட்டிக்காய் 500 கிராம்) எடுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இவற்றைக் கலந்து ஊறல் முறையிலும், வேகல் முறையிலும் விரட்டிகள் தயாரிக்கலாம். ஊறல் முறை இலைகளையும், விதைகளையும் 2 கிலோ வீதம் எடுத்து துண்டு செய்து இடித்து இலை மூழ்கும் அளவிற்கு 12 லிட்டர் மாட்டுச் சிறுநீர் 3 லிட்டர் சாணக் கரைசல் சேர்த்து 7 முதல் 15 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். இதனால் இலைகள் கரைந்து கூழாக மாறிவிடும். இத்துடன் 1 லிட்டர் மஞ்சள் தூளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்து பயிர்களில் அடிக்கலாம்.

வேகல் முறை இம்முறையில் ஏற்கனவே சொன்ன அளவில் இலைகளையும், விதைகளையும் எடுத்து துண்டு செய்து இடித்து முழுகும் அளவிற்கு ஏறத்தாழ 20 லிட்டர் நீரை ஊற்றி 2 முதல் 3 மணி நேரம் சீராக நெருப்புக் கொடுத்து வேகவிட வேண்டும். வெந்த பின்பு சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீண்டும் 20 லிட்டர் நீரைச் சேர்த்து நன்கு கலக்கி சாறை வடிகட்டி எடுக்க வேண்டும். இதேபோல மொத்தம் 5 முறை வடிகட்டி எடுக்கலாம். இதன் மூலம் 100 லிட்டர் சாறு கிடைக்கும். சாறு ஆறிய பின்னர் ஒரு லிட்டர் மஞ்சள்தூள் சேர்த்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இச்சாற்றைக் கைத் தெளிப்பால் அல்லது விசைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.

நோய்க் கட்டுப்பாடு இலைப் புள்ளி நோய் மற்றும் குலைநோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த பின்வரும் தழைக் கரைசல் பயன்படும். நுண்ணுயிர் இலைக்கருகல் இந்நோயும் பரவலாக காணப்படும் ஒன்று இதற்கு, 1. சோற்றுக் கற்றாழை- 3-5 கிலோ 2. இஞ்சி - 200 கிராம். 3. புதினா அல்லது சவுக்கு இவை-2 கிலோ. இவற்றை முன்னர் கூறியபடி வேக வைக்க வேண்டும். வெந்த பின்னர் ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள்தூள் 1 லிட்டர், சூடோமோனஸ் புளோரசன்ஸ் 500 கிராம் 1 கிலோ சேர்த்து 12 மணி நேரம் ஊறவைத்துக் தெளிக்க வேண்டும். இதனால் நோய் கட்டுப்படும்.

இலைப்பேன் செம்பழுப்பு நிறமுடைய இலைப் பேன்களும், அதன் குஞ்சுகளும் இலையின் அடிப்புறத்தில் தங்கி இலைச் சாற்றினை உறிஞ்சி வாழ்கின்றன. இதனால் இலைகளின் ஓரங்கள் சுருண்டு வாடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட கரைசல் பயன்படுகிறது. உண்ணிச் செடி, வேம்பு, நொச்சி, புகையிலை, வசம்பு, பூண்டு, சீதா, பீச்சங்கு, வில்லவம் சோற்றுக்கற்றாழை, பிரண்டை இவற்றில் ஏதாவது 4 இலைவகைகளை துண்டு துண்டாக நறுக்கி அத்துடன் 1 கிலோ மஞ்சள் தூள் சேர்த்து ஏற்கனவே சொன்ன ஊறல் முறையில் ஊறவைத்து 7 நாட்கள் கழித்து வடிகட்டி 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்து தெளிக்க வேண்டும். இலைப்பேன் தாக்குதலை வைத்து 7-10 நாட்கள் இடைவெளியில் 2 அல்லது 3 முறை தெளிக்க வேண்டும். வேகல் முறையிலும் தயாரித்துத் தெளிக்கலாம். பொதுவாக வேகல்முறையில் உடனடியாக நமக்கு கரைசல் கிடைக்கின்றது. ஊறல்முறையில் சிறிது காத்திருக்க வேண்டும். புழுத்தாக்குதல் புழுத்தாக்குதல் அல்லது இலைத்துளைப்பான் அல்லது தண்டுதுளைப்பான் சேதத்தில் இருந்து பாதுகாக்க பின்வரும் கரைசல் தேவைப்படுகிறது. சீதா விதை - 100 கிராம் பீச்சங்கு - 1 கிலோ ஆடாதொடா - 500 கிராம் சிறியா நங்கை - 500 கிராம் தங்கரளி காய்/பழம் - 1 கிலோ நொச்சி - 1 கிலோ சோற்றுக் கற்றாழை - 1 கிலோ இவற்றைப் பசையாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் பத்து லிட்டர் கொதிநீரில் புகையிலைத் தூள் 1கிலோ கலந்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மேலே சொன்ன பசையுடன் புகையிலைச் சாறையும் சேர்த்து 2 முதல் 3 நாள் ஊறல் போட வேண்டும். புளிப்புச் சுவை வரும். மஞ்சள் தூள் 1 கிலோவுடன் பசைபோல ஆக்கத் தேவையான அளவு களிமண் மற்றும் சாணம் இவற்றை மூன்று நாள் ஊறிய கலவையுடன் சேர்த்து பசையாக ஆக்கவும். 1 கிலோ பசையை எடுத்து 100 முதல் 125 லிட்டர் நீரில் கலந்து பயிருக்குத் தெளிக்கவும்.

