தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உணவும் உரிமையும் - சரா

“நீ அழிந்தாலும், என் லாபம் அழியக் கூடாது!” - மனிதகுலத்திற்கு விடப்படும் சவால்.

தற்போது பேயர் மற்றும் சின்ஜெண்டா கும்பணிகள் ஐரோப்ப நாடுகளின் கூட்டுறவை, சர்வ தேச வழக்காடு மன்றத்தில் இழுத்து வழக்காடுகின்றன. எதற்கு - அவரவர் நாட்டின் தேனீக்களைப் பாதுகாப்பதற்கு!

ஆம், நியோனிகொடினோய்டு (neo nicotinoid) என்னும் கொடிய‌ பூச்சிகொல்லி காரணமாக, ஐரோப்பாவில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. ஐரோப்பிய‌ நாடுகளின் கூட்டரசாகத் திகழும் ஐரோப்பிய‌ யூனியன், சமீபத்தில் இந்தப் பூச்சி கொல்லியை இரண்டு வருடங்களுக்குத் தடை செய்ய முடிவெடுத்தது. இந்த முடிவை எதிர்த்து பேயர் மற்றும் சின்ஜென்டா கம்பணிகள் இப்போது வழக்காடி இருக்கின்றன.

இந்தக் கம்பணிகள், 'தங்கள் லாபம் ஈட்டுவதற்க்கான‌ உரிமைகள் பறிக்கப் ப‌ டுகின்றன, இது உலக வர்த்தக ஒப்பந்தித்திற்கு எதிரானது' என்று வழக்குத் தொடுத்து உள்ளன. அனைத்து நாடுகளிலும் தனிநபர் லாபத்தை முன்னிறுத்திய கம்பணிகளும், அரசாங்கங்களுக்கும் இடையே நடைபெறும் மிகப்பெரிய மோதல்கள் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஏழை நாடுகளில் அரசாங்கமே இத்தகைய அநீதியான சட்டங்கள் உருவாக்க‌, ஊழலின் மூலம் ஏற்பாடு செய்யப் படுகின்றது. ஆனால் பணக்கார நாடுகளில் இத்தகைய ஊழல்கள், யாருக்கும் புரியாத சட்டங்களின் மூலமாக நிறைவேற்றப் படுகின்றன. இங்கு இய‌ற்றப்படும் சட்டங்களை நிச்சயமாகப் பின்பற்றவேண்டும் என்னும் நோக்கத்துடன் மக்கள் வாழ்வதனாலும், அத்தகைய சட்டத்தைத் தொடர்ந்து அமல்படுத்தத் தேவையான சட்ட ஒழுங்காற்று ஏற்பாடுகள் (பல‌விதமான கண்காணிப்பாள‌ர்கள்) உள்ளதுமே காரணம். [ அமெரிக்காவில் கறந்த பாலை நுகர்வோரிடம் கொண்டு கொடுத்த ஒரே காரணத்திற்காக, ஒரு இயற்கை விவசாயியின் மேல் கிரிமினல் குற்ற வழக்கு சாட்டப் பட்டது! ]

தனிநபர் லாபமடைந்தால், நாம் ஒரு மனிதரைக் குறை சொல்வது எளிது. ஆனால் உயிரில்லா, உணர்வில்லா கும்பணிகள் லாபமடைந்தால், அத்தகை லாபத்திற்கு ஒருநபரைக் குறியிட்டுக் குற்றம் சொல்ல முடியாத‌ நிலை இன்று நிலவுகிறது. இத்தகைய நிலை, ஏழை, பணக்காரர் என்று நாடு வித்தியாசமில்லாமல் அனைத்து நாடுகளிலும் நிலவிவருகின்றது.

பணக்கார நாடுகளில், சட்டங்களும், சட்ட அமலாக்க ஏற்பாடுகளும் அதிக அளவில் இருப்பதினாலேயே, அங்கு கும்பணிகளின் ஆதிக்கம் நிலவுகிறது. விரைவாகவும் அதிகாரபூர்வமாகவும், சட்ட திருத்தங்களை அவர்களால் ஏற்படுத்த முடிகிறது. அமெரிக்காவில், கும்பணிகளில் வேலை செய்பவர்கள் பல சமயம் அரசாங்கத்திற்காக வேலை செய்கின்றனர், இவர்கள் பிறகு மீண்டும் அந்த கும்பணிகளுக்கு வேலை செய்யவும் செல்கின்றனர், இங்கு இதனை 'revolving door policy' அதவாது கதவிற்கு இப்பக்கம் சட்டத்தை ஏற்படுத்தவும், மறுபக்கம் சென்று அதனால் லாபமடயவும் ஏதுவான ஒரு ஏற்பாடு என்று குறிப்பிடுகின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் அத்தகைய நிலை இன்னும் இல்லை என்பதில் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

இதனாலேயே, நமது நாட்டில் இன்று மொன்சாண்டோ போன்ற கும்பணிகளின் நியாமில்லாப் போக்கை இன்னமும் கூட மக்கள் மத்தியிலும், சட்ட மற்றும் அரசியல் மூலமாகவும் எதிர்கொள்ளமுடியும். ஆனால், மேற்கத்திய நாடுகளில், இந்தக் கும்பணிகளே, சட்டம் இயற்றி, சட்டத்தின் பாதுகாப்பிலேயே தங்கள் லாபத்தை நிலைநிறுத்தி உள்ளன. நமது நாட்டைப் போல் அல்லாது, இந்த நாடுகளில், சட்டத்தை அனைவரும் கண்மூடித்தனமாக நம்புவதால், இன்று இந்த நாட்டில் வசிக்கும் மக்கள் செய்வதறியாது நிற்கின்றார்கள். இவர்களது கும்பணிகளை எதிர்த்துப் போராடும் போராட்ட முறைகளும், இருக்கும் சட்டத்தைக் கொஞ்சமாக சீர்திருத்துமே அன்றி, அதை அப்புறபடுத்தி வேறொரு சட்டத்தை இயற்ற வழிவகுக்காது.

