தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

சென்னையில் ஒரு மக்கள் பேரணி


மன்சான்டோவிற்கு எதிராகவும், பாதுகாப்பான உணவிற்காகவும் சென்னையில் ஒரு பேரணி

மரபீனி உணவுகளையும், உணவும், உழவும் பன்னாட்டு நிறுவனங்களிடம் விலை போவதையும் எதிர்த்து சென்னை மக்களின் உரத்த குரல்!

சென்னை, அக்டோபர் 12, 2013: உலகமெங்கும் மன்சான்டோவிற்கு எதிராக மக்கள் அணிதிரளும் நாளான அக்டோபர் 12ல் சென்னையும் தன் உரத்த குரலை எழுப்பியது. சென்னை மெரீனா கடற்கரையில் மிகக் கோலாகலமான ஒரு எதிர்ப்புப் பேரணியில் விவசாயிகள், டாக்சி/ஆட்டோ ஒட்டுனர்கள், மென்பொறியாளர்கள், தன்னார்வலர்கள், நடிகர், நடிகைகள், மற்றும் எண்ணற்றோர் கலந்து கொண்டு, திரளாகக் கூடி, பாதுகாப்பான உணவிற்கான தங்களின் உரிமையை நிலைநாட்டினர்.

“நாங்கள் மன்சான்டோவிற்குச் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருக்கிறது. உழவையும், உழவர்களையும் காக்கும் நிறுவனமாக இது அரசால் சித்தரிக்கப் படுகிறது. ஆனால் அந்நிறுவனத்தின் வரலாற்றைப் பார்த்தால் அதன் சுயரூபம் வெளிப்படும். விவசாயிகள் தங்கள் விதைகளைச் சேமித்து மீண்டும் நட்டாலோ அல்லது பக்கத்து வயலில் இருந்து வந்த மகரந்தம் விவசாயிகளின் விதைகளை மாசு படுத்தினாலோ உடனே அவர்கள் மீது காப்புரிமைச் சட்டத்தின் பேரில் வழக்குத் தொடர்வதும், அவர்களைச் சிறையில் அடைப்பதும் செய்ய மன்சான்டோ தயங்குவதே இல்லை. இயற்கை வளங்களை மாசு படுத்துதல், மனிதர்களைக் கொல்லும், ஊனப்படுத்தும் ரசாயனங்கள் விற்பனை செய்தல், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடும் விஷ‌ப்விற்கு எதிராக அணிதிரள்வதன் காரணம், பெரு நிறுவனங்களின் பேராசைக்கும், பாமர மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிரான குற்றங்களுக்கும் ஒட்டு மொத்த உருவகமாக மன்சான்டோ இருக்கிறது. நம் நாட்டில், அரசாங்கம் மன்சான்டோபொருட்களைப் பாதுகாப்பானது என்று பொய் ஆய்வறிக்கைகள் தயாரித்தல், அரசின் ஒழுங்காற்றுப் பிரிவுகள் பலவற்றில் தங்கள் நிறுவன ஆட்களைப் பணிக்கு அமர்த்தல், பொய் விளம்பரங்கள் என்று எண்ணற்ற ஊழல்கள் செய்து பலமுறை சிக்கிக் கொண்ட நிறுவனம் மன்சான்டோ” என்றார் பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் அனந்து

இந்த நிறுவனத்துடன் பல நாட்டு அரசாங்கங்களும் ஒப்பந்தமும், கூட்டும் ஏற்படுத்திக் கொண்டு உழவர்களின் விதை இறையாண்மையைக் காவு கொடுப்பது மிகுந்த ஆபத்திற்கு உரியது. இந்தியக் குடிமக்கள் உழவர்களின் மேல் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தவும், நம் உணவு, உழவு மற்றும் சூழலை மன்சான்டோ போன்ற நிறுவனங்கள் சூறையாடுவதை எதிர்க்கவுமே நாங்கள் இங்கே கூடியுள்ளோம். “

கடற்கரையில் திரண்ட இப்பேரணிக்கு பசுபதி, கவுதமி, ரோகிணி, ஆதி, இயக்குனர் வசந்த் போன்ற திரை நட்சத்திரங்கள் ஆதரவு அளித்தனர்.

