தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்


சென்ற இதழில் மாடுகளுக்கு என்ன தீவனம் அளிக்க வேண்டும், எவ்வளவு அளிக்க வேண்டும் என்று பார்த்தோம், தீவனம் எப்போது அளிக்க வேண்டும்? தீவனத்தை பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் அடர் கலப்பு தீவனம் என்று பிரித்தோம் அல்லவா? இதில் அடர் தீவனம் அளிப்பதாக இருந்தால் இரண்டு வேளையாக பிரித்து அளிக்கலாம். பொதுவாக இரண்டு வேளை பால் கறக்கிறோம். (நான் இப்போது வசிக்கும் பண்ணைக்கு அருகில் உள்ளவர்களில் பெரும்பாலோர் ஒரு வேளையே கறக்கின்றனர். மாலையில் கறப்பதில்லை! கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை சாதியினர் பால் கறப்பதே பாவம் என்று நம்புகின்றனர். மாடுகளை வளர்க்கின்றனர். ஆனால், பால் கறப்பதில்லை!!) காலையில் ஐந்து முதல் ஏழு மணிக்குள் கறப்பதும் மாலையில் மூன்றிலிருந்து ஐந்து மணிக்குள் கறப்பதும் பொதுவான பழக்கம். கட்டுத்தறியிலேயே உள்ள மாடுகளுக்கு இரண்டு வேளை அடர் தீவனம் அளிப்பது சிறந்தது. அவைகளுக்கு பால் கறப்பதற்கு சற்று முன்போ அல்லது பின்போ கலப்பு தீவனம் அளிப்பது வழக்கம். முழு நேரமும் மேயும் வசதி உள்ள மாடுகளுக்கு அடர் தீவனம் தேவைப்பட்டால் அல்லது நம்மிடமே இருந்தால் அளிக்கலாம். ஆனால், கட்டாயம் இல்லை. அடர் தீவனம் அளிப்பது, பால் கறப்பது போன்ற வேலைகளை ஒரே நேரத்தில் வழக்கமாக செய்வது நன்று.

கலப்பு தீவனத்திற்கு என்னென்ன வேண்டும்? கலப்பு தீவனம் என்பது தவிடு, பொட்டு, தானியம், பிண்ணாக்கு என்ற நான்கு கூறுகளை உடையது. தவிட்டில், நமது உணவு போலவே நெல் (கருக்கா தவிடு) மற்றும் கோதுமை (கோதுமைத் தவிடு-இலை தவிடு) மட்டுமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. (சாமை, வரகு, தினை போன்றவற்றின் தவிடு தற்போது பயன்படுகிறதா என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.) கைக்குத்தலாக அரிசி செய்யும் போது முதலில் கிடைக்கும் தவிட்டில் நிறைய உமி இருக்கும். இரண்டாவது முறை குத்தும் போது வரும் தவிட்டை (நைஸ் தவிடு) மட்டுமே மாட்டுக்கு அளிக்கலாம். பொட்டுகள், பருப்பு வகைகளை தயாரிக்கும் போது (தோல் நீக்கும் போது) கிடைக்கும் உபரிப் பொருள். உளுத்தம் பொட்டு (உளுத்தம் பருப்பு), பயத்தம் பொட்டு (பயத்தம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு), கடலைப்பொட்டு (கடலைப் பருப்பு) ஆகியவை பொதுவாக கிடைக்கக் கூடிய பொட்டுகள். தானியங்களில் பொதுவாக அரிசி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகியவற்றை மாவாக அரைத்து பச்சையாகவே கலக்கலாம். முழு தானியம் அளிப்பதாக இருந்தால் வேக வைத்து அளிப்பது வழக்கம். பிண்ணாக்குகளில் தமிழ் நாட்டில் கடலைப் பிண்ணாக்கே பெரும்பாலும் கறவை மாடுகளுக்கு அளிக்கப்படுகிறது. இதைத் தவிர எள்ளுப் பிண்ணாக்கை அளிப்பவர்களும் உண்டு. ஆனால், எள்ளுப் பிண்ணாக்கு சூடு, பாலின் கொழுப்பு சத்தை குறைக்கும் என்று நம்புபவர்களும் உண்டு. எள்ளுப் பிண்ணாக்கு பாலைப் பெருக்கும் என்று நம்புபவர்களும் உண்டு. தேங்காய் பிண்ணாக்கு பெரும்பாலும் வண்டி மாடுகளுக்கு அளித்தே நான் பார்த்திருக்கிறேன். எந்த பிண்ணாக்காக இருந்தாலும் ரோட்டரி என்று அழைக்கப்படுகிற மாவு அரவை இயந்திரம் போன்ற சிறிய செக்கில் அரைத்த பிண்ணாக்கையே பயன்படுத்தவும். எக்ஸ்பெல்லர் (Expeller) என்று அழைக்கப்படுகிற பெரிய தானியங்கி செக்குகளில் அரைக்கப்பட்ட பிண்ணாக்கு விலை குறைவு. அதேபோல், அதில் எண்ணெய் சத்தும் மிகவும் குறைவு. மாடுகளால் அரைக்கப்பட்ட, செக்கு பிண்ணாக்காக இருந்தால் மிகவும் நல்லது. ஆனால், மாட்டு செக்குகள் இப்போது இல்லவே இல்லை. பிண்ணாக்குகளை சில மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிசைந்தால் அவை களி போல ஆகி விடும். இந்த நிலையில் அதை மாடுகளுக்கு அளிப்பது நல்லது.

