தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அடிசில் பார்வை - அனந்து

உழைக்கும் வர்க்கம் சேர்ந்த சிலர் ஒன்று கூடுகின்றனர், அங்கு இங்கு என்று நாள் முழுவதும் அலைந்து கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக சேர்த்து தாங்களும் தங்கள் குடும்பம் கூட்டமும் சாப்பிட இரை சேர்த்து வைக்கின்றனர். அயராத உழைப்பிற்கு இவர்களை எடுத்துக்காட்டாய் கூறுமளவிற்கு இவர்களது உழைப்பு பெரிதும் பேசப்படுகிறது. அந்த உழைப்பின் பயனாய் சிறப்பான உணவு சேமிக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து ஒன்றாக வாழ கூட்டாக ஒரு குடியிருப்பையும் அமைக்கிறார்கள். அப்பொழுது யாரோ அந்த குடியிருப்பை தீயிட்டு, இவர்கள் சேர்த்து வைத்த மொத்த உணவையும் கொள்ளை அடித்து சந்தோஷமாக உண்ணுகின்றனர். விற்று லாபமும் சம்பாதித்து அனுபவிக்கின்றனர்.

என்ன? கோபமாக இருக்கிறதா? பாவமாக இருக்கிறதா? அந்த யாரோ நீங்கள் தான் என்றால்? புரியவில்லையா? அந்த யாரோ நாம் தான். மனிதர்கள். அந்த உழைக்கும் வர்க்கம் தேனிக்கள். அப்படி அவை சேமித்த தேனை தான் நாம் அப்படி சூறையாடி இனிய தேன் என்று சுவைக்கிறோம்!

முதலில் இதை ஏன் கூறுகிறேன் என்றால், நாம் தேன் உண்பது எவ்வளவு தூரம் தர்மம்/நன்னெறி சார்ந்தது என்று சிந்திக்க‌ வேண்டும் என்பதால்தான்.

இப்பொழுது தேன் பற்றியும், அதில் இன்றைய தூய்மைக் கேடு மற்றும் கலப்படங்கள் பற்றியும் நோக்குவோம்.

தேனி பூக்களிலிருந்து சேகரிக்கும் மகரந்தத்தை அதன் வாயினுள் உள்ள செரிமான சுரப்பிக்களால் இனிய தேனாக மாற்றிப் பின்னர் தேன் கூட்டில் சேமித்து வைக்கிறது. நல்ல தேனானது பாக்டீரியா, பூஞ்ஞை என்னும் ஃபங்கஸ், மற்றும் வைரஸ் இம்மூன்றையும் எதிர்க்கும் சக்தி கொண்டது. (anti bacterial, anti viral and anti fungal). இந்த அற்புதப் பொருளில் புற்று நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டு. அதனால் தான் ஆயுர்வேதம் மற்றும் நமது பாரம்பரிய மருத்துவ வழிகள் இதனை மருந்துடன் சேர்த்துக் கொடுக்கின்றனர். ஆயுர்வேதம் இதனை ஒரு சிறந்த செலுத்தும் கருவியாகப் பார்க்கிறது. உடலின் வெவ்வேறு பாகங்களுக்கும் தேனுடன் கலந்த மருந்தைத் தேனானது கடைசித் திசு வரை கொண்டு செல்லுமாம். ஃப்ரக்டோஸ், க்ளூகோஸ் ஆகிய இரு இனிப்புக்கள் சம அளவில் உள்ளதால், அளவோடு உண்டால் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்லதே! ஆம் இதன் நீரிழிவு அளவு (glycemic index) குறைவாக உள்ளதே காரணம். கல்லீரலுக்கும் நன்மை பயக்கவல்லது. இருமல் குறைக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு எடை குறைக்கவும் உதவும். எதிர்ப்பு சக்தி அதிகமாகும். அதிக ஜீரண சக்தியும் உண்டு. அதனால் தான் நமது பாரம்பரிய முறைகளில் உணவின் இறுதியில் தேன் கொடுக்கப்பட்டது.