இதனாலேயே இத்தகைய கும்பணிகள் இந்தியாவைச் சந்தேகக் கண்ணோடு நோக்குகின்றார்கள். அவர்கள் தேசத்தில், ஒரு விவசாயி, கும்பணிக்கு மாறாக விதை சேகரித்து விட்டால், ராணுவத்தைக் கூட ஏவி விட்டு, அந்த விவசாயியை அழித்து 'சட்டத்தை நிலைநாட்டி' அதற்ககுப் பின், 'இது சரியா, தவறா?' என்று சிந்திப்பார்கள். இந்தியாவில், சட்டத்தையும் மீறி நியாயம், தர்மம் என்கின்ற சில சமூக நியதிகள் இருப்பதினால், அரசாங்கதைத் தூண்டிவிட்டு மக்களை ஒடுக்குவது கடினம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டை ஆளும்வரை, இத்தகைய சமூக நியதிகளுக்கு (எவ்வளவு ஊழல் செய்பவனும் 5 ஆண்டுகளில் மக்கள் முன்னால் நிற்க வேண்டும்) தலை சாய்ப்பதைத் தொடர்ந்து தவிர்க்க இயலாது. ஆங்கிலேயர்கள், நம்மை அடிமையாக்கியபோது, இதனால் தான், முதலில் வன்முறையால் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திப், பிறகு பெயருக்குச் சட்டத்தை இயற்றி, பெரும்பாலும் வன்முறை மற்றும் தந்திரத்தின் மூலமாகவே தங்கள் ஆட்சியை நடத்தி வந்தார்கள். அவர்கள் சட்டத்தில் மக்களுக்குப் பல உரிமைகளை அளிப்பதாகத் தெரிவித்த‌தும், அவர்களுக்குத் தேவையான முறையில் அத்தகைய உரிமைகள் மற்றும் அவற்றின் அமைப்புகள் நடக்கும் வரைதான். இன்றும் பல கும்பணிகள் corporate social responsibility (கும்பணிகளின் சமூக கடமை) என்கின்ற பெயரில், தாங்கள் செய்யும் தவறுகளுக்கு ஒரு சிறு கண் துடைப்புப் பிராயச்சித்தமாக சில 'நல்ல' காரியங்களைச் செய்கின்றன. ஊர்களின் நீர் நிலைகளைப் பாழாக்கி, அதே ஊர்களுக்கு தண்ணீர்த் தொட்டி அளிப்பது, மக்களை நேரமில்லா வேலயாளாக்கி, அவர்கள் பிள்ளைகளுக்குப் பள்ளிகூடங்களைக் கட்டுதல், போன்ற பல முயற்சிகளும் இதில் அடங்கும். நல்ல தொழில், மக்களுக்குப் பயனுள்ள பொருள் உற்பத்தி செய்பவர்களுக்கு இத்தகைய திணிக்கப்பட்ட பொறுப்போ, தனியாய் ஒரு சமூகக் கடமை என்ற செயல்பாடோ அவசியமற்றது. (காதி க்ராமோத்யோக் பவனுக்கு என்ன தனியான ஒரு சமூகக் கடமை? அவர்கள் இருப்பதே சமூகத்திற்கு நன்மை!)

இன்றைய ஐரோப்பியக் கூட்டமைப்பின் கதியோ மிகப் பரிதாபத்திற்குரியது. இவர்கள் தான் சில ஆண்டுகளுக்கு முன்னர், “கும்பணிகளால் தான் உலகம் உருப்படும்” என்னும் கண்மூடித்தனமான நம்பிக்கையில், கும்பணிகளுக்கு, மனிதர்களுக்கு ஒத்த உரிமைகளை வழங்கினார்கள், அவற்றையே சட்டமாகவும் இயற்றினார்கள், இன்னும் ஒரு படி மேலே சென்று, அத்தகைய உரிமைகளைத் தங்கள் நாட்டின் அரசியல் சாசனத்திலேயே எழுதினார்கள்!

இத்தகைய, குருட்டு நம்பிக்கை கும்பணிகளுக்கு மிகப் பெரிய அளவில் அந்தஸ்தை அளித்தது. இவற்றிற்கு, தங்கள் லாபத்தை தவிர வேறு எந்த நோக்கும் இருந்ததில்லை, இருக்கவும் வாய்ப்பில்லை, கும்பணிகளுக்கு தாய் தந்தையோ, பேரன் பேத்தியோ இல்லை. அதனால், பின்வரும் காலங்களில் வாழ்பவர்க்கு நல்ல சுற்று சூழலை விட்டு செல்லவேண்டும் என்கின்ற கட்டாயம் இவற்றிற்கு இல்லை. இவற்றிற்கு தார்மிக பொறுப்புக்கள் என்று எதுவுமே இல்லை, இவற்றிற்கு மரணமும் இல்லை, முக்கியமாக, மனிதநேயம் தரும் உயிரும் இல்லை. இத்தகைய கும்பணிகளுக்கு, மனிதர்களுக்கு நிகராக ஒரு கண்டமே உரிமை வழங்கவேண்டும் என்றால், இத்தகைய கும்பணிகளின் ஆதிக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. இவர்களுக்கு விடிவுகாலம் வர நீண்ட நாள் ஆகும் என்றே தோன்றுகின்றது.

( இன்னும் தொடர்வோம்…

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org