இலைப்புள்ளி நோய் இந்நோயின் தொடக்கத்தில் இலைகளின் மேல்புறத்தில் நீண்ட கண் வடிவப் புள்ளிகள் தென்படும். இப்புள்ளிகளின் நடுவில் பூசண வித்துக்கள் காணப்படும். நோய் பெரிதாகும்போது பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலைகள் மஞ்சளாகி பின்னர் கருகிவிடும். இதனைக் கட்டுப்படுத்த சோற்றுக் கற்றாழை 3 முதல் 5 கிலோ காகிதப்பூ இலை 3 முதல் 5 கிலோ உண்ணிச் செடி இலை 3 முதல் 5 கிலோ சீதா இலை 3 முதல் 5 கிலோ பப்பாளி இலை 3 முதல் 5 கிலோ இவற்றில் ஏதாவது இரண்டு வகையை மட்டும் எடுத்து வேகல்முறை அல்லது ஊறல் முறையில் கரைசலை தயார் செய்து பயன்படுத்தலாம்.

பாசனமுறை ஒவ்வொரு வயலிலும் தண்ணீர் நுழையும் இடத்தில் இரண்டடி நீள, அகல, ஆழ குழி அமைத்துக் கொள்ள வேண்டும். அதில் நன்கு மக்கும் வேம்பு, எருக்கு, ஊமத்தை, தங்கரளி, நெய்வேலிக் காட்டாமணக்கு போன்றவற்றின் இலைகளைக் போட்டுக் கொள்ள வேண்டும். அதன்மேல் கல் அடுக்கி வைத்து நீர் பாய்ச்சி வர வேண்டும். இந்தக் கசாயம் நீரில் சீராகப் பரவி வளர்ச்சிக்கு உதவும். நூற்புழுவைக் கட்டுப்படுத்தும். நூற்புழுவுக்கு எதிரான நுண்ணுயிர்கள் இதில் வாழ வாய்ப்புக் கிடைக்கும். நெற்பயிரின் தூரில் தங்கி சேதப்படுத்தும் புகையான் தாக்குதலையும் கட்டுப்படுத்தும். நெற்பயிரின் சீரான வளர்ச்சி மற்றும் தூர்க் கட்டும் திறன் அதிகரிக்க வாளிப்பான நெற்குலைகள் உருவாக, திரட்சியான நெல் மணிகள் உருவாக கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம். சாண எரிவாயுக் கலனில் வெளிவரும் சாணக்கரைசல் 75 லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் நீர் 75 லிட்டர் சேர்த்துக் கொள்ள வேண்டும். எரிகலன் இல்லாதவர்கள் 50 கிலோ சாணியை 100 லிட்டர் நீருடன் கலந்து சாணக் கரைசல் தயார் செய்து கொள்ள வேண்டும். இத்துடன் முன்னர் சொன்ன வளர்ச்சி ஊக்கிகளில் தெளிப்பதற்கு தேவையான ஒன்றைக் கலந்து 3 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும். பின்னர் அவற்றை பாசன நீருடன் கீழ்க்கண்ட அளவில் கலந்து விட வேண்டும்.

வளர்ச்சி ஊக்கி ஏக்கருக்கான அளவு அமுதக் கரைசல் 50 - 80 லிட்டர் ஆவூட்டம் 5 - 10 லிட்டர் தேமோர்க் கரைசல் 5 - 10 லிட்டர் அரப்புமோர் கரைசல் 5 - 10 லிட்டர் மீன் அமினோ அமிலம் 3 லிட்டர் நெல் நடவு செய்த 20 முதல் 25ஆம் நாளில் இருந்து 7 முதல் 10 நாள் இடைவெளியில் 2 முதல் 4 முறை இக்கரைசல்களைப் பயன்படுத்தலாம்.

ஒட்டுண்ணிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மூலிகைப் பூச்சி விரட்டிகள் பயன்படுத்துதோடு மட்டுமல்லாமல் ஒட்டுண்ணிகளையும் பயன்படுத்த வேண்டும். இலைச்சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த ‘ஜப்பானிகம்’ என்ற ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2சிசி என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். ‘பிரக்கானிட்’ என்ற குளவியை ஏக்கருக்கு 5 பாக்கெட் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதல் மிக அதிகமாக இருப்பின் மூலிகைப் பூச்சிவிரட்டியுடன் ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கிலோ பவேரியா ப்ராங்கியார்ட்டி அல்லது பவேரியா பாஸ்ஸியானா கலந்து தெளிக்கலாம். எப்பொழுதும் ஒரு வளர்ச்சி ஊக்கி-ஒரு பூச்சிவிரட்டிச் கரைசல்-சூடோமோனஸ் என்று மாற்றி மாற்றி நெல்லுக்கு உணவைக் கொடுத்துவர வேண்டும். இவ்வாறு சீராக இயற்கை வழி வேளாண்மையில் நெல் அறுவடை செய்யலாம்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org