இவ்வெதிர்ப்புப் பேரணியில் கலந்து கொள்ள‌ விழுப்புரத்திலிருந்து வந்திருந்த காந்தி உழவர் கூட்டமைப்பின் செல்வி குமாரி அவர்கள் கூறியது: ” மன்சான்டோவின் 2012 ஆண்டு வருமானம் 46,500 கோடி ரூபாய். இது இந்திய அரசு வேளாண் வளர்ச்சிக்கு என ஒதுக்கும் ஐந்தாண்டு நிதியையும் விட அதிகம்! இதன் பணபலத்தையும், வரலாற்றையும் பார்க்கும்போது, மத்திய அரசின் அமைச்சர்களும், சில மாநில அரசுகளும் 'மரபீனி அற்ற இந்தியா தேவை' என்ற மக்களின் கருத்திற்கு எதிராய்ப் போவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அவர்கள் இந்நிறுவனத்தின் நன்மைக்குப் பரிந்துரை செய்வதல்லாமல், பலசமயம் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இதற்கு உதவி செய்கிறார்கள்.”

“நம் உடல் நலத்தையும், உணவையும், சுற்றுச் சூழலையும் பாதிக்கும் அபாயகரமான பொருட்களை மன்சான்டோ விற்பனை செய்கிறது. இப்பொருட்கள் நம்மை மட்டுமன்றி வருங்கால சந்ததியினரையும் ஆபத்துக்கு உள்ளாக்கக் கூடியவை. மரபீனி உயிரிகளில் இருந்தும், ரசாயனப் பூச்சிக் கொல்லிகளில் இருந்தும் என் குழந்தைகளைப் பாதுகாக்க விரும்புகிறேன். அதனால்தான் இங்கு வந்துள்ளேன். என் கோரிக்கையை அரசும் கவனிக்க வேண்டும்; பாதுகாப்பான, சத்தான உணவிற்கான என் உரிமையை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் ” என்றார் சுபா, சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவி.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வேட்டவலம் மணிகன்டன் மேலும் விளக்கினார்: ” இவ்வெதிர்ப்புப் பேரணி குறிப்பாக மன்சான்டோவிற்கு எதிரானது என்றாலும், குடிமக்கள் உணவு மற்றும் உழவு தொடர்பான மாற்றங்களையும், நிகழ்வுகளையும் குறித்துத் தெளிவான விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்று எல்லா நிறுவனங்களுக்கும் அறிவிக்க விரும்புகிறோம். புதிய (மரபீனி) தொழில்நுட்பம் இல்லாவிடில் உணவுப் பற்றாக்குறை வந்துவிடும், பட்டினிச் சாவுகள் ஏற்படும் என்று பயமுறுத்தி வியாபாரம் செய்பவர்களை நாங்கள் ஒருபோதும் பொறுக்க மாட்டோம். நம் உழவர்கள் எப்போதும் தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்கிறார்கள் - எனினும் நாட்டிற்கு உணவளிக்கும் உழவனின் நன்மையை இப்பெரும் நிறுவனங்கள் ஒரு போதும் கருத்தில் கொள்வதில்லை. மாநிலத்தின் ஒரு முக்கிய உழவர் சங்கமான எங்களின் தெளிவான கொள்கை இதுதான்: நம் தமிழ்நாட்டில், திறந்தவெளி வயல் பரிசோதனைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.”