அடர் தீவனம் கலக்க மேற்சொன்ன பொருட்களில் வகைக்கு ஒரு பொருளையாவது தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். இரண்டு பொருட்களை ஒரே வகையில் கலந்தும் அளிக்கலாம். பிறகு, மொத்தம் நீங்கள் அளிக்க வேண்டிய அடர் தீவன எடையில் எட்டில் மூன்று பங்கு தவிடு வகைகளும் எட்டில் மூன்று பங்கு பொட்டு வகைகளும் எட்டில் ஒரு பங்கு தானிய மாவு வகைகளையும் கலந்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் சாதாரண உப்பு (அயோடின் கலக்காதது) மற்றும் வெல்லம், ஒரு மாட்டிற்கு - ஒரு வேளைக்கு 25 கிராம் என்ற தேவைக்கேற்ப கணக்கிட்டு கலந்து கொள்ளலாம். இது மாடுகளுக்கு குறைந்த அளவில் தேவையான, ஆனால் இன்றியமையாத, தாது/கனிம சத்துக்களை அளிக்கும். இந்த கலவையை ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத் தேவை அளவிற்கு மொத்தமாக கணக்கிட்டு கலந்து வைத்துக் கொள்ளலாம். பிண்ணாக்கை இதில் கலப்பது கடினம். பிண்ணாக்கும் எட்டில் ஒரு பங்கு அளித்தால் போதும். பிண்ணாக்கை ஒரு வேளைக்கு உங்களிடம் உள்ள மாடுகள் எல்லாவற்றுக்கும் சேர்த்து எவ்வளவு தேவை என்று கணக்கிட்டு, மேலே சொன்னது போல் முன்பே தண்ணீரில் ஊறவைத்து விட்டு, கலப்பு தீவனம் அளிக்கும் போது அதனுடன் தண்ணீரில் கலந்து அளிக்கும் தொட்டியில் ஒவ்வொரு மாட்டின் தேவைக்கேற்ப தீவனம் அளிக்கும் போது சேர்த்து விடலாம்.

பிண்ணாக்கிற்கு பதிலாக நாமே அசோலா என்ற ஒரு தாவரத்தை விளைவித்தும் அளிக்கலாம். பிண்ணாக்கும் அசோலாவும் சம அளவு சத்துக்களை கொண்டுள்ளது. அதாவது, ஒரு கிலோ பிண்ணாக்கு அளிப்பதற்கு பதிலாக ஒரு கிலோ அசோலா அளிக்கலாம். அசோலாவை விளைவிக்க செலவு மிகவும் குறைவாகத்தான் ஆகும். அசோலா தண்ணீரில் மிதந்து விளையும் ஒரு தாவரம். நிழலில் தான் விளையும். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் வெயில் வராத, மர நிழல் விழும் இடத்தில் சுமார் 4 அடிக்கு 10 அடி என்ற அளவில் முக்கால் அடிக்கு பள்ளம் வெட்டவும். பிறகு பழைய சிமெண்ட் சாக்குகளைக் கொண்டு அடிப்பாகத்தை மூடவும். அதன் மீது, ஓட்டைகள் இல்லாத ஒரு தார்ப்பாயை விரித்து அதில் 30 கிலோ வெட்டிய மேல் மண்ணை சமமாக பரப்பவும். பள்ளத்திற்கு வெளியில் உள்ள தார்ப்பாயின் ஓரங்களில், பறக்காமல் இருக்க செங்கற்களை வரிசையாக அடுக்கவும். இப்போது, சுமார் அரை அடி பள்ளம் தார்ப்பாயின் உள் இருக்கும். இதில், வெளியில் வழியாத அளவுக்கு தண்ணீரை நிரப்பி அதில் அசோலா விதைகளை தூவலாம். ஏற்கனெவே அசோலா விளையும் இடத்திலிருந்து அசோலாவையே தண்ணீரில் இட்டு எடுத்து வந்தும் நமது தொட்டியில் விடலாம். அசோலா விளைந்து தண்ணீர் பரப்பு முழுவதும் பரவி விடும். அதன் பிறகு சிறிது சிறிதாக (எட்டில் ஒரு பங்கு வரை) நீங்கள் அறுவடை செய்யலாம். தண்ணீர் குறைய குறைய மேல் மட்டம் வரை தண்ணீரை நிரப்பிக் கொள்ளவும்.