இப்படிப்பட்ட தேனை பல வழிகளிலும் வியாபார மற்றும் லாப வெறியால் மிகவும் கெடுத்து விட்டான் மனிதன். நான் இங்கு தார்மீக மற்றும் நன்னெறி அடிப்படை பற்றி பேசவில்லை என்பதை கவனிக்கவும். நீங்கள் அகிம்சாவாதியாக இருந்தால் பால் மற்றும் தேனை உண்ண முடியாது. அதனை வேறொரு நாள் விரிவாக பார்க்கலாம்.

இதனை முதலில் காடுகளில் சேகரித்து வந்தனர். பெரும்பாலும் காட்டுவாசிகளே இதனை கொண்டு வந்து கொடுத்தனர். அது வரை இது இயற்கையாகத்தான் இருந்தது. பின் கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம், அதனால் லாப வெறி அதனால் பல கேடுகள்.

முதற்கண், இதனை எங்கு வேண்டுமானாலும் வளர்ப்பது, வியாபாரத்திற்காக என்று ஆரம்பித்தது. பின்னர் சர்க்கரை தண்ணீர் கொடுத்து அதனை ஒரே நாளில் இன்னும் கூடுதல் சேர்க்க, பல யுக்திகள் கையாளப்பட்டன. தேனிலேயே சர்க்கரை கரைசல் கலக்கப்பட்டது.சரி இவ்வளவு தானா? இல்லை, நமது பேராசை பிடித்த வியாபாரிகள் மண் புழு முதல் மாடு வரை எதையும் விட்டு வைக்க வில்லை, இதை விடுவார்களா?

நமது தேனிக்களைவிட அதிகம் சேமிக்கும் இத்தாலிய தேனிக்ககளை கொணர்ந்தனர்! சரி உங்கள் பேராசை உங்களுக்கு. இயற்கை நம் லாபத்தையும் பேராசையையுமா பார்க்குமா? இங்குள்ள சீதோஷன நிலைக்கு ஏற்ப இருக்க முடியுமா (மாடும் அதே கதை தான், அதை வேறொரு தருணத்தில் ஜெய்சங்கர் கூறுவார்)? நோய் வராதா? வந்தது.பல வியாதிகள் வந்தன‌ இந்த அன்னியத் தேனிக்களுக்கு. அதனால் பல்வேறு உயிரிக்கெதிரி (antibiotics) மருந்துகளை உபயோகிக்க வேண்டி வந்தது; அந்த உயிரிக்கெதிரிகளை உட்கொள்வதால், அதன் மீந்தவை (residue) மனிதர்கள் உடலில் வந்து பல பிரச்சினைகளைக் கொடுக்கும். (கொடுத்தன!) சர்க்கரைத் தண்ணீர் கொடுத்து, உயிரிக்கெதிரிகளைக் கொடுத்து, இன்னும் பல ரசாயனங்களும் கொடுத்துக் கெடுத்தனர் 1970களிலிருந்தே! நமக்குக் தெரியாது. ஏனென்றால் நமது அரசாங்கங்களுக்கு இதை எல்லாம் கண்டுகொள்ள நேரமும் ஆசையும் இருக்கவில்லை. பின்னர் எப்படி நமக்குத் தெரிய வந்தது?