“அரசாங்கத்தின் மீதே வழக்குப்போட்ட நிறுவனம் மன்சான்டோ -கொள்ளை விற்பனை விலையைக் குறைக்கச் சொன்ன போதோ, பி.டி. கத்தரி போன்ற பொருட்களின் பாதுகாப்பைப் பற்றிய விவரங்களை வெளியிடச் சொன்ன போதோ, மலட்டு விதைகளால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு நட்ட-ஈடு கொடுக்கச் சொன்னபோதோ, எப்போதுமே பொதுநலத்தை எதிர்த்தே வந்திருக்கிறது மன்சான்டோ. நம் உழவர்களின் நலனையோ, பொது மக்களின் நலனையோ இவர்கள் சார்ந்து இருப்பார்கள் என்று நாம் எப்படி நம்ப முடியும்? ஒரு அரசோ/கட்சியோ இந்த நிறுவனத்துடனும், அதன் அழிவிற்கு வழிகோலும் தொழில்நுட்பத்துடனும், வேளாண் திட்டத்துடனும் கூட்டமைப்பார்களே ஆனால் அந்த அரசையோ, கட்சியையோ நாங்கள் ஆதரிக்க மாட்டோம்” என்றார் தமிழக பெண்கள் கூட்டமைப்பின் ஷீலு ஃப்ரான்சிஸ்.

PUCLஇன் தேசிய பொதுச் செயலாளார் டக்டர் சுரேஷ் கூறினார் : “பட்டினியும், உடல்நல நலிவும் இந்தியாவில் நம்மை எதிர்நோக்கும் நிதர்சனமான, கசப்பான உண்மைகள். ஆனால் அவை உற்பத்தியின்மையால் ஆனவை அல்ல; உணவைப் பகிர்ந்து கொள்வதிலும், விநியோகிப்பதிலும் உள்ள அடிப்படை ஏற்றத் தாழ்வினால் ஆனவை. மன்சான்டோ , சிஞ்சென்டா போன்ற நிறுவனங்கள் உலக உணவுப் பரிசு என்ற ஒன்றை ஏற்படுத்தி, அதனை இவ்வருடம் தங்கள் மரபீனி விஞ்ஞானிகளுக்கே கொடுத்துக் கொள்ளும் வியாபார தந்திரம் மிகவும் அருவருப்பாக இருக்கிறது. முன்னெப்போதையும் விட உலக உணவுப் பரிசு அரங்கம் இந்த வருடம் தன் சுய உருவத்தை வெளிப்படுத்தி உள்ளது. உணவிற்கான அடிப்படை உரிமை, உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவு இறையாண்மை ஆகியவற்றை நாம் வேறு வழியில்தான் பெறமுடியும், இந்த வியாபார நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடியாது என்று வலியுறுத்தவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இதே போன்று மன்சான்டோவிற்கு எதிரான பேரணிகள் நடை பெற்றன. தமிழ்நாட்டில், தஞ்சாவூர், ஈரோடு போன்ற இடங்களில் கண்டனப் பொதுக் கூட்டங்களும் நிகழ்த்தப் பட்டன. திருவாரூரில் ஆயிரம் விவச்சயிகளுக்கு மேல் கலந்து கொண்ட மாபெரும் மன்சான்டோ எதிர்ப்புக் கூட்டம் கிரியேட் அமைப்பைச் சேர்ந்த திரு.ஜயராமான் தலைமையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் கோ.நம்மாழ்வார் சிறப்புரையுடன் நடத்தப் பட்டது

சென்னையில், மருத்துவர்கள், உழவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளார்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், விதை மற்றும் உணவு விற்பனையாளார்கள், குடும்மத் தலைவிகள், குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்டு பாரம்பரிய விதைப் பரிமாற்றாத்திலும் ஈடுபட்டனர், கூத்துப் பட்டறையைச் சேர்ந்த கலைஞர்கள் துடும்பாட்டம் என்னும் பாரம்பரிய தமிழ் இசைக்கருவியுடன் கூடிய நடனம் நடத்தினர் - இதைக் கண்டு களித்த பெரும்பாலான பொதும‌க்கள் தாங்களும் பேரணியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு :

பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பைச் சேர்ந்த‌
அனந்து : 9444166779 , ananthoo@gmail.com;
டாக்டர்.சிவராமன்: 9444027455 ;
சமன்வயா ராம்: 9444957781

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org