நீங்கள் விவசாயம் செய்பவராக இருந்தால் நெல் தவிடு கிடைப்பது எளிதாக இருக்கும். உங்கள் தேவைக்கோ அல்லது விற்பதற்கோ நீங்கள் நெல்லை அரைத்தால் அந்த தவிடை உங்கள் தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளலாம். கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவை விளையுமானால் அதையும் மாட்டிற்காக சேர்த்து விளைவிக்கலாம். எண்ணெய் வித்துக்களில் வேர்கடலை மற்றும் எள் விளைவிக்க முடியுமானால் நீங்கள் எண்ணெய் அரைக்கும் போது பிண்ணாக்கை எடுத்துக் கொள்ளலாம். கவனித்துப் பார்த்தால் இதன் மூலம் நமக்கு தேவையான அரிசி, சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் ஆகியவையும் கிடைத்து விடும். பருப்பு பொட்டு நாமே செய்வது சிறிது கடினம். ஏனென்றால் சிறு அளவில் பருப்பு செய்வதற்கு அரவை இயந்திரங்கள் இல்லை. பெரிய அளவில் அரைப்பதைத்தான் இயந்திர சாலைகளும் விரும்புகின்றன. இந்த அரவைச் சாலைகளிலிருந்து தீவனம் விற்கும் கடைகள் பொட்டுகளை வாங்கி விநியோகம் செய்கின்றன. அது போன்ற கடைகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

இவ்வளவு பாடு எதற்காக? கலப்புத் தீவனத்திற்கு தேவையான எல்லா பொருட்களும் கடைகளில் விற்கிறது. அதை வாங்கி அளிக்கலாம். அதைவிட ஒரு படி மேலாக கலப்புத் தீவனமாகவே கூட விற்கிறது. பெரிய பெரிய கம்பெனிகளும் இந்த வகை தீவனங்களை தயாரித்து விற்கின்றனர். அதை ஏன் வாங்கக் கூடாது? அதை வாங்கி அளிப்பது, பொதுவாக பெரிய பண்ணைகளுக்கு சுலபமானதாக இருக்கும். ஆனால், அது போன்ற தயார் நிலை தீவனங்களில், வெகு நாட்கள் கெடாமல் வைக்க யூரியா போன்ற வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. மனிதர்களைப் போன்றே மாடுகளுக்கும் யூரியா உணவில் கலந்தால் சினை நிற்காமல் போக (infertility) வாய்ப்புகள் அதிகம். அதனால், இயன்றவரை பதப்படுத்தப்படாத உணவையே அளிக்கவும். மேலும், அடர் கலப்பு தீவனத்தை தவிர்ப்பதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். இந்த வகை தீவனம் அளிப்பது பெரும்பாலும் இட வசதி இல்லாத பெரிய பண்ணைகளுக்கே. சிறிய அளவில் சில மாடுகள் மட்டும் வைத்துக் கொண்டிருந்தால் வெறும் தவிடு மட்டுமோ அல்லது நாம் சாப்பிட்டது போக மீதம் இருக்கும் சாப்பாடு போன்றவை கூட போதும்.