அது 2012ஆம் ஆண்டு ஒரு ஐக்கியத் ஐரோப்பிய தடை உத்தரவின் மூலம் வந்தது. அப்பொழுது நம் நாட்டிலிருந்து வரும் தேனுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதே ஆண்டு அறிவியல் மற்றும் பொறியியல் மையம் என்னும் தன்னார்வ நிறுவனம் நடத்திய‌ (Centre for Science and Engineering) நடத்திய ஒரு ஆய்வில் அவர்கள் தேர்ந்தெடுத்த 12 நிறுவனங்களின் தேனில், ஒரே ஒரு நிறுவனம் தவிர எல்லாருடைய தேனிலும் ஐரோப்பா “ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவு” என்று அளவிட்டிருந்ததை விடப் பன்மடங்கு உயிரிக்கெதிரிகள் இருந்தன‌. அந்த ஒரு நிறுவனமோ, சிறிய அளவில் காட்டுத்தேன் மட்டுமே விற்று வந்தது. மற்ற பதினொன்றில் , இரண்டு வெளி நாட்டு நிறுவனங்கள்.அனைத்திலும் அதிகம் இருந்தது ஒரு சுவிட்சர்லாந்து கம்பனியின் தேன் ஆகும்! டாபர், ஹிமாலயா, காதி உட்பட எல்லாத் தேன் கம்பனிகளும் இதில் அடங்கும்.

நமது அரசாங்கம் என்ன செய்தது? ஒரு ஏற்றுமதி குழு அமைத்து அதன் கீழ் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் உயிரிக்கெதிரிகள் இருந்தால் ஏற்றுமதிக்கு தடை விதித்தது! அப்படி என்றால் நம் உள் நாட்டில்? அவர்களுக்கு கவலை இல்லை. என்ன பின் விளைவு இருந்தாலும் எப்படி இருந்தாலும் உள் நாட்டில் விற்கலாம். ஏழை இந்தியன் செத்தால் என்ன, பிழைத்தால் என்ன, பணக்கார மேலை நாட்டார் உடல்நலம்தானே வாணிபத்திற்கு முக்கியம் !

நமக்கு ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், சீனாதான் உலகிலேயே மிகவும் கேடு கெட்ட தேன் தயாரிக்கும்/விற்கும் நாடு. ஆனால் அவர்கள் நாட்டில் அதனை உட்கொள்வது மிகவும் குறைவு. ஏற்றுமதி தான் செய்ய வேண்டும். அவர்களுக்கு உலகின் பல நாடுகளும் தடை விதித்திருந்தன. நமது நாட்டில்? இங்கு நமது சந்தையில் சீனத் தேனை விற்க்கலாம், ஆனால் மற்ற தேனுடன் கலந்து! (எண்ணையில் கலப்பது போல் (blending-oil) இதிலும் அனுமதி உண்டு) ஏற்றுமதி மட்டும் செய்ய இயலாது என்று சட்டம் கொண்டு வந்தனர், அதாவது அந்த கேடு கெட்ட சீனத் தேனை நம் நாட்டவர் சாப்பிடலாம் ஆனால் நாம் நம் தேனுடன் கலந்து ஏற்றுமதி செய்ய இயலாது.

இது போதாதென்று இன்று தேனிலேயே சர்க்கரை கலக்கின்றனர். இதனைக் கண்டறிய, தண்ணீரில் ஒரு துளி விட்டால் சர்க்கரை இருந்தால் உடனே கரையும் இல்லை என்றால் சற்று நேரம் ஆகும் அல்லது நாம் கிளறி விட வேண்டி இருக்கும். மேலும் தேனுக்கு எறும்பு வருவதில்லை, சர்க்கரை கலந்திருந்தால் நிச்சயமாக வரும்.

நாம் என்ன செய்யலாம்? மற்ற பல விஷயங்களை போல் கலப்படம் அற்ற, விஷமற்ற பொருட்கள் வாங்க இயற்கை அங்காடிகளையே நாடுங்கள். சென்னை ரீஸ்டோரில் கசப்பு தேன் என்று கிடைக்கிறது. அது நீலகிரி காடுகளில் அல்லது நாகப்பழ மரங்கள் உள்ள பகுதியிலிருந்து எடுக்கப்படும் தேன் ஆகும். அது எல்லோருக்கும், குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் என்கின்றனர். அப்படி இயற்கை அங்காடிகள் இல்லை என்றால் நேரடியாக காட்டிலிருந்து கொண்டு வரும் நபர்கள் அல்லது பெண்கள்/குழுக்களிடம் வாங்க‌லாம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org