கலப்புத் தீவனம் அளிக்கும் போது பெரிய பண்ணைகளில் அதற்கான தொட்டிகளில் வரிசையாக கட்டி அளிப்பது வழக்கம். நான்கு அல்லது ஐந்து குழுக்களாக பிரித்துக் கொண்டு அதற்கு தேவையான அளவு தொட்டிகளை அமைத்துக் கொண்டு தீவனம் அளிக்கவும். தீவனம் அளிக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியது அந்தந்த குழுக்களில் உள்ள மாடுகளின் எடை, பால் உற்பத்தி போன்றவற்றையும், உங்கள் மற்ற தீவனங்களை (பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம்) அளிக்கும் திறனையும் கணக்கில் கொண்டு அளவை முடிவு செய்யவும், அதன் பிறகு தீவனம் சாப்பிடும் போது, மாடுகள் அதன் தொட்டிகளில் மட்டுமே தீவனம் சாப்பிட முடியும் அளவிற்கு சிறிய அளவு கயிறு மட்டும் விட்டு கட்டவும். இல்லையேல், பயந்த சுபாவம் உள்ள மாடுகளை மிரட்டி, வலுவான மாடுகள் அதன் தீவனத்தையும் தின்று விடும். பெரிய பண்ணைகளில் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டால் சில நாட்கள் கழித்து பயந்த மாடுகளின் பால் உற்பத்தி குறைவது, ஆரோக்கியம் பாதிப்பது போன்றவை ஏற்படும். சிறிய பண்ணைகளில் இந்த தொந்தரவு இருக்காது.

அடுத்ததாக உலர் தீவனம்; நெல், கோதுமை, சோளம், கம்பு, வேர்கடலை போன்ற பயிர்களில் நமக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்ட பிறகு அவற்றை காய வைத்து அளிக்கலாம். இதிலும் நெல்லுப் புல்லை காய வைத்து (வைக்கோல்) அளிப்பதே மிகவும் பிரபலம். நெல்லை அடித்த பிறகு பிணை ஓட்டி வைக்கோலை போர் போட்டு சேமிக்கலாம். வெகு நாட்கள் கெடாமல் இருக்கும். வைக்கோல் வியாபாரம் கூட மிகவும் பிரபலம். சிறு தானியங்களான சாமை, வரகு போன்றவற்றின் புல்லில் பல வித சத்துக்கள் இருந்தாலும் மாடுகளும் அவற்றை சாப்பிடும் பழக்கம் விட்டுப்போய் விட்டதால் சாப்பிட வைப்பது கடினம். முதலில், நெல் வைக்கோலுடன் மற்ற வைக்கோல்களையும் கலந்து கொடுத்து பழக்கலாம். வைக்கோலை போர் போடும் போது நெல் வைக்கோலுடன் சிறு தானிய வைக்கோல்களையும் கலந்து போர் போட்டு வைத்துக் கொண்டால் (நெல் வைக்கோல் ஒரு அடுக்கு, சிறுதானியம் வைக்கோல் ஒரு அடுக்கு) எடுக்கும் போது அவை சுலபமாக கலந்து விடும். வேர்கடலை செடியை அப்படியே காய வைத்து கொடுக்கலாம். மாடுகள் விரும்பி உண்ணும். அதிகமாக இருந்தால் அதையும் போர் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளலாம். சோளம், கம்பு ஆகியவற்றின் தட்டுகளை காய வைத்து உப்புத் தண்ணீர் தெளித்து போர் போட்டு வைத்துக் கொள்ளலாம். கேழ்வரகு தட்டு கூட அளிக்கலாம். ஆனால், அதை வெகு நாட்கள் சேமிக்க இயலாது. நாட்பட்டால் கசப்பு தட்டி விடும். மாடுகள் உண்ணாது. உங்களிடம் உலர் தீவனம் இல்லையானால் நெல் வைக்கோல் மட்டுமே வாங்குவதற்கு கிடைக்கும். மேய்ச்சல் நிலம் உள்ளவர்களுக்கு கூட மழை நாட்களில் அளிக்க, உலர் தீவனம் அவசியம். மேலும், எப்போதும் சிறிது உலர் தீவனம் அளிப்பது மாடுகள் நன்றாக சீரணிக்க உதவும்.

அடுத்தாதாக, மாடுகளுக்கு இன்றியமையாத உணவான பசுந்தீவனம். பெயரிலிருந்தே அறிந்து கொள்ளலாம் - இது ஒரு சேமிக்க இயலாத உணவு, எனவே, இதை வெளியில் வாங்கி உங்கள் பண்ணைக்கு, போக்குவரத்து வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்வதும் கடினம். ஆகையால், நமது பண்ணையிலேயே தேவையான பசுந்தீவனம் உற்பத்தி செய்வது மிகவும் முக்கியம். நமது பசுந்தீவன தேவையை எவ்வாறு தற்சார்பாக அமைத்துக் கொள்வது என்பதை அடுத்த இதழில் காண்போம்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org